நீரில் நனையும் நெல் மூட்டைகள்

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் பிரச்னைக்கு விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதே டெல்டா பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.  
கோப்புப்படம்
கோப்புப்படம்

தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் உரிய பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளதால் அவை அனைத்தும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அந்த நெல் மூட்டைகளை அரவைக்கு எடுத்துக்கொள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த குறுவை சாகுபடியின் போது 4.50 லட்சம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது.

ஆனால், அறுவடை நேரத்தில் தொடர்மழை பெய்ததால் பெரும்பாலான இடங்களில் நெல் மணிகள் மழைநீரில் மூழ்கின. இதனால் நெல்மணிகள் வயலிலேயே முளைக்கும் நிலை உருவானது. எஞ்சியவற்றை அறுவடை செய்தபோது நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துக் காணப்பட்டது. கொள்முதல் நிலையங்களில் 17 % க்குக் குறைவான ஈரப்பதம் உள்ள நெல்மணிகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

கடந்த கொள்முதல் பருவத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 10.54 லட்சம் டன், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 15 லட்சம் டன் என்ற அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் டெல்டா மாவட்டங்களிலுள்ள 13 உள் சேமிப்புக் கிடங்குகளிலும், 66 திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளிலும் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், பல இடங்களில் உள்ளதிறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் தற்போது சேதமாகி வருகின்றன. குறிப்பாக, திறந்தவெளிக் கிடங்குகளில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேதமடைந்து நெல்மணிகள் சிதறி ஆங்காங்கே குவியல் குவியலாகக் காணப்படுகின்றன. 

சேமிப்பு கிடங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் இத்தகைய பாதிப்புகளைத் தவிர்த்திட முடியும். ஒருபுறம், இந்த நெல்லை அரவைக்கு எடுத்தால் அரசு குறிப்பிட்டுள்ள விகிதாசாரத்தில் அரிசியைத் தரமுடியாது என்பதால் தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லை அரவைக்கு எடுக்க முன்வருவதில்லை.

மற்றொருபுறம், டெல்டா மாவட்டங்களில் உள்ள சில கொள்முதல் நிலையங்களில் குறுவை நெல்லை கொள்முதல் செய்வதற்காக ஏற்கெனவே எடுத்துவிட்டு, நெல்லின் ஈரப்பதம் காரணமாக பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அப்படியே அடுக்கி வைத்துள்ளனர். இதனால் தேங்கியுள்ள அந்த குறுவை நெல்லை இன்னும் எடுக்கவில்லையே என்ற கவலையில் விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 

அண்மையில் தொடர்ந்து நான்கு நாட்கள் மழை பெய்ததால் ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிராமப்புறங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பாதுகாப்பதற்கான வசதி செய்து கொடுக்காத காரணத்தினால் அங்குள்ள கொள்முதல் நிலையங்களிலும் மூட்டைகள் நீரில் நனைந்து வீணாகி உள்ளன.

நெல் கொள்முதல் செய்யப்படாத காரணத்தால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். அது மட்டுமல்ல, டெல்டா மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை மூடி வருகின்றனர். இதுபோன்ற பிரச்னைகள் டெல்டா மாவட்ட விவசாயிகளின் கவலையை அதிகரித்துள்ளன. 

விவசாயிகளிடம் ஈரப்பதம் உள்ளிட்ட சில காரணங்களைக்கூறி கொள்முதல் செய்வதற்குத் தயக்கம் காட்டும் நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாகம், அந்த நெல்லை பாதுகாப்பதில் போதிய அக்கறை காட்டுவதில்லை என்று கொள்முதல் நிலைய பணியாளர்கள் மீது விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

மேலும், நெல்லைக் கொள்முதல் செய்யும் பணியாளர்களுக்கு கட்டாயமாகக் கையூட்டு தர வேண்டியிருப்பதாகவும் கூறுகின்றனர். இதற்குக் காரணம், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேல்நிலை அதிகாரிகளே தவிர பணியாளர்கள் இல்லை என்பதை விவசாயிகள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். 

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல், கொள்முதல் நிலையங்களிலேயே வாரக்கணக்கில் தேங்குகிறது. இதனால் ஏற்படும் எடை இழப்பிற்கு கொள்முதல் நிலைய ஊழியர்களும், சேமிப்பு கிடங்குகளில் சேதமானால் அங்குள்ள பணியாளர்களும்தான் பொறுப்பேற்க வேண்டியுள்ளது.

அதோடு, விவசாயிகளிடம் வாங்கும் பணத்தில் லாரிகளில் ஏற்றுவதற்கு மட்டும் மூட்டை ஒன்றுக்கு ரூ.5 கட்டாயமாகத் தரவேண்டியுள்ளது. சுமை தூக்கும் பணியாளர்களுக்கு மூட்டைக்கு ரூ.10 வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் அண்மையில் அறிவித்திருந்தார். ஆனால் அது குறித்த தெளிவான அரசாணை இல்லாததால் அது நடைமுறைக்கு இன்னும் வரவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

கொள்முதல் நிலையங்களில் ஆண்டுக்கு ஆண்டு நெல் கொள்முதல் அளவு உயர்ந்துகொண்டே போகிறது. ஆனால் போதிய சேமிப்பு கிடங்குகளை உருவாக்கவும், நெல்லைப் பாதுகாக்கவும், வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பவும் உரிய ஏற்பாடுகளை செய்வதில் அரசிடம் தயக்கம் காணப்படுகிறது.

கொள்முதல் செய்யப்பட்டதில் 25 % நெல்லை மட்டுமே மாவட்டங்களில் இருப்பு வைத்துக்கொள்ளலாம் என்று விதி உள்ளது. ஆனால் சேமிப்பு கிடங்குகளில் ஆயிரக்கணக்கான மூட்டைகளை சேமித்து வைத்து ஏன் வீணாக்கி வருகின்றனர் என்பது புரியவில்லை. 

இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, "கடந்த இரு ஆண்டுகளில் அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை வெளிமாவட்டங்களிலுள்ள தனியார் அரவை ஆலைக்கு அனுப்பி வருகிறோம். கடந்த குறுவைப் பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும் சேமிப்பு கிடங்குகளில் இருந்தபோது தொடர்ந்து பெய்த கனமழையால் நனைந்து சேதமாயின. தற்போது நெல் மூட்டைகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்' என்கின்றனர். 

எது எப்படியிருந்தாலும், திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்படும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் பிரச்னைக்கு விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதே டெல்டா பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com