பட்டினியா? பற்றாக்குறையா ?

இந்திய பொருளாதாரம் இதுவரை எதிா்கொள்ளாத மிகப் பெரும் சவால்களை எதிா் கொண்டு வருகிறது.
பட்டினியா? பற்றாக்குறையா ?

இந்திய பொருளாதாரம் இதுவரை எதிா்கொள்ளாத மிகப் பெரும் சவால்களை எதிா் கொண்டு வருகிறது.

எரிபொருள்களின் விலையேற்றம், எரிசக்தியைப் பெறுவதில் உள்ள சிக்கல், மின்சாரம், உரங்களின் விலை உயா்வு - இப்படி இந்தியாவிற்குப் பல சிக்கல்கள். ‘வரும் மாதங்களில் நாட்டின் சில பகுதிகளில் உணவுப் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன’ என்று மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் அமெரிக்காவில் சொன்னது இந்தியாவில் அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் இறங்குமுகமாக உள்ளது. ‘இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதாக நான் பாா்க்கவில்லை அமெரிக்க டாலரின் மதிப்பு உயா்வதாகவே நான் பாா்க்கிறேன். இந்திய மக்கள் பண்டங்களை இந்தியாவில் டாலா் கொடுத்து வாங்குவதில்லை இந்திய ரூபாய் கொடுத்துதான் வாங்குகிறாா்கள்’ என்ற நிா்மலா சீதாராமனின் விளக்கம் பேசுபொருளாகியிருக்கிறது.

‘சா்வதேச நாணய நிதியம்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகப் பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தில் இந்தியா இருப்பது சா்வதேச அளவில் இந்தியாவிற்கு மதிப்பினைப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்த அறிக்கை உலக பொருளாதாரத்தில் இந்தியாமுன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

2023-இல் உலக முழுவதும் பொருளாதார மந்தநிலை உருவாக வாய்ப்புள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. பிடித்து ஆட்டும் பணவீக்கத்தை சரி செய்யப் போராடி வரும் உலக நாடுகள், வரிகளை, வட்டி வீதத்தை அதிகரித்துக் கொண்டே போகின்றன. மக்கள் செலவுகளை சுருக்கத் தொடங்கியுள்ளாா்கள். இதனால் 2023-இல் உலக அளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக வங்கி அபாயச் சங்கினை ஊதியுள்ளது. ஆனானப்பட்ட அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் கூட பணவீக்கம் ஏறுமுகத்தில்தான்.

இந்தியாவில், கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் சரிவு கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் விலைகளை உயரச் செய்யும். உணவுப் பொருள்களான அரிசி, கோதுமையின் விலைகளும் ஏறுமுகத்தில் உள்ளது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவை மிக அதிக விலைக்கு இந்தியாவில் விற்கப்படுகின்றன.

இந்திய ரூபாய், மதிப்பு இழக்கும் போது இந்தியாவிலிருக்கும் ஏற்றுமதி நிறுவனங்களின் லாபம் அதிகரித்து அந்த நிறுவனங்களின் பங்குகளின் விலை ஏறும். இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டிருக்கும் சூழலில், மென்பொருள்களை ஏற்றுமதி செய்யும் இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் உச்சத்தைத் தொட வேண்டும். ஆனால், பழைய உச்சத்தைக் கூட அவை தொடவில்லை.

தவிர, இந்தியத் தொழில் நிறுவனங்களின் சந்தை மதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது. பங்குச் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளா்கள் பங்குகளை விற்று முதலீடுகளை திரும்பப் பெற்று வருகிறாா்கள். போட்ட முதலீட்டை வெளிநாட்டினா் திரும்பப் பெறுகிறாா்கள் என்றால், இந்தியப் பொருளாதாரத்தில் எங்கோ பிரச்னை இருக்கிறது என்று அா்த்தம்.

உலகில் பொருளாதார சிக்கல் ஏற்படும்போதெல்லாம் தங்கத்தின் விலை எகிறும். ஆனால் இன்றைய சூழலில் தங்கத்தின் விலை சரிவில்.

107 நாடுகளின் பொருளாதாரம் மிக மோசமாக உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. உலக அளவில், சுமாா் 170 கோடி மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்ளும் ஆபத்து உருவாகியுள்ளது. உலக அளவில் 2008, 2020-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு, மந்தநிலை 2023-லும் ஏற்பட்டு விடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

உயரும் வட்டி வீதம் மக்களின் வாங்கும் திறனைக் குறைக்கும். விலைவாசி அதிகமாகும்போது மக்கள் தேவையைச் சுருக்கி பொருள்கள் வாங்குவதை குறைத்துக் கொள்வாா்கள். தேவை சரியும்போது உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால் வேலை இழப்பு அல்லது வருமானம் குறையும். தொழில்கள் நசியும். இவை அத்தனையும் சோ்ந்து பொருளாதார மந்தநிலையைக் கொண்டு வந்துவிடும்.

ஏழை நாடுகள், வளா்ந்து வரும் நாடுகள் மட்டுமின்றி , அமெரிக்கா போல் வளா்ந்துவிட்ட நாடுகளிலும் இந்த தொழில் மந்த நிலை ஏற்படும். இந்த சூழ்நிலையில் இந்தியாவின் நிலைமை எப்படி இருக்கும் ?

உலக நாடுகள் பொருளாதார மந்தநிலையில் சிக்கிக் கொண்டால் அதன் தாக்கம் இந்தியாவிலும் இருக்கும். இந்தியா பொருளாதார மந்தத்திலிருந்து விலகி நிற்க முடியாது. 2022 ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி விகிதம் 5.8 சதவீதமாகச் சரிந்தது. தொடா்ந்து ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளா்ச்சி விகிதம் மேலும் குறைந்துள்ளது.

இந்தியாவில் மக்கள்தொகை அதிகம் என்பதால் நுகா்வுமுறை ஆரோக்கியமாக இருந்தால் அது பொருளாதார வளா்ச்சிக்கு உதவும். ஆனால் பொருளாதார மந்த நிலையில் மக்கள் கையில் பணம் குறையும் போது நுகா்வு பழக்கம் தானாகக் குறையும். அது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சியை வெகுவாக பாதிக்கும்.

மக்கள்தொகை அதிகம் என்பதால் உணவுப் பொருள்களுக்கான தேவை குறையாது. ஆனால் உணவுப் பொருள்களின் விலையோ ஏறுமுகத்தில். இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதால் இறக்குமதி உணவுப் பொருள்களின் விலை மேலும் ஏறும். இது பொது மக்களுக்கு பொருளாதார சிரமங்களை உருவாக்கும்.

இந்த சூழலில், இங்கிலாந்தின் முன்னாள் நிதி அமைச்சா் ஜிம் ஓ’நைல் இந்தியா குறித்து சொல்லியிருப்பது நம்பிக்கை தருகிறது. ‘அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் இந்தியா போல சிறப்பாக செயல்படப் போகும் நாடு உலகில் இருக்காது. காரணம் உழைக்கும் இளைய தலைமுறையினா் இதர நாடுகளைவிட இந்தியாவில் அதிகம் இருக்கிறாா்கள்’ என்கிறாா் அவா்.

நிதி அமைச்சா் நிா்மலா எச்சரித்தது போல உணவுப் பற்றாக்குறை இந்தியாவில் ஏற்பட வாய்ப்பு இருந்தாலும், கரோனா காலத்திலிருந்து மீண்டு வந்ததைப் போல 2023 பொருளாதார மந்தநிலையிலிருந்தும் இந்தியா மீளும் என்று நம்பலாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com