எதற்கும் ஓர் எல்லை உண்டு

எதற்கும் ஓர் எல்லை உண்டு

 திரையுலகக் கதாநாயகர்களை அவர்களுடைய ரசிகர்கள் கொண்டாடுவது என்பது காலங்காலமாக நடைபெறும் விஷயம்தான். அந்தக் காலத்து எம்.கே. தியாகராஜ பாகவதர், டி.ஆர். மகாலிங்கம் தொடங்கி இந்தக் காலத்தின் எண்ணற்ற கதாநாயகர்கள் வரையில் அனைவருக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
 தங்கள் நெஞ்சம் கவர்ந்த நாயகர்களின் திரைப்படம் வெளியாவதற்குக் காத்துக் கிடப்பதும், வெளிவந்த பின்பு தங்களின் சொந்தச் செலவில் அந்த நாயகர்களின் புகைப்படம் கொண்ட பதாகைகளை நிறுவி அவற்றுக்குப் பாலபிஷேகம் செய்தும் மாலை சூட்டியும் ரசிகர்கள் மகிழ்வது வழக்கம்.
 சில நடிகர்களின் ரசிகர்கள் நற்பணி மன்றங்களைத் தொடங்கி அன்னதானம் செய்வது, ரத்ததான முகாம் ஏற்பாடு செய்வது என்றெல்லாம் செய்கின்றனர். ஆனால், பெரும்பாலான ரசிகர்கள் இவ்வாறு ஆக்கபூர்வமாக ஏதேனும் தொண்டு செய்வதை விடவும், தங்கள் மனம் கவர்ந்த நாயகனின் புதுப்பட வெளியீட்டைக் கொண்டாடுவதுடன், அந்தப் படத்தை முதல் நாள் முதல் காட்சியிலேயே பார்த்து விடுவது என்பதையே தங்களின் வாழ்நாள் சாதனையாக எண்ணிப் பெருமிதம் கொள்கின்றனர்.
 சில நேரத்தில் அத்தகைய புதுப்படங்கள் விடியற்காலையில் சிறப்புக் காட்சியாக திரையிடப்படும்போது அதற்கு முந்தைய நாள் இரவெல்லாம் கண்விழித்தும், பலமடங்கு கட்டணம் செலுத்தியும் அவற்றைப் பார்த்து மகிழ்கின்றனர்.
 இவற்றையெல்லாம் கூட ஏதோ ஒருவித ஆர்வக் கோளாறு என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தாங்கள் வழிபடும் கதாநாயகனின் திரைப்படம் குறிப்பிட்ட தினத்தில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வந்த பிறகு ஏதோ ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவ்வாறு வெளியிடப் படாமல் போகும்போதோ திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தடைப்பட்டாலோ ஏதோ இந்த உலகமே மூழ்கிவிட்டது போன்று நினைத்துக் கொண்டு கலவரங்களில் ஈடுபடுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது ?
 சமீப காலமாக இத்தகைய பொறுப்பற்ற இளம் ரசிகர்களின் வன்முறை காரணமாகப் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்படுவது தொடர்கதையாகி விட்டது. சாதாரணத் திரைப்படம் ஒன்றைப் பார்க்க முடியாததற்காகக் கலவரத்தில் ஈடுபடும் ரசிகர்கள் நமது மாநிலத்தில் மட்டுமின்றி நாடெங்கிலும் இருக்கின்றார்கள்.
 மிகப்பெரிய பொருட்செலவில் இரண்டு முக்கியக் கதாநாயகர்களை நடிக்க வைத்து தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் உருவாக்கப்பட்ட ஆர். ஆர். ஆர். என்கிற திரைப்படம் அண்மையில் திரையிடப் பட்டது. அதன் இயக்குனரும் பிரம்மாண்டப் படங்களின் இயக்குனர் என்ற புகழைப் பெற்றவராவார். வழக்கம் போலவே அந்தப் படத்தின் இரண்டு கதாநாயகர்களுடைய ரசிகர்களும் திரைப்படம் வெளியாவதற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.
 ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் உள்ள திரையரங்கம் ஒன்றில் அந்தப் புதிய படம் திரையிடப்பட்ட சிறிது நேரத்தில் திரையில் சரியாகக் காட்சிகள் தெரியவில்லை. திரையரங்க ஊழியர்கள் தொழில்நுட்பக் கோளாற்றைக் கண்டறிந்து மீண்டும் படத்தை இயக்குவதற்குள் கொதித்துப் போன ரசிகர்கள் ஒட்டுமொத்தத் திரையரங்கையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
 இது போதாதென்று அங்கிருந்த ரசிகர்களில் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை உயர்த்திக் காட்டி ஆரவாரம் செய்திருக்கின்றார். விசாரணையில், துப்பாக்கியை வைத்திருக்க உரிமம் பெற்றுள்ள அந்த ரசிகர், ஆர்வ மிகுதியில் அவ்வாறு செய்ததாகத் தெரிய வந்துள்ளது. மொத்தத்தில், துப்பாக்கி வைத்திருந்தவர் உட்பட, கலவரத்துக்குக் காரணமானவர்கள் அனைவரின் மீதும் சட்ட நடவடிக்கை பாய்ந்திருக்கிறது.
 நமது தமிழகத்திலும் முன்னணிக் கதாநாயகர்கள் நடிக்கின்ற புதுத் திரைப்படங்கள் வெளிவரும் நேரங்களில் எல்லாம் இத்தகைய வன்முறைகள் ஆங்காங்கே நிகழ்ந்தேறுகின்றன. புதுப் படங்களை முதல் நாள் முதல் காட்சியாகப் பார்க்க முடியாவிட்டால் திரையரங்குகளையும் இதர பொதுச் சொத்துகளையும் சேதப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. ஒரே நாளில் இரண்டு கதாநாயகர்களின் படங்கள் வெளியாகும்படி நேர்ந்துவிட்டால், இரண்டு கதாநாயகர்களின் ரசிகர்களிடையே மோதல் வெடிப்பதும், இணையதளம் உள்ளிட்ட பொதுவெளிகளில் இரண்டு வெவ்வேறு கதாநாயகர்களின் ரசிகர்களும் பரஸ்பரம் வார்த்தைகளால் தாக்கிக் கொள்வதும் உண்டு.
 இதற்கெல்லாம் காரணம் நம் நாட்டின் இளைஞர்கள் ரசனை என்பதை வெறியாக உள்வாங்கிக் கொண்டிருப்பதுதான். நாடும் வீடும் அன்றாடம் சந்திக்கும் எத்தனையோ வாழ்வாதாரப் பிரச்னைகளுடன் ஒப்பிடும் பொழுது, ஒரு புதிய திரைப்படத்தை அது வெளியிடப்படும் நாளிலேயே பார்த்துவிடுவது ஒன்றும் முக்கியமான விஷயமல்ல.
 திரைப்படத் துறையில் பணிபுரிபவர்களுக்கு இயக்கம், நடிப்பு, இசை, கதை, வசனம் என்று பலதுறைப்பட்ட திறமைகள் இருக்கின்றன. அவற்றை ஒருங்கிணைத்து ஒரு திரைப்படமாக உருவாக்கி வெளியிடுவதை வாய்ப்பு கிடைக்கும் பொழுது பார்த்து ரசித்தால் போதுமானது. மற்றபடி ஒரு திரைப்படத்தை முதல் நாளே பார்க்க முடியாவிட்டால் எந்த நஷ்டமும் இல்லை என்பதையும், திரைப்பட நாயகர்கள் என்பவர்கள் நம்முடைய பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் விட முக்கியமானவர்கள் இல்லை என்பதையும் நம் இளைஞர்கள் உணரத் தொடங்க வேண்டும்.
 இதை எல்லாம் தாண்டி, தாம் விரும்பும் கதாநாயகர்களின் ஒரேமாதிரியான, இயல்புக்கு மாறான மிகை நடிப்புக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதன் மூலம் அந்நாயகர்கள் வித்தியாசமான பாத்திரங்களில் நடித்துத் தங்களின் திறமையை வெளிப்படுத்துவது தடைபடும். இரண்டு பாடல்கள், இரண்டு சண்டைக் காட்சிகள், படம் முடியும் தறுவாயில் எதிரிகளைத் துரத்தி வேட்டையாடுதல் இவற்றைக் கொடுத்தாலே தங்களின் ரசிகர்கள் திருப்திப்பட்டு விடுவார்கள் என்ற நிலைமை எந்த ஒரு திரைக்கலைஞருக்கும் உகந்ததல்ல.
 திரைப்படங்களை இனி கலைரசனையுடன் மட்டுமே பார்ப்பது என்று நம் இளைஞர்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ரசனை வெறியாக மாறாமல் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com