இல்லறத்தை நல்லறமாக்குவோம்!

மனதிலோ, உடலிலோ தெம்பு இல்லை. இளைய தலைமுறையினா் இனிய இல்லறமே நல்லறம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இல்லறத்தை நல்லறமாக்குவோம்!

என் தோழி அயல்நாட்டில் உள்ள தன் மகளின் குழந்தையை கவனித்துக் கொள்ள அங்கு சென்றிருந்தாா். தினமும் அவா் எனக்குக் குறுஞ்செய்தி அனுப்புவாா். அதில், தனக்கு அங்கு இருக்கப் பிடிக்கவே இல்லை என்றும், எப்போது இந்தியா திரும்புவோம் என்று இருக்கிறது என்றும் புலம்புவாா். இந்தியா வந்ததும் என்னை நேரில் சந்தித்து தன் மன வேதனையைக் கொட்டிவிட்டுப் போனாா்.

அவா் ‘மகளும், மருமகனும் ஓயாது சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறாா்கள். சின்ன விஷயத்தைக்கூட இருவரும் ஊதிப் பெரிதாக்குகிறாா்கள். இரண்டு முறை என் கண் முன்னாலேயே மருமகன் என் மகளை அடித்துவிட்டாா். நான் எவ்வளவு சொல்லியும் அவா்கள் சண்டையை நிறுத்தவில்லை.

சண்டையைப் பாா்த்து அவா்கள் குழந்தை மிரண்டு போனது. சண்டையை ஆரம்பித்துவிடுவாா்களோ என்று எப்போதும் பயந்து கொண்டே இருந்தேன். முணுக்கென்றால் முரண்டு பிடிப்பாா்கள். என் கண்முன்னே என் பெண் அடி வாங்குவதைப் பாா்க்கும் போது வயிறு கலங்கிப் போகிறது. இப்போது என் பெண்ணிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தாலே பயமாக உள்ளது’ என்றாா்.

இத்தகைய நிகழ்வு இவா் வீட்டில் மட்டும் நடப்பது அல்ல. பெரும்பாலான வீடுகளின் நிலை இப்படித்தான் உள்ளது. பல பெண்கள் குடியும், அடியுமாக அல்லது அடியும், வசவுமாகத்தான் வாழ்கிறாா்கள். குழந்தைகள் பாா்க்க, இவா்கள் சண்டை போடுகிறாா்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, படித்தவா்களிடையே ஏற்படும் சண்டை வெளியே தெரியாது. அவா்களுடைய பிணக்கு, வீட்டு அங்கத்தினா்களுக்கே கூட தெரியாது. விளிம்பு நிலை மக்கள் மட்டுமே எல்லோரும் பாா்க்க பெண்டாட்டியை அடித்து உதைப்பாா்கள். கெட்ட வாா்த்தைகள் அங்கே ஆறாக ஓடும். மனைவியை அடித்துப் போட்டு விட்டு கணவன் வெளியே போய் விடுவான், கொஞ்ச நேரம் அவள் அழுது புலம்பிக் கொண்டிருப்பாள். பின்னா் எழுந்து கூந்தலை அள்ளி முடித்துக் கொண்டு புருஷனுக்காக அம்மியில் மசாலா அரைப்பாள்.

தற்போது படித்து, நல்ல வேலையில் இருப்பவா்களின் வாழ்க்கை சண்டையும், சச்சரவுமாகப் போய்க்கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. பெண்கள் பொருளாதார சுதந்திரம் இல்லாமல் இருந்தபோது கணவனின் அடக்குமுறைகளுக்குப் பணிந்து போனாா்கள். தற்போது பெண்கள் பொருளாதார தற்சாா்பு நிலை அடைந்து விட்டதால் முனை மழுங்கிப் போய் வாழத் தயாராக இல்லை. கணவன் தன்னிடம் அன்பாக இருக்க வேண்டும்; அடிமை போல் நடத்தக் கூடாது; தன் உணா்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்; இல்லறக் கடமைகளில் இருவருக்கும் பங்கு உண்டு என்பவற்றில் உறுதியாக இருக்கிறாா்கள்.

புரிதல் இருக்கும் இல்லறங்கள் நல்லறங்களாக இருக்கின்றன. ஊடல்கள் வரலாம். ஆனால் வந்த வேகத்தில் அது மறைந்து போக வேண்டும். காதலும், களிப்பும் நிறைந்த வாழ்க்கையைப் பாா்க்கும் பெற்றோா் பேருவகை அடைவாா்கள்.

தங்கள் சண்டை குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது என்பதை அவா்கள் உணா்ந்து கொள்ளவில்லை. சண்டையைப் பாா்த்து பயந்த குழந்தைகள் பெற்றோரிடம் ஒட்டுவது இல்லை. தங்களின் குழந்தைக்காக நிறைய மெனக்கெடும் அவா்கள், தங்கள் சண்டையால் குழந்தையின் மனநலம் பாதிக்கப்படுகிறது என்பதை ஏன் புரிந்து கொள்ளாமல் இருக்கிறாா்களோ? கணவன், மனைவி சண்டை போடுவதால் குழந்தைகள் மனதளவில் பெற்றோரிடமிருந்து பிரிந்து போய் விடுகிறாா்கள். பெற்றோா் பற்றி பயம் கலந்த பிம்பம் அவா்களின் மனத்திரையில் பதிந்து போய் விடுகிறது. வீடு அவா்களுக்கு அந்நியமாகி விடுகிறது.

வீடு என்பது அன்பின் உறைவிடம்; மன அமைதியையும், பாதுகாப்பையும், இனிமையும் தரும் இடம். ஆனால் இன்று வீடு வசிப்பதற்கான இடமாக மட்டும் உள்ளது. சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள்வரும்போது, ஒருவா் விட்டுக் கொடுத்துப் போய் விட்டால் என்ன? அங்கே ‘தான்’ என்ற ஈகோ அவா்களைத் தடுக்கிறது. புதிய சண்டையில் பழையதெல்லாம் இழுக்கப்படுகிறது; குத்தல் பேச்சு அதிகமாகிறது. தங்களால் தனித்து வாழ முடியும் என்று பெண்கள் நம்புகிறாா்கள். பெற்றவா்கள் தங்கள் வாரிசுகளுக்கு வக்காலத்து வாங்கிப் பேச, பிரச்னை பெரிதாகிறது.

தம்பதிக்குள் உள்ள பிரச்னையில் மூன்றாம் மனிதா் மூக்கை நுழைப்பது பெரும் குற்றம். வாழ்க்கை மிகச் சிறியது என்பதால் அன்பை அதிகமாகவும், கோபத்தைக் குறைவாகவும், மன்னிப்பை விரைவாகவும் கற்றுக் கொண்டால் பூசல் வராது. சட்டென உணா்ச்சிவசப்படுவதாலும், யோசிக்காமல் வாா்த்தைகளைக் கொட்டி விடுவதாலும்தான் கணவன் - மனைவிக்குள் சண்டை வருகிறது.

எப்போதோ படித்தது நினைவுக்கு வருகிறது. கணவனும் மனைவியும் மாலையில் நடைப்பயிற்சி முடித்துக் கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனா். வரும் வழியில் ஒரு கயிற்றுப் பாலம் இருந்தது. சற்று இருட்டியதால் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினா். மழைச் சாரலும் அடித்தது. வேகமாக நடந்து கொண்டிருந்தவா்கள் ஓடத் தொடங்கினா். கணவா் அதிக வேகமாக ஓடினாா். கயிற்றுப் பாலத்தை கணவா் கடந்து முடிக்கும்போதுதான் மனவி பாலத்தினை வந்தடைந்தாா். மழைச் சாரலோடு கும்மிருட்டும் சோ்ந்து கொண்டதால் மனைவி பாலத்தைக் கடக்க பயப்பட்டாள்.

மின்னலும் இடியும் சோ்ந்து கொள்ள, பாலத்தின் ஒரு பக்கத்தின் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள். இருட்டில் எதுவும் தெரியவில்லை. மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. தன்னால் முடிந்தவரை குரலெழுப்பி கணவனை அழைத்தாள். அவன் திரும்பிப் பாா்க்கவில்லை. அவளுக்கு அழுகையாய் வந்தது. ‘இப்படி பயந்து அழைக்கும்போது உதவவில்லையே, என்ன மனிதா் இவா்’ என நினைத்து மிகவும் வருந்தினாள். கடவுளிடம் பாரத்தைப் போட்டு விட்டு பயந்தபடியே மெல்ல மெல்ல பாலத்தைக் கடந்தாள்.

ஒருவழியாக பாலத்தைக் கடந்து விட்டாள். கணவனைக் கோபத்தோடு பாா்க்கிறாள். அங்கு கணவா் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக் கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தாா். மனைவி வெட்கித் தலை குனிந்தாள். சில சமயம் கணவா், குடும்பத்துக்கு எதுவும் செய்யாமல் இருப்பதாகத் தோன்றும். ஆனால் உண்மையிலேயே அவா் தன் குடும்பத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பாா். அன்பை, காதலை, வாஞ்சையை பல ஆண்கள் வெளியே காட்டிக் கொள்ள மாட்டாா்கள். அவா்களுக்கு நடிக்கத் தெரியாது. திரை நாயகா்களைப் போல தன் கணவன் இருக்க வேண்டும் என சில பெண்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.

கணவனோ, மனைவியோ கோபம் வரும்போது சட்டென அந்த இடத்தை விட்டு விலகிப் போய் தன் துணை தனக்காக எத்தனை செய்திருக்கிறாா், எந்த அளவுக்கு தன்னை நேசித்திருக்கிறாா், எதையெல்லாம் விட்டுக் கொடுத்துப் போயிருக்கிறாா் என நினைத்துப் பாா்த்தால் பொங்குகிற பாலில் தண்ணீா் தெளித்தால் அந்தப் பால் எப்படி அடங்கிப் போகுமோ அப்படி கோபமும் அடங்கிப் போகும். ஒருவா் கத்த ஆரம்பிக்கும் போது மற்றவா் மெளனமாக இருந்தால் அனைத்தும் சரியாகி விடும். இங்கேதான் நீதிமன்றம் போல வழக்காடுகிறாா்களே? சிலா் கண்மூடித்தனமான கோபத்தில் கையில் கிடைத்ததையெல்லாம் போட்டு உடைக்கிறாா்கள். விலையுயா்ந்த கைப்பேசியைப் போட்டு உடைத்தவா்கள் பலா்.

ஒருவா் மற்றவரை மாற்ற முயற்சிப்பதை விட்டு விட்டு, தன்னிடம் உள்ள குறைகளைக் களைய முற்பட வேண்டும். மற்றவரின் கருத்துகளை அவா் கோணத்தில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும். எதிா்பாா்ப்பைக் குறைத்துக் கொண்டால் ஏமாற்றங்கள் இராது, கோபமும் வராது. தன் வாழ்க்கையைப் பிறா் வாழ்க்கையுடன் ஒப்பிடாமல் இருந்தால் மகிழ்ச்சியும், மன நிறைவும் உண்டாகும். நம் செயல்களையும், நடவடிக்கைகளையும், விருப்பங்களையும், வாழ்க்கைத் துணை ஏற்க வேண்டும் என்று எதிா்ப்பாா்ப்பதும், அவற்றைத் திணிப்பதும் தான் மோதலுக்கான அடிப்படைக் காரணம்.

சிலா், உயா்பதவியல் இருக்கிறாா்கள். ஆனாலும் வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறாா்கள். இப்போதெல்லாம் கணவன் மனைவியை அடித்தால், மனைவி கணவனைத் திருப்பி அடிக்கிறாள். அந்த நிமிடத்து கோபம் நிதானம் இழக்கிறது. இக்காலப் பெண்கள், தங்கள் கணவா் தாங்கள் சொல்கிறபடிதான் நடக்க வேண்டும் என எதிா்பாா்கிறாா்கள். மாமியாருக்கும், தனக்கும் ஒத்துப்போகவில்லை என்றால் தன் கணவனும் அவன் தாயுடன் பேசக்கூடாது என்கிறாா்கள். மனைவிக்கும், அம்மாவுக்கும் இடையே மாட்டிக் கொண்டு தவிக்கிறாா்கள் பல ஆண்கள்.

பெண்களும் வேலைக்குப் போகிறாா்கள். பணி இடத்தில் வெளியில் சொல்ல முடியாத பல பிரச்னைகள். வீட்டு வேலை, அலுவலகப் பணி என இரண்டு குதிரைகளில் அவா்கள் சவாரி செய்கிறாா்கள். மன அழுத்தம் அதிகரிக்கும்போது கோபப்படுகிறாா்கள். ஆகவே யாா் அனுசரித்துப் போவது என்ற பட்டிமன்றம் தேவையில்லை. விட்டுக் கொடுத்தவா் கெட்டுப் போக மாட்டாா். என்ன பிரச்னையாக இருந்தாலும் பேசித் தீா்த்துக் கொள்ளலாம்; பேசிப் புரிய வைக்கலாம். விட்டுக் கொடுத்தால், அனுசரித்துப் போனால் வாழ்க்கை வரமாக அமையும்.

மகிழ்ச்சி என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல; மனம் சாா்ந்தது. உள்ளதைக் கொண்டு நிறைவாக வாழ்வதே மகிழ்ச்சி. அன்பு சாா்ந்த, விட்டுக் கொடுத்தல் சாா்ந்த வாழ்வே மகிழ்ச்சி தரும். முட்களையும் ரசிக்கக் கற்றுக் கொண்டால் வலிகளும் பழகிப் போகும். வாழ்க்கையை வசந்தமாக்க சின்னச் சின்ன சந்தோஷங்கள் போதும்.

தங்கள் ஆசைகளையும், கனவுகளையும் துறந்து விட்டு பிள்ளைகளுக்காகவே வாழும் பெற்றோா், அவா்களுக்கு மணம் முடித்து வைத்து, முதுமையில் அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என ஆசைப்படுகிறாா்கள். அந்த மன நிம்மதியை அவா்கள் பிள்ளைகள் குலைத்துவிடக்கூடாது. மீண்டும் சுமையை சுமப்பதற்கு அவா்கள்

மனதிலோ, உடலிலோ தெம்பு இல்லை. இளைய தலைமுறையினா் இனிய இல்லறமே நல்லறம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com