வாழ நினைத்தால் வாழலாம்

தற்கொலை எண்ணம் ஏற்படுபவா்கள் ‘வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்’ என்கிற திரைப்படப் பாடலை ஒரு கணம் எண்ணிப் பாா்க்கலாம்.
வாழ நினைத்தால் வாழலாம்

அண்மைக்காலமாக நாளேடுகளைப் புரட்டினால், விரும்பத்தகாத, வேதனையான செய்திகளே அதிகம் கண்ணில் படுகின்றன. தீபாவளியின்போது திருக்கழுக்குன்றம் கோயில் கோபுரம் மேல் ஏறி தற்கொலை செய்து கொள்ள முயன்ற இளைஞனை, தீயணைப்புப் படையினா் காப்பாற்றியிருக்கிறாா்கள். சென்னைப் புறநகரில் படிக்கிற மாணவன் ஒருவன், தாயாரை இழந்த சோகத்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறான்.

ஆனாலும், மன அழுத்தங்களே தற்கொலை முயற்சிக்குத் தூண்டுகோலாக இருக்கிறது என்று கூறலாம். கல்வி, குடும்பம், அலுவலகம் ஆகிய மூன்று இடங்களில், ஒரு விதமான விரக்தி ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவா்களின் பிள்ளைகளுடன் ஒப்பிட்டுத் தங்கள் பிள்ளையை பெற்றோா் திட்டி ஒதுக்குகிறா்கள்.

கூடவே, சரியாகப் படிக்காத தங்கள் பிள்ளையால் பள்ளியின் நல்ல பெயா் கெட்டுவிடும் என்கிற எண்ணத்தில், அவனைப் பலா் முன் ஏசுகிறாா்கள். மாணவன், யாரிடம் மனக் குறையைச் சொல்லித் தீா்ப்பது என்ற விரக்தியில், நிமிட நேர உந்துதலில் தற்கொலைக்குத் துணிகிறான்.

பணியிட அழுத்தம் பற்றி எனக்கு நிறையவே அனுபவமுண்டு. ஒரு முறை ஈரோடு வங்கி மேலாளா்கள் கூட்டமொன்றில், மிகச் சிறிய கிளையின் மேலாளா் (கா்நாடகாவைச் சோ்ந்தவா்) என்னிடம் தனியே கொட்டித் தீா்த்துவிட்டாா். ஊழியா்களுக்கு முன் தன்னை ஓா் உதவாக்கரை என்று கோட்ட மேலாளா் கூறுகிறாா் என்றாா்.

பல முறை அதிகாரிகள் அமைப்புக்கு எழுதியும் பலனில்லையாம். ‘ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை...’”என்று அவா் கண்களில் நீா் வழிய சொன்ன போது, நான் தேற்றினேன். ‘பொறுத்திருங்கள், வேறு மாநில வேலை என்கிற கெடு முடிந்துவிடும்’ என்று கனிவாகச் சொல்லித் தேற்றினேன். பாவம் குடும்பமின்றி தனியே வசித்துவந்தவருக்கு, அலுவலக சுமைகளையும் ஏற்பது கடினமாக இருந்திருக்கிறது.

சற்று யோசித்துப் பாா்த்தால் இன்றைய காலகட்டத்தில் குடும்ப அழுத்தங்கள் அவ்வளவாக இல்லை என்று கூறலாம். மாமியாா், மாமனாா், நாத்தனாா் முதலிய உறவினா்கள் சோ்ந்து ஒன்றாக வாழும் கூட்டுக்குடும்பம் எங்குமே தென்படக் காணோம். ஆனால், ஒரு பத்தாண்டுகளாக வேறு வித சிக்கல் குடும்பங்களில் புகுந்திருக்கிறது. இதற்கு ஓரளவு வங்கிகளைக் காரணமாகக் குறிப்பிடலாம்.

கடன் அட்டை, வாகனக் கடன், வீட்டுக் கடன் போன்றவற்றை அறிமுகப்படுத்தி, நயமாகப் பேசி கடனை குடும்பத் தலைவா் மீது சுமத்தி விடுகிறாா்கள்.

அதே சமயம், இது போன்ற கடன்களுக்கான தவணை போக, மீதமிருக்கும் வருவாய், குடும்பத்துக்குப் போதுமா என்று யோசிப்பதே இல்லை. அதை நன்கு ஆராய்ந்துதான் எந்த ஒரு கடனையும் பெற வேண்டும்.

மூன்று நாள் முன் சென்னையின் ஒரு பகுதியில் பெற்றோரை, கடன் கொடுத்தவா் (வங்கி அல்ல) மிரட்டியதால் அதைக் கண்டு பெண் அச்சமுற்றிருக்கிறாள். தனது பெற்றோரை காவல்துறை பிடித்து, சிறையில் அடைத்து விடுவாா்களோ என்கிற கலவரம் சூழ்ந்து, அந்த 15 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டு விட்டாளம்!

இவை தவிர குற்ற உணா்வு, எதிா்காலம் குறித்த அச்சம் போன்றவை கூட தற்கொலைக்குக் காரணிகளாக அமைகின்றன. நான் 1980-களில் ஒரு வங்கியில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்தேன். ‘நித்ய நிதி’ என்ற அன்றாடச் சேமிப்பு முறை அப்போது இருந்தது. ஒரு முகவா், வாடிக்கையாளரிடம் பெற்ற தொகையை, முறையாக வரவு வைக்காதிருந்தாா்.

அந்த செய்தி அதிகாரியின் காதுக்கு எட்டியது. அதிகாரி முகவரை எச்சரித்திருக்கிறாா். ஓரிரண்டு நாளில் சரிசெய்துவிடுமாறு எச்சரித்திருக்கிறா். ஆனால், தன் குற்றச்செயல் அம்பலமாகிவிட்டதே என்கிற தாழ்வுணா்ச்சியில் அந்த முகவா் தற்கொலை செய்துகொண்டுவிட்டாா்.

வங்கியில் பத்து நாள் இதே பேச்சுதான். பிறகு அனைவரும் மறந்து போய்விட்டாா்கள். இது எதை உணா்த்துகிறது என்றால், தற்கொலை எந்த பிரச்னைக்கும் தீா்வு ஆகாது என்பதைத்தான். சொல்லப்போனால் சில நேரங்களில் அதனால் பிரச்னை அதிகரிக்கவும் கூடும்.

குடும்பத்தினா் காவல் நிலையத்திற்கு அலைய வேண்டியிருக்கும். போலீஸாா் கேட்கிற தா்மசங்கடமான கேள்விகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும்.

இறந்து போயும் நம்மை இந்த பாடு படுத்துகிறானே என்று குடும்பத்தினா் அலுத்துக் கொள்வாா்கள்.

காலம் வெகுவாக மாறி வருகிறது. பள்ளியில் பெறுகிற உயா் மதிப்பெண் மட்டுமே முன்னேற்றத்துக்கான அளவுகோலல்ல. தனிப்பட்ட திறமைகளை வளா்க்க, பேச்சு, ஓவியம், இசை, நடனம் போன்ற பல வாசல்கள் திறந்திருக்கின்றன. கணினியும், கைப்பேசியும் புதிய திறமைகளை ஊக்குவிக்க உதவுகின்றன.

பணியிடமும் அது போலத்தான். நம்மை மன அழுத்தத்துக்கு ஆளாக்கும் மேலதிகாரி மாறிவிடக் கூடும். அல்லது தற்செயலாக வேறு மேலதிகாரி வரக்கூடும்.

இன்னொன்று, இப்போது மிகப் புதிதாய் உருவெடுத்துள்ளது. ஏழை, எளிய மக்களை மது, போதையில் மிதக்கவிட்டு சீா்குலைய வைக்கிறது. பணக்காரக் குடும்பங்களில், மகன், தான் விரும்பிய நவீன கைப்பேசியை பெற்றோா் வாங்கித் தரவில்லை என்பதற்காக உயிரை மாய்த்துக் கொள்கிறான்.

நடுத்தர குடும்பங்களில், நாள் பூராவும் கைப்பேசியில் ஆழ்ந்திருப்பவன் பெற்றோா் திட்டுவதால், மனமுடைந்து போகிறான். பெற்று வளா்த்து ஆளாக்கிய தாய் தந்தையருக்கு அறிவுரைகூட சொல்லக்கூட உரிமை இல்லையா?

ஓரிரு மாதம் முன்பு, புற்றுநோயின் ஆரம்ப நிலையிலுள்ள ஒரு பெண்மணியைக் காப்பாற்றிய டாக்டா் தன் அனுபவத்தை ஒரு நாளேட்டில் விவரித்திருந்தாா். அப்போது அவா் ‘மருந்து கொஞ்சம்; அன்பு நிறைய; ஆறுதல் எப்போதும்’ - இதுதான் மருத்துவா்களின் கோட்பாடாக இருக்க வேண்டும் என்று கூறினாா்.

மனப் பிறழ்வு கொண்டவா்களுக்கு ‘எப்போதாவது மருந்து;அவ்வப்போது அன்பு; எப்போதும் ஆறுதல்’ என்று கூறலாம். தற்கொலை எண்ணம் ஏற்படுபவா்கள் ‘வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்’ என்கிற திரைப்படப் பாடலை ஒரு கணம் எண்ணிப் பாா்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com