அறிவுப் பரிமாற்றம் அவசியம்

ஒரு நிறுவனத்தின் சொத்து என்பது அதன் நிலம், கட்டடம், எந்திரங்கள், கச்சாப் பொருட்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள்
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒரு நிறுவனத்தின் சொத்து என்பது அதன் நிலம், கட்டடம், எந்திரங்கள், கச்சாப் பொருட்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவை மட்டுமல்ல. இவை அனைத்தையும் விட, முக்கியமானதும் அதிக மதிப்புடையதும் அந்நிறுவனத்தின் மனித வளமே ஆகும்.

ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள், மேலாளர்களின் திறன், அவர்களது அனுபவம், அதன் மூலம் அவர்கள் பெற்றுள்ள அறிவு ஆகியவை, அந்நிறுவன சொத்துகள் அனைத்தையும் விட மதிப்பு மிக்கவையாகும். எனவே, தொழில், சேவை நிறுவனங்களில் ஊழியர்கள் திறன் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வரும். இதனை செய்வதற்கென்றே அங்கெல்லாம் தனிப் பிரிவு ஒன்று எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

கார்ப்பரேட் எனப்படும் பெருநிறுவனங்களில், பல்வேறு துறைகள் இருக்கும். ஒரு துறையில் ஏற்படும் அனுபவம், அதில் கற்ற பாடங்கள் அவற்றைப் பிற துறைகளுடன் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும். இதன் மூலம், ஒரு சாரார் பெற்ற அனுபவத்திலிருந்து மற்ற அனைவரும் பாடம் கற்கும் சூழல் ஏற்படுத்தப்படும். தொழில்துறையில் இதனை 'அறிவு பரிமாற்றத்துறை' (நாலெட்ஜ் டிரான்ஃபர் டிபார்ட்மென்ட்) என்று கூறுவார்.

பன்னாட்டு நிறுவனங்கள் இதனை இன்னும் செம்மையாகச் செய்லபடுத்தும். அந்த நிறுவனங்கள், ஒரு நாட்டில், ஏற்படும் அனுபவங்களை, பிற நாடுகளில் உள்ள தன்  கிளை நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளதால், அதன் மூலம் பயன் பெறுகின்றன.

இதன் மூலம் புதுப்புது ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வது என்பது அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நேரடியாக உதவும். பிற நிறுவனங்களுடன் போட்டியிடுவது, சந்தையில் தனது பங்கினை அதிகப்படுத்துவது, உற்பத்தி செலவைக் குறைப்பது இவையெல்லாம்  ஒரு சில தனி மனிதர்களின் முயற்சியின் விளைவு என்கிற கருத்து தவறு . அது முறையாகத் திட்டமிடப்பட்ட கூட்டு முயற்சியாகும் .

தகவல் சேகரிப்பு என்பது இதில் ஒரு முக்கிய அம்சமாகும். ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் தகுதி, திறமை, அவர்களிடம் உள்ள சிறப்பு அம்சங்கள் ஆகியவை குறித்த தகவல்கள் ஓரிடத்தில் சேகரித்து வைக்கப்படும். அது போலவே, அந்த நிறுவனத்தின்  சிறப்பு அம்சங்கள், அதன் தகுதி ஆகியவை தொடர்ந்து மேம்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கும். 

பொருளாதார லாபத்தையும் கடந்து, ஊழியர்கள் - நிர்வாகிகளின் சராசரி அறிவும் திறனும்  தொடர்ந்து உயர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கும். இப்படிச் செய்வதன் மூலமாக அந்நிறுவனத்தின் செயல்திறனை உயர்த்தவும் திட்டமிடப்படுகிறது. மேலும் இவை குறிப்பிட்ட கால அட்டவணைப்படி செயல்படுத்தப்படுகிறது. வளர்ச்சியடையும் ஒரு நிறுவனத்துக்குப் பொருந்தும் இந்த நடைமுறை, ஒரு  சமுதாயத்திற்கும் ஏன், குடும்பத்திற்கும் பொருந்தும் என்பதே உண்மை.

நம் நாட்டில், பல நூறு ஆண்டுகளாக, பல தலைமுறைகளாகக் கண்டறியப்பட்டு, சேகரிக்கப்பட்ட நுண்ணறிவுத் தகவல்கள், தொடர் சங்கிலிபோல அடுத்தவர்களுக்கு பரிமாறப்பட்டு வந்தன. அவை பிறருடன் பகிர்ந்துகொள்ளப்படாததால், அதிலும் குறிப்பாக, தங்களது குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு எவருடனும் பகிர்ந்து கொள்ளாத காரணத்தால் ஒரு சமுதாயம் என்ற அளவில் நாம் இழந்தவை ஏராளம். 

பாரம்பரிய மருத்துவம், இசை, நெசவு உள்ளிட்ட கைவினைத் திறன்களும், கலைகளும், இயற்கை சார்ந்த நுண்ணறிவும் அழிந்துபட்டதற்குக் காரணம் மேலை நாட்டு மோகம் மட்டுமே அல்ல. அவை குறித்து தொடர்ந்த அறிவுப் பரிமாற்றம் இல்லாததே முக்கிய காரணமாகும். 

அது மட்டுமல்ல, வரலாறு சார்ந்த தகவல்களை முறையாகப் பதிவு செய்து வைக்கும் வழக்கம் நமது மன்னர்களிடையே இல்லாதிருந்தது பெரும் குறை. சோழர்கள் காலத்தில் சீனாவுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பு குறித்த தகவல்கள், சீனாவின் சூரியவம்ச அரசர்களின் பதிவுகளில் இன்றும் இருக்கின்றன. ஆனால், இங்குள்ள கல்வெட்டுக்களிலோ செப்புப்  பட்டயங்களிலோ அவை குறித்த தகவல் ஏதும் காணப்படவில்லை.

ஆனால், தற்போது நம் அரசாங்கங்கள், பெருமுயற்சி செய்து, பாரம்பரிய சித்த மருத்துவம், அருகிவிட்ட பழங்கலைகளின் வளர்ச்சி ஆகியவற்றில் நிறுவன ரீதியான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. 

குடும்பம் என்ற அளவில், தங்கள் குடும்பத்தின் பாரம்பரியப் பெருமைகள், மூதாதையரின் சாதனைகள், அவர்களது பெருவாழ்வு, குடும்பம் எனும் மரம், அதில் கிளைத்த உறவினர்கள், சொத்து விவரம், மூதாதையரின் தனித்திறன், அவர்கள் சந்தித்த இன்னல்கள், அவற்றிலிருந்து மீண்டு வந்த விதம் இவை பற்றிய புரிதலும் அறிவும்  இல்லாத பலரை நாம் பார்க்க இயலும். 

அவர்கள் அந்தச் செய்திகளில் இருந்து உத்வேகம் பெறும் வாய்ப்பை இழக்கின்றனர். அது மட்டுமல்ல, சில இடங்களில் அவர்களின் அறியாமையால் குடும்ப உறவுகள் அறுபட நேரிடுகிறது.

அறிவுப்  பரிமாற்றம் என்பது, ஒவ்வொரு குடும்ப அளவிலும் இடையறாது செய்யப்பட வேண்டும். அது ஒரு திட்டமிடப்பட்ட கால அட்டவணைப்படி செய்யப்பட வேண்டிய ஒன்றல்ல. மாறாக, இயல்பான ஒன்றாக அது நிகழ வேண்டும். கூட்டுக் குடும்பங்கள் இருந்த நாட்களில், குடும்பத்தில் இருந்த மூத்தவர்களிடம் இருந்து இளையவர்களுக்கு , இத்தகைய பரிமாற்றம் செவ்வனே நடைபெற்றது. 

பின்னர், கூட்டுக் குடும்பங்கள் குறையத் தொடங்கியதாலும், பல இடங்களில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாலும் இந்த அறிவுப் பரிமாற்றம் சாத்தியமில்லாது போயிற்று. இது குறித்த விழிப்புணர்வுடன் ஒவ்வொருவரும் செயல்படும்போது, குடும்ப அளவில் அறிவுப் பரிமாற்றம் இயல்பாக நடைபெறும். 

இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில், முந்தைய தலைமுறையினருக்கு இல்லாத வாய்ப்பாக, இளைய தலைமுறையினர் புதுப்புதுத் துறைகளில் அறிவினைத் தேடிப்பெறுகிறார்கள். அவ்வாறு பெறும் புத்தறிவுடன், பாரம்பரிய அறிவும் இணையும் போது அவர்கள் பயன்பெறுவதோடு, சமுதாயமும் பெரும்பயன் பெறும் என்பதில் ஐயமில்லை. 

இதனை வலியுறுத்தியே திருவள்ளுவர் 

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
மன்னுயிர்க் கெல்லாம் இனிது 

எனக் கூறினார் போலும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com