மேலும் மேலும் ஏற்றப்படும் சுமை

திமுக அரசு மாநிலத்தின் நிதி நிலைமை இன்னும் முழுமையாகச் சீரடையாததால், தேர்தலின் போது அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சிக்கலில் தவித்து வருகிறது. 
மேலும் மேலும் ஏற்றப்படும் சுமை

தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டுக்கு மேலாகிவிட்ட  நிலையில், மாநிலத்தின் நிதி நிலைமை இன்னும் முழுமையாகச் சீரடையாததால், தேர்தலின் போது அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சிக்கலில் தவித்து வருகிறது. 

இந்தச் சிக்கலிலிருந்து மீள்வதற்கான வழி தெரியாமல், தான் சுமந்து வரும் அதிகப்படியான சுமையை மக்கள் மீது இறக்கி வைக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில், ஏற்கெனவே சொத்து வரி, பால் பொருள்கள் விலை உயர்வை அறிவித்த அரசு, தற்போது மின்சாரக் கட்டணத்தையும் அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு வாழ்க்கைச் செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வரும் ஏழை, நடுத்தர வருவாய் ஈட்டும் மக்கள் அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் மேலும் இன்னல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதில் சந்தேகமில்லை. 

கடந்த எட்டு ஆண்டுகளாக மின்சாரக் கட்டணம் பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை. 2014-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது மின்சாரக் கட்டணம் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டது. அதன்பிறகு, கடந்த 2017-இல் மிகச் சிறிய அளவில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

தற்போதைய மின் கட்டண உயர்வு, கடந்த 10-ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்துள்ளது. மின் வாரியத்தின் பரிந்துரைகளை ஏற்று, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இந்தக் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கீடு செய்யப்படும் மின் கட்டணத்தில், முதல் 1 யூனிட் முதல் 100 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படும்.

வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணத்தில் 101-200 வரையிலான யூனிட்களுக்கு ரூ.55-உம், 201-300 வரையிலான யூனிட்களுக்கு ரூ.145-உம், 301-400 வரையிலான யூனிட்களுக்கு ரூ.295-உம், 401-500 வரையிலான யூனிட்களுக்கு ரூ.595-உம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போல, 501-600 யூனிட்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.8-உம், 601-800 யூனிட்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.9-உம், 801-1000 யூனிட்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 10-உம், 1000 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11-உம் உயர்த்தப்பட்டுள்ளது.

வீடுகளுக்கான மின் கட்டணத்தில் இதுவரை இரண்டு மாதங்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 20- ரூ.50 வரையிலான நிலைக் கட்டணம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில், 2023 ஜூலை 1 முதல் 2026-27 நிதியாண்டு வரை ஆண்டுதோறும் 6 சதவீத அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தவும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளதால், இந்தச் சுமையானது ஒவ்வோர் ஆண்டும் சிறிதளவு கூடிக்கொண்டே போகும் என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

தொழிற்சாலைகளைப் பொறுத்தவரையில், மின் கட்டணம் சிறிதளவே அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறு, குறுந்தொழில்களுக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. வணிக ரீதியிலான மின் உபயோகக் கட்டணத்தில் மாதத்துக்கு ரூ. 50 அதிகரிக்கப்பட்டுள்ளது. 

விசைத்தறிகளுக்கான மின்சாரப் பயன்பாட்டில் இரு மாதங்களுக்கு 750 யூனிட் வரை இலவசம் என்ற நிலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. விசைத்தறிகளுக்கு 750 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு 70 காசு உயர்த்தப்பட்டுள்ளது.

குடிசை வீடு, விவசாயம் இவற்றுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். இதே போல,  கைத்தறி, விசைத்தறிக் கூடங்ககளுக்கு வழங்கப்படும் மின்சார மானியம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களின் மின் வாரியங்களும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர்க்க முடியாது என்பது உண்மைதான். 

ஆனால், மின் கட்டணத்தை திடீரென மிக அதிகளவில் உயர்த்துவதற்குப் பதிலாக, ஆண்டுதோறும் சிறிதளவு அதிகரிப்பு என்ற முறையை மின் வாரியம் கடைப்பிடித்திருந்தால் மக்கள் அதிகப்படியான இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்காது.

தமிழகத்தில் தற்போது சுமார் 3.5 கோடி மின் இணைப்புகள் உள்ளன. மின் உற்பத்தி, விநியோகம், ஊழியர்களுக்கான ஊதியம் ஆகியவற்றுக்காக மின் வாரியம் ஒரு யூனிட்டுக்கு ரூ. 9 செலவிடுகிறது. ஆனால், ஒரு யூனிட் மின்சாரத்தின் மூலம் அதற்குக் கிடைக்கும் வருவாய் ரூ. 7 மட்டுமே. 

இதனால், தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் சுமை தற்போது ரூ. 1,50,000 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தக் கடன்களுக்கான வட்டியாக ஆண்டுக்கு ரூ.16,500 கோடியை மின் வாரியம் செலுத்துகிறது.

விவசாயம், குடிசை வீடுகளுக்கு இலவசமாகவும் கைத்தறி, விசைத்தறிக் கூடங்களுக்கு மானிய விலையிலும் மின்சாரம் வழங்க வேண்டியுள்ளதால், இந்தக் கடன் சுமையிலிருந்து மின் வாரியம் மீள்வது அவ்வளவு எளிதானல்ல. 
இந்த உண்மை நிலவரத்தைப்  புரிந்து கொள்ளாமல், அரசியல் லாப நோக்கத்துக்காக மேலும் மேலும் இலவசங்களை வாரி இறைக்கும் மாநில அரசுகளின் போக்கால் மின் வாரியங்களின் நிதி நிலைமை இன்னும் மோசமடையும் என்பதை மறுக்கவியலாது.

அரசுடைமை வங்கிகள் வாராக்கடன் பிரச்னைகளிலிருந்து மீள்வதற்கு மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது. 

இதே போல, அனைத்து மாநில மின் வாரியங்களும் கடன் சுமையிலிருந்து மீள்வதற்கான வழிவகைகளை மத்திய அரசு கண்டறிய வேண்டும். மத்திய அரசு வகுத்தளிக்கும் விதிகளைப் பின்பற்றி, மின் வாரியங்களின் நிதி நிலைமை சீரடைய மாநில அரசுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதைவிடுத்து, மக்களின் மீது மேலும் மேலும் சுமையை ஏற்றுவது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com