மாநில கல்விக் கொள்கை அவசியம்!

மாநில கல்விக் கொள்கை அவசியம்!

 தேசிய கல்விக் கொள்கை ஏற்புடையது அல்ல என்பதால்தான் மாநில கல்விக் கொள்கை வகுக்கும் கட்டாயம் எழுந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை 1968, 1984 ஆகிய ஆண்டுகளில் வகுக்கப்பட்டுள்ளது. அவை முறையே 6 பக்கம், 21 பக்கம்தான். இப்போதைய (2019-20) தேசிய கல்விக் கொள்கை சுமார் 150 பக்கங்கள் கொண்டது. கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்தச் செயல்திட்டம் (பிளான் ஆஃப் ஆக்ஷன் - பிஓஏ) என்ற விரிவுத்திட்டத்தை பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவராக அன்று இருந்த முனைவர் ராம ரெட்டி 1992-இல் தயாரித்தார். அது சுமார் 300 பக்கங்களைத் தொட்டது. கல்விக் கொள்கை என்பது அன்று சுருக்கமாக இருந்த நிலையில், இன்றையக் கல்விக்கொள்கை 150 பக்கங்களில் ஒரு பிஓஏ போன்று உள்ளது.
 தேசிய கல்விக் கொள்கையின் முகவுரையை மட்டும் படித்து விட்டுப் பலர் இக்கொள்கையைப் பாராட்டியுள்ளனர். நாமும் பாராட்டலாம். ஆனால், உள்ளே நுழைந்தால்தான் இது எந்த அளவு சமூக விரோதமானது என்பதைக் காணலாம். இதனை வகுக்க அமைக்கப்பட்ட குழுவில் கல்வியாளர் எவரும் இல்லை என்பதை நோக்கவேண்டும்.
 காலத்துக்கேற்ற மாறுதல் தேவைதான். அதை அந்தந்த மாநிலங்களும், மாநிலப் பல்கலைக்கழகங்களுமே செய்து கொள்ள முடியும். ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே கலாசாரம் என்று அதிகாரத்தை மையப்படுத்தும் வகையில்அமையும் கல்விக் கொள்கை தேவை இல்லை.
 தமிழ்நாடு கல்வித் திட்டத்தில் படித்த மூவர் இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆகியுள்ளார்கள். டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் முன்பு தயாரித்த "இராதாகிருஷ்ணன் (கல்வி) அறிக்கை' இன்றும் சிறப்பாகப் பேசப்படுகிறது. ஆர். வெங்கட்ராமன், தமிழகத்தில் பல துறைகளில் அமைச்சராக அனுபவம் பெற்று, மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சராக சிறப்பாகப் பணியாற்றியவர். அப்துல் கலாம் இஸ்ரோவிலும், பாதுகாப்பு அமைப்பிலும் திறம்படப் பணியாற்றி, பிரதமரின் அறிவியல் ஆலோசகராகப் பணி உயர்வு பெற்று, பின்னர் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர்.
 இம்மூவர் மட்டுமல்ல, சி. சுப்பிரமணியம் தமிழகத்தில் அமைச்சராகப் பணியாற்றியவர். பின் மத்திய அரசில் பாதுகாப்பு அமைச்சராகவும் திறம்படச் செயலாற்றியவர். அதன் பின், பசுமைப் புரட்சியைப் புகுத்தி, நாட்டில் உணவு பற்றாக்குறையைப் போக்கியவர். இவரும் தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கைத் திட்டத்தில் பயின்றவரே.
 பாமரர்களுக்கும் பயன்படும் கல்வி தேவைதான். அதனை மட்டும் கோடிட்டுக் காட்டும் வகையில் சுருக்கமான கல்விக் கொள்கையை உருவாக்க முடியும். அப்படியில்லாமல், ஒரு செயல் திட்ட பிஓஏ போன்று கல்விக் கொள்கையை அமைத்திருக்கிறார்கள்.
 மெக்காலே கல்வி முறையை பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் பழிக்கிறார்கள். இங்கேயும் சிலர் அவர்களுடன் சேர்ந்து கொண்டு பேசிவருகிறார்கள். மெக்காலேதான் அவர்களின் மனுநீதியைக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஒழித்துக் கட்டியவர். நீதிக்கட்சி 100 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கல்வியையும், அனைவருக்கும் கல்வியையும், வேலைவாய்ப்பையும் கொண்டுவர இதுவே ஊக்கம் அளித்தது.
 அமெரிக்கக் கல்வியாளர் ஒருவர் "கல்வியறிவை கற்பிப்பதே கல்வி நிலையத்தின் வேலை. அவரவர்களின் தேவைக்கேற்ப பயிற்சி அளிப்பது தொழில்துறையினரின் வேலை. ஆகவே, பொதுவாக, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், காந்திஜி வலியுறுத்தியது போன்று உடல் உழைப்பின் மதிப்பை உணர்த்தும் வகையில் பயிற்சி வழங்க வேண்டும். ஒவ்வொரு தொழிலுக்கும் வெவ்வேறு திறமை தேவைப்படும். அவ்வளவையும் கல்விக்கூடங்களில் பயிற்சி கொடுக்க முடியாது' என்று கூறினார். இந்த உண்மையை கல்விக் கொள்கை வகுப்போர் மனதில் கொள்ளவேண்டும்.
 தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்துள்ள "நான் முதல்வன்' பயிற்சித் திட்டத்தின் மூலம், என்னென்ன தொழில்கள் எங்கெங்கு உள்ளன, அவற்றில் என்னென்ன வேலை வாய்ப்புக்கள் உள்ளன, அவற்றில் நமக்கு உகந்தவை எவை என்பதை மாணவர்கள் பள்ளிப் பருவத்திலேயே அறிந்து கொள்ள முடியும். இதுவே போதும். ஒவ்வொரு மாணவரும் விரும்பும் பயிற்சியை பள்ளிகளில் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எல்லாப் பள்ளிகளிலும், எல்லா மாணவர்களும் ஒரே விதமான பயிற்சி பெறுவது சரியல்ல. இப்பயிற்சிகளுக்குத் தொழில் துறையினர் பங்களிப்பு தேவை. எனவே, தொழிலதிபர்களும் கல்வித் திட்டம் வகுப்பதில் பங்கு பெற வேண்டும்.
 இந்த தேசிய கல்விக் கொள்கையில், பள்ளிக் கல்வி நிலையிலேயே நான்கு வடிகட்டுதல்கள் உள்ளன. தேர்வில் தவறுவோர் மேல் வகுப்புக்கு செல்ல இயலாமல் நிறுத்தப்படுகிறார்கள். மறு வாய்ப்புகள் மறைமுகமாக மறுக்கப் படுகின்றன. சமூகத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்திலிருந்து வருகின்ற மாணவர்கள், குறிப்பாக மாணவிகள், பல வாய்ப்புகளைப் பெறாவிட்டால் மேல் கல்வியே பெறமுடியாது.
 கல்லூரி கல்வியில், "பல கட்டங்களில் பல கல்வி நிலையங்களில் அல்லது அஞ்சல் வழியில் படித்து சான்றிதழ் படிப்போ பட்டயப் படிப்போ பட்டப் படிப்போ பெற முடியும்' என்பது கேட்பதற்கு மிக நன்றாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், இது நடைமுறையில் பெரிய குழப்பத்தை உருவாக்கும். அதுவும் ஒரு கல்லூரியிலோ பல்கலைக்கழகத்திலோ பெற்றுக் கொள்ளலாம் என்பது மேலும் குழப்பத்தை விளைவிக்கும்.
 பிரிட்டன், அமெரிக்காஆகிய நாடுகளில் உள்ளது போன்ற நிலையைக் கருத்தில் கொண்டு இங்கு தேசிய கல்விக் கொள்கை வகுத்துள்ளனர். அங்கெல்லாம் பல்கலைக்கழகங்களும், பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற கல்லூரிகளும் மட்டுமே உள்ளன. இந்தியாவில் இருப்பதுபோல் இணைப்பு (அஃப்ளியேடட்) கல்லூரிகள் கிடையாது. அங்கெல்லாம் மக்கள்தொகையும் குறைவு.
 இங்குள்ள அதிக மக்கள்தொகை, குடும்ப, சமூகப் பொருளாதார நிலை இவையெல்லாம் வேறுபட்டவை. அங்கெல்லாம் இருப்பதுபோல், மாணவர் எண்ணிக்கை அதிகம் கொண்ட பல்கலைக்கழகங்களும், பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற கல்லூரிகளும் இங்கும் வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை குறிப்பிடுகிறது. இது நமது நாட்டின் நிலைமையை உணராதவர் கூற்றாகும்.
 அந்நாடுகளில் உயர்கல்விக் கொள்கையை அந்தந்தப் பல்கலைக்கழகங்களே உருவாக்கிக் கொள்கின்றன. இப்போது 3 ஆண்டு 4 ஆண்டு பட்டப்படிப்பு என்று அரசே கொள்கை வகுத்துள்ளது. ஊடகங்கள் அனைத்தும் இதையே பெரிதாகப் பேசுகின்றன. இந்த அமைப்பு புதிதல்ல. 60 ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடம் பி.ஏ., பி.எஸ்சி இருந்தது.
 பி.ஏ., பி.எஸ்சி இரு ஆண்டு படிப்பு. பி.ஏ., பி.எஸ்சி ஹானர்ஸ் 3 ஆண்டு படிப்பு. ஹானர்ஸ் தேறியோர் நேரிடையாக முனைவர் பட்டப் படிப்பில் சேர முடிந்தது. பி.ஏ., பி.எஸ்சி படித்தவர்கள் இரு ஆண்டு எம்.ஏ., எம்.எஸ்சி முடித்தபின் முனைவர் பட்டப் படிப்பில் சேரலாம். ஆகவே இது ஒன்றும் புதிய கொள்கை அல்ல. இந்தத் தேசிய கல்விக் கொள்கையில் மூன்று ஆண்டு படித்துப் பட்டம் பெறுவோர் மட்டமாக நினைக்கப்படுகிறார்கள்.
 நான்கு ஆண்டு பட்டப் படிப்பை முடித்தவர்கள் நேரடியாக முனைவர் பட்ட ஆய்விற்குச் செல்லலாம் என விதி உருவாக்குவது குறித்து பரிசீலிக்கும்படி பல்கலைக்கழகங்களுக்கு அரசு ஆலோசனை கூறலாம். அதை விடுத்து, அரசே விதி அமைத்து கட்டாயப்படுத்துவதாக இந்த தேசிய கல்விக் கொள்கை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டுள்ள நாடுகளில் கூட இப்படிப்பட்ட விதிமுறைகளை பல்கலைக்கழகங்களே உருவாக்குகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
 இன்றும் சில பல்கலைக்கழகங்களிலும், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களிலும் (ஐஐடி) இம்முறை உள்ளது. இருந்தாலும், முனைவர் ஆய்விற்கு வழி காட்டும் ஆசிரியர் மறுத்தால், மாணவரை அனுமதிக்க முடியாது. அரசு கட்டாயப்படுத்த முடியாது. சில ஆசிரியர்கள் முனைவர் பட்டம் இல்லாமலே மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்துள்ளனர். அவர்கள் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து பல கட்டுரைகள் வெளியிட்டு இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்கள் வேறு யாரும் வழிகாட்டியாக இல்லாமலே தாங்களே ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறவும் பல்கலைக்கழகங்கள் அனுமதி அளித்துள்ளன.
 நாம் வேறு எங்கும் செல்ல வேண்டாம், சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே அப்படி பட்டம் பெற்றவர்கள் உள்ளனர். கிண்டி பொறியியல் கல்லூரி மூத்த பேராசிரியர் ஒருவர் இப்படிப் பட்டம் பெற்றவர்தான். அவர் என்னுடன் பணியாற்றினார். ஆகவே, இவையெல்லாம் பல்கலைக்கழகங்களின் வேலை. அதை புதிய கல்விக் கொள்கை என்று சொல்லக்கூடாது. அது ஆரோக்கியமானது நடைமுறை அல்ல.
 பல மாநிலத்தவர் எதையும் யோசிப்பதில்லை. அகப்பட்டுக் கொண்டபின் வலையில் சிக்கிக் கிடப்பார்கள். தமிழ்நாடு சொன்னதைக் கேட்காமல் மாட்டிக் கொண்டோமே என்று பின்பு அங்கலாய்ப்பார்கள். இது நானே கண்ட அனுபவம். 1965-இல் நான் கர்நாடகத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடினேன். அங்குள்ளோர் என்னை எதிர்த்தனர் (தமிழன் என்பதாலும் இருக்கலாம்). பின்பு அவர்களே சில ஆண்டுகளுக்குப் என்னிடம் வருத்தம் தெரிவித்தனர். ஒரு வேளை இன்று தேசிய கல்விக் கொள்கையை ஆதரிப்போரும் நாளை இப்படி மனம் வருந்தலாம்.
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் துணைவேந்தர்,
 சென்னைப் பல்கலைக்கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com