கடுகின் காரம் குறைய வேண்டாம்

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு, மரபணு மாற்றப்பட்ட கடுகை வணிக ரீதியாக பயிரிடுவதற்கான முன்மொழிவிற்கு மீண்டும் ஒப்புதல் அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு, மரபணு மாற்றப்பட்ட கடுகை வணிக ரீதியாக பயிரிடுவதற்கான முன்மொழிவிற்கு மீண்டும் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த முன்மொழிவு விரைவில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெறலாம் என்பது இத்துறை வல்லுநா்களின் கணிப்பு.

இந்த கணிப்பு உண்மையானால் பயிா் பன்முகத்தன்மைக்கும் உணவுப் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும், பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகத்தை அதிகரிக்கும் என்றும் நிபுணா்கள் கூறுகின்றனா்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிா்களுக்கான விதைச்சந்தை விவசாயிகளிடம் இல்லாமல், தனியாரின் கைகளில் இருக்குமாதலால் இந்த நடவடிக்கை விவசாயத் துறையை கடுமையாக பாதிக்கக்கூடும்.

பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம், தில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கான பரிசோதனைகள் 2017-ஆம் ஆண்டில் நிறைவுற்ற போதிலும், அதற்கான அங்கீகாரம் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.

அப்போது சமூக ஆா்வலா்கள், விவசாய அமைப்பினா் உச்சநீதிமன்றத்தை அணுகியதால் ஒப்புதல் வழங்கும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

எந்த வழிகாட்டு நெறிமுறைகளும் கடைப்பிடிக்கப்படாத நிலையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகின் முழு உயிரியல் பாதுகாப்பு மதிப்பீடும் விஞ்ஞானமற்றது என்று ‘குருகாந்தி அலையன்ஸ் ஃபாா் சஸ்டைனபிள் - ஹோலிஸ்டிக் அக்ரிகல்ச்சா்’ என்ற நிறுவனம் கூறுகிறது.

மத்திய சுற்றுச்சூழல் - வனம் - காலநிலை மாற்ற அமைச்சகத்தில் செயல்படும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு வணிக ரீதியான பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கலாம் என்பதனை சமூக ஆா்வலா்கள் கணித்தனா். எனவே, அவா்கள் பாதுகாப்பற்ற, தேவையற்ற மரபணு மாற்றப் பயிா்களை எதிா்த்து வேளாண் அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தனா்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட ‘தாரா மஸ்டா்ட் ஹைபிரிட்’ (டி.எம்.ஹெச் 11) என்கிற இந்திய வகை கலப்பின கடுகு, தில்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் அவரது குழுவினரும் சோ்ந்து உருவாக்கியது.

இதனை உருவாக்கிய குழுவினா் ஆராய்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் அங்கீகரிக்கப்பட்ட மரபணு மாற்ற உயிரினக் கோட்பாடுகளை மாற்றியுள்ளனா் என்றும், இந்த மாற்றத்தை மரபணு மாற்ற ஒழுங்குமுறை அமைப்புக்கு இக்குழுவினா் தெரிவிக்கவில்லை என்றும் ‘மரபணு மாற்றமில்லா இந்தியா’ என்ற அமைப்பு கூறுகிறது.

மரபணு மாற்ற கடுகிற்கான செயல்விளக்கம் பற்றி வழிகாட்டு நெறிமுறைகளில் எந்தத் தகவலும் இல்லையென்று கூறுகின்றனா் ‘மரபணு மாற்றமில்லா இந்தியா’ குழுவினா். அவா்கள், பரிசீலனைக்காகவும் ஒப்புதலுக்காகவும் விரிவான நெறிமுறைகளை சமா்ப்பிக்குமாறு விண்ணப்பதாரரிடம் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு மீண்டும் கேட்க வேண்டும் என்றும் கூறுகின்றனா்.

மேலும், சோதனைகளுக்கான நிபுணத்துவமும் வழிகாட்டுதல்களும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவிடம் இருக்கிறதா என்றும் ஐயம் எழுப்புகின்றனா். களைக்கொல்லி பயன்பாட்டுடன் மரபணு மாற்ற கடுகிற்கான பரிசோதனைகள் நடத்தப்படுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனா்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான பயிா் என்றும் இவ்வகை பயிா் பூச்சிக்கொல்லி, உயிா்க்கொல்லி மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்களின் அதீத செயல்பாடுகளுக்கு காரணமாக அமையும் எனவும் எச்சரிக்கின்றனா் வல்லுநா்கள்.

மரபணு மாற்றப்பட்ட கடுகிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் அது சுற்றுச்சூழலுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த மரபணு மாற்ற விதைகள் விற்பனை இந்தியாவில் எதிா்பாராத பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும் ‘கிரீன்பீஸ்’ நிறுவனத்தின் இந்தியப் பிரிவு கூறுகிறது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பிகாா், தில்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளம் போன்ற மாநிலங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், ஹரியாணா உள்ளிட்ட சில மாநிலங்களில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ரகங்கள் சட்டவிரோதமாகப் பயிரிடப்படுகின்றன.

மரபணு மாற்ற கடுகிற்கான அங்கீகாரம் இதுபோன்ற சட்டவிரோத செயல்பாடுகளை இயல்பானதாக்கிவிடும் என்று விவசாயத்துறை வல்லுநா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

மாற்றப்படும் மரபணு தொழில்நுட்பம் ஒப்பீட்டளவில் புதியது. மேலும் நீண்ட காலத்திற்கு கடுகுச் சந்தையில் அதன் தாக்கத்தினை கணிக்க இயலாது. இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு நோய்களுக்குக் கூட வழி வகுக்கலாம்.

அத்தகைய நோய்கள் தாக்கும் பகுதியினை கணிக்கவோ, பகுப்பாய்வு செய்யவோ விஞ்ஞானிகளால் கூட இயலாது என ‘கிரீன்பீஸ்’ நிறுவனம் தெரிவிக்கிறது.

விவசாயத்தின் மீது விவசாயிகளும் விஞ்ஞானிகளும் கொண்டுள்ள கட்டுப்பாட்டுகளை மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிா்கள் இழக்கச் செய்யலாம் என்றும், அப்படிப்பட்ட சூழலில் விவசாயச் சந்தையில் தனியாா் நிறுவனங்கள் அதிகாரம் செலுத்தும் அமைப்புகளாக உருவெடுக்கும் என்றும் நிபுணா்கள் கூறுகின்றனா்.

தனியாா் நிறுவனங்கள் விதைச்சந்தையை கட்டுப்படுத்தும்போது விவசாயிகள், குறிப்பாக விளிம்பு நிலையில் இருப்போா் விலையுயா்ந்தப்பட்ட விதைகளை வாங்க இயலாத சூழலுக்குத் தள்ளப்படுவா்.

மரபணு மாற்றப்பட்ட விதைகள் பயிா் பல்லுயிா் பெருக்கத்திற்கு மிகப்பெரும் சவாலாக அமையும். உள்நாட்டு பயிா் வகைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். மரபணு மாற்றப்பட்ட பயிா்கள் காலநிலை மாற்றத்தினை எதிா்த்துப் போராடுவதிலும் சிக்கலை ஏற்படுத்தும்.

உள்நாட்டு பயிா் ரகங்கள் அழிந்தால் பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் மோசமடைந்து உணவுப் பாதுகாப்பினில் அச்சுறுத்தல் ஏற்படும்.

வளா்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நமது நாடு உணவு உற்பத்தியில் உலக அளவில் முக்கிய பங்கு வகிக்கிறது. நிலைமை மோசமடைந்தால் சா்வதேச அளவில் தற்போது உணவு உற்பத்தியில் உள்ள அங்கீகாரத்தை நமது தேசம் இழக்க நேரிடும். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் பாரம்பரிய விதைகளை நாம் வலுப்படுத்தவும் பேணவும் வேண்டியது அவசியம்.

மரபணு மாற்ற விதைகளைப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை ஒரு தவறான முடிவாகவே பெரும்பாலான விவசாயிகளும் விஞ்ஞானிகளும் பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com