குழந்தை மொழியை ஊக்குவிப்போம்

இன்றைக்கு ஒரு பொது நிகழ்வில் வரவேற்புரையோ நன்றியுரையோ சொல்லச் சொன்னால் பலரும் முன்வருவதில்லை.
குழந்தை மொழியை ஊக்குவிப்போம்

இன்றைக்கு ஒரு பொது நிகழ்வில் வரவேற்புரையோ நன்றியுரையோ சொல்லச் சொன்னால் பலரும் முன்வருவதில்லை. பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி அறிவுத் தளத்துக்கு நகர்த்தும் விதமாக சிறப்புரையாற்றுவது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம். நிகழ்வுக்கு வந்துள்ள பலரையும் அவரவர்களின் பெயரைச் சொல்லி வருக வருக  என வரவேற்கின்றேன் என்றோ அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றோ சொல்வதற்குக்கூட பலரும் கூச்சப்படுகின்றனர். 

இதற்கான  காரணம் எதுவாக இருக்கும்? ஒன்று அவர்களுக்கு கூச்ச சுபாவம் இருக்கலாம். மற்றொன்று பலர் முன்னிலையில் பேச பயப்படுபவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு கோவையாக வார்த்தைகளை வெளிப்படுத்தும் பழக்கம் இல்லாதிருக்கலாம். இவ்வாறு இருப்பதில் ஒன்றும் தவறில்லை. 

ஆனால் அதே நேரம் பிறந்து வளர்ந்தது முதல் நாம் பேசிப் பழகும் தாய்மொழியில் பேச இவ்வாறான தயக்கம் ஏன் ஏற்படுகிறது? இவ்வாறு உள்ளவர்கள் குழந்தைகளாக இருந்த காலத்தில் இவர்களுக்கு மொழிப் பயன்பாட்டின்போது கிடைத்த பின்னூட்டங்கள் இவர்கள் குணத்தில் பெரும்பங்கு வகிப்பவையாக இருக்கும்.

ஒருவர் பேசுவதற்கு அடிப்படையாக அமைவது அவருக்கு மொழியில் உள்ள புலமை. அந்த புலமைக்கு அடிப்படையாக அமைவது அந்த மொழியிலுள்ள வார்த்தைகளில் தமக்குத் தேவையான வார்த்தையைப் பயன்படுத்த நினைக்கும் போது அது உடனடியாக நினைவுக்கு வருதல். அவ்வாறு நினைவுக்கு வருவதற்கு அடிப்படையாக அமைவது அந்த வார்த்தை அறிமுகமான நெருக்கமான சூழலும்,  அந்த வார்த்தையின் சரியான பொருள் குறித்த நம்பிக்கையும். 

எல்லாவற்றுக்கும் மேலாக தொடர் வாசிப்பின் மூலம் கிடைக்கும் பயிற்சியின் மூலம்  வார்த்தைகளைக் கோவையாகப் பயன்படுத்தும் நுட்பம். இவை அனைத்தையும் பெறுவது என்பது ஓரிரு நாள்களில் நடக்கக் கூடியது அல்ல. மாறாக குழந்தைப் பருவத்திலிருந்து மொழியை நெகிழ்வான ஊடகமாகப் பயன்படுத்தக் கிடைத்திருக்கும் வாய்ப்பு. 

அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்பது என்பது ஒரு கலை. இந்தக் கலையை வேறு யாரையும் விட குழந்தைகளே அற்புதமாகப் பயன்படுத்துகின்றனர். நாம் பேசும்போதே அதைக் கேட்பதற்கு பதிலாக உடனுக்குடன் பதில் பேசும் குழந்தைகளும் இருப்பர். அவ்வாறு அவர்கள் பேசுவதை அங்கீகரித்து அவர்களின் கேட்கும் சக்தியை ஊக்குவிக்க வேண்டும். அந்த அளவுக்கு ஏற்ற இறக்கத்துடன் நமது பேச்சு அமையவேண்டும். 

குழந்தையாக இருக்கும்போது எவ்வளவு தூரம் பலரது பேச்சுகளை கேட்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதோ அந்த அளவுக்கு அந்த குழந்தைகளின் மொழிகுறித்த அறிவும் சொற்பெருக்கமும் அதிகரிக்கின்றன. அவ்வாறு கேட்பதை குழந்தைகள் தாமாகப் பயன்படுத்தவும் வாய்ப்புகளை அளிக்க வேண்டும். 

அவ்வாறு பயன்படுத்தும்போது  அவர்களுக்குக் கிடைக்கும் அனுபவம்  எந்த அளவுக்கு உற்சாகமூட்டுவதாக அமைகிறதோ அந்த அளவுக்கு அந்த குழந்தைகளின் தன்னம்பிக்கை மிகும். 

ஒரு குழந்தை "அப்பா நாளைக்கு வந்தார்' என இயல்பாகப் பேசும். இதனைக் கேட்கும் பலரும் உடனடியாக என்ன செய்வர்? "அப்படிச் சொல்லக்கூடாது, அப்பா நாளைக்கு வருவார்ன்னு சொல்லணும்' என்பர். அக்குழந்தையின் அருகிலுள்ள பெரியவர்கள் அக்குழந்தை மொழித்திறனில் அப்போதே  தூய்மை பெறவேண்டும் என்பதன் வெளிப்பாடாகவே இதனைப் பார்க்க வேண்டும். 
ஆனால் இந்த நிலையில் வேறு இரண்டு வாய்ப்புகளும் இருக்கின்றன.

முதலாவது, அக்குழந்தை சொல்வதை அப்படியே ஆமோதிப்பது போல் தலையை ஆட்டி மகிழலாம். இரண்டாவது, மேலே பயன்படுத்திய வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தி "அப்பா நாளைக்கு வருவாரா' என்று சரியாகத் திருத்தி நாம் கேட்கலாம். அதாவது "அப்படிச் சொல்லக்கூடாது' என்ற எதிர்மறை வார்த்தைகளைத் தவிர்க்கலாம். 

 குழந்தைகள்  மட்டுமே சரி, தவறு என்ற பயமின்றி மொழியினை நெகிழ்வான ஊடகமாகப் பயன்படுத்துவர்.  அவ்வாறு பயன்படுத்தும்போது எவ்வளவுக்கெவ்வளவு அதனை நெகிழ்வாகப் பயன்படுத்தும் வாய்ப்பு அவர்களுக்கு அளிக்கப்படுகின்றதோ, அந்த அளவுக்கு அவர்களுக்கு மொழியின் மீதும், அதனைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் மீதும்  நம்பிக்கை அதிகரிக்கும். 

இவ்வாறு குழந்தைகள் நெகிழ்வாகப் பயன்படுத்த அவர்களுக்கு நல்ல வார்த்தைகள் அறிமுகமாக வேண்டும். அதாவது  குழந்தைகள் அருகிலுள்ள போது பெரியவர்கள் தரமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும். குழந்தைகள் இருக்கும் பகுதிகளில் இருக்கும் மொழிச்சூழல் சரியான வார்த்தைகளைக் கேட்கும் சூழலாக அமைய வேண்டும். இது அவ்வளவு எளிதல்ல என்பது உண்மைதான். ஆனாலும் அதனை நோக்கி நாம் சமூகத்தை நகர்த்த வேண்டும். 

இதனை மனதில் கொண்டே கல்வியாளர்கள் குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்லும் பழக்கத்தினைக் கைகொள்ளச் சொல்கின்றனர். இவ்வாறு கதைகளைச் சொல்லும்போது அவர்களுக்கு புதுப்புது வார்த்தைகள் அறிமுகமாகும். பின்னர் அந்த வார்த்தைகளில் சிலவற்றை நினைவில் கொண்டு அவ்வப்போது அவர்கள் பயன்படுத்துவர். அவ்வாறு பயன்படுத்தும்போதும் சில தவறுகளைச் செய்யவே செய்வர். அதனை அங்கீகரித்து மென்மையான முறையில் சரி செய்யும்போது அவர்களது தன்னம்பிக்கை மிகும். 

ஆனால் "மாலை முழுவதும் விளையாட்டு' என்று குழந்தைகள் ஆடிப்பாடிய காலம் இப்போது இல்லை. மாறாக மாலை முழுவதும் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தொடர்களை ஒளிபரப்புகின்றன. அந்த தொடர்களின் கதைகள் பற்றிக் கேட்கவே வேண்டாம். 

இப்படிப்பட்ட தொடர்களில் பெற்றோர் லயித்திருக்கும்போது குழந்தைகளும் அவற்றைக் காண வேண்டியதாகிறது. இல்லையேல் அந்த நேரத்தில் அவர்கள் மின்னணு ஊடகங்களில் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இது மிகவும் ஆபத்தான போக்கு. 

இன்றைய குழந்தைகள் நாளைக்கு அவையில் முந்தியிருந்து நான்கு வார்த்தைகளைத் தொடர்ந்து  பேசவேண்டுமானால் அதற்கான அடித்தளம் இன்றைக்கே  இடப்பட வேண்டும். அதற்கு பள்ளிக்கு இணையாக, குடும்பமும் சமூகமும் பங்களிப்பு செய்ய முன்வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com