இணையமும் குழந்தைகளும்

குழந்தைகளிடையே ஆராய்ச்சி ஆர்வத்தினை தூண்டிய இந்த இணையவழி (ஆன்லைன்) பயன்பாடு பல ஆபத்துகளிலும் அவர்களை சிக்கவைத்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நம் நாட்டில் 2020 டிசம்பர் இறுதியில் 79.518 கோடியாக இருந்த இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை 2021 மார்ச் மாத இறுதியில் 82.53 கோடியாக உயர்ந்துள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது இணையப் பயனாளர் எண்ணிக்கையின் காலாண்டு வளர்ச்சி விகிதம் 3.79 % ஆக உள்ளது. 

இந்தியாவின் இணையப் பயனாளிகளில் கிட்டத்தட்ட 15% பேர் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று 'இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோஸியேஷன் ஆஃப் இண்டியா' அறிக்கை கூறுகிறது.  இந்தியாவில் 6.6 கோடி குழந்தைகள், தங்கள் பெற்றோரின் தொலைத்தொடர்பு சாதனங்களின் மூலம் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் அனைத்துத் துறைகளிலும் இணையம் வேகமாக ஊடுருவி வருவதால்  அந்நாடுகளில் இணையப் பயனர்களின் விகிதம் அதிகரித்து வருவதாக கூறும்  ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், உலக அளவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள் என்று மதிப்பிடுகிறது.

கற்றலை வழங்குவதோடு  குழந்தைகளிடையே ஆராய்ச்சி ஆர்வத்தினை தூண்டிய இந்த இணையவழி (ஆன்லைன்) பயன்பாடு பல ஆபத்துகளிலும் அவர்களை சிக்கவைத்துள்ளது. 

அதிகப்படியான இணையப் பயன்பாடு கல்வியிலும் தொழில்முறை செயல்திறனிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

2020ஆம் ஆண்டு 'க்ரை' (சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ) என்ற அமைப்பு இணையவழிப் பாதுகாப்பு குறித்தும் இணைய அடிமையாதல் குறித்தும் நடத்திய ஆய்வில் பதிலளித்தவர்களில் ஏறக்குறைய பாதி பேர் (48%) இணையத்திற்கு அடிமையானதை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களில் ஒரு சதவீதத்தினரிடத்தில் கடுமையான இணைய அடிமைத்தனம் உள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. 

இணையத்திற்கு  அடிமையாதல் என்பதனை மனநலக் கோளாறு என அங்கீகரித்துள்ளது 'மனநல நோயறிதல்  புள்ளிவிவரக் கையேடு' (பதிப்பு 5). அதிகப்படியான, நீடித்த இணைய விளையாட்டுகள் குழந்தைகளின் அறிவாற்றலிலும் நடத்தையிலும் மிகப்பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தும் எனவும் அது கூறுகிறது.

கரோனா கால பொதுமுடக்கம் இந்தியக் குழந்தைகளுக்கு இணையவழி விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியது. 

குழந்தைகளிடம் பாலியல் வன்முறை, அது சம்பந்தப்பட்ட காணொலிகளைத் தயாரித்து புழக்கத்தில் விடுதல், ஆபாச இணையதளங்கள்,  இணைய அச்சுறுத்தல், இணையவழி பாலியல் தொல்லை, இணையத்தினால் உருவாகும் பழிவாங்கும் உணர்வு போன்ற பல ஆபத்துகள் குழந்தைகளைச் சூழ்ந்துள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த  'இன்டர்நெட் வாட்ச் டிரஸ்ட்' என்ற இணையவழி கண்காணிப்பு அமைப்பு 2021-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பதிவுகள் அதிகமாக இருந்ததாக கண்டறிந்துள்ளது.

கொவைட் 19 பெருந்தொற்றின்போது உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் குற்றங்களால் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து இன்டர்போல் அமைப்பு நடத்திய ஆய்வின் அறிக்கை, இணையவழி குற்றவாளிகள், குழந்தைகளை ஈர்க்கும் பொருட்டு இணையத்தில் செலவழிக்கும் நேரத்தை அதிகரிக்கக்கூடும் என்றும், குழந்தைகளிடத்தில் பிரபலமாக இருக்கும் தளங்களை குறி வைத்து  அதன் மூலம் குற்ற செயல்களில் ஈடுபட அவர்களது இணையவழி சூழல்களைத் தொடர்ந்து மாற்றியமைக்கக் கூடும் என்றும்  கூறுகிறது. 

கொவைட் 19  ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டலைஸ் அதிகப்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

2020ஆம் ஆண்டு, அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட குழந்தைகளுக்கு எதிராக இணையவழிக் குற்றங்கள் 400 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகள் கூறுகின்றன. 

2019ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான 164 இணையவழிக்  குற்றங்கள் பதிவாகியுள்ள நிலையில், 2020ஆம் ஆண்டில் 842 இணையவழிக்  குற்றங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த 842 இணையவழிக் குற்றங்களில் 738 குற்றங்கள், குழந்தை பாலியல் துன்புறுத்தல் தொடர்பான காணொலி வெளியிட்டது தொடர்பானவை.

இணையம் இன்றைய குழந்தைகளின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. குழந்தைகளுக்கு கல்வியையும், வாழ்வியல் நெறிகளையும் வழங்க கணிசமான பங்களிக்கும் இணையவழி பயன்பாட்டின்போது முகம் அறியாத மனிதர்களுடன் ஏற்படும் மனிதத் தொடர்பும், திரைப்பட நடிகர்-நடிகைகளும், குழந்தைகளுக்கு பிடித்தவர்களும் ஏற்படுத்தும் நடத்தை மாற்றமும் இணையவழித் தேடலின் போது அவர்கள் கற்கும் தேவையற்ற பாடத்தின் உள்ளீடுகளும் குழந்தைகளைக் கடுமையாக பாதிக்கின்றன.

இணையவழி பயன்பாட்டின்போது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு தேவை. இந்த 2022-23 நிதியாண்டில் குழந்தைகள் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு, கடந்த ஆண்டின் 1,089.36 கோடி ரூபாயிலிருந்து 44 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 1,573.82 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் எத்தனை விழுக்காடு, குழந்தைகளின் இணையவழி பயன்பாடு பாதுகாப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய விளக்கம் இல்லை.

இணையவழி குற்றங்களைத் தடுக்கவும், இணையப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வைப் பரப்பவும் தற்போது குழந்தைகள் சார்ந்திருக்கும் இணையத்தின் பயன்பாட்டையும், போக்குகளையும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். 

அது மட்டுமே போதாது, இணைய நிர்வாகக் கொள்கை, குழந்தைப் பாதுகாப்பு இணையவழி சேவை, குழந்தைகளின் எண்ம (டிஜிட்டல்) உரிமைகளை உறுதிசெய்யும் வகையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கை ஆகியவையும் அவசியம். கரோனாவால் உருவான இணையவழி தாக்கத்தின் தீங்கிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் நம் அனைவருக்குமான கடமை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com