வெட்டப்படும் பட்டாம்பூச்சிகள்!

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

 அண்மைக்காலமாக நாளிதழ்களைத் திறப்பதற்குக் கரங்கள் நடுங்குகின்றன. காரணம், முதல் பக்கத்திலேயே இரயிலிலிருந்து தள்ளப்பட்ட பெண்ணின் இரத்தமும், இரயிலடியில் கழுத்தறுக்கப்பட்ட பெண்ணின் இரத்தமும், படிக்கின்ற கண்களை இரத்தம் கசிய வைக்கின்றன.
 பட்டாம்பூச்சிகளையும் வண்ணத்துப் பூச்சிகளையும் வெட்டரிவாள் கொண்டு வெட்டுவதுபோல், பெண் பிள்ளைகள் வெட்டிப் போடப்படுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
 ஒரு காலத்தில் பிள்ளைகள் குருகுலவாசத்தில் விடப்பட்டார்கள். குருகுலத்தில் ஆசான்கள், பாடம் போதிப்பதோடு மட்டுமின்றி, தாங்கள் வாழும் வாழ்க்கையாலும் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் போதித்தார்கள்.
 இன்றைக்கும்கூட திருப்பராய்த்துறை தபோவனத்திலோ, இராமகிருஷ்ண மடத்து உறைவிடப் பள்ளியிலோ படிக்கச் செல்லும் பிள்ளைகள் படிப்பு முடிந்து "ஒளி படைத்த கண்ணினர்' களாகவே திரும்புகின்றனர்.
 இன்றைக்குப் பல குடும்பங்களில் பிள்ளைகள் வளர்கிறார்களே தவிர, வளர்க்கப்படுவதில்லை. இரண்டு கால்களும் வளர்வதற்கு முன்னர், இரண்டுச் சக்கர வாகனங்களை வாங்கிக் கொடுத்துவிடுகின்றனர் பெற்றோர். விளையாடுவதற்கு கைப்பந்து வாங்கிக் கொடுப்பதற்குப் பதிலாக, கைப்பேசியை வாங்கிக் கொடுத்து விடுகின்றனர்.
 ஒரு நல்ல தாயால்தான், நல்ல பிள்ளைகளை உருவாக்க முடியும் என்பதை பாவேந்தர் பாரதிதாசன்,
 பாடம் சொல்லப் பாவை தொடங்கினாள்
 அவள் வாத்திச்சி; அறைவீடு கழகம்
 தவழ்ந்தது சங்கத் தமிழ்ச்சுவை; அள்ளி
 விழுங்கினர் பிள்ளைகள்
 என "குடும்ப விளக்'கில் விளக்கியிருக்கிறார்.
 பெரியபுராணத்தில் அப்பூதியடிகளின் இல்லத்திற்கு அப்பரடிகள் எழுந்தருளுகின்றார். அவருக்கு உணவு படைப்பதற்காகத் தம் மகன் மூத்த திருநாவுக்கரசை, வாழையிலை அறுத்து வரும்படியாக அப்பூதியடிகள் பணிக்கின்றார். அப்போது அந்த நன்மகன் "நல்ல தாய் தந்தை ஏவ, நான் இது செய்யப் பேற்றேன்' என்று விரைந்து செல்கின்றார். வாழ்வியலில் பெற்றோர்கள்தாம் தம் பிள்ளைகளில் இது நல்லபிள்ளை, அது கெட்டபிள்ளை எனச் சொல்லக் கேட்டு வருகிறோம். ஆனால், முதன்முதலாக ஒரு பிள்ளை, தம் பெற்றோரை, "நல்ல தாய் தந்தை' என்று சொல்வதை "பெரிய புராண'த்தில்தான் கேட்க முடிகிறது.
 அப்பூதியடிகளும் அவருடைய மனைவியும் போன்ற பெற்றோர் அமைந்தால், பிறக்கின்ற பிள்ளைகள், பெண்களைக் கொலை செய்வார்களா? போதைப் பொருளுக்கு அடிமையாவார்களா?
 தெய்வப்புலவர் திருவள்ளுவர், "பெறுமவற்றுள் யாமறிவது இல்லை, அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற' எனப் பாடியது, அறிவறிந்த பெற்றோர்களால் தாம் அறிவார்ந்த மக்களைப் பெற முடியும்; பொறுப்பற்ற பெற்றோர்களுக்கு அது வாய்க்காது என்பதை உணர்த்துவதற்கே ஆகும்.
 குடும்பத்தில் பூகம்பத்தை உருவாக்காத, முதிர்ச்சி பெற்ற காதல் என்றால், அதனைப் பெற்றோர் ஆதரிக்க வேண்டும் என்பதை பாவேந்தர் பாரதிதாசன்,
 "மாவடு நிகர்விழிச்
 சின்னஞ் சிறுமியே நீ,
 மங்கை எனும் பருவம் கொண்டு,
 வாழ்வுக்கோர் மாப்பிள்ளையைக் கண்டு,
 "தேவை இவன் எனவே செப்பும் மொழி
 எனக்குத் தேன்கனித் தித்திக்கும் கற்கண்டு'
 என, ஒரு தந்தை மகளுக்குச் சொல்வதாக அமைந்த பாடல், வெற்றி பெற்றால், பட்டாம்பூச்சிகள் வெட்டுக்கத்தியால் வெட்டப்பட மாட்டா.
 மராட்டிய மாநிலத்தின் காண்டேகர், நாடறிந்த நாவலாசிரியர். என்றாலும், அவருக்கு "காதல்' என்ற கோட்பாட்டில் நம்பிக்கைக் கிடையாது. தமிழ்நாட்டுச் சூழல் அவருக்கு முற்றாகத் தெரியாது. என்றாலும், காதல் பற்றி அவர் தம் நாவல்களில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள், தற்காலத் தமிழர் வாழ்வுக்குக் கலங்கரை விளக்குகளாக உள்ளன.
 ஒரு நாவலில் "காதல் என்பது கானல் நீர் போன்றது. அதை நோக்கி ஓடுகின்ற மான்கள், வயிறு வெடித்துச் சாகின்றன' என்றெழுதுகிறார்.
 "புயலும் படகும்' எனும் நாவலில், "கடலில் வெவ்வேறு திசைகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் படகுகள், கடுமையான புயல் வீசும்போது ஓரிடத்தில் வந்து கூடுகின்றன. புயல் தணிந்தவுடன் அந்தந்த படகுகள் எந்தெந்த திசையை நோக்கிப் பயணிக்க வேண்டுமோ, அந்தந்த திசைக்குச் சென்றுவிடுகின்றன. அதுபோலத்தான் காதலும். வெவ்வேறு நோக்கில் பயணிக்கின்ற ஆடவரும் பெண்டிரும் காதல் எனும் புயல் வீசும்போது சந்திக்கின்றனர். வேகமும் தாகமும் தணிந்த பின்னர் அவரவர் செல்ல வேண்டிய திசைக்குச் சென்று விடுகின்றனர்' என்கிறார்.
 "யயாதி' எனும் நாவலில், "எப்படி கத்தியும் கத்தரிக்கோலும் சிறுபிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்கள் அல்லவோ, அது போன்றுதான் காதலும் ஆண் - பெண்களின் விளையாட்டுப் பொருளல்ல' என்றெழுதுகிறார். நம் நாட்டு இளைஞர்கள் காண்டேகரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, சில நிமிடங்கள் அவற்றைச் சீர்தூக்கிப் பார்ப்பது நன்று.
 "பெற்றோர்கள்தாம் பிள்ளைகளின் முதல் ஆசிரியர்கள்; ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்கு இரண்டாவது பெற்றோர்' என ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு. இராமாயணத்தில் இராமனை "நடையில் நின்றுயர் நாயகன்' என்பார் கம்பர். அதற்குக் காரணம், அந்த இராமனுக்குக் கற்பித்த குரு வசிட்டர். இராமன் எப்படிப்பட்ட மாப்பிள்ளை என்பதை ஜனகனுக்குச் சொல்ல வந்த விசுவாமித்திரர், "உபநயன விதி முடித்து, மறை ஓதுவித்து, இவனை வளர்த்தானும் வசிட்டன் காண்' எனக் கற்பித்த ஆசாரியரின் பெருமையைக் கூறி, மாணவனின் நடத்தைக்குச் சான்று பகருகிறார்.
 கடந்த நாற்பதாண்டுகளாகவே புனிதமான ஆசிரியப் பணியில் சில காமுகர்களும் நுழைந்ததனால், கன்னிப்பெண்கள் எமன் வாய்க்குள் வலிந்து தள்ளப்படுகின்றனர். பாவேந்தர் பாரதிதாசனே இதனைக் கண்டு குமுறி, "கல்லாரைக் காணுங்கால், கல்வி நல்காக் கசடர்க்கும் தூக்குமரம் அங்கே உண்டாம்' எனப் பாடியிருக்கிறார்.
 பெண்கொலை என்பது காலம் காலமாகவே நடந்து வருகிறது. அன்று இரயிலில் இருந்து தள்ளுவதற்குப் பதிலாக, ஆற்றிலும் குளத்திலும் தள்ளியிருக்கிறார்கள். சங்க காலத்தில் நன்னன் என்றொரு குறுநில மன்னன் இருந்தான். அவன் தோட்டத்தில் இருந்து விழுந்த ஒரு மாங்கனியை, ஒரு பெண் தின்றதற்காக அவளைக் கொலை செய்துவிட்டான், அந்தக் கொடுங்கோலன். ஊர் மக்கள் எல்லாம் கூடி, அவள் எடைக்கு எடை தங்கமும், 81 யானைகளும் தருவதாகக் கூறியும், அக்கொடுங்கோலன் அவற்றைக் கேட்க மறுத்து, அவளைக் கொலை செய்துவிட்டான். அதனை சங்கப்புலவர் பரணர் "பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான், பெண்கொலை புரிந்த நன்னன்' என அகநானூற்றில் பாடி வைத்துள்ளார். அக்கொலைக்குப் பிறகு அவனை "பெண்கொலை புரிந்த நன்னன்' எனத் தூற்றத் தொடங்கினர். மேலும், அக்கொலைக்குப் பிறகு அவன் வம்சமே அழிந்துவிட்டதாம்.
 மகாகவி பாரதியார், "பாஞ்சாலி சபத'த்தைப் பாடியது, அன்றைய பாஞ்சாலிக்காக மட்டுமன்று; அவன் காலத்துப் பாஞ்சாலிகளுக்கும் சேர்த்துத்தான்! "பாஞ்சாலி சபத'த்தில் துச்சாதனன் ஒற்றை ஆடையில் இருக்கும் பாஞ்சாலியை அவைக்கு இழுத்து வந்து துகிலுரிவதை,
 ஆடை குலைவுற்று நிற்கிறாள் - அவள்
 ஆவென்று அழுது துடிக்கிறாள் - வெறும்
 மாடு நிகர்த்த துச்சாதனன் - அவள்
 மைக்குழல் பற்றி இழுக்கின்றான் ......
 கக்கக் கவென்று கனைத்தே பெருமூடன்
 பக்கத்தில் வந்தேயப் பாஞ்சாலி
 கூந்தலினைக் கையினாற் பற்றிக்
 கரகரெனத் தானிழுத்தான்!
 ஐயகோ வென்றே அலறி உணர்வற்றுப்
 பாண்டவர்தம் தேவியவள், பாதியுயிர்
 கொண்டுவர, நீண்ட
 கருங்குழலை நீசன் கரம்பற்றி
 முன்னிழுத்துச் சென்றான்
 என வருணிக்கிறார்.
 அன்றைய பாஞ்சாலிக்கு ஏற்பட்டதுதான், இன்றைய நிர்பயாவுக்கும் சுவாதிக்கும் நிகழ்ந்தது. அன்றைக்கு அஸ்தினாபுரத்து மக்கள் பாஞ்சாலியின் துயரத்தை எண்ணி நெட்டை மரங்கள் என நின்று புலம்பினார்களாம். இன்றைக்கிருக்கின்ற நெட்டை மரங்களும் நின்று புலம்புவதற்குப் பதிலாகச் கைப்பேசியில் தற்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 யாவரும் கைவிட்ட நிலையில் பாஞ்சாலி, கதறி அழுததை பாரதியார்,
 "பெண்டீர் தமையுடையீர்! பெண்களுடனே பிறந்தீர்!
 பெண்பாவம் அன்றோ! பெரியவசை கொள்வீரோ?
 கண்பார்க்க வேண்டும் என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.
 அம்புபட்ட மான்போல் அழுது துடிதுடித்தாள்
 என ஒரு பெண்ணுக்கு மட்டுமன்று; பெண்ணினத்திற்காகவும் பாடியிருக்கிறார்.
 காலம் காலமாகப் பெண் இனத்திற்கு நிகழ்ந்த வன்கொடுமைகளை நினைத்து, பாரதியின் இதயமும் எழுதுகோலும் கலங்கியமைக்கு ஒரு சான்று போதும். இங்கிலாந்திலிருந்து வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு வருவதை காங்கிரஸ் மகாசபை விரும்பவில்லை; அவரை யாரும் வரவேற்கக்கூடாது என்று தீர்மானமும் போட்டது. ஆனால், பாரதியார் ஒருவர் மட்டும் துணிந்து வரவேற்றார். காரணம் என்ன தெரியுமா? அவர்கள் ஆட்சிக்கு வந்து சட்டம் இயற்றியதால்தான், பெண்களை உடன்கட்டை ஏற்றலும், பால்ய விவாகமும் தடை செய்யப்பட்டன.
 ஆங்கிலேயர் ஆட்சியிலும் சில நன்மைகள் ஏற்பட்டிருப்பதை எண்ணிப் பார்க்கிறார், அந்த மகாகவி.
 "மற்றும் உன் நாட்டினோர்வந்ததன் பின்னர்,
 அகத்தினில் சிலபுண் ஆறுதல் எய்தின! .....
 கொடுமதப் பாவிகள் குறும்பெல்லாம் அகன்றன
 ஆற்றினில் பெண்களை எறிவதூஉம், இரதத்து
 உருளையில் பாலரை உயிருடன் மாய்த்தலும்
 பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும்
 எனப் பல தீமைகள் இறந்து பட்டனவால்
 என பாரதியார் பாடியது, பெண்கள் குழந்தைகளுக்கு ஏற்பட்ட கொடுமைகளை ஒழிப்பதற்குத்தான்!
 என்னதான் அன்று பாரதி பாடியிருந்தாலும், இன்றுவரை பாலியல் கொடுமைகள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. காரணம், காமுகர்களை இன்றைய சட்டத்தால் தண்டிக்க முடியவில்லை. காரணம், சாட்சிகளை இல்லாமல் செய்து விடுவதால். என்றாலும் வெட்டப்படும் பெண்களின் சாபம், வம்சத்தையே இல்லாமல் செய்துவிடும்.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com