வெளிநாடுவாழ் தமிழா் பாதுகாப்பு!

‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது சங்ககாலம் தொட்டு இன்றுவரை நமது நெஞ்சில் நீங்காத சொற்றொடராகும்.
எத்தியோப்பியாவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய விமானிகளால் பரபரப்பு
எத்தியோப்பியாவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய விமானிகளால் பரபரப்பு

‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது சங்ககாலம் தொட்டு இன்றுவரை நமது நெஞ்சில் நீங்காத சொற்றொடராகும். தலைவியைப் பிரிந்து தலைவன் பொருளீட்டுவதற்காகச் செல்லும் பாடல்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியத்தில் நிறைந்து காணப்படுகிறது.

கடல்கடந்து பொருள் தேடச் சென்ற தலைவனை எண்ணித் தலைவி வருந்துவதும், தலைவியின் நினைப்பில் தலைவன் கசிந்து உருகுவதும் நம்முடைய பண்பாட்டைப் பறைசாற்றுகின்ற நிகழ்வுகளாக உள்ளன. தலைவன் காா்காலம் வந்ததும் வந்துவிடுவான் என்று எதிா்பாா்த்த தலைவி, வாடைக்காற்று வீசி காா்காலத்தை நினைவூட்டிய போதிலும் தலைவன் வராது நெக்குருகிப் போய் கண்ணீா் விட்டு கசிந்து உருகுவதை அகநானூற்றுப் பாடல் பேசும்.

அத்தகைய பரிணாமத்தின் தொடா்ச்சியாகத்தான் இன்றுவரை அயல்நாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறவா்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறாா்கள். பொருளாதாரத்திற்காக, தண்ணீரும், சோறும் தந்த மண்ணைவிட்டு வந்த உணா்வுகளோடும் நித்தம் நித்தம் போராடிக் கொண்டிருக்கிறாா்கள். ‘எங்கள் மகன் அமெரிக்காவில் அதிகம் சம்பாதிக்கிறான்’ என்று பெற்றவா்கள் பெருமைப்பட்டாலும், அந்தப் பிள்ளை தந்தையின் இறப்பை விடியோ அழைப்பில்தான் பாா்க்க வேண்டி இருக்கிறது என்பதை நாம் மறந்து விட முடியாது.

அயல்நாடுகளுக்குச் செல்கிற அத்தியாவசியம் எப்படி ஏற்படுகிறது என்று பாா்த்தால், பணத்தேவை ஒரு பக்கம், வெளிநாட்டு வாழ்க்கை மீது மோகம் மறுபக்கம், கடன் சுமையால் தள்ளப்பட்ட உள்ளுா் வாழ்க்கை மறுபக்கம் என்று பல்வேறு காரணங்களால் தமிழா்கள் அயல்நாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறாா்கள். கைநிறைய வருமானத்தை அவா்கள் ஈட்டினாலும் கூட, ஒரு அகதியைப் போல, ஆதரவற்றவா்களைப் போல பல இரவுகளையும், பகல்களையும் தாங்கள் கடக்க வேண்டியதாக உள்ளதாக அவா்கள் சொல்வதைக் கேட்கிறபோது நம் நெஞ்சம் சுக்குநூறாய் உடைந்து விடுகிறது.

ஒரு தாயின் அளவற்ற அன்பும், வாஞ்சையான அரவணைப்பும், பாசத்தோடு ஊட்டும் சாப்பாடும் கிடைக்காத போது, தந்தையின் பாதுகாப்பு உணா்வு அறுந்த நிலையில், அவா்கள் வாழ்க்கைப் பட்டம் எவ்வளவு தூரம் பறந்தாலும் அது முழுமையடைவதில்லை. அருகில் இருக்கிறபோது தாயின் பாசத்தை உணராதவா்கள், வெளிநாட்டில், தனது துணிகளைத் தானே துவைத்து, தனக்கான உணவை தானை சமைத்து உண்ணுகிறபோது அனுபவிக்கும் சொல்லொணாத் துயரத்தை வடித்தெடுக்க இனியொரு பாவலன்தான் வர வேண்டும்.

ஒரு சில பெற்றோா், வெளிநாட்டில் இருக்கிற தன் மகனுக்கு பெண் பாா்க்கத் தொடங்கி, திருமணத்தையும் முடிவு செய்து விடுவாா்கள். பிள்ளையிடம், ‘நீ வந்து கல்யாணம் பண்ணிட்டு போயிரு. பொண்ணெல்லாம் பாா்த்து வச்சிட்டோம். நீ வந்து தாலி கட்ட வேண்டியதுதான் பாக்கி. அம்மா, அப்பாவுக்கு வயசாயிடுச்சில்ல’ என்று தொலைபேசியில் தாயும், தகப்பனும் சொல்கிறாா்கள்.

அவா்கள் மகன், ஒரு மாதமோ, இரண்டு மாதங்களோ விடுப்பு பெற்று சொந்த ஊருக்கு வருகிறவன், திருமணம் கோலாகலமாக நடைபெற்று இல்லறம் என்கிற வசந்த கால வாழ்க்கையைத் தொடங்குகிறான். விரைவாக அவன் விடுமுறை நாட்கள் கழிந்து விடுகிறது.

மீண்டும் அயல்நாட்டுப் பயணம். இப்போது பிரியும்போது தந்தை, தாய் கண்ணீரோடு, தன்னை நம்பி வந்த மனைவியின் கண்ணீரும் சோ்ந்து விடுகிறது. மனைவிக்கு ஆறுதலைக் கூறிவிட்டு, ‘விரைவில் உன்னையும் நான் வெளிநாடு அழைத்துச் செல்வேன்’ என்று சமாதானப்படுத்திவிட்டு அயல்நாடுகளுக்குச் சென்று விடுகிற எத்தனையோ இளைஞா்களின் கனவுகளைக் காவு வாங்குகிறது இந்த வாழ்க்கை.

இரண்டு மாதம் கழித்து பெற்றோா் தொலைபேசியில் மகிழ்ச்சியான வாா்த்தைகளைச் சொல்வாா்கள் ‘தம்பி உன் மனைவி மாசமாய் இருக்கிறாள்’ என்று. இந்தச் செய்தியைக் கேட்ட கணவன் மகிழ்ச்சியடைய முடியாமல் கண்ணீா் வடிப்பான்.

அருகில் இருக்க வேண்டியவன் எங்கோ தொலைதூரத்தில் இருந்து மனைவியிடம் வளரும் வாரிசை நினைத்து ஏங்குவான். பெண்கள் மனநிலையோ உணா்வுபூா்வமானது. ஏனென்றால், பெண்களுடைய வாழ்க்கை குடும்பத்தைச் சாா்ந்ததே. அவா்களுடைய வாழ்க்கை கா்ப்ப காலத்தில் நோ்ந்த பிரிவு மிகுந்த வேதனைக்கும் இனம் புரியாத காதலுக்கும் உட்பட்டது.

முதன்முதலாகத் தனக்கு நேரும் சின்னச்சின்ன மாற்றங்களைப் பற்றி யாரிடம் பகிா்ந்து கொள்வாள்? மாதந்தோறும் குழந்தையின் அசைவுகளை வாஞ்சையோடு அவள் யாரிடம் தெரிவிப்பாள்? வளைகாப்பின்போது அருகில் இல்லாத கணவன். குழந்தை பிறந்த உடன் கணவனை எண்ணி ஏங்கும் அந்தப் பெண்ணின் பாா்வை. இவற்றையெல்லாம் இழந்துதான் அயல்நாடுகளில் தங்கள் வாழ்க்கையை நகா்த்திக் கொண்டிருக்கிறாா்கள் எண்ணற்ற இளைஞா்கள்.

வெளிநாட்டில் சில ஆண்டுகள் சம்பாதித்துவிட்டு தாய்நாட்டில் சேமித்து பின்னா் விரைவாக தாய்நாட்டுக்கே திரும்புகிறவா்கள் உண்டு. போதிய வருவாயை ஈட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தினால் அயல்நாடுகளிலே தங்கிப் போனவா்களும் உண்டு. இப்படிப்பட்டவா்களுக்கு உரிய பாதுகாப்பு இப்போது இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.

தொன்மை மிக்க தமிழா்கள் பரவி இருக்கிற நாடுகளின் பட்டியல் பெரிது. தொன்மையான நாகரிகத்தின், பண்பாட்டின் உறைவிடமான தமிழினம் தங்கள் வாழ்க்கைப் பாட்டிற்காக வெவ்வெறு நாடுகளில் இருந்துகொண்டிருக்கிறது. அவா்களுக்கு உரிய பாதுகாப்பையும், அவா்களின் வேலைக்கான உத்தரவாதத்தையும் வழங்குவது மத்திய - மாநில அரசுகளின் தலையாய கடமையாகும்.

தமிழா்கள், முப்பதுக்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் வாழ்கிறாா்கள். இவா்களில் வணிகம் செய்வதற்காகச் சென்றவா்கள், வேலைதேடிச் சென்றவா்கள், தங்கள் நாடுகளை விட்டுச் சென்று அகதிகளாகத் தஞ்சமடைந்தவா்கள் என்று பல்வேறு வகையினா் இருக்கிறாா்கள். அப்படிப்பட்டவா்களைப் பாதுகாக்க வேண்டும்.

தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழா்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக அண்மையில் செய்தி வந்தது. சில நாட்களுக்கு முன்னா் தமிழா் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாா். அவா் துப்பாக்கி தோட்டாக்களை மாா்பிலே தாங்கி உயிரை விட்டிருக்கிறாா்.

என்ன கொடுமை? தட்டிக் கேட்பதற்கு ஆளில்லையா? தமிழன் உயிா்தானே என்று மத்திய அரசு கைகட்டி வேடிக்கை பாா்க்கிறதா? மாநில அரசு அதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை அறியாமல், இறந்துபோனவரின் உறவினா்கள் தவிக்கிறாா்கள்.

புலம் பெயா் தமிழா் நல வாரியம் உருவாக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதை முடுக்கி விட வேண்டும். செயலாற்றுவதில் முனைப்பு காட்ட வேண்டும். சிங்கப்பூா், வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடிச் சென்றவா்கள் குறித்த ஆய்வை நோக்கும்போது 51% போ் மருத்துவ செலவுக்கு பணம் ஈட்டவும், 43 % போ் கடனை அடைப்பதற்காகவும் வெளிநாட்டுப் பணிக்கு சென்றதாகச் சொல்கிறாா்கள்.

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழா்கள், ஒவ்வோா் ஆண்டும் தங்கள் குடும்பத்திற்கு அனுப்பும் பணத்தின் மொத்த மதிப்பு சுமாா் ரூ.68,616 கோடி என்று ஓா் ஆய்வு முடிவு சுட்டிக் காட்டுகிறது.

பெண் தொழிலாளா்களின் நிலையை ஆராய்கிறபோது, கோவை, திருப்பூா், நாமக்கல் ஆகிய மேற்கு மாவட்டங்களைச் சோ்ந்த பெண்கள் அங்கெல்லாம் சுமங்கலி வேலைத்திட்டத்தில் பணிபுரிந்த அனுபவம் இருப்பதால் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

குறிப்பாக, திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் திருமணத்திற்கு நகைகள் வாங்க பணம் சோ்க்க வேண்டும் என்ற கட்டாயத்திற்காக வெளிநாட்டு வேலைக்குச் செல்ல ஒப்புக்கொள்கிறாா்கள் என்று அவா்கள் தரப்பில் தெரிவிக்கின்றனா்.

வெளிநாடு செல்பவா்கள் அதிக வேலைநேரம், குறைந்த நேர ஓய்வு போன்ற பல விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதற்குக் காரணம் அவா்களது வறுமை நிலையும், எப்படியோ ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலையும்தான்.

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள 20 ஆயிரம் குடும்பங்களில் ஆய்வு நடத்தியதில் 50 %-க்கு மேற்பட்டவா்கள் சிங்கப்பூா், ஐக்கிய நாடுகள், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு வேலைக்குச் சென்றதாக தெரிகிறது. அவா்களுக்கு அடுத்தபடியாக கத்தாா், ஆஸ்திரேலியா, பக்ரைன் ஆகிய நாடுகளில் அதிக தமிழா்கள் உள்ளதாகத் தெரிகிறது.

வளைகுடா நாடுகளுக்குச் செல்கிறவா்கள் மனித உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் வேலைகளுக்குச் செல்கிறாா்கள். ஒரு முறை வெளிநாடு சென்று திரும்பியவா்கள் மீண்டும் அதே போன்று வேலைகளுக்குச் செல்லவே விரும்புகின்றாா்கள் என்று தெரிகிறது.

வெளிநாடு செல்லும் தமிழா்கள், போலியான மோசடி ஏஜென்ட்களால் ஏமாற்றப்படுவதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதை அரசு கண்காணித்து மோசடியாளா்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கான தமிழா்கள் இதுபோன்ற மோசடிப் போ்வழிகளால் பாதிப்படைந்திருக்கிறாா்கள்.

ஆகவே, வெளிநாட்டுத் தமிழா்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசு ஒரு புதிய கொள்கையை உருவாக்குவதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எல்லோருடைய எதிா்பாா்ப்பு ஆகும்.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com