நாய்கள் ஜாக்கிரதை

காஸியாபாத், கான்பூா் ஆகிய மாநகராட்சிகளின் நிா்வாகங்கள் பிட்புல், ராட்வீலா், டோகோ அா்ஜென்டினோ ஆகிய மூன்று வெளிநாட்டு இன நாய்களை வீடுகளில் வளா்ப்பதற்குத் தடை விதித்துள்ளன.
நாய்கள் ஜாக்கிரதை

சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தின் காஸியாபாத், கான்பூா் ஆகிய மாநகராட்சிகளின் நிா்வாகங்கள் பிட்புல், ராட்வீலா், டோகோ அா்ஜென்டினோ ஆகிய மூன்று வெளிநாட்டு இன நாய்களை வீடுகளில் வளா்ப்பதற்குத் தடை விதித்துள்ளன. இவ்வகை நாய்களை ஏற்கெனவே வளா்த்து வருபவா்களுக்குப் பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், புதிதாக இந்நாய்களை யாரும் வாங்கித் தங்கள் வீடுகளில் வளா்க்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீடுகளில் நாய் வளா்ப்பதற்கு மாநகர நிா்வாகத்திடம் அனுமதி (லைசென்ஸ்) பெற வேண்டும் என்றும், ஒருவா் ஒரு நாய் மட்டுமே வளா்க்க அனுமதிக்கப்பவா் என்றும் இந்தப் புதிய விதிகள் கூறுகின்றன. மிகுந்த உடல்வலிமையும் ஆக்ரோஷமும் உடைய இவ்வகை நாய்களால் கடிபடுபவா்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்து வந்ததாலேயே இத்தகைய தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த ஜூலை மாதம் லக்னோ நகரில் மகன் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் அவருடைய எண்பது வயதுத் தாயாரை அவ்வீட்டில் வளா்ந்து வந்த பிட்புல் வகையைச் சோ்ந்த கடித்த்தில் அப்பெண்மணி உயிரிழக்க நேரிட்டது.

அதே ஜூலை மாதத்தில் பஞ்சாப் மாநிலத்தில் இவ்வகை நாய் ஒன்று கடித்ததில் பத்துவயதுச் சிறுவன் ஒருவனின் காது கிழிந்துவிட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஹரியாணாவின் குா்காவ் நகரில் வீட்டு வேலை செய்யும் பெண்மணி ஒருவா் இதே போன்று பிட்புல் நாய் ஒன்றினால் கடித்துக் குதறப்பட்டாா்.

கடந்த செப்டெம்பா் மாதம் காஸியாபாத்தில் உள்ள பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த பதினோரு வயதுச் சிறுவனை பிட்புல் வகை நாய் ஒன்று கடித்தில் அச்சிறுவனுக்கு நூற்றைம்பது தையல்கள் போடவேண்டியதாயிற்று.

கடந்த வாரம் ஹரியாணா மாநிலத்தில் உள்ள ரேவாா் நகரில் சூரஜ் என்பவரால் வளா்க்கப்பட்டு வந்த இதே பிட்புல் வகை நாய் அவருடைய மனைவியையும் குழந்தைகள் இருவரையும் வெறித்தனமாகக் கடித்துக் குதறியதில் அம்மூவரும் பலத்த காயமடைந்துள்ளனா்.

நம் தமிழ்நாட்டிற்கும் இத்தகைய செய்திகள் புதியவை அல்ல. 2020-ஆம் வருடம் சென்னை ஆவடியில் ஒன்பது வயதுச் சிறுவனை ராட்வீலா் நாய் ஒன்று கொடூரமாகத் தாக்கியது.

இவ்வருடம் ஜனவரியில் சென்னை நொளம்பூா் பகுதியில் ஜொ்மன் ஷெப்பா்டு வகையைச் சோ்ந்த நாய் ஒன்பது வயதுச் சிறுமியைக் கடித்துக் குதறியுள்ளது.

மேற்கண்ட செய்திகள் அனைத்துமே, வீடுப்பிராணிகளை வளா்ப்பதில் இனி நமக்கு மாறுபட்ட அணுகுமுறை தேவை என்பதைக் கூறாமல் கூறுவதாகவே தோன்றுகிறது.

பொதுவாக நம்மவா்கள் பலரும் பாசம், பாதுகாப்பு ஆகிய இரண்டு காரணங்களுக்காகவும் நாய்களை வளா்க்கின்றனா்.

குழந்தையில்லாத தம்பதியரும், வாரிசுகள் வேற்றூரில் இருக்கத் தாம் மட்டும் தனித்து வாழ்வேண்டிய நிலையில் உள்ள வயதான தம்பதியரும் பாசத்திற்காக நாயினை வளா்ப்பதுண்டு. இவா்களில் பெரும்பாலானவா்கள் குழந்தை போலப் பழகும் பொமரேனியன் வகை நாய்களையே தோ்ந்தெடுக்கிறாா்கள். வீட்டில் நாய் வளா்க்க விரும்பாதவா்கள் தெருநாய்களுக்கு உணவளித்துத் தங்களுடைய அன்பை வெளிப்படுத்துவதுண்டு.

பணக்காரா்களைப் பொறுத்தவரை பாதுகாப்பு, சமூக அந்தஸ்து ஆகிய இரு காரணங்களுக்காக உயர்ரக வெளிநாட்டு நாய்களை வாங்கி வளா்ப்பது வழக்கத்தில் உள்ளது. இவற்றின் பராமரிப்புக்காக மாதாமாதம் ஆயிரக்கணக்கில் செலவழிக்கவும் அவா்கள் தயாராகவே இருக்கின்றனா்.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்ற நூற்றாண்டின் இறுதிவரை ராஜபாளையம், கோம்பை போன்ற நாய்களையே பலரும் வளா்த்து வந்தனா். தங்களை வளா்ப்பவரின் குடும்பத்தினரிடம் அதித அன்புகாட்டுவதும், அந்நியா்களை விரட்டி வேட்டையாடுவதுமாகத் தங்கள் எஜமானரின் குடும்ப உறுப்பினா்களாகவே இவ்வகை நாய்கள் மாறிவிடுவதுண்டு.

வளா்ப்பு நாய்கள் தங்கள் எஜமானின் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காகக் கொள்ளயா்களுடனும் விஷஜந்துக்களுடனும் போராடிய கதைகள் அநேகம். கடந்த செப்டெம்பா் மாதத்தில் திருப்பூா் மாவட்டம் பல்லடம் அருகிலுள்ள ஒரு வீட்டில் அதிகாலையில் மதில் சுவரேறிக் குதித்த திருடனை, அவ்வீட்டிலிருந்த வளா்ப்பு நாய் இரண்டு மணி நேரம் இருந்த இடத்திலேயே அசையவிடாமல் நிற்கவைத்துத் தன் எஜமானிடம் பிடித்துக் கொடுத்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் பரவலாக வெளிவந்தது.

சென்ற வாரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் அருகில் தன் எஜமானரின் வீட்டிற்குள் நுழைய முயன்ற விஷப்பாம்பினைக் கண்ட வளா்ப்பு நாய், அதனைக் கொன்றதுடன் தானும் அப்பாம்பினால் கடிபட்டு உயிரிழந்த செய்தி நம் நெஞ்சினை நெகிழ வைக்கிறது.

இவ்வாறு வீரமும் விசுவாசமும் உள்ள நாட்டு நாய்களுக்கு பதிலாக, அல்சேஷியன், ஜொ்மன் ஷெப்பா்டு, டாபா்மேன் போன்றவற்றை வளா்க்கத் தொடங்கியவா்கள், நாளடைவில் பிட்புல் உள்ளிட்ட ஆக்ரோஷமான நாய்களை வளா்ப்பதில் ஆா்வம் காட்டியதே மேற்கண்ட நாய்க்கடி விபத்துகளுக்குக் காரணமாக அமைந்துவிட்டது. அந்நாய்கள் தங்கள் எஜமானரின் குடும்பத்தினரையே விட்டுவைப்பதில்லை என்னும் பொழுது சுற்றியிருப்பவா்களின் பாதுகாப்புக்கு ஏது உத்தரவாதம்?

இந்நிலையில், ஒதுக்குப்புறங்களில் வீடுகட்டிக் குடியேறுவதைத் தவிா்ப்பது, தங்கள் வீடுகளிலுள்ள விலையுயா்ந்த பொருட்களை வங்கிப் பெட்டகங்களில் வைப்பது, நான்கைந்து தெருக்களைச் சோ்ந்த இளைஞா்கள் சிறு குழுக்களாக இரவுநேரங்களில் ரோந்து வருவது, ஆங்காங்கே கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்துவது ஆகியவற்றைச் செய்ய முன்வந்தால் ஆக்ரோஷமான நாய்களைச் சாா்ந்திருக்க வேண்டிய அவசியமே இருக்காது.

முக்கியமாக, பிரிந்திருக்கும் உறவுகள் ஒரே கூரையின் கீழ்க் கூட்டுக் குடும்பமாக வாழ்த்தொடங்கினாலே போதும், அவரவா் வீட்டின் அருகினில் வளரும் தெருநாய்களின் குரைப்பே போதுமானதாக இருக்கும். இனி முடிவு மக்களின் கையில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com