விடை தெரிய வேண்டும்

விடை தெரிய வேண்டும்

 மார்ச் 5, 2020 அன்று, யெஸ் வங்கியின் சரிவைத் தவிர்க்கும் முயற்சியில் யெஸ் பேங்க் லிமிடெட்டின் கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி எடுத்தது. இதன் தொடர்ச்சியாக இந்த வங்கியை சீரமைக்க பாரத ஸ்டேட் பேங்க்கின் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த வங்கியின் முன்னாள் தலைவர் அமலாக்க இயக்குநரகம் முன்பாக அளித்துள்ள வாக்குமூலம் பல சந்தேகங்களை எழுப்புகிறது.
 வங்கி திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டதும், அது தொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த நடவடிக்கையும் குறித்த காலத்தில் எடுக்காததும் பின்பு ஒரு பொது வங்கியின் நிதியை பயன்படுத்தி இந்த வங்கியை மீட்டெடுக்க முயன்றதும் தற்போது வெளிவந்துள்ள அரசியல்வாதிகளின் ஊழல் தொடர்புகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக தோன்றுகிறது.
 யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூர், அமலாக்க இயக்குனரகத்திற்கு அளித்த வாக்குமூலத்தில், பிரியங்கா காந்தியிடமிருந்து எம்.எஃப். ஹுசைன் ஓவியத்தை வாங்க தான் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அதன் மூலம் கிடைத்த வருமானம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார். எம்.எஃப். ஹுசைன் ஓவியத்தை வாங்க மறுத்தால் காந்தி குடும்பத்துடனான உறவு முறிவதோடு, "பத்ம பூஷண்' விருது பெறுவதையும் அது தடுக்கும் என்று அப்போதைய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா தன்னிடம் கூறியதாகவும் ராணா கபூர் குற்றம் சாட்டியுள்ளார்.
 அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் கபூர், ஓவியத்திற்காக காசோலை மூலம் இரண்டு கோடி ரூபாய் செலுத்தியதை அடுத்து, (மறைந்த முரளி தியோராவின் மகனும் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான) மிலிந்த் தியோரா, அதை விற்ற வருமானத்தை காந்தி குடும்பத்தினர் நியூயார்க்கில் சோனியா காந்தியின் மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்தியதாக தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார். ராணா கபூரின் அறிக்கைகள், யெஸ் வங்கியின் இணை நிறுவனர், அவரது குடும்பத்தினர், திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்டின் கபில், தீரஜ், வாத்வான், பிறருக்கு எதிராக சமீபத்தில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பண மோசடி வழக்கின் இரண்டாவது துணை குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாகும்.
 இந்த வங்கியின் நடவடிக்கையில் பலவித அத்துமீறல்கள் இருந்தும் ரிசர்வ் வங்கி உரிய காலத்தில் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதற்கு இன்று வரை எந்தவித விளக்கமும் கிடையாது. அரசும் ஒருவர்மீதும் நடவடிக்கை எடுத்ததாகத் தகவல் இல்லை.
 எல்லா வங்கிகளும் பெற்றுள்ள டெபாசிட்கள், கொடுத்துள்ள கடன் விவரங்களை இரு வாரங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்கின்றன. எனவே வங்கிகளின் செயல்பாடுகள் தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கிக்கு தெரியும். ஆனால் யெஸ் வங்கியின் விஷயத்தில் குறைபாடுகளில் ரிசர்வ் வங்கி ஏன் அமைதியாக இருந்தது என்பதும், மேற்கண்ட ஊழல் குற்றச்சாட்டுக்கு இதில் தொடர்பு உண்டா என்பதும் ஆராயப்படவேண்டும்.
 யெஸ் பேங்க் லிமிடெட் அதிக அளவு வாராக் கடன்களைக் கொண்டிருந்தது. யெஸ் பேங்க் லிமிடெட் வங்கி டெபாசிட்டிற்கு பொருத்தமில்லாத அதிக கடன் வழங்கி இருந்ததை கவனிக்க ரிசர்வ் வங்கி தவறிவிட்டது. மார்ச் 2017, மார்ச் 2018, மார்ச் 2019, மார்ச் 2020 நிலவரப்படி, அனைத்து வங்கிகளின் கடன் வைப்பு விகிதம் (கிரெடிட் டெபாசிட் ரேஷியோ) முறையே 73.15 சதவீதம், 75.66 சதவீதம், 77.93 சதவீதம், 76.59 சதவீதமாக இருந்தது. ஆனால் யெஸ் வங்கி லிமிடெட் 92 சதவிகிதம், 101 சதவிகிதம், 106 சதவிகிதம், 162 சதவிகிதம் கடன் வைப்பு விகிதத்தைக் கொண்டிருந்தது.
 மார்ச் 2020-இல் ஒட்டுமொத்த வங்கி அமைப்பும் ரூ.3,13,946 கோடி கடன் வாங்கியபோது, யெஸ் வங்கி மட்டும் ரூ.1,13,791 கோடி கடன் வாங்கியது. இந்த சொத்துப் பொறுப்பு (அùஸட் லையபிலிட்டி) பொருத்தமின்மை குறித்து ரிசர்வ் வங்கி கவலைப்படவில்லை.
 வங்கியின் மொத்த வாராக்கடன் 2016, 2020 ஆண்டுகளில் பின்வருமாறு நகர்ந்தது: ரூ.748.98 கோடி, ரூ.2,018.56 கோடி, ரூ.2,626.80 கோடி, ரூ.7,882.56 கோடி, ரூ.32877.59 கோடி. இதற்கு முன்பு ஒரு வங்கி திவாலாகும் நிலையில் அந்த வங்கியின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வேறு ஒரு அரசு வங்கிகளுடன் அந்த வங்கி இணைக்கப்படும். அதனால், திவாலான வங்கிகள் மற்ற வங்கிகளுடன் இணைக்கப்பட்டு டெபாசிட்டர்களுக்கு இழப்பில்லாமல் காப்பாற்றப்பட்டன.
 திவாலான வங்கிகள் தனியாக மேற்கொண்டு இயங்கவோ அல்லது அதே பெயரில் அல்லது அதே நிர்வாகத்தின் மேற்பார்வையில் தொடர்ந்து வர்த்தகம் செய்யவோ அனுமதிக்கப்பட்டதில்லை. ஆனால் யெஸ் வங்கி காப்பாற்றப்பட்டதுமல்லாமல், அது தொடர்ந்து அதே பெயரில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் மட்டுமே சீரமைக்கப்பட்டுள்ளது.
 ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நாட்டின் முன்னணி தனியார் வங்கிகள், நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து, யெஸ் வங்கியில் குறிப்பிடத்தக்க பங்குகளில் முதலீடு செய்து யெஸ் வங்கியை மீட்டெடுத்துள்ளன. இந்த செயல் திட்டங்கள் ரிசர்வ் வங்கியால் பரிந்துரைக்கப்பட்டு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
 அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட யெஸ் வங்கிக்கான இறுதி மறுசீரமைப்புத் திட்டம், 100-க்கும் மேற்பட்ட பங்குகளைக் கொண்ட தற்போதைய பங்குதாரர்களுக்கு மூன்று வருட காலத்திற்கு அவர்களின் பங்குகளில் 75% வரை முடக்கப்பட்டுள்ளது.
 இந்த செயல்களில் ஸ்டேட் பேங்க் முதலாவதாக ரூபாய் 6,050 கோடி முதலீடு செய்தது. பிறகு ஸ்டேட் வங்கியும் அதன் தொடர்புடைய நிறுவனங்களும் சேர்ந்து ரூபாய் 9,225 கோடி வரை முதலீடு செய்துள்ளன. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் இதில் ஐந்து சதவீத பங்குகளை கொண்டுள்ளது. இவ்வளவு முதலீடு செய்து யெஸ் வங்கியைத் தொடர்ந்து அதே பெயரில் நடத்த வேண்டிய அவசியம் என்ன?, திவாலான வங்கிகளை அரசு வங்கிகளுடன் இணைக்கும் முறை ஏன் கைவிடப்பட்டது? இந்த வினாக்களுக்கு விடை தெரிய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com