பொய்யுடை ஒருவன் சொல்வன்மை! 

எல்லாம் விளம்பர மயம் ஜகத் என்று ஆகிவிட்ட நிலையில், நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பொய்யுடை ஒருவன் சொல்வன்மை! 

கனடாவில் பிறந்து வளர்ந்த என் மைத்துனர் மகன் கிருஷ்ணா சில வருடங்கள் மதுரையில் எங்களுடன் வசித்து வந்தான். ஒரு நாள் என் மனைவியுடன் கார் வாங்குவதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, கிருஷ்ணா ஒரு கார் பெயரைச் சொல்லி அதை வாங்கலாமே என்று சொன்னான். "அந்த கார் பற்றி உனக்கு எப்படி தெரியும்' என்று கேட்டேன். "அந்த கார்தானே டிவி விளம்பரத்தில் வருகிறது' என்றான். 

ஆரம்பத்தில் பொருளாதாரம் பண்டமாற்றில் தொடங்கி பின் உலோகங்களும், காகிதங்களும் பணமாக உருமாறி மனிதன் "திரைகடல் ஓடி திரவியம் தேட' இலங்கை, மலேசியா என்று பயணித்துக் கொண்டிருந்தபோது, வளமான இந்தியாவை நோக்கி, ஐரோப்பிய வியாபாரிகள் கடல் மார்க்கமாக படையெடுத்தனர். உள்ளூர் நிலவரங்கள் கண்டு, வியாபாரிகள் ஆட்சியைப் பிடித்தது சுதந்திர இந்திய வரலாற்றின் முதல் பாகம். வியாபாரிகளுடன் வியாபார உத்திகளும், விளம்பரங்களும் இந்திய மண்ணை மட்டுமல்ல உலகையே ஆக்கிரமித்தன. 

பத்திரிகை விளம்பரம், ரேடியோ விளம்பரம், டிவி விளம்பரம், சினிமா விளம்பரம், சுவர் விளம்பரம் என்று எங்கெங்கு காணினும் விளம்பரமயம். விளம்பரம் என்பது விரும்புபவருக்கு, விரும்பும் பொருள் இருக்கும் இடத்தை சொல்வதில் ஆரம்பித்து, இன்று தேவையில்லாதவருக்கு, தேவையில்லாத பொருளை வாங்கும் உந்துசக்தியாக மாறிவிட்டது. "ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால், அதை மக்கள் உண்மை என நம்பிவிடுவார்கள்' என்ற கோயபல்ஸின் சித்தாந்தம்தான் இன்றைய விளம்பரத்தின் அடிநாதம். 

மொட்டைத் தலையில் முடிவளரும், உங்கள் கேசம் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும், ஒரு நிமிடத்தில் உங்கள் வெள்ளைமுடியை கருப்பு முடியாக ஆக்க முடியும், ஏழு நாளில் உங்கள் கருப்பழகு, சிவப்பழகாக மாறும் என்கிற ஏமாற்று விளம்பரங்கள் மனிதர்களின் அடிமனதிலுள்ள அபிலாஷைகளை குறிவைத்து தாக்குகின்றன.

கரியையும், உப்பையும் பல் துலக்க உபயோகித்த என்னுடைய பாட்டி 94 வயதில், வயது முதிர்வின் காரணமாக இறந்தபொழுது, அவருடைய 32 பற்களும் முத்தாய் சிரித்தன. ஆனால் வெளிநாட்டு வரவான பேஸ்டையும், பிரஷையும் உபயோகித்த எனக்கு வாயில் பல பற்களைக் காணோம். என்னை உப்பையும் கரியையும் விட்டுவிட்டு பேஸ்ட் வாங்க வைத்த அதே கம்பெனி, இப்பொழுது விளம்பரத்தில் உங்கள் பேஸ்டில் உப்பு இருக்கிறதா, கரி இருக்கிறதா என்று கேட்கும்போது, எனக்கு கோபம் வருவதில் என்ன தவறு?  

சில விளம்பரங்கள், கவித்துவமாகவும், ரசனையாகவும் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், பெரும்பான்மையான விளம்பரங்கள், பொருளின் தரத்தை சொல்வதற்காக எடுக்கப்படுவதில்லை; ஏமாறத் தயாராக இருப்பவர்களை ஏமாற்றவே எடுக்கப்படுகின்றன.  

வியாபாரியான வெள்ளைக்காரன், நம் நாட்டை ஆண்ட போது "லெட் தி பையர் பிவேர்' (வாங்குவோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்) என்பதுதான் சட்டமாக இருந்தது. ஆனால், சுதந்திர இந்தியாவில் 1986-ஆம் ஆண்டு வந்த நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இதில் ஒரு மாற்றம் கொண்டு வந்தது. ஆனாலும், அது முழுமையான பயனைத் தரவில்லை என்பதுதான் உண்மை. 2019-இல் வெளியான புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பல புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. 

அது வியாபாரிகளுக்கும், விற்பனையாளர்களுக்கும் புதிய பொறுப்புகளை ஏற்படுத்தியதுடன், நுகர்வோருக்கு புதிய உரிமைகளையும் வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் மத்திய அரசு சமீபத்தில் தவறாக வழிகாட்டும் விளம்பரங்களை வகைப்படுத்தவும், தவறான விளம்பரங்களை தடை செய்யவும் வழிகாட்டு விதிகள் 2022-ஐ வெளியிட்டுள்ளது. 

இந்த விதிகளில் பொருளை விலை குறைத்து விற்பதாகக் கூறும் விளம்பரங்கள் வகைப்படுத்தப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தபட்டுள்ளன. தன்னுடைய திரைப்படப் புகழ், விளையாட்டுத் துறை புகழ் ஆகியவற்றை வைத்து கோடிகளைக் குவிக்கும் பிரபலங்களுக்கு இந்த விதிகள் முட்டுக்கட்டை போட்டுள்ளன. இனி அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். ஒன்றை மறைத்து மற்றொன்றை விளம்பரப்படுத்தும் செவிலித்தாய் விளம்பரங்கள் இவ்விதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. 

விதி-4 தவறான விளம்பரங்களையும், (எங்கள் நிறுவனப் பொருளை வாங்கினால் 99% கிருமிகளை ஒழிக்கும்) விதி-5 தூண்டில் விளம்பரங்களையும் (இந்த பொருள் இன்னும் இரண்டே நாள்தான் இருக்கும்) தடை செய்கிறது. எதிர்மறை விளம்பரங்களும் தடுக்கப்பட்டுள்ளன.

அதாவது பிரபலமான ஒருவர் பேசும்பொழுது, மேஜையில் புகையிலை அல்லது மது சம்பந்தமான பொருளை வைத்திருப்பது, அதனை இலவச பொருள் என்று சொல்லி, அதை அனுப்புவதற்கு மட்டும் பணம் தாருங்கள் என்று கேட்பது போன்ற விளம்பரங்களை இனி வெளியிட முடியாது. 

பெருவாரியான விளம்பரங்கள், குழந்தைகளையும், தாய்மார்களையும் குறிவைத்தே எடுக்கப்படுகின்றன. "எங்களுடைய பொடியை சாப்பிட்டால் அதிகமான தாய்ப்பால் உற்பத்தி ஆகும்' அல்லது "இந்த பிஸ்கட்டை சாப்பிட்டால் அதனால் உங்கள் குழந்தை உயரமாக வளரலாம்' என்று பேசி இனி விளம்பரத்தில் பம்மாத்து செய்ய முடியாது.    

விதி 9 தடை செய்யப்பட்ட விளம்பரங்களைப் பற்றி பேசுகிறது. பிற சட்டங்களால் தடைசெய்யப்பட்ட விளம்பரங்களும் இதில் அடங்கும். உதாரணம், புகையிலை விளம்பர தடை சட்டம். 

இந்த விதிகளிலுள்ள தடையாணை என்பது ஏற்கனவே அமலில் உள்ள பிற சட்டங்களுக்கு இணையானதாகவும், துணையானதாகவும் ஆகும் என்று பொருள் கொள்ள வேண்டுமே தவிர, அவற்றிற்கு எதிரானதாக பொருள் கொள்ளக்கூடாது, என விதி 10 விவரிக்கிறது. 

விதி 11 பொறுப்புத் துறப்பு (டிஸ்கிளைமர்) பற்றிப் பேசுகிறது. அதாவது, விளம்பரங்கள் தவறான முடிவிற்கு தூண்டுவதாக இருந்தால், விளம்பரதாரர்கள் பொறுப்பல்ல என எச்சரிக்கும் விளம்பர வாசகங்கள். இவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. சிகரெட் விளம்பரங்களில் புற்றுநோய் வரும் என்று கூறுவதும், ரம்மி விளம்பரங்களிலும், மியூச்சுவல் ஃபண்ட் விளம்பரங்களிலும் பணத்தை இழக்கக்கூடிய அபாயம் உள்ளது என்று சொல்வதும் "பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்' என்ற கதைதான். இது சட்டமே வழி நடத்தும் தவறான பாதை. 

மேலும், பொறுப்புத் துறப்பு வாசகங்கள் தெளிவாகவும், விளம்பரத்தின் வேகத்தோடும், அதே மொழியிலும், அதே எழுத்து வடிவத்திலும் இருக்க வேண்டும் என்கிறது விதி. எனவே இனி சுத்தமான நெய்யினால் செய்யப்பட்டவை என்பதை பெரிய எழுத்திலும் அல்ல என்ற வார்த்தையை சிறிதாகவும் அச்சிட முடியாது. 

மேலும் விதி 12, தயாரிப்பாளர், சேவை அளிப்பவர், விளம்பரதாரர், விளம்பர நிறுவனம் ஆகியோரின் பொறுப்புகளை விவரிக்கிறது. இதன்படி, விளம்பரத்தில் கூறப்படும் உறுதிமொழிகள், ஆராய்ச்சி முடிவுகளெல்லாம் இனி கற்பனையில் தோன்றியதாக இருக்க முடியாது. இவை அனைத்துக்குமான ஆராய்ச்சி முடிவுகள் காட்டப்பட வேண்டும். 

இனி விளம்பரங்கள் எங்கள் பொருளுக்கு ஐந்து ஆண்டுகள் வரை இலவச சேவை என்றோ, மிகக் குறைந்த விலை என்றோ விளம்பரப் படுத்த முடியாது. சட்டத்திற்குட்பட்ட லாட்டரி போன்ற விற்பனையென்றால், அதன் விதிகள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். 

ஒரு பொருளை விளம்பரப்படுத்தும் பிரபல மனிதருக்கு அந்தப் பொருளைப் பற்றிய முழு அறிவும், தெளிவும் இருக்க வேண்டும் என்று சொல்கிறது விதி. அதனால்தான், இந்த விதிகள் வருவதற்கு முன்பே துணிக்கடை, நகைக்கடை முதலாளிகள் சிலர், திரைப்பட நடிகர்களுக்கு பணத்தை வாரி இறைக்காமல், தாங்களே நடித்து தன்னையும் தன் கடையையும் பிரபலப்படுத்தி விட்டார்கள். 

விளம்பரம் செய்யக்கூடாது என தடை செய்யப்பட்ட தொழில் வல்லுநர்கள் (டாக்டர், வக்கீல், ஆடிட்டர்) சார்பாக வெளிநாட்டவர்களும் விளம்பரம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. எல்லாம் விளம்பர மயம் ஜகத் என்று ஆகிவிட்ட நிலையில், நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

1954-ஆம் ஆண்டு மாயாஜால தீர்வு - ஆட்சேபகரமான விளம்பரத் தடை சட்டம் (மேஜிக் ரெமெடீஸ் அண்ட் அப்ஜெக்ஷனபில் அட்வர்டைஸ்மென்ட் ஆக்ட் 1954) என்ற ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் கிரிமினல் வழக்குகள் தாக்கல் செய்யலாம் என்று இருந்தாலும் இன்றுவரை அது நடைமுறைக்கு வரவில்லை. ஆனால் இப்போது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் (பிரிவு 89) இப்படித் தவறான விளம்பரங்களுக்கு இரண்டு ஆண்டு சிறையும் 10 லட்சம் அபராதமும் விதிக்கலாம் என்று கூறுகிறது. 

தவறான விளம்பரங்களை வெளியிடுவது தொடர்ந்தால் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையும் ஐம்பது லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கலாம். இனி நம்முடைய விளம்பரதாரர்களும், பிரபலங்களும் பொறுப்பாக நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். ஆயினும் நுகர்வோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது முக்கியம். 

இதைத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் சொன்னார், "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு'. இதையே அதிவீரராம பாண்டியன் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லியுள்ளார் "பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே'.

கட்டுரையாளர்:
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com