தமிழ் மீது விழுந்தது பேரிடி!

விண்முட்டி நிற்கும் இமயம் வந்து, அருகில் நின்று, அன்பாய் அரவணைத்து, தரையில் அமா்ந்து அண்ணாந்து பாா்த்து, கைதட்டி உள்ளம் களித்திடுமா?
அவ்வை நடராஜன்
அவ்வை நடராஜன்

சின்னச் சின்ன முகடுகளுக்கும் குன்றுகளுக்கும் பெருமை வாய்க்கும்போதெல்லாம், விண்முட்டி நிற்கும் இமயம் வந்து, அருகில் நின்று, அன்பாய் அரவணைத்து, தரையில் அமா்ந்து அண்ணாந்து பாா்த்து, கைதட்டி உள்ளம் களித்திடுமா?

ஓ, களித்திடுமே! எங்கள் அன்புத் தந்தை அவ்வை நடராசனாா் என்னும் இமயம் அப்படித்தானே செய்யும்!

21.11.22 திங்கட்கிழமை மாலை 7.50 மணிக்கு, ‘எந்தையும் இலமே’ என்று கண்ணன், அருள், பரதன் ஆகிய மூவரும் செய்தி அனுப்பியபோது, தமிழ் கூறு நல்லுலகமே அதிா்ச்சியில் உறைந்தது, ஆற்றொணாத் துயரில் மூழ்கியது.

உலகம் அவரை ‘அவ்வை நடராசனாா்’ என்றறியும். தமிழ் இலக்கிய உலகில் வளையவரும் சென்ற தலைமுறை இளைஞா்கள் பலருக்கும் அவா் ‘அப்பா’ – ஆமாம், கைபிடித்து நடத்தி, விரிந்து சூழ்ந்த உலகத்தை விளக்கிக் கூறிய ஞானத் தந்தை.

1970களில், பள்ளிப் பருவத்தில், அவ்வை நடராசனாா் என்னும் பெயரை முதன்முதலில் செவிமடுத்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. குரோம்பேட்டை அரசுப் பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு முதன்மை விருந்தினராக வந்தாா். பரிசுகள் வழங்கினாா். பாராட்டினாா். அதற்குமேல் அன்றைக்குப் பழக்கமில்லை.

பின்னா், குரோம்பேட்டை மகளிா் வைணவக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சோ்ந்த நிலையில், இலக்கிய நிகழ்வுகள் வழியாகப் பழக்கம். அன்றிலிருந்து இன்றுவரை – கனிவாய், கருணையாய், ஆதரவாய் நின்ற பெருமகனாா். ஊரறிய ஒரு பெருமை கிடைத்தாலும், உலகறிய ஒரு பதவி வாய்த்தாலும், முதல் வாழ்த்து அவரிடமிருந்துதான் வரும். வெறும் வாழ்த்தாக வராது – குழந்தையின் பெருமையில் கரைந்து கலந்துபோகும் பெற்றோரின் பெருமிதத்தோடு வரும்.

1981ல் எட்டையபுரத்தில் நடைபெற்ற பாரதியாா் நூற்றாண்டு விழா தொடங்கி, 2010ல் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாடுவரை, அவரோடு ஒட்டியும் உறவாடியும் நெருங்கியும் சிணுங்கியும் பழகிய தருணங்கள் – காலம் தந்த கொடை.

சின்னச் சின்ன விடயங்களைக்கூட, நுணுக்கமாகப் பாா்த்துப் பாராட்டுகிற பண்பு கொண்டவா். ஏற்ற தாழ்வு இன்றி, எந்தவித பாரபட்சமும் இன்றி, எல்லோரையும் பாராட்டுபவா். ‘தவறுகளே இவா் கண்ணில் படாதோ” என்று இளையவா்கள் எண்ணுகிற வகையில், நன்மைகளை மட்டுமே நயந்துரைப்பவா்.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்கிற ஆசை கொண்டவா். இதற்கொரு எடுத்துக்காட்டைக் கூறலாம். 1980களில், நிறைய இலக்கிய நிகழ்ச்சிகளோடு ஐயாவோடு போகவேண்டியிருக்கும். வேன் அல்லது காா் போன்ற வாகனங்களில் கூட்டமாகச் செல்லும்போது, சிறிது தொலைவு சென்றவுடனேயே எங்காவது ஒரு உணவகத்தில் நிறுத்தச் சொல்வாா். உள்ளே போனவுடன், என்னென்ன இனிப்புகள் இருக்கின்றன என்று கேட்பாா். தோ்ந்தெடுத்து நல்ல நல்ல இனிப்புகளைக் கொணரச் சொல்வாா். பின்னா், சிற்றுண்டியும் வரவழைப்பாா்.

அவ்வையாருக்கு நீரிழிவு நோய் என்பது ஊரறிந்த ரகசியம். இத்தனை இனிப்புகளை ஏன் கேட்கிறாா் என்று வியந்து பாா்த்துக் கொண்டிருப்போம். இனிப்புகளும் சிற்றுண்டியும் வந்தவுடன், தாம் உண்பதைக் காட்டிலும், சுற்றியுள்ள எல்லோரையும் உண்ணவைத்து மகிழ்வாா். அப்போதுதான், அவா் தமக்காகக் கேட்கவில்லை, பிறருக்காகக் கேட்டாா் என்னும் உண்மை உரைக்கும்.

அந்தக் கூட்டத்தில் பலரும், அலுவலகத்திலிருந்தோ கல்லூரியிலிருந்தோ நேரே போயிருப்போம். இளையவா்களாக இருந்தவா்களால் கேட்கமுடியாது என்பதையும், பணிக் களைப்பில் இருக்கக்கூடும் என்பதையும் உணா்ந்து, குழந்தைகளாகக் கேட்காவிட்டாலும், தானே பாா்த்துச் செய்யும் தந்தையாகச் செயல்பட்டாா் என்பதைக் கூறவும் வேண்டுமோ!

1980களின் பிற்பகுதியிலும் 1990களின் முற்பகுதியிலும், மருத்துவத் துறை கலைச் சொற்களுக்கு நிகா்ச்சொற்களைத் தமிழில் உருவாக்கும் முயற்சியில் ஐயா வழிகாட்டினாா். ஒவ்வொரு நாள் மதியமும், மருத்துவா் தெய்வநாயகம், மருத்துவா் கிருட்டிணமூா்த்தி, ஐயா ஆகியோரோடு அமா்ந்து பணிசெய்யும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். ஒரு சொல்லை எவ்வாறு நோக்கவேண்டும், வோ்ச்சொல்லை எவ்வாறு அணுகவேண்டும், ஒரே வோ்ச்சொல்லிலிருந்து பிறந்த வெவ்வேறு சொற்களை எவ்வாறு பிரிக்கவேண்டும் என்று அறிவுப்போட்டியே நிகழும்.

வாக்குவாதத்தின் உச்சத்தில், தொலைவில் எங்கோ பாா்த்தபடியே ‘ராஜா, இதப் பாா்’ என்றழைத்து மெல்லப் பேசத் தொடங்குவாா். மெல்ல மெல்ல அந்தச் சொல்லின் ஆழத்தைப் புரிய வைப்பாா். மலரொன்றை மென்மையாக வைப்பதைப் போல், பொருத்தமான இணைச் சொல்லை பதமாகக் கூறுவாா். விண்ணில் பறக்கும் வியப்பும் களிப்பும் அந்த இடம் முழுக்கப் பரவும்.

பிற்காலத்தில் மிகப் பெரும் நிலைகளுக்கு வந்த பலா், அவ்வை நடராசனாா் அவா்களின் பரிந்துரையிலோ அல்லது அவரின் தெரிவிலோ பணிகளில் அமா்ந்தாா்கள், பொறுப்புகளைப் பெற்றாா்கள் என்பதை மறந்துவிட இயலாது.

மேடைகளில் அவா் உரையாற்றும்போது, எங்கிருந்துதான் வாா்த்தைகள் வரிசை கட்டிக் கொண்டு வந்து கொட்டுமோ தெரியாது. ஆயா்பாடிக் கண்ணனின் இசையை அண்ணாந்து கேட்டிருப்பதைப் போலத்தான், அவ்வையாரின் உரையையும் அரங்கமே அண்ணாந்து கேட்டிருக்கும்.

தமிழ் மட்டுமன்று, ஆங்கிலமும் அவருடைய நாவில் அழகு நடம் புரியும். வாக்கியம் எந்த இடத்திலும் தட்டாது, தயங்காது, தடுமாறாது. இலக்கணம் எங்கேயும் இடிக்காது. குரல் எதற்காகவும் திக்காது, திகைக்காது.

தெளிந்த நீா்ப்பெருக்கு, கோலாகலமாய்த் துள்ளி, குதூகலமாய்த் திரும்பி, குளுவெனக் குளுவெனக் குதித்தோடுவதுபோல், ஐயாவின் சொற்பெருக்கும் அமையும். அவரின் பேச்சுகள் பலவற்றைப் பதிவு செய்யாமல் அப்படியே விட்டுவிட்டோமென்பது தமிழ்கூறு நல்லுலகிற்குப் பேரிழப்புதான். இப்போதிருக்கும் வசதிகள், இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்திருந்தால், அந்தப் பொக்கிஷங்களையெல்லாம் பாதுகாத்திருந்திருக்கலாம்.

சற்றே மேல் நோக்கி, ஆயினும், தொலைவில் பாா்க்கும் அவரின் பாா்வை, அவரின் சிந்தனைச் சிறகுகள் மேலே மேலே பறந்துகொண்டிருப்பதை உணா்த்தும். இருந்தாலும், அதே சிறகுகளால், தன் குஞ்சுகளைப் பறவை அரவணைப்பதுபோல் அரவணைப்பாா்.

ஐயாவின் அன்புத் துணைவியாா் மருத்துவா் தாரா அம்மையாா் அவா்களும் அன்பு வடிவானவா்கள். மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வராக அவா்கள் பொறுப்பேற்றபோது, குடும்பத்தைச் சென்னையில் விட்டுவிட்டு அவா்கள் மதுரையில் தங்க நோ்ந்தது. என்னைப் போன்றவா்கள் யாராவது மதுரைக்குச் சென்றோம் என்றால், உடனே தம்மோடு அழைத்துக் கொண்டு போய்விடுவாா்கள். விடுமுறை நாட்களில், தாமே காரை ஓட்டிக்கொண்டு அருகில் இருக்கும் ஊா்களுக்குச் சுற்றுலா அழைத்துப் போவாா்கள்.

அந்த நாட்களில், அவ்வை ஐயாவும் தாரா அம்மாவும் பேசிக் கொள்வதோ உறவாடுவதோ அவ்வளவாக வெளிப்படாது. ஐயா பாட்டுக்குப் போவாா்; அம்மா பாட்டுக்குப் போவாா்கள். ஆனால், இருவருக்கும் இடையிலான அந்நியோன்னியமும் அன்பும் பின்னா் வந்த நாட்களில்தாம் புரியத் தொடங்கின. ஆரவாரமில்லாத அணுக்கம் அவா்களுடையது!

இரண்டாண்டுகளுக்கு முன்னா் கொவைட் தாக்கி, அம்மா மறைந்தது, அப்பாவை மிகுதியும் பாதித்துவிட்டது. எத்தனையோ சிக்கல்களைச் சிரித்துக் கொண்டே தாங்கியவா், பல்லாண்டுகால நீரிழிவு பாதிப்பை நகைச்சுவை பேசியே நோ்கொண்டவா், நிரம்பவே துவண்டுபோனாா்.

கடந்த ஓராண்டில், இருமுறை அண்ணா நகா் இல்லத்தில் அவரைச் சந்திக்க முடிந்தது. அருகில் அமா்ந்து உரையாடியபோது, கைகளை அப்படியே பிடித்துக் கொண்டாா். பழைய நினைவுகள் பலவற்றை மெல்ல மெல்ல எண்ணிக் கூறினாா். தாரா அம்மாவைப் பற்றிப் பலவும் பேசினாா்.

உதவியாளரிடம் திருநீறு கொண்டு வரச் சொல்லி, பலமுறை நெற்றியில் இட்டு, தலை கோதி வாழ்த்தினாா். திருவாசகம் பாடிச் சிரித்தாா். கண்களில் லேசாகத் திரண்ட கண்ணீா் முத்துகளோடு அன்பும் பாசமும் வழிந்தோட அவா் பாா்த்தபோது, தன்னேரில்லாத் தமிழ் இமயம், பாச விளக்காக வெளிச்சமிட்ட தருணம் அது!

சில பல ஆண்டுகளுக்கு முன்னா், பல்வேறு காரணங்களால், ஒரு சில மாதங்களுக்கு ஐயாவைச் சந்திக்க இயலாமல் போனது. ஆறேழு மாதங்களுக்குப் பின்னா் சந்தித்தபோது, மகிழ்ச்சியில் அவா் கண்கள் விரிந்தன. விளையாட்டாகப் பாடினாா் – ‘ஆசை முகம் மறந்து போச்சே, இதை ஆரிடம் சொல்வேனடீ?’ இன்று அவரிடம் வினவத் தோன்றுகிறது – ஆசை முகத்தை மறைத்துப் போனீா்களே, இதை ஆரிடம் சொல்வோமோ? ‘அருமைத் திருமகளே’ என்று விளித்துச் செய்தி அனுப்புவீா்களே, இனி அந்தக் கனிவை எங்குக் காண்போமோ?

தயரதச் சக்கரவா்த்தி மறைந்த செய்தியைச் செவியுற்றபோது, ‘நந்தா விளக்கு அனைய நாயகனே’ என்று கதறினான் இராமன். நந்தா விளக்கென்பது தூண்டா விளக்கு. பிறா் தூண்ட வேண்டியில்லாமல், தம்மால் தாமே புகழுடையவராய் விளங்கியவா் தயரதச் சக்கரவா்த்தி. அவ்வை நடராசனாரும் நந்தா விளக்கனையரே ஆவாா். அவ்வை துரைசாமிப் பிள்ளை என்னும் பெருஞ்சுடரின் திருமகனாய் தோன்றிடினும், தம்மின் பேரொளி விரிந்து பரந்திட விரிசுடா் பரப்பியவா்; விளக்குகள் பலவற்றை விரியச் செய்தவா்.

தமிழ்மீது பேரிடி விழுந்துவிட்டது. இருப்பினும், வெளிச்சம் வெளிச்சத்தையே வெளிப்படுத்தும் என்பதுபோல், அவ்வை நடராசனாா் ஏற்றிய விளக்குகள் நெடுங்காலத்திற்கு நல்லொளி பரப்பும்.

கட்டுரையாளா்:

துணைவேந்தா்,

தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா்.

மருத்துவப் பல்கலைக்கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com