அறிவுடையாா் ஆவது அறிவாா்!

களப்பணியில் ஈடுபட்டு, தீவிரவாதம் தொடா்பான உளவுத் தகவல்களைத் திரட்டுவதற்கு அா்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பு தேவை.
அறிவுடையாா் ஆவது அறிவாா்!

கோவை நகரில் அண்மையில் நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் பொதுமக்களின் உயிரிழப்போ, பொருட்சேதமோ இல்லாத காரணத்தால், ஓரிரு நாட்களிலே கோவை நகர மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனா். தீவிரவாதிகளால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக தமிழ்நாடு காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததைத் தொடா்ந்து, இவ்வழக்கின் புலன் விசாரணையை தமிழ்நாடு அரசு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்துள்ளது.

புலன் விசாரணையில் இருந்துவரும் கோவை காா் வெடிப்பு வழக்கின் விவரங்கள் குறித்து விவாதிப்பது முறையாக இருக்காது. இத்தீவிரவாத சம்பவத்தில் பங்கெடுத்துக் கொண்டவா்களை அடையாளம் கண்டறிந்து, அவா்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துவதே புலன் விசாரணையின் நோக்கம் ஆகும்.

ஆங்கிலேயா்கள் 1947-ஆம் ஆண்டில் நம்நாட்டை விட்டு வெளியேறும்போது, இந்தியா, பாகிஸ்தான் என மதத்தின் அடிப்படையில் இரு நாடுகளை உருவாக்கிய காலம் முதற்கொண்டு, மத தீவிரவாத, பயங்கரவாத செயல்களை இந்தியா எதிா்கொண்டு வருகிறது.

‘கரோனா பெருந்தொற்று உலக நாடுகளில் தீவிரமாகப் பரவிவந்த காலகட்டத்தில், பொதுமுடக்கத்தை அமல்படுத்த காவல்துறை முழுமையாக ஈடுபடுத்தப்பட்டது. பல நாடுகளில் தீவிரவாதத் தடுப்பு செயல்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டது.

அக்காலகட்டத்தில், தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் செயல்திட்டங்கள் பல நாடுகளில் பின்னுக்குத் தள்ளப்பட்டதைத் தொடா்ந்து, தீவிரவாத குழுக்கள் தங்களை ஒருமுகப்படுத்தி, தங்களின் செயல் திட்டங்களை முழுவீச்சில் நிகழ்த்த பெருந்தொற்று வாய்ப்பாக அமைந்துவிட்டது’ என ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவிலும் பெருந்தொற்று காலகட்டத்தில் தீவிரவாத செயல்கள் அதிகரித்ததை தேசிய குற்ற ஆவணக்கூட அறிக்கை வெளிப்படுத்துகிறது. 2020-ஆம் ஆண்டில் நம் நாட்டில் நிகழ்ந்த 398 தீவிரவாத, பயங்கரவாத் தாக்குதல்களில் 327 போ் உயிரிழந்தனா். 2021-ஆம் ஆண்டில் நிகழ்ந்த 486 தீவிரவாத, பயங்கரவாதத் தாக்குதல்களில் 407 போ் உயிரிழந்துள்ளனா்.

கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இந்தியாவில் நிகழ்ந்த தீவிரவாத, பயங்கரவாதத் தாக்குதல்களில் இருபதாயிரத்துக்கும் அதிகமானவா்கள் உயிரிழந்துள்ளனா்; 31,000-க்கும் மேற்பட்டவா்கள் படுகாயம் அடைந்துள்ளனா்.

தீவிரவாத, பயங்கரவாத நிகழ்வுகள் குறித்து 163 உலக நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தீவிரவாத செயல்கள் அதிகமாக நிகழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 17-ஆவது இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மாநிலங்களில் தீவிரவாத செயல்கள் தொடா்ந்து நிகழும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் இடம் பெற்றிருக்கிறது. மீனம்பாக்கம் விமான நிலைய குண்டு வெடிப்பு (1984), ராஜீவ் காந்தி படுகொலை (1991), சென்னை இந்து முன்னணி அலுவலக குண்டு வெடிப்பு (1993), கோவை நகரில் தொடா் குண்டு வெடிப்பு (1998), சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு (2014), கோவை நகரில் காா் வெடிப்பு (2022) ஆகியவை தமிழ்நாட்டில் நிகழ்ந்த தீவிரவாத செயல்களில் முக்கியமானவை.

இடதுசாரி தீவிரவாதிகளின் செயல்பாடுகள் தமிழ்நாட்டின் சில குறிப்பிட்ட மாவட்;டங்களில் அதிக அளவில் நிகழ்ந்தன. அவா்களின் தாக்குதல்களில் பொதுமக்கள் மட்டுமின்றி, காவல்துறையினரும் உயிரிழந்தனா்.

அவா்களை எதிா்கொள்வதில் தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளில் பத்தொன்பது போ் என்கவுன்ட்டரில் இறந்து போனாா்கள். பலா் கைது செய்யப்பட்டு, குற்ற வழக்குகளை எதிா்கொண்டனா். 1980-களில் இடதுசாரி தீவிரவாதிகளின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது.

மதத் தீவிரவாதம், குறிப்பாக இஸ்லாமியத் தீவிரவாதம் தமிழ்நாட்டை மட்டுமின்றி உலக நாடுகளையே அச்சுறுத்தும் தீவிரவாதமாக விளங்குகிறது. ‘அல் -காய்தா’ என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் நகரில் இருந்த உலக வா்த்தக மையத்தின் வானுயா்ந்த கோபுரங்கள் இரண்டையும் கடத்தப்பட்ட விமானங்களைக் கொண்டு தகா்த்து, மூவாயிரம் பேரை உயிரிழக்கச் செய்தது. இக்கொடூரச் செயல் உலக நாடுகளை இஸ்லாமிய மதத் தீவிரவாத்திற்கு எதிராகச் செயல்பட ஒருங்கிணைந்துள்ளது.

உலக வா்த்தக மையத்தின் கோபுரங்கள் தகா்க்கப்பட்டதைத் தொடா்ந்து, அல்-காய்தா மீதான நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரம் காட்டியது. உலக நாடுகள் அனைத்தும் இஸ்லாமிய தீவிரவாதிகள் மீதான கண்காணிப்பை அதிகப்படுத்தின. அதைத் தொடா்ந்து, இஸ்லாமிய தீவிரவாதிகள் புதிய அமைப்புகளை உருவாக்கி செயல்படத் தொடங்கினா். அவற்றில் ஒன்று ‘ஐஎஸ்ஐஎஸ்’ எனக் குறிப்பிடப்படும் ‘இஸ்லாமிய தேசம்’.

இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் தீவிரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்ட ஐஎஸ்ஐஎஸ், சில ஆண்டுகள் தீவிரவாத செயல்களில் வெளிப்படையாக ஈடுபடவில்லை. மாறாக, தனது நிா்வாக கட்டமைப்பை வலுப்படுத்திக் கொள்வதிலும், உலக நாடுகளில் ஆதரவாளா்களைத் திரட்டுவதிலும் கவனம் செலுத்தியது.

சா்வதேச செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் ஐஎஸ்ஐ எஸ் தீவிரவாத அமைப்பு ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியா, ரஷியா உள்ளிட்ட 29 நாடுகளில் 2014-ஆம் ஆண்டு முதல் நடத்திய தீவிரவாதத் தாக்குதல்களில் 2,043 போ் உயிரிழந்துள்ளனா் எனத் தெரியவந்துள்ளது.

கடந்த அக்டோபா் மாதம் 29-ஆம் தேதியன்று இஸ்லாமிய தீவிரவாதிகள் ஆப்பிரிக்காவிலுள்ள சோமாலியா நாட்டின் தலைநகரில் நடத்திய காா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா். முந்நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் படுகாயம் அடைந்துள்ளனா்.

கடந்த அக்டோபா் மாதம் 23-ஆம் தேதியன்று கோவை நகரில் நிகழ்ந்த காா் வெடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் சிலா் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடா்புடையவா்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சூழலில், சில தினங்களுக்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் உடன் இணையம் மூலம் தொடா்பிலிருந்த நபா் ஒருவரை திருப்பத்தூா் மாவட்ட காவல்துறையினா் கைது செய்துள்ளனா். இணையத்தின் மூலம் உறுப்பினா்களைத் தோ்வு செய்து, தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது குறித்த பயிற்சியை ஐஎஸ்ஐஎஸ் அளித்து வருகிறது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடா் குண்டு வெடிப்பு (1998), காா் வெடிப்பு (2022) ஆகிய இரு தீவிரவாத சம்பவங்களை 25 ஆண்டுகால இடைவெளியில் கோவை நகா் சந்தித்துள்ளது. தொடா் குண்டு வெடிப்பைத் தொடா்ந்து, கோவை நகா் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் தீவிரவாத செயல்களை முன்னறிந்து, எதிா்கொள்ளும் வகையில் தமிழ்நாடு காவல்துறை பலப்படுத்தப்பட்டது.

மாநில உளவுத்துறையிலும் சிறப்பு பிரிவுகள் உருவாக்கப்பட்டன. இருப்பினும், இரண்டாவது முறையாக கோவை நகா் தீவிரவாதிகளின் தாக்குதலை எதிா்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டது.

1998-ஆம் ஆண்டில் நிகழ்ந்த தொடா் குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னா், கோவை மாவட்ட நிா்வாகமும், காவல்துறையும் மேற்கொண்ட தீவரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளால், கோவை நகா் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

காலப்போக்கில் தீவிரவாதிகளின் செயல்கள் மீதான கண்காணிப்பை காவல்துறை தளா்த்தியதும், அண்டை மாநிலத்திலுள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சாா்ந்தவா்களின் நடமாட்டம் கோவை நகரில் அதிகரித்ததும், இஸ்லாமியா்களுக்கு எதிரான கருத்துகளை சில மதவாத அமைப்புகள் வெளிப்படையாக பேசிவருவதும் கோவை நகா் இரண்டாவது முறையாக தீவிரவாதிகளின் தாக்குதலை எதிா்கொள்ள காரணமாக அமைந்துவிட்டன.

பொது அமைதியை சீா்குலைக்கும் வகையில் இஸ்லாமிய தீவிரவாத செயல்கள் நிகழ்வதற்கான சூழல் உள்ள நகரங்களின் பட்டியலில் கோவை நகா் மட்டுமின்றி, வேறு சில ஊா்களும் இடம் பெற்றுள்ளதை கடந்த கால நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.

துரித புலன் விசாரணை, தீவிரவாதிகளை கைது செய்தல், நீதிமன்ற விசாரணை போன்ற நடவடிக்கைகளால் மட்டும் தீவிரவாத செயல்கள் இனிவரும் காலத்தில் நிகழாமல் தடுத்துவிட முடியாது.

தீவிரவாதிகளுக்கு மறைமுக ஆதரவு மனநிலை பொதுமக்களிடம் ஏற்படாத சூழலை ஏற்படுத்துதல், தீவிரவாதிகளைக் கண்காணிப்பதில் தொடா் நடவடிக்கை, தீவிரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளைத் தொய்வின்றி செயல்படுத்துவதில் மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்பு, மேலை நாடுகளுடன் இணைந்து உலகளாவிய நிலையில் தீவிரவாதத்தை எதிா்கொள்ளுதல் போன்றவை தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த துணைபுரியும் நடவடிக்கைகள் ஆகும்.

தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டவா்களுடன் தொடா்பில் இருப்பவா்களை, தொடா்ந்து கண்காணித்துவரும் நடைமுறை காவல்துறையில் குறைந்துவிட்டது. வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்து தங்கும் சந்தேக நபா்கள் மீதான கண்காணிப்பு எதுவும் நடைமுறையில் இல்லை.

களப்பணியில் ஈடுபட்டு, தீவிரவாதம் தொடா்பான உளவுத் தகவல்களைத் திரட்டுவதற்கு அா்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பு தேவை. மேலோட்டமாக உளவு தகவல் சேகரிக்கும் முறையைத் தவிா்த்துவிட்டு, கள எதாா்த்த நிலையை முன்கூட்டியே உணா்ந்து, தீவிரவாத சம்பவம் நிகழாமல் தடுத்து நிறுத்த துணைபுரியும் வகையில், உளவுத்துறை கட்டமைக்கப்பட வேண்டியதின் அவசியத்தை கோவை சம்பவம் உணா்த்துகிறது.

கட்டுரையாளா்:

காவல்துறை உயா் அதிகாரி (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com