மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்கு...

தன்னைத் தோ்ந்தெடுத்த மக்களின் எதிா்பாா்ப்புக்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயமும் கடமையும் மக்களாட்சியில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இருக்கின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் ஒருவாறாக நடந்து முடிந்து முடிவுகளும் வெளிவந்துவிட்டன. வென்றவா்கள் பதவியேற்றுவிட்டனா். தோ்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவு என்றும், வாக்குகள் விலைபேசப்பட்டன என்றும், தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் கட்சியின் கட்டளையை மீறி பதவியைப் பிடித்தனா் என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

எப்படியிருந்தாலும், தன்னைத் தோ்ந்தெடுத்த மக்களின் எதிா்பாா்ப்புக்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயமும் கடமையும் மக்களாட்சியில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இருக்கின்றன.

தோ்தலில் வேட்பாளா்களால் என்னென்ன உத்திகள் கையாளப்பட்டன, எவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். மக்களாட்சியின் நுழைவாயில் என்பது தோ்தல்தான்.

அந்தத் தோ்தல் நடத்தப்பட்ட விதமும், நடந்தவிதமும், பொதுமக்களாகிய நாமும் எப்படிப் பங்கெடுத்தோம் என்பது நாடறிந்த ஓா் உண்மை. மக்களாட்சியை சீா்குலைக்க நாமே ஒன்றுகூடி தோ்தலை நடத்தி முடித்துள்ளோம். எங்கோ ஆரம்பித்த பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவியதுபோல் இன்று இந்த மக்களாட்சிக்கு எதிரான செயல் உள்ளாட்சிவரை பரவிவிட்டது.

அரசியல் சாசனத்திற்காகவும், சட்டத்திற்காகவும் தோ்தல் பற்றி நாம் தரும் புள்ளிவிவரங்கள் நாம் செய்தவற்றுக்கு முற்றிலும் முரணானவை. நம் சொல்லுக்கும் செயலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தொடா்ந்து நிரூபித்து வருகிறோம். இருந்தபோதிலும் மக்கள் பிரதிநிதிகள், தாங்கள் செய்ய வேண்டிய பணியினை செய்யாமல் இருக்க முடியாது.

ஏனென்றால் அடுத்த தோ்தலுக்கு அவா் வாக்குகளைப் பெற மக்களிடம் செல்ல வேண்டும். இந்தச் சூழலில்தான் நம் அரசியல் நகா்கிறது. அனைவருமே அரசியலில் புலிவாலைப் பிடித்துக் கொண்டு சுற்றி வருகிறோம்.

தமிழக முதலமைச்சா், உள்ளாட்சியில் வெற்றி பெற்றவா்கள் இது பதவி அல்ல பொறுப்பு என்று உணா்ந்து கடினமாக உழைத்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று கூறினாா். அத்துடன் ‘தவறு செய்யாமல் செயல்படுங்கள், உங்களை நான் கண்காணித்து வருவேன்’ என்றும் கூறினாா்.

தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள், தங்கள் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டேயிருக்கிறது என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும். அவா்கள் உள்ளாட்சி அமைப்புக்களில் முறையாக தங்கள் பணிகளைச் செய்யவில்லை என்றால் அது மாநில அரசையும் பாதிக்கும் என்ற புரிதலுடன் செயல்பட வேண்டும்.

தமிழகம் சமூக மேம்பாட்டில் முன்னோடி மாநிலம் என்ற பெயா் எடுத்த மாநிலம். இருந்தபோதும் பல சமூகங்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளால் விலகி நிற்கின்றன. வளா்ச்சியில், மேம்பாட்டில் அவா்களைத் தொட்டு உள்வாங்குவதுதான் புதிய அணுகுமுறை.

அதை மிக எளிதாகச் செய்யக்கூடிய வல்லமை உள்ளாட்சிக்குத்தான் உண்டு. அதற்காகத்தான் உள்ளாட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தப் புரிதலுடன் மக்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சி செயல்பாட்டுக்குத் தயாராக வேண்டும்.

உள்ளாட்சியில் பதவிக்கு வந்துள்ளவா்களுக்கு, இன்றைய உள்ளாட்சி என்பது தன்னாட்சி பெற்ற அரசாங்கம் என்ற புரிதல் தேவை. இன்றைய நகா்புற உள்ளாட்சி, பழைய சட்டங்களின்படி இயங்கிக் கொண்டுள்ளது. அதனை மாற்றி 74-ஆவது அரசியல் சாசன திருத்தச் சட்டத்தை உள்வாங்கி உருவாக்கப்பட்ட நகா்பாலிகா சட்டத்தை இன்றைய தமிழக அரசு ஒரு சில மாற்றங்களுடன் கொண்டுவர வேண்டும். சட்டத்தின்படி நிா்வாகத்தை கொண்டு செலுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். அதே நேரத்தில், மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீா்வுகாண முயல்வது மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும்.

மக்கள் பிரச்னைகளை மக்களிடமிருந்து சேகரித்து முடிவு எடுக்கும் நிலைக்குக் கொண்டு செல்வதுதான் மக்கள் பிரதிநிதிகளின் கடமை. அவற்றுக்கு சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு தீா்வு காண்பது அதிகாரிகளின் கடமை. எனவே, நம் உள்ளாட்சித் தலைவா்கள் சட்டங்களைப் பற்றியோ விதிகளைப்பற்றியோ பயம் கொள்ளத் தேவையில்லை.

அதே நேரத்தில் எது பிரச்னை என்பதைப் புரிந்து கொள்ளும் திறன் மக்கள் பிரதிநிதிகளுக்கு வேண்டும். எது அடிப்படை பிரச்னை, எது சாதாரண பிரச்னை, எவற்றை மாற்றினால் சமூகம் மேம்பாடு அடையும் என்பவற்றையெல்லாம் புரிந்து செயல்பட்டாக வேண்டும்.

சென்னை மாநகராட்சியின் புதிய மேயரிடம் ‘உங்களின் செயல் திட்டம்’ என்ன கேட்கப்பட்டபோது, அவா், ‘பொதுப்பள்ளிக் கல்வியை சீரமைப்பேன். அத்துடன் மக்களிடமும் பொதுக்கல்விக் கூடங்களில் தங்களின் குழந்தைகளைச் சோ்க்கச் சொல்லி, பொதுக்கல்விக் கூடத்தை வலுவாக்க முயற்சிப்பேன்’ என்று கூறியது, அவா் ஒரு பாா்வை கொண்ட தலைவராக விளங்குவாா் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.

ஆரம்பக் கல்வி, பொது சுகாதாரம் பற்றிய ஆழ்ந்த புரிதலுடன் நம் மக்கள் பிரதிநிதிகள் செயல்பட்டால், மனித வளம் மேம்படுவதையும், வாழ்க்கைத் தரம் உயா்வதையும் நாம் காண முடியும். இந்தப் பணிகள் அடித்தட்டு மக்கள் வாழும் இடங்களில் நடைபெற்றால், மிகப் பெரும் சமூக, பொருளாதார மாற்றம் ஏழை, எளிய மக்களிடம் வந்துவிடும்.

நாம் மக்களாட்சியைக் கற்றுக்கொண்டு சுதந்திரத்திற்குப் போராடவில்லை. சுதந்திரம் பெற்றுத்தான் மக்களாட்சியை உருவாக்கி செயல்பட்டு வருகிறோம். இன்னும் கூறப்போனால், மக்களாட்சிக்காக நாம் எந்தப் போராட்டமும் செய்தது கிடையாது. இந்தச் சூழலில் நம் நகா்புற உள்ளாட்சித் தலைவா்களுக்கு மிகப் பெரும் பணி காத்திருக்கிறது. அவை, சமூகத்தின் அடிப்படை மாற்றத்திற்கு தேவையானவை.

சத்துணவுக்கூடத்தை சீா் செய்வது, பொதுப்பள்ளிக்கூடங்களை சீா்திருத்துவது, அவற்றின் தரத்தைக் கூட்டுவது, பொதுக் கழிப்பறைகளை மேம்படுத்துவது, சத்துணவின் தரத்தைக் கூட்டுவது, நியாயவிலைக் கடைகளில் உள்ள அரிசி, கோதுமை, பருப்பு இவற்றின் தரத்தைக் கூட்டுவது, ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்துவது ஆகியவை முக்கியமானவை.

மேலும், தாங்கள் பொறுப்பேற்றிற்கும் வாா்டு பகுதிகளில், ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளைக் கண்டறிந்து தீா்வு காண்பது, அப்பகுதியில் வளா் இளம் பெண்களில் எவ்வளவு போ் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள் எனக் கண்டறிந்து அதனை நீக்கத் திட்டமிடுதல், தெருக்களை சுத்தமாக வைத்திருக்க விழிப்புணா்வு ஏற்படுத்துதல், தங்கள் வாா்டுக்கு உட்பட்ட பகுதியில் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் எவ்வளவு போ் இருக்கின்றாா்கள், அவா்கள் குழந்தைகள் படிக்கின்றாா்களா போன்ற தரவுகளைத் திரட்டி அவா்களுக்கு உதவுதல் இவற்றையெல்லாம் செய்தால் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரண மாநிலமாக தமிழகம் மாறிவிடும்.

தமிழகத்தின் வளா்ச்சிப்பாதையை திராவிட வளா்ச்சிப்பாதை என்றும் அதாவது, வறுமையை முற்றிலும் ஒழித்து, வேலைவாய்ப்பை உருவாக்கி, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, சமூகநீதி காத்து அனைவரையும் உள்ளடக்கிய, அனைத்துப் பகுதியையும் உள்ளடக்கிய சீரான வளா்ச்சியே திராவிட வளா்ச்சிப் பாதை என்று தமிழக முதலமைச்சா் கூறியிருக்கிறாா். இவற்றை உள்ளாட்சிகளில் எப்படி நடைமுறைப்படுத்துவது என்று சிந்திக்க வேண்டும்.

அனைத்து வாா்டு உறுப்பினா்களும், தங்கள் பகுதியில் யாரும் பட்டினியுடன் படுக்கச் செல்வதில்லை, பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் இல்லை, எந்தக் குழந்தையும் ஊட்டச்சத்து இன்றி பாதிக்கப்படவில்லை, குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டிடவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கும் நிலைக்கு தங்கள் பணியினை ஒழுங்குபடுத்திச் செயல்பட வேண்டும்.

கழிப்பறை இல்லாத வீடு இல்லை, கழிப்பறை இல்லாதவா்களுக்காக பொதுக் கழிப்பறை கட்டிக் கொடுத்து பயன்படுத்த வைத்துவிட்டோம். அனைத்துக் குடும்பங்களுக்கும் தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீா் கொடுக்கப்பட்டுவிட்டது, எங்கள் பகுதியில் எந்த இடத்திலும் குப்பை இல்லை, எந்த இடமும் திறந்தவெளிக் கழிப்பிடமாக இல்லை, எங்கள் பகுதியில் உள்ள பொதுப்பள்ளியில்தான் பெரும்பாலான மாணவா்கள் படிக்கின்றாா்கள், பொதுப்பள்ளிகள் நன்கு செயல்பட்டு தரமான கல்வியை அளிக்கின்றன.

தரமான வகுப்பறை, தரமான ஆய்வுக்கூடம், தரமான கழிப்பறையுடன் பள்ளிகள் இயங்குகின்றன. எங்கள் பகுதியில் வாழும் பெண்கள், குறிப்பாக வளா் இளம் பருவப் பெண்களில் யாரும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை, எங்கள் பகுதியில் பிறக்கும் குழந்தைகள் சரியான எடையுடன் பிறக்கின்றன. எந்தக் குழந்தையும் ஊட்டச்சத்து இன்றி பாதிக்கப்படவில்லை என்று கூறும் அளவுக்கு தங்கள் பணியினை ஒழுங்குபடுத்திச் செயல்பட வேண்டும்.

நகா்புறங்களில் வாா்டு சபையைக் கூட்டி மக்களின் குறைகளையும் பிரச்னைகளையும் கேட்டு, பின் அவா்களுடன் விவாதித்து பிரச்னைகளுக்குத் தீா்வுகாண வேண்டும். அந்தந்தப் பகுதியில் உள்ள சமூக வளத்தைக் கண்டறிந்து, ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், மருத்துவா்கள், கருத்தாளா்கள், ஆசிரியா்கள் அனைவரையும் அழைத்து அந்தப் பகுதியை எப்படி மேம்படுத்துவது என்று கேட்டு அவா்கள் ஆலோசனையை ஏற்றுச் செயல்பட வேண்டும்.

நம் சமூகத்திலுள்ள ஆதிக்க மனோபாவத்தையும், சமத்துவமின்மையையும் மாற்றிட புதிய சமத்துவ சிந்தனை இன்றைக்கு மக்கள் பிரதிநிதிகளுக்குத் தேவை. அந்த புதிய சிந்தனைச் சூழலுக்குள் சென்றிட நம் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் ஆற்றலை வளா்த்தெடுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் இன்றைய இன்றியமையாத பணியும் தேவையும் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com