கல்வி ஆண்டு கவின்மிகு ஆண்டாகட்டும்

கல்வி ஆண்டு கவின்மிகு ஆண்டாகட்டும்

நாகை பாலாதமிழ்நாடு அரசு பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று (ஜூன் 13) திறக்கப்பட உள்ளன.

நாகை பாலாதமிழ்நாடு அரசு பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று (ஜூன் 13) திறக்கப்பட உள்ளன. நாட்டில் உள்ள மற்ற துறைகளை விட பள்ளி கல்வித் துறை மிகவும் முக்aகியத்துவம் வாய்ந்த துறையாக கவனிக்கப்படுவதற்கு அதன் எண்ணிக்கையும் ஒரு காரணம். அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 45,600 ஆகும். சுமார் 82 லட்சம் மாணவர்களும் மூன்று லட்சம் ஆசிரியர்களும் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரிந்தும் பயின்றும் வருகின்றனர். 

மாணவர்களுடைய பெற்றோர்களும் ஆசிரியர்களுடைய குடும்பத்தினரும் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக கல்வித் துறையோடு தொடர்புடையவராக உள்ளனர். எனவேதான் பள்ளிகள் சார்ந்த சிறு நிகழ்வுகள் கூட முக்கியத்துவம் பெறுகின்றன.

கரோனா நோய்த்தொற்றுப் பரவலால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தின் காரணமாக கடந்த இரு கல்வி ஆண்டுகள் முழுமையாக நடைபெறவில்லை. அதனால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சமன் படுத்தும் விதமாக இந்த கல்வி ஆண்டு நடைபெற வேண்டும். கூடுதல் சுமையோடு உள்ள இந்த கல்வி ஆண்டை வெற்றிகரமாக நகர்த்திச் செல்வதற்கு கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். கல்வியின் தரத்தை உயர்த்துவதில் பல்வேறு நிபுணர்கள் அரசுக்கு ஆலோசனை அளித்து வரும் வேளையில் பள்ளியில் மாணவர்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டியது அரசின் முக்கிய கடமையாகும்.

கடந்த கால அனுபவங்களை நினைவில் கொண்டு இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்தே திட்டமிட்டு பாதுகாப்பு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்தினால் இந்த கல்வி ஆண்டு ஒரு வெற்றிகரமான ஆண்டாக அமையும். பள்ளி வகுப்பறை கட்டடங்கள், சுற்றுச் சுவர்கள், கழிப்பறை ஆகியவற்றின் கட்டுமான உறுதித்தன்மை ஜூன் மாத இறுதிக்குள் ஆய்வு செய்யப்பட்டு சரி செய்யப்பட வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்கள் பேருந்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பின் பள்ளி நேரத்துக்குள் செல்வதற்கு பேருந்து வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

பள்ளியில் மாணவர் உண்ணும் சத்துணவை பள்ளி மேலாண்மை குழுவின் உள்ள யாராவது ஒரு பெற்றோர் தினமும் அக்கறை எடுத்து உணவு வழங்கப்படுவதற்கு முன்பு சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை உறுதி செய்திட வேண்டும். ஆசிரியர் - மாணவர் இடையே சுமுகமான உறவு பேணப்பட வேண்டியது மிகவும் அவசியம். இதற்காக மாணவர், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளும் கலை நிகழ்வுகளும் வாரம் ஒரு முறை நடத்துவதற்கு வழிவகைகள் ஆராயப்பட வேண்டும்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் பள்ளி இறுதித் தேர்வு முடிந்து பல நுழைவுத் தேர்வுகளை எழுத இருக்கும் மாணவர்களுக்கும் அதற்கான போதிய பயிற்சிகளும் அறிவுரைகளும் வழங்கிட வேண்டும். அதே நேரத்தில் ஒருவேளை அந்தத் தேர்வுகளில் தோல்வி ஏற்பட்டால் அதை தாங்கிக் கொள்ளும் அளவிற்கு அவர்கள் மனதை திடப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். நுழைவுத் தேர்வு தோல்வியினால் இனி ஒரு மாணவர் உயிரும் போகக்கூடாது என்கிற அளவிற்கு அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.

சமூக ஊடகங்கள், கைப்பேசிகள், இணைய செயலிகள் போன்றவற்றின் தாக்கத்தின் விளைவாக பதின்ம வயதில் உள்ள மாணவ, மாணவியர்களின் நடவடிக்கைகள் பெரிய அளவில் மாற்றம் அடைந்துள்ளது. இந்தப் பருவத்தில் உள்ள மாணவர்களை முறையாகக் கையாண்டு அவர்களுக்கு சிறப்பான கற்பித்தலை வழங்குவதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும்.

பள்ளிகளில் வன்முறை போன்ற அசம்பாவிதம் நடைபெறும்போது மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்ற பேச்சு எழுகிறது. ஆனால், பிறகு அது மறக்கப்பட்டு விடுகிறது. எனவே மாவட்டத்திற்கு ஒரு மனநல ஆலோசகரை நியமித்து பள்ளிகளுக்கு சுழற்சிமுறையில் சென்று மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆலோசனைகளை வழங்குவதற்கான ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகங்கள் செய்திட வேண்டும்.

பள்ளி வளாகத்துக்குள் மாணவர்கள் கூர்மையான பொருட்கள், உலோகங்களால் ஆன அளவுகோல்கள் போன்ற பொருள்களை எடுத்து வருவதற்கு முற்றிலுமாக தடை பிறப்பிக்க வேண்டும். கணித வரைபட வகுப்பிற்கு தேவையான உபகரணங்களை ஆசிரியர்களே தங்கள் பொறுப்பில் வைத்துக் கொண்டு அந்த வகுப்புக்கு மட்டும் கொடுத்து திரும்பப் பெறும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். 

மது அருந்துதல், புகை பிடிக்கும் பழக்கம், போதை பாக்குகள் மெல்லுதல் போன்றவற்றால் ஏற்படும் உடல் ஆரோக்கிய கேடு சமுதாய சீர்கேடுகள் ஆகியவற்றைப் பற்றி நடுநிலைப் பள்ளியில் தொடங்கி மேல்நிலைப் பள்ளி வரை மாதம் ஒரு முறையாவது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி மாணவர்களாலேயே நடத்தப்படவேண்டும்.

இவையெல்லாம் பெரும்பாலும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், குழந்தைநல செயல்பாட்டாளர்கள் ஆகியோர் முன்வைக்கும் ஆலோசனைகள்தான். தமிழக அரசும், அரசின் கல்வித்துறையும் மேலும் இது குறித்து ஆலோசித்து தக்க வழிமுறைகளை வடிவமைக்க வேண்டும்.

சாதாரணமாக ஒன்றிரண்டு குழந்தைகள் இருக்கும் நமது வீடுகளிலேயே அவர்களுடைய பாதுகாப்பிற்காக மருந்து புட்டிகளை எட்டாத உயரத்தில் வைப்பது, கூர்மையான பொருட்களை மறைத்து வைப்பது போன்ற முன்னெச்சரிக்கைகளில் நாம் அதிக கவனம் செலுத்துகிறோம்.

அப்படியிருக்க, பல லட்சம் மாணவர்கள் பயிலும் பள்ளிக்கூடங்களில் அவர்கள் பாதுகாப்புடன் கல்வி பயில்வதற்குப் போதுமான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியது அரசின் தலையாய கடமையல்லவா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com