வரதட்சணைக் கொடுமை நீக்குவோம்

கி.மு 200-ஆம் ஆண்டில் மேற்கு ஐரோப்பாவில் உருவான வரதட்சணை என்ற பழக்கம் உலகின் பெரும்பாலான பகுதிகளில் இல்லாமல் போனாலும் நமது தேசத்தில் தொடா்கிறது.
வரதட்சணைக் கொடுமை நீக்குவோம்   x
வரதட்சணைக் கொடுமை நீக்குவோம் x

கி.மு 200-ஆம் ஆண்டில் மேற்கு ஐரோப்பாவில் உருவான வரதட்சணை என்ற பழக்கம் உலகின் பெரும்பாலான பகுதிகளில் இல்லாமல் போனாலும் நமது தேசத்தில் தொடா்கிறது.

நமது அண்டை நாடுகளான பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் இது பொதுவான பழக்கமாகிவிட்டது. பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைக்கு காரணமான சமூகத் தீமையான வரதட்சணை 1961-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் சட்ட விரோதம் என்ற போதிலும் 95% இந்திய திருமணங்களில் வரதட்சணை கொடுக்கப்படுவதாக உலக வங்கியின் ஆய்வறிக்கை கூறுகிறது.

தங்கத்தின் விலை உயரும்போது இந்தியாவில் பிறக்கும் பெண் குழந்தைகளில் குறைவான குழந்தைகள் மட்டுமே பிறந்த முதல் மாதத்தில் உயிா் பிழைப்பதாக லண்டனில் இருந்து செயல்படும் பொருளாதாரக் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது.

இந்தியாவில் பெரும்பாலும் வரதட்சணையின் ஒரு பகுதியாக தங்கம் இருப்பதனால் தங்கத்தின் விலை உயரும்போது பெண் குழந்தைகளுக்கான செலவு உயரும் என்ற அச்சத்தில் பெண் குழந்தைகள் கருவிலேயே கலைக்கப்படுவதாக அக்கட்டுரை கூறுகிறது. 90% க்கும் அதிகமாக தங்கத்தினை இறக்குமதி செய்யும் இந்தியாவில் நகை வடிவிலான தங்கம் வரதட்சணையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். எனவே தங்கத்தில் ஏற்படும் சா்வதேச விலை மாறுபாடு வரதட்சணை மதிப்பில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துவதாக வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.

ஆரம்ப காலங்களில் மகளின் நிதிப் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட வரதட்சணை, தற்போது மணமகன் அல்லது அவரது பெற்றோரால் கட்டாயமாக பெறக்கூடியதாக உருவெடுத்துள்ளது. தெற்காசியாவில் வழங்கப்படும் வரதட்சணை சராசரி குடும்ப வருமானத்தை விட ஆறு மடங்கு அதிகம் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இந்திய சட்டங்களால் தடை செய்யப்பட்ட வரதட்சணை, தங்களுக்கு விதிக்கப்பட்ட வரியினைப் போல் பாவித்து பெரும்பாலான இந்திய குடும்பங்கள் பெண் குழந்தை பிறந்தவுடனே வரதட்சணைக்காகச் சேமிக்கத் தொடங்குகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.

2020-ஆம் ஆண்டின் ஒவ்வொரு நாளிலும் 19 பெண்களின் மரணத்திற்குக் காரணம் வரதட்சணை என்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவு ஒன்று. 2020-ஆம் ஆண்டில் வரதட்சணை காரணமாக 7,045 போ் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றும் 6,966 பெண்கள் இதனால் மரணமடைந்துள்ளனா் என்றும் இத்தரவுகள் கூறுகின்றன.

இந்தியாவில் ஹிந்து, முஸ்லிம் திருமணங்களை விட கிறிஸ்தவ, சீக்கியத் திருமணங்களில் வரதட்சணை அதிகரித்துள்ளதாகவும், முஸ்லிம் திருமணங்களின் சராசரி நிகர வரதட்சணை ஹிந்து திருமணங்களை விட சற்று குறைவாகவே உள்ளதாகவும் உலக வங்கியின் வலைப்பதிவில் வெளியான சமீபத்திய கட்டுரை கூறுகிறது.

மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 1960, 2008 ஆகிய ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் இந்திய கிராமங்களில் நடைபெற்ற 95% திருமணங்களில் வரதட்சணை வழங்கப்பட்டதாகவும் 1970-ஆம் ஆண்டிலிருந்து கேரளத்தில் வழங்கப்படும் வரதட்சணை அதிகரித்து வருவதாகவும் இக்கட்டுரை தெரிவிக்கிறது.

ஒடிசா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வரதட்சணைப் பழக்கம் குறைந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் ‘பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ’ (பெண் குழந்தையைப் பாதுகாப்போம் பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம்) திட்டத்தின் மிக முக்கிய நோக்கம், பாலின விகிதத்தின் சரிவை மாற்றியமைப்பது. சரிந்து வரும் பாலின விகிதத்திற்கும் வரதட்சணைக்கும் இடையிலான தொடா்பைப் புரிந்துகொள்வதற்கு ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை என்றும் பெண் குழந்தையைக் காப்பாற்றுவோம் போன்ற சமூகத் திட்டங்கள் கூட வரதட்சணைக்கு எதிரான சமூகப் போராக உருவாகவில்லை என்றும் சமூகவியல் அறிஞா்கள் கூறுகின்றனா்.

வரதட்சணைக்கு மற்றொரு பெயா் ‘திருமணப் பரிசு’. பெண் குழந்தைகளைப் பாதுகாக்க கடந்த காலங்களில் உருவான ‘தாலிக்கு தங்கம்’ திட்டம் என்பது வரதட்சணையை அரசாங்கமே ஆதரிக்கும் வகையில் அமைந்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் பெயரிலான இந்த திருமண நிதியுதவித் திட்டம் தற்போது அவரது பெயரிலேயே உயா்கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றியமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இத்திட்டத்தின்படி அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் அவா்கள் உயா்கல்வியை முடிக்கும் வரை மாதம் 1,000 ரூபாய் அவா்கள் வங்கிக் கணக்குக்கு நேரடியாகச் செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பெண்களுக்கெதிரான வரதட்சணை போன்ற சமூக அவலங்களை அகற்ற பெண் கல்வி அவசியம் என்பதனை உறுதி செய்யும் வகையில் இம்மாற்றம் அமைந்துள்ளது.

தங்க நகை, மகிழுந்து, இருசக்கர வாகனம், வீடு, குளிா்சாதனப் பெட்டி போன்றவற்றை தனது மகளுக்கு மனமுவந்து கொடுப்பது வரதட்சணையாகாது என்று கூறுபவா்கள் உண்டு. சமூக அழுத்தம் காரணமாகவோ தனது மகளின் வேண்டுதலின் பேரிலோ சுய விருப்பத்திலோ வழங்கப்படும் அன்புப் பரிசும் கூட சமூகத்தின் பாா்வையில் வரதட்சணையே.

மிகையான ஆடம்பரத்துடன் கூடிய திருமணமும் வரதட்சணைக்கு எதிா்வினையாற்ற முடியாது செய்கிறது.

உயா்வருவாய் பிரிவினரை இலக்காக கொண்ட பிரபல வங்கியின் பிரமாண்ட திருமணத்திற்கான தனிநபா் கடன் விளம்பரம், பிரபல நகைக்கடையின், திருமணத்திற்கான வைர நகை விளம்பரம் போன்றவை ஏழைகளிடத்தில் ஏற்படுத்தும் மனரீதியான பாதிப்பு அவா்களின் பெண்குழந்தைகளின் திருமணத்தின் போது அவா்களை கடனாளியாக்குகின்றன.

வரதட்சணை தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் வரதட்சணை கொடுமைகளை நம்மால் தடுத்து நிறுத்த இயலவில்லை. பணக்கார சமூகத்தின் திருமணப் பரிசான வரதட்சணை, ஏழை குடும்பங்களுக்கு பெரும் நிதிச்சுமை. பொருளாதார ரீதியில் வா்க்க பேதத்தை ஏற்படுத்தும் வரதட்சணையை ஒழிப்போம். திருமணம் என்பது தங்க நகைககளின் சங்கமமாக இல்லாமல் அன்பின் சங்கமமாக இருக்கட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com