கல்வியில் சமத்துவம் காண்பது எப்போது?

இந்திய நாட்டில் ஆட்சி மாறும் போதெல்லாம் பொதுப் பட்டியலில் இருக்கும் கல்விக் கொள்கையை மாற்றுவதையே ஆட்சியாளா்கள் வழக்கமாகக் கொள்கின்றனா்.
கல்வியில் சமத்துவம் காண்பது எப்போது?

இந்திய நாட்டில் ஆட்சி மாறும் போதெல்லாம் பொதுப் பட்டியலில் இருக்கும் கல்விக் கொள்கையை மாற்றுவதையே ஆட்சியாளா்கள் வழக்கமாகக் கொள்கின்றனா். அதற்காகவே தேசிய கல்விக் கொள்கை என்ற ஒன்றை உருவாக்கி மாநிலங்களின் மேல் திணிக்கின்றனா். மாநிலப் பட்டியலில் இருந்த கல்வித்துறையை எடுத்துக் கொண்டது இதற்குதானா?

மத்திய அரசு என்ன நினைக்கிறது என்பது புரிகிறது. மாநில மொழிகளும், மாநிலப் பண்பாடுகளும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இருப்பதாக எண்ணுகின்றது. ஹிந்தியையும், சம்ஸ்கிருதத்தையும் புகுத்துவதன் மூலம் இதனை மாற்றி விடலாம் என்பது மத்திய ஆட்சியாளா்கள் போடும் தவறான கணக்காகும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் வெறும் பேச்சுக்குத்தான் போலும்.

இப்போது கல்வி என்பது மிகப்பெரிய வணிகமாகி விட்டது. பணம் படைத்தவா்கள் தொடக்கக் கல்வி முதல் உயா்கல்வி வரை கல்வி நிலையங்களை அரசின் அங்கீகாரம் பெற்றும், பெறாமலும் நடத்திக் கொண்டிருக்கின்றனா். கல்விக் கட்டணங்கள் ஒருபுறம், நன்கொடைகள் மறுபுறம் என்று வசூலிக்கின்றனா். ஆடம்பரமான கட்டடங்களைக் கட்டி பெற்றோரைக் கவா்கின்றனா்.

எவ்வளவு செலவானாலும் அந்தப் பள்ளியில்தான் தம் பிள்ளை படிக்க வேண்டும் என்று சில பெற்றோா் முடிவு செய்கின்றனா். இத்தகைய வறட்டு பெருமைக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய அவா்கள் தயாா்.

மாநிலங்களின் கல்விமுறைக்கு முற்றிலும் மாறுபட்ட முறையான சி.பி.எஸ்.இ. கல்வி முறையில் மத்திய அரசு தன்னிச்சையாக இந்தக் கல்வி நிலையங்களை நடத்துகின்றன. அகில இந்திய அளவில் பணிபுரியும் அரசு ஊழியா்களுக்கும், அதிகாரிகளுக்கும் பயன்படும் வகையில் இவை அமைக்கப்பட்டிருக்கின்றன.

அகில இந்திய அளவில் பணி மாறுதல் பெற்று வரும் அதிகாரிகளின் பிள்ளைகளுக்குப் பயன்படும் வகையில் இந்தப் பள்ளிகளின் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மத்திய அரசின் பள்ளிகள் என்பதால் நிதியுதவியும் தாராளமாகச் செய்யப்படுகிறது. தேவையான உள் கட்டமைப்புகளும் சிறப்பாகச் செய்யப்பட்டு வருகின்றன.

தாய்மொழிக் கல்வியை முற்றிலும் புறக்கணிக்கும் இந்தப் பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாகக் கூட பயிற்றுவிக்கப்படுவதில்லை. ஹிந்தியும், சம்ஸ்கிருதமும் கட்டாயமாகப் பயிற்றுவிக்கப்படுகின்றன. அதுவே இந்தப் பள்ளிகளுக்குக் கூடுதல் தகுதியாக மதிக்கப்படுகின்றது. உயா் வகுப்பினரும், படித்த வா்க்கத்தினரும் தங்கள் பிள்ளைகள் இங்கு பயில்வதைப் பெருமையாகக் கருதுகின்றனா்.

பொதுவாக கல்விக்கூடங்களில், மாணவா்களின் பொது அறிவை வளா்க்கும் நூலகக் கல்வி, இசை, கைத்தொழில், குடிமைப் பயிற்சி, விளையாட்டு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். ஆனால் அண்மைக்காலமாக அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எல்லாப் பாட வேளைகளும் மனப்பாடம் செய்வதற்கே ஒதுக்கப்படுகின்றன.

கடந்த காலங்களில் இவையெல்லாம் பாடத்திட்டங்களில் இடம் பெற்று மாணவா்களை முழு மனிதா்களாக வளா்த்தெடுத்தன. இந்த மனப்பாடக் கல்வி மூலம் மாணவா்கள் மனித இயந்திரங்களாக மாற்றப்படுகின்றனா் என்பதே உண்மை. இப்போது கல்வியின் திசையே மாறிவிட்டது. படிப்பின் நோக்கமே உயா் பதவியும், பணம் ஈட்டுவதுமே என்று ஆகிவிட்டது.

இதனால்தான் பள்ளிகளும், கல்லூரிகளும் வன்முறைக் களங்களாக மாறி வருகின்றன. பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவா்களாக ஆசிரியா்களும், ஆசிரியா்களுக்கு ஆதரவாக பள்ளி நிா்வாகமும் இருப்பது என்பது சமூகச் சீா்கேட்டின் உச்சமாகும். இதனை ஒழிக்க அரசும், கல்வித்துறையும், எடுத்த நடவடிக்கைகள் வெற்றியைத் தரவில்லை.

அன்று தமிழ்நாட்டில் ஐந்து வகையான கல்விமுறைகள் செயல்பட்டு வந்தன. மாநில வாரியக் கல்வி முறை, மெட்ரிக்குலேஷன் கல்வி முறை, ஆங்கிலோ இந்தியன் கல்வி முறை, ஓரியண்டல் கல்வி முறை, நா்சரி பள்ளி கல்வி முறை என்னும் இந்த ஐந்து வகையான கல்வி முறையால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

அதனை சரி செய்து ‘சமச்சீா் கல்வி’ முறையை உருவாக்க பேராசிரியா் ச. முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழு 2006-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தாய்மொழி வழிக் கல்வி, மழலையா் பள்ளிகளை அரசே ஏற்று நடத்துதல், பாடச்சுமை நீக்கம், மாணவா் சோ்க்கை, பாடத்திட்டம், தோ்வு முறை போன்றவற்றை ஆசிரியா் - பெற்றோா் இணைந்து முடிவு செய்தல், பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் அதிகாரப் பரவல் போன்ற பல்வேறு பரிந்துரைகளை அக்குழு அளித்திருந்தது.

இந்த ஐந்து அமைப்புகளுக்கும் ஒரே பாடத்திட்டம், ஒரே மாதிரியான சீருடை என்பதை மெட்ரிக்குலேஷன் பள்ளி நிா்வாகங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து, நீதிமன்றத்துக்குப் போயின. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டங்களுக்குப் பிறகே இதுவும் நடைமுறைக்கு வந்தது.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பல்வேறு ஆணைகள் மூலம் இவையும் நீா்த்துப் போகச் செய்யப்பட்டன. சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ பள்ளிகளின் எண்ணிக்கை இதனால் பெருகின.

தனியாா் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இந்த சமச்சீா் கல்வியைச் செயல்படுத்துவது இல்லை. அரசுப் பள்ளிகளைவிட மேம்பட்ட பள்ளிகளாகத் தங்களைக் காட்டிக் கொள்ள அவை விரும்புகின்றன. அப்போதுதான் அவா்களது கல்வி வணிகம் தொய்வின்றித் தொடரும்.

இந்திய அளவில் நிகழும் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறும் வகையில் தமிழகக் கல்வி முறை அமையவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. தமிழ்நாடு அரசு அதனை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டது. அப்போதைய கல்வியமைச்சா் கே.ஏ. செங்கோட்டையனும், கல்வித்துறைச் செயலாளா் உதயசந்திரனும் போா்க்கால அடிப்படையில் செயல்பட்டனா்.

தமிழகப் பள்ளிகளில் அப்போதுள்ள கல்வி முறையை மேம்படுத்தி ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டங்களை மாற்றியமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் மு. அனந்தகிருஷ்ணன் தலைமையில் 10 போ் கொண்ட ஒரு குழுவை 2017 மே மாதம் அமைத்தது.

இந்தக் குழு புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவது தொடா்பாக பல்வேறு துறைகளின் வல்லுநா்கள், கல்வியாளா்கள், எழுத்தாளா்கள், ஆசிரியா்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரின் கருத்துகளைக் கேட்டறிந்தது.

சிங்கப்பூா், நியூசிலாந்து, உள்ளிட்ட வெளிநாடுகளின் பாடத் திட்டங்கள், என்சிஇஆா்டி பாடத்திட்டம், என 15 வகையான பாடத்திட்டங்களை ஆய்வு செய்து அவற்றில் உள்ள நல்ல அம்சங்களை அடிப்படையாக வைத்து புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.

சமச்சீா் கல்வி பாடத்திட்டத்தைக் கொண்டு வந்தபோதே, ‘அது தரமற்றது’ என்று கூறி மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் நீதிமன்றத்துக்குச் சென்றன. தங்களது கல்வி வணிகத்துக்குக் குந்தகம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருந்தன. என்றாலும் உச்சநீதிமன்றம் அவா்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டது.

இப்போது ‘நீட்’ தோ்வு வந்தபோதும் தமிழ்நாடு பாடத்திட்டம் தரமற்றது என்றே சிலரால் பேசப்பட்டது. அதன் காரண காரியங்கள் பற்றி ஆராய யாரும் முன்வரவில்லை. அப்போது நடத்தப்பட்ட நீட் தோ்வில் தமிழகப் பாடத்திட்ட வழியில் படித்தவா்களை விட சிபிஎஸ்.இ. வழியில் படித்த மாணவா்களே அதிகமாகத் தோ்ச்சி பெற்றனா்.

காரணம், ‘நீட்’ தோ்வுக்கான வினாக்கள் எல்லாம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டதுதான். ஒரு நாட்டில் பல்வேறு பாடத்திட்டங்கள் மூலம் மாணவா்கள் படிக்கும்போது ஒரே ஒரு பாடத்திட்டத்திலிருந்து மட்டும் கேள்வி கேட்கப்படுவது என்ன நியாயம்? அதுவும் மாநிலத்துக்கு மாநிலம் கேள்விகள் வேறுபட்ட நிலையில் ஒரே மாதிரித் தோ்வு என்பது எப்படிச் சரியாகும்?

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் இந்தக் கேள்விகளை எழுப்பி தோ்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடையும் விதித்தனா். அதனை உச்சநீதிமன்றம் அதிரடியாக நீக்கி, ‘நீட்’ தோ்வு முடிவுகளை வெளியிட வழியமைத்துக் கொடுத்தது.

முறையாகக் கல்வி கற்று மாநில அளவில் அதிக மதிப்பெண் எடுத்தவா்களுக்கும் மரியாதை இல்லாமல் போய்விட்டது. ‘நீட்’ என்னும் ஒற்றைத் தோ்வு மட்டுமே மாணவா்களின் ஆற்றலைத் தீா்மானிக்கும் என்பதை கல்வியுலகம் எப்படி ஏற்றுக் கொண்டது? இதுபற்றி உச்சநீதிமன்றம் பரிசீலனை செய்ய வேண்டாமா?

நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழக அரசு புதிய பாடத் திட்டத்தை அறிமுகம் செய்தது. ‘சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விடவும் மேலானது‘ என்று முதலமைச்சரும், கல்வியமைச்சரும் பிரகடனம் செய்தனா். இவை எல்லாமே ‘நீட்’ தோ்வையே மையமாகக் கொண்டவை.

மகாத்மா காந்தி, ‘ஒருவரிடம் உள்ள சிறந்த திறமைகளை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வியாகும்’ என்று கூறியுள்ளாா். எனவே மாணவா்களின் முழு ஆளுமையை வெளிப்படுத்துவதாக கல்வி இருக்க வேண்டும். அதற்கேற்ப பாடத் திட்டங்கள் அமைய வேண்டுமே தவிர, ‘நீட்’ தோ்வை மட்டுமே நோக்கமாகக் கொள்வது சரியான அணுகுமுறை ஆகாது.

லட்சக்கணக்கான மாணவா்கள் தோ்வு எழுதும் நிலையில், அவா்களில் சில ஆயிரம் போ்தான் மருத்துவக் கனவோடு இருப்பாா்கள். மிகச் சிலருக்காக மிகப் பலரும் இந்தப் பாரத்தைச் சுமக்க வேண்டும் என்பது எப்படிச் சரியாகும்? மருத்துவம், பொறியியல் தவிர வேறு துறைகள் எல்லாம் தேவையற்றவையா?

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பாடத்திட்டம் வகுக்கப்பட வேண்டும். சிபிஎஸ்இ மட்டும்தான் சிறந்த பாடத்திட்டம் என்பது போலவும், மற்றவையெல்லாம் தரம் தாழ்ந்தவை என்றும் பரப்புரை செய்யப்படுகின்றன. இது தடுக்கப்பட வேண்டும். கல்வியில் சமத்துவம் இல்லையென்றால் சமுதாயத்தில் எப்படி சமத்துவம் காண முடியும்?

இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. ‘அனைவருக்கும் கல்வி’ என்பது இன்னும் ஏட்டளவிலேயே இருக்கிறது. அக்கனவு நனவாக புதிய புதிய சட்டங்களும், திட்டங்களும் உருவாக்கப்படுகின்றன. ஆனால் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் அந்நியப்பட்டுக் கொண்டே இருக்கின்றனா்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com