தமிழுக்கு அங்கீகாரம் தேவை!

தமிழுக்கு அங்கீகாரம் தேவை!

 உலகில் எத்தனையோ கொண்டாட்டங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. உலகத் தாய்மொழி நாள் 1919-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ஆம் நாள் உலகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. நம் நாட்டிலும் கொண்டாடப்படுகிறது. இதற்கு மாநில அரசும், மத்திய அரசும் ஊக்கம் அளித்து வருவது வரவேற்கத்தக்கது என மொழியியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.
 "காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு' என்பது போல அவரவர் தாய்மொழி அவரவர்களுக்கு உயர்வானதுதான் என்பதில் ஐயமில்லை. மொழிக்காக காலம் காலமாகப் போராடுவதும், உயிரையே தியாகம் செய்வதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் காரணமும் அனைவரும் அறிந்ததுதான்.
 அக்காலத்தில் மொழி என்பது மனிதர்கள் தங்கள் எண்ணங்களைத் தெரிவிக்கும் ஒரு கருவியாகவே உருவானது. காலப்போக்கில் அந்த நிலை மாறிவிட்டது. இப்போது மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளமாகவும், பண்பாட்டின் சின்னமாகவும் ஆகிவிட்டது. தாய்மொழி அழிந்துவிட்டால் அந்த இனமே அழிந்து விட்டது என்பது பொருளாகும்.
 இதனை உணர்த்தவும், மக்களுக்கு விழிப்புணர்ச்சியை உருவாக்கவும் ஐ.நா. அமைப்பு ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அறிவியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாத பல மொழிகள் நாள்தோறும் மறைந்து கொண்டிருக்கின்றன என்பதுதான் அது.
 அத்தகைய நிலை தமிழுக்கும் வந்துவிடக் கூடாது என்பதனால்தான் தமிழக அரசும் அதன் வளர்ச்சிக்கு முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் தமிழ் மொழியின் சிறப்பை இனிவரும் இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ள வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு.
 தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின்போது ஆண்டுதோறும் மாநில அளவில் தாய்மொழி நாள் கொண்டாடப்படும் என்றும், அதில் கவியரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கிணங்க ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
 "உலக தாய்மொழி நாளில் தங்கள் மொழியைப் பாதுகாக்கவும், உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகிகளுக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன். அவர்களின் தியாகத்திலிருந்து பெறும் உணர்ச்சிப் பெருக்கு கொண்டு ஒற்றை மொழியின் ஆதிக்கம் இல்லாமல் அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் நிலையை உருவாக்குவோம். அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதி ஏற்போம்' என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தாய்மொழி நாளன்று தெரிவித்துள்ளார்.
 இந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். "தாய்மொழி வழிக் கல்விக்கும் குழந்தைகளின் மனவளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பல மாநிலங்களில் தாய்மொழியில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி அளிப்பது தொடங்கிவிட்டது' என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
 வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பிரதமர் மோடி தமிழின் தொன்மையைப் பாராட்டத் தவறுவதில்லை. "உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று நான் பேசியது அமெரிக்காவில் இன்னும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது' என்று அவர் தெரிவித்தது இன்னும் நம் செவிகளில் இனித்துக் கொண்டுதான் இருக்கிறது.
 திருக்குறள் பற்றியும், புறநானூறு பற்றியும், தமிழ்த்தாத்தா உவேசா பற்றியும் பிரதமர் பேசுவது நமக்குப் பெருமைதான். பேசுவதோடு, அதற்குரிய அங்கீகாரமும் தரவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பாகும்.
 உலகெங்கும் எட்டு கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் தமிழ்மொழிக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டிய பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் இருக்கிறது. நமது அரசியல் அமைப்பின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழிகளாக ஆக்க வேண்டும். இந்தக் கோரிக்கை பல காலமாக எழுப்பப்பட்டு வருகிறது.
 வடமொழி எனப்படும் சம்ஸ்கிருதத்துக்கு எந்த வகையில் குறையாத இலக்கிய வளமும், தொன்மையும் கொண்ட தமிழ் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கல்வியிலும், ஆட்சியிலும் திணிக்கும் போக்கு வளர்ந்து கொண்டே வருகிறது. மாநில மொழிகளின் வளர்ச்சிக்கு வெறும் பாராட்டு மட்டும் போதுமா?
 "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்று கூறிய பாரதி, "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்றும் ஆணையிடுகிறார்.
 எந்த மொழியும், "வாழ்க' என்றால் வாழ்ந்து விடாது. ஆக்கமும், ஊக்கமும் தந்து அதனை வளர்த்தெடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு அந்தக் கடமை உள்ளது. "தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை' என்று பாடிச் சென்றார் பாரதிதாசன். இன்று ஏதாவது மாறுதல் உண்டா? அதே நிலைதான் நீடிக்கிறது. ஆட்சி மொழிச் சட்டம் 1957-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதனை தமிழக அரசு செயல்படுத்த வேண்டாமா?
 தமிழ்நாட்டில் தமிழர்கள் தமிழில் கையொப்பம் இடுவதற்கும் சட்டம் போட வேண்டிய நிலை இன்னும் நீடிக்கிறது. அங்காடிகளின் பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழி இடம் பெறவில்லை. அதற்காகப் போடப்பட்ட சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதையெல்லாம் யார் கேட்பது?
 எந்த மொழியையும் அடுத்தவர் மீது திணிக்க முற்பட்டால் ஏற்படும் விடுதலை உணர்வுக்கு வங்கதேசத்தையே வரலாறு நமக்குக் காட்டுகிறது. இந்தியா சுதந்திரம் பெற்றபோது, பிரிந்து சென்ற பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என்று இரு பகுதிகளாக இருந்தது.
 மேற்கு பாகிஸ்தானில் உருதும், கிழக்கு பாகிஸ்தானில் வங்காள மொழியும் பேசுபவர்களாக மக்கள் இருந்தனர். ஆட்சி அதிகாரம் பெற்ற மேற்கு பாகிஸ்தான் 1948-இல் அரசியல் நிர்ணய சபையில் உருது அல்லது ஆங்கிலம் மட்டுமே ஆட்சி மொழி என்று முடிவு எடுத்தபோது கிழக்கு பாகிஸ்தான் போர்க்கோலம் பூண்டது; பொது வேலை நிறுத்தம் செய்தது.
 "பாகிஸ்தானில் ஆட்சி மொழியாக உருது மட்டுமே இருக்கும்' என்று பாகிஸ்தான் அதிபர் முகமது அலி ஜின்னா திட்டவட்டமாக அறிவித்தார்.
 அரசியல் மட்டத்தில் எழுந்த எதிர்ப்பு, மாணவர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள், அறிவாளர்கள் மத்தியில் விரைவாகப் பரவியது. இவ்வாறு தங்கள் தாய்மொழியான வங்க மொழிக்கு ஆதரவாகத் தொடங்கிய இந்த இயக்கம் 1952-இல் உச்சத்தை அடைந்தது.
 அந்த ஆண்டு பிப்ரவரி 21 அன்று டாக்கா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கிளர்ச்சியை ஒடுக்க பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
 ஐந்து பேர் உயிர்நீத்த அதே இடத்தில் நினைவுச் சின்னம் உருவானது. அன்று முதல் ஒவ்வோர் ஆண்டும் அரசின் கடுமையான அடக்கு முறைக்கும் இடையே பிப்ரவரி 21 மொழிப் போர் தியாகிகளின் நாளாக கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் கடைப்பிடித்து வந்தனர். மக்களின் மொழிப் போராட்டம் தொடர்ந்தது.
 மக்களின் கடுமையான எதிர்ப்பினை யடுத்து 1956 பிப்ரவரி 16 அன்று பாகிஸ்தானின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக வங்க மொழியும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. என்றாலும் மேற்குப் பாகிஸ்தானின் ஆதிக்கப் போக்குக்கு எதிரான விடுதலை உணர்வு கனன்று கொண்டே யிருந்தது.
 இந்த மொழிப்போர் இறுதியில் வங்கதேசம் என்ற ஒரு தனி நாடு உருவாக வழிவகுத்தது. அந்தப் பின்னணியில்தான் தாய்மொழியின் தனிச்சிறப்பை உணர்த்தும் வகையில் பன்னாட்டு அமைப்பான ஐ.நா. சபை வங்கதேசத்தின் மொழிப்போர் தொடங்கிய பிப்ரவரி 21-ஐ உலக தாய்மொழி நாளாக ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என 1999 நவம்பர் 17-இல் தீர்மானம் நிறைவேற்றியது.
 பின்னர் ஐக்கிய நாடுகள் அவை, தனது உறுப்பு நாடுகள் இதனைக் கொண்டாட வேண்டும் என பொது அவையில் தீர்மானம் நிறைவேற்றியது. உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்படும் வரலாறு இதுதான்.
 இந்திய ஆட்சியாளர்கள் மொழி பிரச்னையைக் கையாளும்போது கவனமாகச் செயல்பட வேண்டும். இந்தியாவில் மாநிலங்கள் சாதி, மத அடிப்படையில் பிரிக்கப்படவில்லை; மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மொழிகளிலேயே பழைமையான மொழி தமிழ்மொழி என்பதை மறந்துவிடக் கூடாது.
 இந்தியா பல மொழிகளின் தாயகம் என்பதால் அடிக்கடி மொழி, இன, பண்பாட்டு பிரச்னைகள் தலைதூக்கி நிற்கின்றன. மத்தியில் ஆட்சி மாறும்போதெல்லாம் கல்விக் கொள்கையும் மாற்றப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்படுகிறது. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வித் துறை பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது.
 உலகில் சிறப்போடு விளங்கும் உயர்தனிச் செம்மொழிகளுள் தமிழும் ஒன்றாகப் போற்றப்படுகிறது. கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சம்ஸ்கிருதம் முதலிய செம்மொழிகள் பேச்சு வழக்கு இழந்து போய்விட்டன. செம்மொழிகளில் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழிகள், சீனமும், தமிழும்தான்.
 "அடுத்த பிறவி எடுக்க நேர்ந்தால் நான் தமிழனாகவே பிறக்க ஆசைப்படுகிறேன். அந்த மொழியில் உள்ள திருக்குறளை அம்மொழி மூலமாகவே படிக்க வேண்டும் என்பதே என் ஆவல்' என்றார் அண்ணல் காந்தியடிகள்.
 இவ்வாறு உலக அறிஞர்களாலும் ஆய்வாளர்களாலும் போற்றப்படும் செம்மொழியாகிய தமிழ் நமக்குத் தாய்மொழியாகும். அந்தத் தாய்மொழியைப் போற்றுவோம்.
 
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com