காந்தியடிகளின் கல்விக் கொள்கை!

தேசத்தின் பாரம்பரியம், கலாசாரம், மொழி என்று பெருமையாகப் பேசும் நாம் தொழில்நுட்பத்தில் மேலை நாட்டவர்கள்தான் சிறந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டு இருக்கிறோம்.
மகாத்மா காந்தியின் சுவரோவியம்.
மகாத்மா காந்தியின் சுவரோவியம்.

நாம் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசத்தின் பாரம்பரியம், கலாசாரம், மொழி என்று பெருமையாகப் பேசும் நாம் தொழில்நுட்பத்தில் மேலை நாட்டவர்கள்தான் சிறந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டு இருக்கிறோம். இது எந்த அளவுக்கு சரியானது? நம் முன்னோரின் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த சாதனைகள் என்னென்ன? அறிவியல் சாதனைகள் அவர்களுக்கு எப்படி சாத்தியமாயின?

நுட்பமான அறிவியல் அறிவு நம் முன்னோருக்கு எந்த அளவில் இருந்தது என்பதை எடுத்துக் காட்ட தற்போது நம்மிடையே இருப்பவை பாரத தேசம் முழுவதும் இருக்கும் ஆலயங்கள். தமிழகத்தில் திரும்பும் திசையெல்லாம் கோயில்கள் வானுயர நிற்கின்றன. இவை தெய்வங்கள் மீது நாம் கொண்ட நம்பிக்கையின் சின்னங்கள் மட்டுமல்ல. தெய்வங்கள் நமக்கு வழங்கியிருக்கும் அறிவியல் அறிவின் சான்றுகள்.

பாரதம் முழுவதும் பல ஆலயங்களில் இசை எழுப்பும் தூண்கள் இருக்கின்றன. கல்லிலே இசை எப்படி சாத்தியமாயிற்று? ஒரு கல் வெவ்வேறு விதமாக ஒலி எழுப்புமா? வெவ்வேறு விதமாகக் கல்லில் ஒலி உண்டாவதற்குக் காரணம் என்ன? பாறைகளை உருக்கி அதன் அடர்த்தியை நாம் விரும்பும் அளவில் அமைத்துத் தூண்களை உருவாக்கி இருக்கிறார்கள். மேலை நாட்டவர்கள் இதனை தற்போது அதிசயத்தோடு பார்க்கிறார்கள். 

சோழர்கள் ஏரிகள் நீர் மேலாண்மையில் சிறந்து இருந்தனர் என்பதற்கான சான்றுகளாக 1000 ஆண்டுகள் கடந்து இன்றும் நமக்கு அவை பயனளித்துக் கொண்டு இருக்கின்றன. தடுப்பணைகள், ஆற்றின் போக்கை மாற்றி அமைத்தல் போன்றவற்றிலும் நம் மக்கள் சிறந்திருந்தனர். நீர்நிலைகளை அமைப்பது பற்றிய குறிப்பு ரிக் வேதத்திலேயே இடம் பெற்றிருக்கிறது. வேத காலம் முதல் நீர் மேலாண்மையில் பாரதம் சிறந்த நாடாக விளங்கி இருக்கிறது. 

உலோகவியல் என்பது இன்றைக்கு மிக நுட்பமான ஒரு துறையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், பாரத தேசத்தில் உலோகவியல் நம் தெருக்களில் வெகு எளிதாக இருந்த அறிவியல் வேலைப்பாடு. உலோகத்தை உருக்கி ஒரு பொருளாக வார்க்கும்போது அதிலே நேர்த்தியைக் கொண்டு வருவது சுலபம் அல்ல என்று மேலை நாட்டவர்கள் தற்போதும் சொல்கிறார்கள். 

ஆனால் நம்முடைய ஆலயங்களில் ஆயிரக்கணக்கான  ஆண்டுகள் தாண்டியும் ஐம்பொன் உலோகங்களால் செய்யப்பட்ட சிலைகள் அன்றாடப் பயன்பாட்டில் ஆலயங்களில் உற்சவ மூர்த்திகளாக இருந்தபோதும் எவ்விதக் குறைபாடும் இல்லாமல் இன்றைக்கும் பொலிவோடு இருக்கின்றன. இதுவே நம் முன்னோர் உலோகவியலில் உச்சம் தொட்டவர்கள் என்பதற்கு சான்று. ஆழ்ந்த படிப்பு நுண்ணறிவு செய்முறைத் திறன் இவையெல்லாம் உச்சநிலையில் இருந்திருந்தால் மட்டுமே இத்தகைய வேலைப்பாடு சாத்தியமாகி இருக்கும். 

மகாத்மா காந்தி 1931-ஆம் ஆண்டு வட்டமேஜை மாநாட்டுக்கு லண்டன் சென்றார். அங்கே உரை நிகழ்த்தியபோது, "பிரிட்டிஷ் நிர்வாகிகள் இந்தியாவுக்கு வந்து இங்கு நிலவிய கல்வி முறையைப் புரிந்து கொண்டு அதை வளர்த்தெடுப்பதற்கு பதிலாக அதனை அப்புறப்படுத்தத் தொடங்கினார்கள். மண்ணைத் தோண்டி வேர்களை எடுத்து ஆராய்ந்தார்கள். அதோடு அந்த வேரை அப்படியே வாடிப் போகும் படியாக விட்டுவிட்டார்கள். இந்திய பாரம்பரியக் கல்வி என்ற அழகிய மரம் அழிந்து விட்டது' என்று நம்முடைய பாரம்பரிய கல்விமுறையைக் குறித்து தன்னுடைய உரையில் குறிப்பிட்டிருக்கிறார். 

காந்திஜியின் கருத்தை  நிறுவ முடியுமா என்று வெள்ளையர்கள் கேள்வி எழுப்பினர். பின்னாளில், மகாத்மாவின் கருத்துக்கு சான்றுகளை தரம்பால் முன்வைத்தார். காந்திய செயல்பாட்டாளரான தரம்பால்  சில ஆய்வுகளுக்காக லண்டனில் உள்ள இந்தியா இல்லத்தில் அருங்காட்சியக நூலகங்களில் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் இந்தியா தொடர்புகள் பற்றி ஆவணங்களை ஆராய்ந்தவர். மகாத்மா பண்டைய கல்வி முறை பற்றி சொன்ன கருத்துக்கு தேவையான ஆதாரங்கள் அங்கே இருப்பதை கண்டு அவற்றை 1983-இல் "அழகிய மரம்' (தி பியூட்டிஃபுல் ட்ரீ) என்ற பெயரில் நூலாக வெளியிட்டார்.

அந்த நூலில் தரம்பால் இந்திய கல்வி முறையின் பெருமைகளை ஆதாரங்களோடு விளக்குகிறார். தரம்பாலின் எழுத்துகள் ஐந்து பாகங்களாக இருக்கின்றன. முதல் பாகம் 18-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் பல்வேறு துறைகளில் இருந்த உயர்தரமான விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. இத்தகைய தொழில்நுட்பத்தையும் விஞ்ஞானத்தையும் வெள்ளையர்கள் திட்டமிட்டு அழித்தார்கள் என்பதையும் விளக்குகிறது. 

இரண்டாவது பகுதியில் பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்தியர்கள் மேற்கொண்ட ஒத்துழையாமை போன்ற முயற்சிகளை, அவற்றினால் விளைந்த விளைவுகளை எடுத்துச் சொல்கிறது. மூன்றாம் பாகம், இந்திய வாழ்வியலில் கல்விமுறை அமைந்திருந்த  விதத்தை விளக்குகிறது. 

நான்காம் பாகம், கிராமங்களில் பஞ்சாயத்து அமைப்புகளின் நிலைமை எவ்வாறு இருந்தது என்பதை மிகத் தெளிவாகவும்  விரிவாகவும் எடுத்துச் சொல்கிறது. 

பொருளாதார அரசியல் சுதந்திரத்துடன் கிராம சமுதாயங்கள் வாழ்ந்ததை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இதைத் திட்டமிட்டு ஆங்கிலேயர்கள் அழிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளையும் பட்டியலிடுகிறது. அரசியல் சுதந்திரத்தையும் இழந்து பொருளாதார வளத்தையும் பறிகொடுத்து எப்படி கிராமங்கள் வளம் குன்றிப் போயின என்பதைச் சொல்வதோடு சுதந்திரத்திற்குப் பிறகும் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே இருந்ததையும் விளக்குகிறது.

இந்திய கலாசாரத்தில் சமுதாயங்களின், பாரம்பரியத்தின் தனித்தன்மை அரசியல் அவற்றின் முக்கிய அம்சங்கள் என்று பல்வேறுபட்ட கலாசார, பண்பாட்டு விழுமியங்களைப் பற்றிப் பேசுகிறது. இன்றைய இலக்குகளுக்கு ஏற்ப எப்படியெல்லாம் சமூகத்தில் மாற்றங்களைச்  செய்து கொள்கிறோம்  என்பதைப் பற்றியும் ஐந்தாம் பாகம் எடுத்துச்சொல்கிறது. 

இன்றைக்கு நம்முடைய நாட்டின் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இது போன்ற எந்தத் தகவலையும், வரலாற்று ஆதாரங்களையும் கற்றுக்கொடுக்காமல் வெள்ளையர்கள் விட்டுச் சென்ற அதே பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். 

"வரலாற்றை அறிந்து கொள்ளாதவன் செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்வான்' என்கிறார் ஜார்ஜ் சண்டைனா. பல்லாண்டுகளாக இந்தத் தவறு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

1822-ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரெஸிடென்சி ஆளுநரான தாமஸ் மன்றோ இந்திய கல்வி பற்றிய கணக்கெடுப்பை நடத்தினார். அன்றைய மெட்ராஸ் பிரெஸிடென்சி என்பது ஒடிஸôவின் ஒரு பகுதி, ஆந்திரம், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளத்தின் சில பகுதிகள். 

இந்த ஆய்வறிக்கையை பரிசோதனை செய்த ஆங்கிலேய அரசு அதிர்ச்சிக்கு உள்ளானது என்று தரம்பால் குறிப்பிடுகிறார். நாடு முழுவதும் அடிப்படைக் கல்வியோடு உயர்கல்விக்கான கல்லூரிகள் இருந்தன. அடிப்படை கல்வி, கிராமந்தோறும் இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன. அடிப்படைக் கல்வி 10 ஆண்டுகள் வரை இருந்ததாக அறிக்கை சொல்கிறது. இந்தக் கல்வி முறைக்கான நிதி தேவைகளை அந்தந்த கிராமங்கள் அல்லது கல்வி நிலையங்களை நடத்திய சமூகங்கள் அல்லது கல்வி கற்ற மாணவர்களே ஏற்றுக் கொண்டிருந்தார்கள். 

கல்வி முறை, "ஆச்சார்ய தேவோ பவ' என்று குருவை முதன்மைப்படுத்தி இருக்கிறது. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று தமிழ் சொல்வதற்கு ஏற்ப அமைந்திருக்கிறது. ஆய்வறிக்கையில் கவனத்துக்குரிய ஒரு தகவல், மாணவர்களின் ஜாதி பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று இருந்திருக்கிறது. அனைத்து இடங்களிலும் சூத்திர ஜாதி மாணவர்களின் எண்ணிக்கை மற்ற ஜாதி மாணவர்களைக் காட்டிலும், குறிப்பாக பிராமண மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம். 

கல்வி என்பது இலக்கியம் கற்பது மட்டும் அல்ல. கணிதம், அறிவியல், அறிவியல் புலத்திலும் பல்வேறு துறைகள் என்று மிக விரிவாக இந்தியக் கல்வி முறை இருந்ததை ஆங்கிலேயர் காலத்து ஆய்வறிக்கை காட்டுகிறது. மகாத்மா குறிப்பிட்ட அழகிய மரம் நம்மிடம் இருந்தது. அதன் வேர்களை அழித்து இந்திய கல்விமுறையை சிதைத்தவர்கள் ஆங்கிலேயர்கள் என்ற உண்மையை உரக்கப் பேசுகிறது இந்த "அழகிய மரம்' நூல். 

இந்திய பாரம்பரிய கல்வி முறையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் நமக்கு உணர்த்துகிறது. இத்தகைய பாரம்பரிய கல்விமுறையை மீட்டெடுப்பதற்கான முயற்சியாகவே தற்போது தேசிய கல்விக் கொள்கையை நிபுணர்கள் வடிவமைத்திருக்கிறார்கள். 

கல்விமுறை காலத்திற்கு ஏற்ப உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் நம்முடைய பாரம்பரியமான முறைகளை மீட்டெடுத்து மீண்டும் இந்தியா மிகச்சிறந்த தேசமாக உருவாவதற்கான வழிமுறைகளையும் தேட வேண்டும். 

தேசிய கல்விக் கொள்கை, நம் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும். காந்தியடிகள் வலியுறுத்திய அறிவியல் தொடங்கி ஆத்ம விசாரம் வரை தனிமனித ஒழுக்கத்தை  போதிக்கும் கல்வி முறையை மீட்டுருவாக்கம் செய்யவேண்டிய நிலையில் நாடு இருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் மாணவர்களிடையே நிலவும் குழப்பங்கள், பிரச்னைகள், உளவியல் சிக்கல்கள் போன்றவற்றிற்குத் தீர்வாக பாரம்பரிய கல்வி முறை வழக்கத்திற்கு வந்தாக வேண்டும். அடுத்த தலைமுறையின் நலனைக் கருதி இது குறித்தான சிந்தனைகளை முன்னெடுக்க வேண்டியது கல்வியாளர்களின் கடமை.

கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com