அரசுப் பள்ளிகள் மேம்படட்டும்

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

 அண்மையில், தமிழக முதல்வர், அரசுப் பள்ளிகள் தரமான கல்வியை வழங்கி வருவதால் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர் என்றும், அதிகரித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ.1,050 கோடியில் 7,200 வகுப்பறைகள் கூடுதலாகக் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
 அரசுப்பள்ளிகளை நாடி மாணவர்கள் வருவதும் அதனடிப்படையில் அரசு அதிகப்படியான வகுப்பறைகள் கட்டுவதும் மகிழ்ச்சி தரும் செய்தியாகும். அதே வேளையில் பராமரிப்பின்மையால் இடிந்து விழும் நிலையிலுள்ள வகுப்பறையின் மேற்கூரை, போதிய காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வகுப்பறைகள், கழிப்பிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளற்ற அரசுப் பள்ளிகள் இன்னமும் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
 சமீபத்தில் பெய்த மழையால் பள்ளி வளாகங்களில் நீர் தேங்கியதால் பள்ளிகளுக்கு விடுமுறை, பாதுகாப்பற்ற பள்ளிக் கட்டடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாமென்ற பள்ளி கல்வித்துறை அமைச்சரின் அறிவுறுத்துதல் ஆகியவற்றை நோக்கும்போது அரசுப் பள்ளிகள் அடிப்படை கட்டமைப்பு தேவைப்படும் நிலையில் உள்ளதை உணர முடிகிறது.
 கடந்த பதினைந்து ஆண்டுகளில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் 22 தொடக்கப் பள்ளிகள்,18 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டு விட்டதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாததால்தான் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்ப தயங்குகின்றனர்.
 பெற்றோரின் தயக்கத்தால் தற்போது 669 தொடக்கப் பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் எண்ணிக்கை உள்ளது. இப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கப்படாவிடில் விரைவில் இப்பள்ளிகளும் மூடப்படும் நிலை ஏற்படலாம்.
 அடிப்படை வசதியின்மையால் பள்ளிகள் மூடப்படுதைத் தவிர்க்க, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்திட நிகழாண்டில் அரசுப்பள்ளிகளின் பராமரிப்பிற்கு ரூ.150 கோடி ஒதுக்கியுள்ள தமிழக அரசு, தற்போது மேலும் 115 கோடி ரூபாயைக் கூடுதலாக ஒதுக்கியுள்ளது.
 தமிழகத்தில், இலவச நோட்டு புத்தகங்கள், சீருடை, மதிய உணவு, காலை சிற்றுண்டி இவை அனைத்திற்கும் மேலாக உயர்ந்து வரும் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியருக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு, தனியார் பள்ளிகளின் அதிகப்படியான கல்விக் கட்டணம் போன்றவற்றால் தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 "யுனெஸ்கோ' வெளியிட்டுள்ள சர்வதேச கல்வி கண்காணிப்பு அறிக்கையின்படி நம் நாட்டில் 2018-இல் 33% ஆக இருந்த தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை விகிதம் 2021-ஆம் ஆண்டில் 24% ஆகக் குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் "அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் குறைவாக இருக்கும்', "மாணவர்களிடையே ஒழுக்கம், கட்டுப்பாடு இருக்காது' போன்ற பொதுமக்களிடையே ஆண்டாண்டு காலமாக இருந்த மாயத்திரை சமீப ஆண்டுகளில் விலக ஆரம்பித்து விட்டதுதான்.
 இதனை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாண்டு நடைபெற்ற பள்ளி இறுதி தேர்வில் 246 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமீபத்தில் சென்னை, அதனை சுற்றியுள்ள 58 அரசு, மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டதன் விளைவாக 87 மாணவர்கள் சென்னை ஐஐடி யில் சேரும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.
 இவ்வாறு அரசுப் பள்ளி மாணவர்களின் தரம் உயர்வதற்கு அரசின் நிதி ஒதுக்கீடு, சட்ட திட்டங்களோடு முழு ஈடுபாட்டுடன் கடமையாற்றும் ஆசிரியப் பெருமக்களும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல. உதாரணமாக தமிழகத்தில் தற்போது 2,631 ஓராசிரியர் தொடக்கப் பள்ளிகள் உள்ளன.
 இப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான வெவ்வேறு பாடங்களை கற்பித்தல் அந்த ஒரே ஆசிரியருக்கு மிகப்பெரிய சவால்.அதோடு தமது அவசரத் தேவைக்கு கூட விடுப்பு எடுக்க இயலாத சூழலில்தான் இவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
 அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
 ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
 பின்னருள்ள தருமங்கள் யாவும்
 பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
 அன்னயாவினும் புண்ணியம் கோடி
 ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
 என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளுக்கொப்ப இன்றும் அரசுப்பள்ளி மாணவர்களின் மேம்பாட்டிற்கு அர்ப்பணித்து கொண்டுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பல உண்டு.
 தொண்டுள்ளத்தோடு கொடையுள்ளம் கொண்டு அரசுப் பள்ளிகளுக்கு உதவும் தனி மனிதர்களும் பலர் உண்டு. தாங்கள் பணியாற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை தங்கள் பிள்ளைகளாகவே கருதி அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் ஆசிரியப் பெருமக்கள் பலர் உண்டு.
 அரசுப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான பிள்ளைகள் கிராமப்புறங்களில் கல்வியறிவு அற்ற, ஏழ்மை நிலையில் உள்ள குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள். அப்பிள்ளைகளின் முன்னேற்றம், அவர்களின் குடும்பத்தின் முன்னேற்றம் மட்டுமின்றி நாட்டின் முன்னேற்றத்தையும் உள்ளடக்கியது.
 அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளுக்காக, கட்டமைப்பிற்காக போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்வது, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், ஓராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும் வகையில் புதிதாக அப்பள்ளிகளில் மாணவர்களை சேர்த்தல், மாணவர்கள் இடை நிற்றலுக்கான காரணங்களைக் கண்டறிந்து மாணவர்கள் தொடர்ந்து பயில ஏற்பாடு செய்தல் போன்ற அரசின் நடவடிக்கைகளில் பொது மக்களின் பங்களிப்பும் இருக்கும் பட்சத்தில் அரசுப்பள்ளிகளின் தரம் மேலும் உயரும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com