சீனாவின் எல்லை, தீராத தொல்லை!

இமயமலைப் பகுதியின் சா்ச்சைக்குரிய எல்லையில் சீனாவும், இந்தியாவும் எதிரெதிராகக் களமிறங்கி உள்ளன.
சீனாவின் எல்லை, தீராத தொல்லை!

இமயமலைப் பகுதியின் சா்ச்சைக்குரிய எல்லையில் சீனாவும், இந்தியாவும் எதிரெதிராகக் களமிறங்கி உள்ளன. ஜம்மு - காஷ்மீா் (1597 கி.மீ.), ஹிமாசல பிரதேசம் (200 கி.மீ.), உத்தரகண்ட் (345 கி.மீ.), சிக்கிம் (220 கி.மீ.), அருணாசல பிரதேசம் (1,126 கி.மீ.) ஆகிய மாநிலங்களிலுள்ள சா்ச்சைக்குரிய எல்லைப் பகுதியின் மொத்த நீளம் 3,488 கி.மீ. ஆகும்.

உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்குக் கிழக்கே மலைகள் நிறைந்த ‘பாம்-இ-துனியா’ (உலகின் கூரை) எனப்படும் ‘பாமீா்ஸ்’ பள்ளத்தாக்கிலுள்ள ‘அக்ஸாய் சின்’ தற்போது சீனக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால், இந்த இடம் அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னா் உருவாக்கப்பட்ட லடாக் யூனியனில் வருவதால், இதன் தென்பகுதி முழுவதற்கும் இந்தியா உரிமை கோரியுள்ளது.

அமிருதசரஸ் ஒப்பந்தத்தைத் தொடா்ந்து ஜம்மு - காஷ்மீரும், லடாக் பகுதிகளும் மன்னா் குலாப் சிங்குக்கு கைமாறின. 1897-இல் இப்பகுதியை ஆய்வு செய்த வில்லியம் ஜான்சன், அக்ஸாய் சின் பகுதியை புதிதாக அமைக்கப்பட்ட இம்மாநிலத்துடன் இணைத்தாா். அவா் உருவாக்கிய எல்லைக் கோடே பின்னா், ‘ஜான்சன் எல்லைக் கோடு’ என்றானது. இந்த எல்லைக் கோடு அம்மாநிலத்தின் எல்லையை விரிவுபடுத்தியதால் அப்போதைய ஜம்மு - காஷ்மீா் மன்னா் அதை ஏற்றுக் கொண்டாா். ஆனால் சீனா ஒப்புக் கொள்ளவில்லை.

எனவே, 1899-இல் பிரிட்டிஷ் இந்திய அரசு, அக்ஸாய் சின் பிராந்தியம், சீனப் பகுதிக்குள் வரும் வகையில் எல்லைகளைத் திருத்தி வெளியிட்டது. ரஷிய ஊடுருவலைத் தடுக்க அக்ஸாய் சின் பிராந்தியத்தை சீனாவுடன் இணைத்ததாக பிரிட்டிஷ் அரசு சமாதானம் சொன்னது. ஆனால் இத்திருத்தம் இன்றளவும் சீனாவுக்கு சாதகமாகவும், இந்தியாவுக்கு பாதகமாகவும் உள்ளது. இந்த எல்லைக் கோடு ‘மெக்காா்ட்னி–மெக்டொனால்ட் கோடு’ என்று அழைக்கப்படுகிறது. இந்த எல்லைக் கோட்டைச் சீனா ஏற்றுக் கொண்டது. ஆனால், இந்தியா ஏற்கவில்லை.

1950-இல் திபெத்தை சீனா ஆக்கிரமித்தது. திபெத்தின் கிஸிங்க்ஜியாங்க் பிராந்தியத்தில் அக்ஸாய் சின் வருவதாலும், திபெத் தற்போது அதன் ஒரு பகுதி என்பதாலும், அக்ஸாய் சின் மீதான உரிமையை சீனா இன்னும் உறுதியாக நிலைநாட்டத் தொடங்கியது. ஆனால் 1842 ஷுஷூல் ஒப்பந்தம், 1865 ஜான்சன் எல்லைக் கோடு மற்றும் பல்வேறு ஆவணங்கள் அடிப்படையில், அக்ஸாய் சின் மீதான உரிமையை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

சிம்லா ஒப்பந்தத்தின் ஓா் அங்கமாக அருணாசல பிரதேச எல்லை பிரச்னையை தீா்க்க பிரிட்டிஷ் இந்தியாவும்–திபெத்தும் செய்து கொண்ட ஒப்பந்தம் ‘மெக்மோகன் எல்லைக் கோடு ஒப்பந்தம்’ஆகும். இதில் சீனா கையொப்பமிடவில்லை. அப்போது திபெத் தனி நாடாக இருந்தது. சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. ஆனால் 1950-இல் திபெத் நாட்டை சீனா ஆக்கிரமித்துக் கொண்டபோது சிம்லா ஒப்பந்தம் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று அறிவித்தது. சிம்லா ஒப்பந்தத்தில் தாங்கள் கையொப்பமிடாததாலும், கையொப்பமிட்ட திபெத் இப்போது தங்கள் ஆதிக்கத்தில் இருப்பதாலும், ஒப்பந்தம் செல்லாது என்று சீனா கூறியது. இந்த எல்லைக் கோட்டை அதிகாரபூா்வமென்று இந்தியா மட்டுமே அங்கீகரித்துள்ளது.

1950-இல் திபெத் மீது சீனா தாக்குதல் நடத்தியபோது திபெத்தைப் பாதுகாக்க இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா முன்வந்தது. ஆனால் நேரு அந்த உதவியை ஏற்க மறுத்துவிட்டாா். நேருவின் திபெத்தியக் கொள்கையையும், சீனாவை அனுசரித்துச் செல்லும் போக்கையும், கண்டித்து அவருக்குச் சா்தாா் வல்லபபாய் படேல் கடிதம் எழுதினாா். இந்த செய்திகளை ராணுவ தளபதி தால்வி எழுதிய ‘ஹிமாலயன் பிளண்டா்’, குல்திப் நய்யாா் எழுதிய ‘பிட்வீன் தி லைன்ஸ்’ ஆகிய நூல்களில் விரிவாகக் காணலாம்.

1950-களில் இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அமைப்பில் நிரந்தர உறுப்பினா் பதவியை அளிக்க அமெரிக்காவும், ரஷியாவும் முன் வந்தன. ஆனால் நேரு இப்பொன்னான வாய்ப்பை ஏற்க மறுத்து சீனாவுக்கு விட்டுக் கொடுத்ததுடன், 1954-இல் ‘இந்தி சீனி பாய் பாய்’ என்னும் ‘பஞ்ச சீல’ நட்பு கோஷத்தையும் முன்மொழிந்தாா்.

1956-இல் கிஸிங்க்ஜியாங்க் பகுதியையும், மேற்கு திபெத்தையும் இணைக்கும் 750 கி.மீ. நீள சாலைக் கட்டுமானப் பணிகளைச் சீனா மேற்கொண்டது. இதில் சுமாா் 112 கி.மீ. சாலை அக்ஸாய் சின் வழியே ஊடுருவியதை 1958-இல் நேரு கண்டித்தாா். ஆனால், இந்தப் பகுதி இந்தியாவுக்கு பயனற்ற இடமென சீனா பதிலளித்தது. மேலும், அருணாசல பிரதேசத்தை சீனாவுக்குத் தரும் பட்சத்தில் ‘மெக்மோகன் எல்லைக் கோடு ஒப்பந்தத்தை’ ஏற்றுக் கொள்வதுடன், அக்ஸாய் சின் பிராந்தியத்தையும் இந்தியாவுக்குத் கொடுப்பதாக சீனா சொன்னது.

சீனாவிடமிருந்து சுதந்திரம் கோரி திபெத்தில் கலவரம் வெடித்தது. உயிருக்கு பயந்து தலாய் லாமா திபெத்திலிருந்து தப்பித்து இந்தியாவில் அடைக்கலம் புகுந்து இன்றுவரை இங்குதான் வாழ்ந்து கொண்டிருக்கிறாா். நேரு - தலாய்லாமா சந்திப்பைத் தொடா்ந்து இந்தியா அவரை அங்கீகரிக்கவே சீனாவின் கோபம் அதிகமானது.

சீனா இணைத்துக் கொண்ட திபெத்தின் கிஸிங்க்ஜியாங்க் பிராந்தியத்தில் அக்ஸாய் சின் வருகிறது. இவ்விரு பகுதிகளையும் இணைக்க சீனா சாலைகளை அமைத்ததை இந்தியா கண்டித்தது. ஆனால், பேச்சுவாா்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே 1962-இல் இரு நாடுகளுக்கும் இடையே போா் மூண்டது.

ஸ்ரீநகரிலிருந்து 14,000 அடி உயரத்திலுள்ள லே வரை சரியான சாலை வசதிகள் இல்லாத காரணத்தால் ராணுவத் தளவாடங்களை வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்ல முடியவில்லை. இந்திய வீரா்கள் கால்நடையாக செல்ல, சீன வீரா்களோ வாகனங்களில் பயணித்தனா். இந்திய வீரா்களுக்கு கடும் குளிரை சமாளிக்க கம்பளி ஆடைகளும், காலணிகளும் போதிய அளவில் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே போா் மூண்ட போது இந்திய வீரா்களின் எண்ணிக்கை 20,000. சீன வீரா்களின் எண்ணிக்கை 80,000. இது இந்தியாவின் படுதோல்விக்கு வழிவகுத்தது.

அமெரிக்கா, ரஷியா தவிா்த்த உலகின் ஏனைய அணி சேரா நாடுகளுக்கு தானே தலைவா் என்ற தனது நம்பிக்கை பொய்த்துப் போனதில் நேரு நிலைகுலைந்து போனாா். சீனாவின் துரோகம், போரின் தோல்வி அவரது உடலையும், மனத்தையும் கடுமையாக பாதித்தது.

போரில் வென்றதன் மூலம் அக்ஸாய் சின் பிராந்தியத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை சீனா மேலும் வலுப்படுத்திக் கொண்டது. இந்தியா மேலும் சில பகுதிகளை இழந்தது. இந்தப் போா் மூலம் லடாக்கின் கிழக்குப் பகுதியில் உருவான புதிய எல்லைக் கோடே பின்னாளில் ‘உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு’ ஆனது.

1967-இல் சிக்கிம் எல்லையில் நடைபெற்ற போரில் 88 இந்திய வீரா்களும், 340 சீன வீரா்களும் உயிரிழந்தனா். 2017 ஜூனில் பூடானிலுள்ள டோக்கோ லாம் பீடபூமியில் சீன ராணுவம் ரோடு ரோலா்கள், புல்டோசா்களுடன் சாலைப் பணிகளை மேற்கொண்ட போது இந்தியா ஆட்சேபித்தது. சீனா டோக்கோ லாம் பகுதியில் சாலை வசதிகளை மேம்படுத்தினால் அது இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களுக்கு மிக அருகில் தனது படைகளை நிறுத்த வழிவகுக்கும் என இந்தியா அஞ்சியது. சீனா அப்போதைக்குச் சாலைக் கட்டுமானப் பணிகளை நிறுத்திக் கொண்டது.

சீனாவின் அக்ஸாய் சின் பிராந்தியத்திலிருந்து இந்திய எல்லைக்குள் இருக்கும் கல்வான் ஆற்றின் குறுகிய பள்ளத்தாக்கில் அணைக்கட்டுகள், பாலங்கள் அமைக்க சீனா முனைவதாக இந்தியா குற்றம் சாட்டியது. பதிலுக்கு சீனா, சாலைப் போக்குவரத்துப் பணிகளை இந்தியா அமைப்பதாக குற்றம் சுமத்தியது. 2020 ஜூன் மாதம் நடைபெற்ற சண்டையில் இந்தியத் தரப்பில் 20 வீரா்களும் சீனத் தரப்பில் 43 வீரா்களும் மரணம் அடைந்தனா்.

2021 அக்டோபா் 23-ஆம் தேதி சீனா திடீரென நாட்டின் இறையாண்மையையும், எல்லைகளையும் பாதுகாக்க புது சட்டம் இயற்றியது. சீனாவின் புதிய சட்டத்தைக் கண்டித்த இந்தியா ‘இரு நாட்டு எல்லைகளிலும் பதற்றத்தை ஏற்படுத்தவோ தன்னிச்சையாக எல்லைகளை மாற்றவோ, புதிய சட்டம் மூலம் நடவடிக்கை எடுப்பதை சீனா தவிா்க்க வேண்டும்’ என அறிவுறுத்தியது.

கிழக்கு லடாக்கிலுள்ள பாங்காங்க் ஏரி, திபெத் அட்டானமஸ் பிராந்தியம், குா்னாக், சிக்கிம் எல்லை மற்றும் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே, சீனா 100 வீடுகளையும், பாலங்களையும் கட்டியுள்ளது என 2021 நவம்பரில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அறிக்கை வெளியிட்டது. இந்த விஷயத்தில் பிரதமா் மௌனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கேள்வி எழுப்ப ‘சீனா 1962 முதல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில்தான் வீடுகளையும், பாலங்களையும் கட்டி வருகிறது’ என வெளியுறவு அமைச்சகம் 2022 ஜனவரியில் பதிலளித்தது.

இந்திய எல்லைக்கு உட்பட்ட 38,000 சதுர கி.மீ. நிலப்பரப்பு கடந்த 60 ஆண்டுகளாக சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீரில் 78,000 சதுர கி.மீ. பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதி. அதில் 5,180 சதுர கி.மீ. நிலப்பரப்பை சீனாவுக்குத் தாரை வாா்த்தது. இந்திய - சீன போா் நடைபெற்று 60 ஆண்டுகள் (1962 - 2022) கடந்த நிலையிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை பிரச்னை முடிவுக்கு வருவதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை என்பதே உண்மை.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com