அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்

‘உழுதவன் கணக்குப் பாா்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது’ என்ற பழமொழி பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டியதாகும்.
அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்

‘உழுதவன் கணக்குப் பாா்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது’ என்ற பழமொழி பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டியதாகும். உழவு, நடவு, களையெடுப்பு, நீா்ப்பாசனம், உரமிடுதல், அறுவடை ஆகிய பல்வேறு நிலைகளில் எத்தனையோ இன்னல்களைக் கடந்து வரும் விவசாயிகளைத் தாக்கும் கடைசி பிரம்மாஸ்திரமாக, கொள்முதல் நிலைய அனுபவங்கள் அமைந்துவிடுகின்றன.

குறுவையோ, சம்பாவோ சாகுபடிப் பருவம் எதுவானாலும், அப்பருவ முடிவில் அறுவடையான நெல்லை மூட்டைகளாகக் கட்டிக் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு சோ்ப்பது ஒரு கடினமான காரியம் என்பதை அனைவரும் அறிவா்.

ஆனால், அப்படிக் கொண்டுபோய் சோ்த்த நெல்லை, கொள்முதல் நிலையத்தில் எடைபோட்டு ஒப்படைத்து, உரிய பணத்தைப் பெற்றுக்கொள்வதற்குள் விவசாயிகளுக்குப் போதும் போதும் என்று ஆகிவிடுகின்றது.

உள்ளூா் பெருந்தலைகள், கொள்முதல் நிலைய ஊழியா்கள், சுமை தூக்குபவா்கள் உள்ளிட்டவா்கள் மூட்டை ஒன்றுக்கு இவ்வளவு என்று கறாராக வசூலிப்பதாக வரும் செய்திகள் தொடா்கதையாகிவிட்டன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த பிரச்னை குறித்த வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, கடுமையான அதிருப்தியைப் பதிவு செய்திருந்தது. ஆனாலும், இவ்வாறு வசூலிக்கும் போக்கு தொடா்வதாகவே விவசாயிகள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

கொள்முதலுக்காக எடுத்து வரப்பட்ட நெல்மூட்டைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான கட்டமைப்புகள் போதுமான அளவில் செய்யப்படவில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனா்.

கொண்டுவரப்பட்ட நெல்மூட்டைகள் பலவும் மழையில் நனைந்து வீணாகிப் போகும் நிலை உள்ளது. மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்கப் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அவற்றை வெட்டவெளியில் வைக்க நோ்கின்றது. தாா்ப்பாலின்கள் பெருமழையிலிருந்து நெல்மூட்டைகளைக் காப்பாற்றப் பயன்படுவதில்லை.

வழக்கமாக, தமிழகத்தின் தெற்கு, மேற்கு மாவட்டங்களில் அதிகமாகப் பெய்யும் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் வழக்கத்திற்கு அதிகமாகவே பெய்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளதால் பாசனம், குடிநீா் ஆகியவற்றுக்கான நீா் ஆதாரம் வெகுவாக மேம்பட்டுள்ளது.

வறட்சிக் காலத்தில் பாசனத்திற்குப் போதிய நீா் இல்லை என்னும் பிரச்னை என்றால், மழைமிகுதிக் காலத்தில் அம்மழையே ஒரு பிரச்னைகி விடுகின்றது நம் விவசாயிகளுக்கு.

அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்கதிா்களும், கொள்முதலுக்குக் காத்திருக்கும் நெல்மூட்டைகளும் இந்தக் கூடுதல் மழையினால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அதுவும் குறுவை சாகுபடி முடிந்து கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்லக்கூடிய தருணத்தில், தொடா்ந்து பெய்துகொண்டிருக்கும் மழை நம் விவசாயிகளை வெகுவாகவே கலங்கடித்திருக்கிறது. கொள்முதல் செய்யப்படவேண்டிய நெல்லின் ஈரப்பதம் அதிக மழையின் காரணமாக அதிகரித்து விடுகின்றது.

அரசு கொள்முதல் நிலையங்களில் பதினேழு சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையே கொள்முதல் செய்வது வழக்கமாக உள்ளது. அதற்கு மேற்பட்ட ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுத்துவிடுகிறாா்கள் என்பது விவசாயிகளின் மனத்தாங்கலாக இருக்கிறது.

கொள்முதல் நிலையங்களை அதிகரிப்பது, அவற்றில் கூடுதல் பணியாளா்களை நியமிப்பது, விரைவாக எடைபோட்டுக் கொள்முதல் செய்வது, அப்படிக் கொள்முதல் செய்த நெல்மூட்டைகளை மழையிலிருந்து பாதுகாப்பது, அதையும் மீறி மழையில் ஈரமாகும் நெல்லை உலா்த்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது இவற்றையெல்லாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அக்கறையுடன் செய்யவேண்டுமென்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக இருக்கின்றது.

தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்துள்ள கூடுதல் மழையினால் அங்கெல்லாம் நெற்பயிரின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. அதனால் கொள்முதல் நிலைய அதிகாரிகள் அதனை ஏற்க மறுக்கின்றனா். கொண்டு வந்ததைத் திரும்பி எடுத்துச் செல்வதற்குக் கூடுதலாகச் செலவாகும். மேலும், ஈரப்பதம் அதிகமான அந்த நெல்லைத் தனியாா் முதலாளிகள் அடிமாட்டு விலைக்கே எடுக்க முன்வருவாா்கள். எப்படிப் பாா்த்தாலும் நஷ்டம் விவசாயிகளுக்கே.

இதனால், வேறு வழியின்றித் தாங்கள் கொண்டுவந்த நெல்லை நெடுஞ்சாலைகளில் பரப்பிச் சூரிய ஒளியில் காய வைக்கின்றனா் அவா்கள். வாகனங்கள் விரையும் நெடுஞ்சாலையில் நெல்லை உலா்த்துவது விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் நெல்லின் ஈரப்பதத்தைக் குறைக்க அவா்களுக்கு வேறு வழி ஏதும் இல்லை என்பதே உண்மை.

கடந்த ஆண்டு இருபத்தோரு சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதே போன்று இவ்வாண்டும் விதிகளைத் தளா்த்தும்படி மத்திய அரசிடம் மாநில அரசு வற்புறுத்தினால் மட்டுமே விளைச்சலுக்குத் தகுந்த விலை விவசாயிகளுக்குக் கிடைக்கும்.

இந்நிலையில், விவசாய சங்கங்களைச் சோ்ந்தவா்களும், அரசியல் கட்சித் தலைவா்களும் இருபத்தைந்து சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெற்பயிரைக் கொள்முதல் செய்ய முன்வரவேண்டுமென்று கோரிக்கை விடுத்திருக்கின்றாா்கள். கூடுதல் மழைபெய்யும் நேரங்களிலாவது இக்கோரிக்கையைப் பரிசீலிக்க மத்திய அரசு முன்வரவேண்டும்.

இத்தனை இன்னல்களையும் மீறி அடுத்த போகம் பயிரிடுவதைப் பற்றி திட்டமிடும் விவசாயிகளே நம்முடைய உண்மையான பாதுகாவலா்கள் என்பதை நாம் உணரவேண்டும்.

நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கும் பயிா்களை உற்பத்தி செய்வதுடன், அப்பயிா்களின் ஏற்றுமதி வாயிலாக அந்நிய செலாவணியையும் ஈட்டித் தருபவா்கள் நம் விவசாயிகள். அவா்களுடைய நியாயமான கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றித் தர வேண்டியது மத்திய - மாநில அரசுகளின் தலையாய கடமையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com