உத்தர பிரதேசம் உணர்த்தும் உண்மை!

உத்தர பிரதேசம் உணர்த்தும் உண்மை!

 அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. "நான்கு மாநில தேர்தல் வெற்றி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளோம்" என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்தோடு கூறியிருக்கிறார்.
 ஜனநாயகத்தில் மக்களின் விருப்பம் என்ன என்பதைத் தேர்தல்கள் தெளிவு படுத்துகின்றன. உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் என ஐந்து மாநிலங்களும் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபாடுகளைக் கொண்டவை. இருந்தபோதிலும் பஞ்சாப் நீங்கலாக மற்ற நான்கு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி வாகை சூடியிருக்கிறது.
 இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலம் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம். நாடாளுமன்ற மக்களவைக்கு 80 பிரதிநிதிகளை அனுப்பும் மாநிலம். மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 80 தொகுதி என்பதால் வெற்றியைத் தீர்மானிக்கும் மாநிலம் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
 மாநிலங்களவையில் 31 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலம். 403 சட்டப்பேரவைத் தொகுதிகளும் 75 மாவட்டங்களும் கொண்ட மாநிலம். உத்தர பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் வாழும் மக்களின் மொழியும் கலாசாரமும் மேற்குப் பகுதியில் வாழும் மக்களின் மொழியும் கலாசாரமும் வெவ்வேறானவை. அந்த அளவுக்குப் பரந்த நிலப்பரப்பு கொண்டது.
 கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளாக மக்களின் பிரதிநிதியாக ஐந்து முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், கடந்த ஐந்து ஆண்டுகளாக உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தவருமான யோகி ஆதித்யநாத் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
 இந்தியா முழுவதும் ஊடகங்களில் யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான செய்திகள் பெரிய அளவில் பேசப்பட்டன. அதனைத் தாண்டி கடந்த முப்பத்து மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் மீண்டும் ஆட்சியைப் கைப்பற்றியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.
 இத்தனை ஆண்டு பொது வாழ்வில் யோகி மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. அதோடு, அவர் துறவு வாழ்வு மேற்கொண்டு, குடும்பம், தனக்கான வாழ்க்கைத் தேவை என்று எதுவும் இல்லாமல் தன்னை ஒரு தனி மனிதனாக, ராமராஜ்யத்திற்காகப் பாடுபடும் தொண்டனாக முன்னிறுத்திக்கொள்கிறார். அவரின் குடும்பத்தினர் வறுமையில் வாடுவதைக் கண்முன் காணும் மக்களின் மனதில் அவர் மீது ஒரு தனி மரியாதை ஏற்படுகிறது என்பதே உண்மை.
 உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த எழுபது ஆண்டுகளில் காங்கிரஸ், சமாஜவாதி என மாறி மாறி ஆட்சி நடத்திய கட்சிகள் அந்த மாநிலத்தின் முன்னேற்றத்திற்கென மெனக்கெட்டிருந்தால் இந்த அளவிலான வெற்றி பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்திருக்காது.
 வளர்ச்சி, முன்னேற்றம், பாதுகாப்பு இவற்றில் பின்தங்கிய மாநிலமாகவே உத்தர பிரதேசம் இருந்து வந்திருக்கிறது. பெண்கள் நிலை இந்தியாவிலேயே அதிக கவலைக்குரியதாக உத்தர பிரதேசத்தில்தான் இருந்து வந்திருக்கிறது. அதனைக் களைவதற்கான முயற்சிகளை பாஜகவுக்கு முன்னர் எந்த அரசும் மேற்கொள்ளவில்லை.
 குற்ற நிகழ்வுகள் மிகுந்த மாநிலமாகவும், சட்டம் - ஒழுங்கு பிரச்னை அடிக்கடி தலைதூக்கும் மாநிலமாகவும் உத்தர பிரதேசம் அடையாளம் காணப்பட்டது. கடந்த காலங்களில் கலவரங்களும், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளும் அதிக அளவில் நிலவிய மாநிலம் இது. பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக் காலத்தில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட கலவரங்கள் நிகழ்ந்தன. ஆட்சியை சமாஜவாதி கட்சியின் கைகளில் ஒப்படைத்தால் அவர்கள் காலத்தில் ஏறத்தாழ எழுநூறு கலவரங்கள் நிகழ்ந்தன.
 இதற்கொரு மாற்று வேண்டுமென இன்றைய தலைமுறை சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் பெரிய அளவிலான கலவரங்கள் இல்லை. தலைதூக்கிய பிரச்னைகளையும் உடனுக்குடன் சரிசெய்திருக்கிறார் என்பதும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஆசுவாசத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன்பொருட்டே மக்கள் மீண்டும் ஆட்சியை பாஜகவிடம் ஒப்படைக்க முன்வந்திருக்கின்றனர்.
 யோகி ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே, சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1,142 என்கவுன்ட்டர்களை நிகழ்த்தினார். நாடு முழுவதும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 உத்தர பிரதேசத்தில் ஆள் கடத்தல், கொலை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், ரௌடியிசம் போன்ற குற்றச் செயல்கள் பெருமளவில் குறைந்து, சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்று பாஜக கூறுகிறது. அது உண்மைதான் என்பதை மக்களின் வாக்குகள் நிரூபிக்கின்றன. மக்கள் இது போன்ற நடவடிக்கைகளை வரவேற்கிறார்கள் என்பதையே பாஜகவின் வெற்றி காட்டுகிறது.
 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் நிகழும் மாநிலம் உத்தர பிரதேசம் என்ற குற்றச்சாட்டை ஒட்டுமொத்த இந்தியாவும் நம்பியது. அப்போது அதிலே உண்மையும் இருந்தது. வளர்ச்சிக்கான வழிகளை, பெண்களின் வாழ்வில் ஏற்றம் வருவதற்கான திட்டங்களை உத்தர பிரதேச அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொண்டிருக்கிறது.
 நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளும் பெண்களும் உத்தர பிரதேசத்திலேயே அதிகம். கல்வியறிவிலும் பெண்கள் பின்தங்கியே இருந்து வந்தனர். அவர்களுக்கு நம்பிக்கையூட்டி சுயமாக உழைத்து வளர்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
 குடும்ப அட்டைக்கான பொருள்களை பயனாளர்களின் வீட்டுக்கே கொண்டு சேர்ப்பது என்ற முயற்சியை அரசு மேற்கொண்டது. பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் மூலம் இதனை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அறுபத்தைந்தாயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இந்தப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. இதனால் கிராமத்தில் உள்ள அடித்தட்டு மக்களுக்கான பொருள்கள் அவர்களின் வீட்டுக்கே வந்து சேர்கின்றன.
 அதோடு அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் லட்சக்கணக்கான பெண்கள் தாங்கள் வசிக்கும் கிராமங்களிலேயே வேலைவாய்ப்பையும் பெற்றிருக்கின்றனர். யோகி அரசின் இந்தத் திட்டம் மாநிலத்தின் கடைக்கோடி மக்கள் வரை சென்று சேர்ந்திருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் பிரதிபலிப்பதாகவும் கொள்ளலாம்.
 அதோடு, ஆயிரம் கோடி ரூபாயை சுழல் நிதியாக மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அரசு வழங்கி, அவர்களின் சுயதொழில் வளர்ச்சிக்கு உதவியிருக்கிறது. அதுவும் பெண்களுக்கு இந்த அரசின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. பொருளாதார சுதந்திரமே வளர்ச்சிக்கான அடிப்படை என்பதை உத்தர பிரதேச பெண்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.
 அரசியல் என்று எடுத்துக்கொண்டால், ஜாதிய அரசியலைக் கட்சிகள் தொடர்ந்து செய்து வந்திருக்கின்றன. அதிலே மக்கள் ஆர்வம் இழந்திருக்கிறார்கள். பிரியங்கா வதேராவின் நூற்றுக்கணக்கான பேரணிகள் அர்த்தமற்றுப் போயிருக்கின்றன. காங்கிரஸýக்கு வாக்களித்த பிராமண வகுப்பினரும், பட்டியலினத்தை சேர்ந்த மக்களின் ஒரு பிரிவினரும் பாரதிய ஜனதாவை இம்முறை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.
 காங்கிரஸ் தொடர்ந்து தன்னை சிறுபான்மை மக்களுக்கான பாதுகாவலன் என்று அடையாளப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறது. இந்த அரசியல் இயல்பாகவே ஒரு நிலையில் பிரிவினையை அல்லது மக்கள் மனதில் தங்கள் பாதுகாப்பு குறித்த வினாவை எழுப்பும்.
 ஒரு கட்சி சிறுபான்மை மக்களுக்கானது என்று அவர்களை ஓர் அணியில் திரட்ட முற்படும்போது, சிறுபான்மையல்லாதோர் அக்கட்சியின் மீது நம்பிக்கை இழந்து தங்களுக்கான மாற்று வழிகளைத் தேடுதல் இயற்கையாகவே நிகழ்ந்து விடும். யோகி என்ற துறவியை மக்கள் தங்களுக்கான தலைவராக ஏற்பதும் அதனால் சுலபமாக சாத்தியமாகியிருக்கிறது என்றே தோன்றுகிறது.
 "ஹிந்துத்துவ சித்தாந்தம் வெற்றி பெற்றிருக்கிறதா' என்ற வினா தொடர்ந்து எழுப்பப்படுகிறது. வேதகாலம் தொடங்கி கங்கை சமவெளியும், யமுனை நதிதீரமும் ஹிந்துக்களின் புண்ணிய பூமியாக மக்களின் ஒவ்வொரு அணுவிலும் கலந்துள்ளன.
 அத்தகைய பாரம்பரியத்தை, நம்பிக்கையைக் காக்கும் சித்தாந்தத்தை மக்கள் ஏற்பதில் ஆச்சரியம் இல்லை. ஹிந்துத்துவ சித்தாந்தத்தை விரும்புகின்றனர் என்பதில் உண்மை இருக்கிறது என்றாலும், தேர்தல் அரசியலில் மட்டும் அதனைப் பேசும் கட்சிகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.
 பாரதிய ஜனதா இம்முறை மத அரசியலை விட வளர்ச்சித் திட்டங்கள் பற்றியே அதிகம் பேசியது. என்றாலும், அயோத்தியில் ராமர் ஆலயப் பணிகள், வாராணசியில் விஸ்வநாதர் கோயில் மேம்
 பாட்டுப் பணிகள், கங்கை சீரமைப்பு என்று அவர்கள் கடந்த ஆட்சி காலத்தில் செய்து முடித்திருக்கும் பணிகள் கூடுதல் மதிப்பினை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.
 இந்தப் பணிகள் அந்த பிராந்தியத்தில் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்ற வகையில் மதம் தாண்டி பாரதிய ஜனதா கட்சிக்கு நன்மதிப்பைத் தந்திருக்கின்றன என்றும் புரிந்து கொள்ளலாம்.
 உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு பலமாக அமையும் என்ற கருத்தைத் தாண்டி மேலும் சில விஷயங்களையும் உணர்த்துகின்றன. ஜாதி, மதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்யப்படுகிறது.
 ஜாதியமும், மதமும் மக்களின் அன்றாட வாழ்வின் உணர்வுபூர்வ அம்சங்களாக இருப்பதால் மக்கள் அதனையும் கருத்தில் கொள்கின்றனர். என்றாலும் அதோடு அவர்களின் நோக்கம், நீடித்த வளர்ச்சி வாய்ப்புகள், பாதுகாப்பு என்ற புள்ளியில் நிலைபெறுகின்றது.
 இவ்விரண்டு நிலைப்பாடுகளையும் மிகச் சரியாகப் புரிந்து கொள்ளும் கட்சிகளும் அதை நோக்கி செயல்படும் தலைவர்களுமே மக்களால் ஏற்கப்படுகிறார்கள்.
 
 கட்டுரையாளர்:
 ஊடகவியலாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com