விபரீதத்தை நோக்கி...

தமிழகத்தின் சில ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் அண்மையில் நடந்துள்ள நிகழ்வுகள், கல்வியாளர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சுகிறது.
விபரீதத்தை நோக்கி...


தமிழகத்தின் சில ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் அண்மையில் நடந்துள்ள நிகழ்வுகள், கல்வியாளர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சுகிறது. தேனி மாவட்டம், தேவதானப்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 18-ஆம் தேதி, பள்ளி ஆசிரியை ஒருவரை, மது போதையில் இருந்த 11-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆபாசமாகப் பேசியதுடன் கத்தியைக் காட்டி மிரட்டியும் இருக்கிறார். அந்த மாணவரைக் கண்டித்த மற்றொரு ஆண் ஆசிரியரிடமும் அலட்சியமாகப் பேசி இருக்கிறார் அந்த மாணவர். இந்தக் காட்சி சமூக ஊடகத்தில் வலம் வந்தபோது, நமது கல்வித் துறையின் சீரழிவு வெளிப்பட்டது.

அதே நாளில் திண்டுக்கல் மாவட்டம், பழனியிலுள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் இருவர் சாலை நடுவே கண்மூடித்தனமாக மோதிக் கொண்ட காட்சி பதைபதைப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம், இடுவம்பாளையத்தில் பிப். 24-ஆம் தேதி, அரசு  மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரு தரப்பாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதில், ஒரு மாணவர் கழுத்தில் வெட்டுப்பட்டு, நல்ல வேளையாக உயிர் பிழைத்திருக்கிறார். 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பிப். 17-இல், கைப்பேசியை வகுப்பில் பயன்படுத்திய மாணவரைக் கண்டித்த ஆசிரியரை அந்த மாணவர் கத்தியால் குத்தியதில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  

கடந்த ஆண்டு அக்டோபரில், நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பார்வையற்ற ஆசிரியர் ஒருவரை அவமதித்து நடனமிட்ட மாணவர்கள் அதைப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு மகிழ்ந்தபோது, நமது மாணவர்களின் இழி சிந்தனை முகம் வெளிப்பட்டது. 

இவை எல்லாம் பெருங்கடலில்  தென்படும் பனிப்பாறை முகடுகள் மட்டுமே. மாணவ சமுதாயத்திடம் பெருகிவரும் வன்முறை கலாசாரமும் ஆசிரியர்களை மதியாத போக்கும் மிகுந்த கவலை அளிக்கின்றன. பள்ளிக்குச் செல்லவே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அஞ்சும் நிலையை நோக்கி நமது மாணவ சமூகம் சென்று கொண்டிருக்கிறது.

ஆனால், இவை  எதுவும் புதிய விஷயங்கள் அல்ல என்று கூறிக் குமுறுகின்றனர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள். 2012-இல் சென்னையில், தனியார் பள்ளி வகுப்பறையிலேயே ஹிந்தி ஆசிரியை ஒருவரை ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொன்றதை யாரும் மறந்திருக்க முடியாது. அதுபோன்ற சூழலே பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் நிலவுவதாக ஆசிரியர்கள் பலர் கூறுகின்றனர். 

"கல்வி சிறந்த தமிழ்நாடு' என்று மகாகவி பாரதி பாடி மகிழ்ந்த மாநிலத்தில் இத்தகைய அவலநிலை ஏன் ஏற்பட்டது என நாம் சிந்திக்க வேண்டும். கரோனா தொற்றுப் பரவலுக்குப் பின் மாணவர்களின் மனப்பாங்கில் மாற்றம் ஏற்பட்டிருப்பது ஒரு காரணம் என்றாலும், அது மட்டுமே காரணமல்ல என்பதை ஆசிரியர்கள் கூறும் நிகழ்வுகளிலிருந்து அறிய முடிகிறது. 

இதற்கு அவர்கள் கூறும் முக்கியமான காரணங்கள், டாஸ்மாக் கடைகளின் அதிகரிப்பு, அறிதிறன்பேசி பயன்பாடு, போதைப் பழக்கம், குடும்பச் சூழல், பெற்றோரின் அலட்சியம், ஜாதி அரசியல் தலையீடு, எதிர்பாலினக் கவர்ச்சி, சினிமா மோகம், எட்டாம் வகுப்பு வரை இடைநில்லாத் தேர்ச்சி, மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிக்க இயலாமை ஆகியவையே. 

பள்ளி இடைநிற்றலைத் தடுக்க எட்டாம் வகுப்பு வரை இடைநில்லாத் தேர்ச்சி நடைமுறைக்கு வந்த பிறகு மாணவர்களை முறையான மதிப்பீடு செய்வது குறைந்து விட்டது. இதுவே பள்ளி மாணவர்களின் தற்போதைய தர வீழ்ச்சிக்கு தலையாய காரணம் என்று கூறப்படுகிறது. தங்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு வேண்டும் என்று கோரி முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஆசிரியர்கள் முறையிடும் காட்சிகளை தற்போது காண்கிறோம். ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்க கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்குமாறு பள்ளிக் கல்வித் துறை தற்போது பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் வரை வறுமை காரணமாக மாணவர்கள் பலர் ஆரம்பக் கல்வியைக்கூட பெற முடியாத நிலை இருந்தது. இன்று நிலைமை அப்படியில்லை. தற்போது பள்ளிகள் பெருகிவிட்டதால் படிக்கும் வாய்ப்புகள் அதிகரித்து விட்டன. ஆயினும் பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருப்போரே அரசுப் பள்ளிகளை நாடும் புதிய வர்க்கபேத நிலை ஏற்பட்டிருக்கிறது. 

வசதி மிகுந்த, நடுத்தரக் குடும்ப மாணவர்கள் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் பயிலும்போது, அடித்தட்டு ஏழை மாணவர்களின் புகலிடமாக அரசுப் பள்ளிகளே விளங்குகின்றன.

அன்றைய ஆசிரியர்கள் மிகக் குறைந்த ஊதியத்துக்கு வேலை பார்த்தார்கள். இன்றோ அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பிறர் பொறாமைப்படும் அளவுக்கு ஊதியம் பெறுகிறார்கள். இதனால் சமூகத்தில் வசதியாக வாழ்ந்தாலும், முந்தைய தலைமுறை ஆசிரியர்கள் மக்களிடம் பெற்ற மதிப்பை இவர்கள் பெறுவதில்லை என்பது, சுடும் உண்மை. மரியாதை என்பது கேட்டுப் பெறுவதல்ல, அது ஆசிரியரின் சான்றாண்மையால் விளைவது. எனவே ஆசிரியர்களும் தங்களை மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.1,000 உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை. அதே நேரத்தில், ஒழுக்கமில்லாத, தரமான கல்வித் தேர்ச்சி பெறாத இளைஞர் சமுதாயம் உருவாகி வருவது என்பது சமுதாயத்தைப் பேராபத்தை நோக்கி இட்டுச் செல்லும். சமூக விரோதிகளை உருவாக்குவது அல்ல கல்விக்கூடங்களின் இலக்கு.

"அடியாத பிள்ளை படியாது' என்பதை அரசும் உணர வேண்டும். ஆசிரியர்களின் கரங்களைக் கட்டிப் போட்டுவிட்டு மாணவர்களை செம்மைப்படுத்த இயலாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com