தமிழர்கள் சனாதனிகளா?

தமிழர்கள் சனாதனிகளா?

 தமிழர்கள் இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் மக்களின் கலாசாரம், பண்பாடு இவற்றில் இருந்து வேறுபட்டவர்கள் என்ற பிரசாரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உண்மையில் பாரத தேசத்தின் பிற பகுதிகளில் வாழும் மக்களிடமிருந்தும் அவர்களின் பண்பாட்டுக் கூறுகளில் இருந்தும் முற்றிலும் மாறுபட்டவர்களாகத் தமிழர்கள் இருந்திருக்கிறார்களா என்ற வினாவுக்கான விடையை நம்முடைய வரலாற்றில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். தமிழர்களைப் பொறுத்தவரை சங்க இலக்கியம் முதல் சமய இலக்கியங்கள் வரை மிக முக்கிய சான்றாதாரங்களாக இருக்கின்றன.
 கல்வெட்டுகளும் செப்பேடுகளும் தமிழர்கள் யார், அவர்களின் வாழ்க்கை முறை என்ன என்பதை விளக்குவதாக இருக்கின்றன. தற்போது தமிழகத்தில் தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல என்ற கோஷம் பெரிதாக எழுப்பப்படுகிறது. இதற்குள் அரசியல் பொதிந்திருக்கிறது. எனில் தமிழர்கள் மதமற்றவர்களா என்ற வினா எழுகிறது. உண்மையில் தமிழர்கள் யார்? தமிழர்களுக்கென்று மதம் இல்லையா? அல்லது தமிழர்கள் பின்பற்றிய மதம் எது?
 இந்த வினாக்களுக்கு நம்முடைய இலக்கியங்களே மிகத் தெளிவாக விடை சொல்கின்றன. சங்க இலக்கியத்திலும் தெய்வம் இருக்கிறது. தொல்காப்பியம் மரபியலில் கருப்பொருள் பற்றிச் சொல்லுமிடத்து,
 தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
 செய்த யாழின் பகுதியோடு தொகை இ
 அவ்வகைப் பிறவும் கருவென மொழிப
 என்று தெய்வத்தை முதன்மைப்படுத்துகிறார். இதுவும் தான் வகுத்ததெனக் காட்டாமல் "மொழிப' என்று தன் காலத்திற்கும் முன்பே தெய்வம் பற்றிய சிந்தனை இருந்ததை உறுதி செய்கிறார்.
 முருகக்கடவுள், திருமால், சிவன், இந்திரன், கொற்றவை என்று தெய்வங்களைத் தெளிவாக தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்தத் தமிழ் தெய்வங்கள் யார்? தெய்வங்கள் குறித்தான தொன்மக் கதைகள் சங்கத் தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு இடம் பெற்றிருக்கின்றன?
 தமிழர்களுக்கென்று சமயங்களும் வழிபடு தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் இருக்கின்றன. ஹிந்து என்ற ஒற்றைச் சொல்லுக்குள் நம்முடைய தமிழ்ச் சமயங்களையும் கொண்டுவந்துவிடும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று ஒருபுறம் வாதிடுகின்றனர்.
 சனாதனம் தமிழர்களுக்கானது அல்ல. தமிழர்கள் வேதநெறியைப் பின்பற்றியவர்களும் அல்ல என்பது இவர்களின் வாதம். சனாதனம் வேதங்களை ஏற்றுக் கொள்வது. வேதங்களின் வழியில் வழிபாட்டு முறைகளைக் கொண்டிருப்பது. இவை தமிழரின் வழிபாட்டு முறைகளிலிருந்து மாறுபட்டவை என்றும், சனாதனம் பாரத தேசம் முழுமையும் பின்பற்றப்பட்டு வந்த மெய்யியல் கோட்பாடு அல்லது வாழ்வியல் தத்துவம் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
 தமிழருக்கும் சம்ஸ்கிருதத்தின் நான்கு வேதங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? தமிழர்கள் வேதங்களை ஏற்றுக் கொண்டவர்கள் இல்லையா என்ற வினாவுக்கு விடை தேடினால் குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். சங்க இலக்கியங்களில் சனாதனம் என்றோ ஹிந்து என்றோ எந்தக் கருத்தியலும் இடம்பெற்றிருக்கவில்லை. ஆனால், புறநானூறு தொடங்கி சங்க இலக்கியத்தின் பல இடங்களில் வேதங்கள், வேதம் பற்றிய கருத்துகள், வேதங்களைக் கற்பித்த அந்தணர்கள், அவர்களது கடமைகள், சமூகத்தில் அவர்களின் உயரிய நிலை என்று பல உண்மைகள் காணக்கிடைக்கின்றன.
 "அந்தணன்' என்ற சொல்லை அம் - தண் - அன் எனப் பிரித்துப் பொருள் கொண்டால் முற்றிலும் நல்ல இயல்புகளையும் இரக்கத்தையும் உடையவன் என்று பெப்ரிசிஸ் விளக்கம் தருகிறார். கல்வியாளர்களான இவர்கள் பார்ப்பார் என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். தாமப்பல் கண்ணனார் என்ற புலவர் சோழனின் முன்னோர்கள் பார்ப்பனர் மனம் நோகும்படியான செயல்களைச் செய்ய மாட்டார்கள் என்று புறநானூற்றில் பேசுகிறார்.
 அந்தணர்கள் மன்னர்களுக்கு நெருக்கமாக இருந்துள்ளனர். "அறுதொழில் அந்தணர்', "அறவாழி அந்தணர்' என்று பெருமையாகவே இவர்கள் பேசப்படுகின்றனர். இன்றைய தமிழகத்தில் அந்த வகுப்பைச் சேர்ந்தவர்களைப் பற்றிய ஒருசாராரின் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டதாக அந்தணர்கள் மிகுந்த மரியாதையோடு நடத்தப்பட்டுள்ளனர் என்பதும் தெரிகிறது.
 புறநானூற்றில் சோழரும், பாண்டியரும் செய்த வேள்விகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வேள்விகள் பெரிய அளவில் மிகுந்த விருப்பத்தோடு மன்னர்களாலேயே செய்யப்பட்டிருக்கின்றன. புறநானூற்றின் 397-ஆவது பாடல், "அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த தீயோடு விளங்கும் நாடன்' என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பெருமையாக சொல்லப்பட்டு இருக்கிறான்.
 புறநானூற்றில் 400-ஆவது பாடல், வேதங்களை அறிந்த அந்தணர் நிறைந்த வேள்விச் சாலைகளை உடைய நாட்டின் சொந்தக்காரன் சோழன் நலங்கிள்ளி என்று புகழ்கிறது. பாண்டியன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, பல யாகசாலைகளைக் கட்டி யாகங்களைச் செய்தவன் என்பதாலேயே இந்தப் பெயர் பெற்றிருக்கிறான். சோழர்களும், பாண்டியர்களும் தமிழ் வரலாற்றில் தமிழர் பெருமையின் அடிநாதமாக விளங்குபவர்கள். இவர்களை ஒதுக்கிவிட்டு தமிழகத்தையும் தமிழரின் வரலாற்றையும் பண்பாட்டையும் எழுத இயலுமா?
 புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலிலேயே "மறைநவில் அந்தணர்' என்று அந்தணர்களும் வேதமும் சுட்டப்பட்டு விடுகிறது. 400-ஆவது பாடல் வரை பல இடங்களில் "நால்வேதம்', "எழுதாக்கிளவி' என்றும், "மறை', "மறைபொருள்' என்றும் வேதம் சுட்டப்படுகிறது.
 தமிழர்களின் முழுமுதல் தெய்வமாக சிவபெருமான் வணங்கப்பட்டதை கடவுள் வாழ்த்துப் பாடல் சொல்கிறது. தமிழ் மொழியை நமக்குத் தந்து, அதனைக் காப்பதற்கென்று சங்கம் அமைத்து, முதல் சங்கத்தின் தலைவனாக இருந்து சிவபெருமானே தமிழ் வளர்த்ததாக சங்க இலக்கியப் பாடல் சொல்கிறது. சிவபெருமானுக்கும் கொற்றவைக்கும் மகனான முருகன் தந்தையை தொடர்ந்து தமிழ் வளர்த்த தெய்வமாக அறியப்படுகிறான். ஊர்தோறும், ஊரின் நடுவே மன்றம், கோட்டம் என்று கோவில் இருந்ததை சங்க இலக்கியம் உறுதிப் படுத்துகிறது.
 இன்றைக்கு தமிழர்களின் சமயம் சைவம் என்றும் வைணவம் என்றும் சொல்கிறார்கள். சைவர்கள் புனித நூலாகக் கருதுவது தேவாரம், திருவாசகம் முதலிய சைவ சமய இலக்கியங்களை. வைணவத்தார் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தையே தங்களின் புனித நூலாகக் கொண்டாடுகிறார்கள்.
 அனைத்து சிவாலயங்களிலும் இன்றளவும் அன்றாடம் பாடப்படுவது மாணிக்கவாசரின் திருவாசகம், மூவர் தேவாரம். அவை, "வேதமோ டாறங்க மாயி னானை', "வேதநாதன்', "வேத கீதன்', "ஆரணன்காண்' என்றே இறைவனை வர்ணிக்கின்றன.
 பெரிய புராணத்தில் திருஞானசம்பந்தரின் வரலாற்றைச் சொல்லுமிடத்து சேக்கிழார்,
 வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
 பூதபரம் பரைபொலியப் புனிதவாய்
 மலர்ந்தழுத
 சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
 பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்
 என்று கூறுகிறார். இதனை சனாதனத்திலிருந்து நாங்கள் வேறுபட்டவர்கள் என்று வாதிடுவோர் ஏற்கிறார்களா? பெரிய புராணத்தையும் திருவாசகத்தையும் தங்களுடையது அல்ல என்று மறுக்கப் போகிறார்களா?
 "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திருமூலரும் இதே சைவ நெறியை முன் வைக்கிறார்."வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலார் சுவாமிகளும்,
 எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
 எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
 செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
 திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
 என இதே சைவ நெறியைத்தான் பாடுகிறார். சைவ நெறி என்பது வேதங்களை ஏற்றுக் கொண்டது. வேதவடிவாய் வேதத்தின் விழுப்பொருளாய் விளங்குபவன் இறைவன் என்பதே சமய நெறி.
 வைணவ நூல்களிலும் இப்படித்தான், "வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்' என்று சொல்லியிருக்கிறார்கள். வைணவத்தில் திருமால் தெய்வமாக வணங்கப்படுகிறார்.
 சனாதன தர்மத்தின் ஸ்ரீமத் பாகவதம் காட்டும் அதே திருமாலே தமிழராலும் வணங்கப்படுகிறார். 108 வைணவத் திருத்தலங்கள் பெருமையாக சொல்லப்பட்டிருக்கின்றன. இந்தத் திருத்தலங்களில் வடமொழி வேதத்தோடு நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களும் வழிபாட்டில் இடம்பெறுகின்றன. தமிழகம் தாண்டியும் கோதை நாச்சியாரின் திருப்பாவை பாடப்படுகிறது.
 அரசியல் தளத்தில் சமய அடையாளங்கள் பற்றிப் பேசுவோர் சைவம், வைணவம் அல்லது மாலியம் என்று தமிழர் சமயங்களை அடையாளப்படுத்துவோர் சனாதனம் அல்லது ஹிந்து சமயத்திலிருந்து முற்றிலும் மாறானது என்று நிறுவுவதற்கு ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்.
 தேவாரம், திருவாசகம், திவ்ய ப்ரபந்தம் போன்ற நூல்களை சமய இலக்கியங்கள் என்று ஏற்றுக் கொண்டால் அவற்றில் வேதம் முழுமையாக விரவிக்கிடக்கிறது. சமய இலக்கியங்களை ஒதுக்கிவிட்டால் தமிழரின் சமயத்திற்கான சான்றுகளைக் காட்ட இயலாது. வழிபாட்டு முறைகளை சமயத்திற்கான அடிப்படைகளை நிறுவுவதற்கான சாத்தியம் இல்லாமல் போய்விடும்.
 அரசியலோ ஆன்மிகமோ தமிழர் வாழ்வியல் பாரதப் பாரம்பரியத்தோடு ஒத்திசைந்தே இருக்கிறது. விருந்தோம்பல் தொடங்கி விழுமியங்கள் அனைத்திலும் ஒற்றுமைகள் நிறைந்திருக்கின்றன. எதிர்த்தரப்பில் வலுவான சிந்தனைகளை முன்வைப்போர் இல்லாத காலங்களில் ஆதாரங்களற்ற பேச்சுக்கள் அரங்கம் ஏறலாம். அடிப்படைகளற்ற சித்தாந்தம் காலத்தால் நிலைபெற முடியாமற் தொலைந்து போகும்.
 "அரியும் சிவனும் ஒன்னு அறியாதவர் வாயில் மண்ணு' என்றொரு சொல்வழக்கு உண்டு. அதைப்போல சனாதனம் ஆகிய ஹிந்து மதமும் சைவ- வைணவ சம்பிரதாயங்களும் ஒன்றே என அறியாதவர் அறிந்து கொள்ள தமிழின் சங்க, சமய இலக்கியங்களைக் கையில் கொடுத்து படிக்கச் சொல்லலாம்.
 
 கட்டுரையாளர்:
 ஊடகவியலாளர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com