சீனாவின் சீண்டல்கள்!

சீனாவின் சீண்டல்கள்!

 சியாங்கேஷேக்கின் சர்வாதிகார ஆட்சியினை சீனாவிலிருந்து விரட்டியடிக்க மாசே துங் மக்களைத் திரட்டி 6,000 மைல் எழுச்சி நடைப்பயணத்தை இடை நிற்காமல் நடத்தி சீன மக்களிடையே புரட்சிகர சிந்தனையைத் தூண்டினார்.
 ஒரு நடைப்பயணம் ஒரு பெரிய நாட்டின் அரசியலையே புரட்டிப் போட்டது என்றால் அது சீனாவில்தான் நடந்தது. சித்தாந்த ரீதியாகவும் பெரும் மாற்றம் மக்களிடையே ஏற்பட்டது. அதற்கு காரணம் மாவோ என்று அழைக்கப்படும் மாசேதுங்கின் நடைப்பயணம்தான்.
 மக்கள் மாவோவை முழுமையாக நம்பினர். விரட்டப்பட்ட சியாங்கேஷேக் கூட்டத்தினர் தப்பியோடி தைவானில் தங்கினர். அந்த தைவானை, ஹாங்காங்கை பிரிட்டிஷாரிடமிருந்து பெற்றதற்குப் பின் சீனா எப்படி தனதாக்கிக் கொண்டதோ அதைப் போல் தைவானை கபளீகரம் செய்திட இப்போது சீனா முயன்று வருகிறது. போர் விமானங்களை தைவான் எல்லைக்குள் பறக்க விட்டு மிரட்டி வருகிறது. அமெரிக்க சபாநாயகர் தைவான் நாட்டிற்கு எப்படிச் செல்லாம், அவரை எப்படி தைவான் அனுமதிக்கலாம் என்று சீனா மிரட்டி வருகிறது.
 சீனாவின் பலத்தையும், மக்கள் உணர்வையும், பரப்பளவையும், மக்கள்தொகையையும் கணக்கில் கொண்டுதான் மாசே துங் "சீனா ஒருநாள் உலகை ஆளும்' என்று அகங்காரத்தோடு சொன்னார். அங்கே ஆணவம் வெளிப்பட்டது.
 அதே சீனாவைப் பார்த்து, "சீனா உறங்குகிறது, நன்றாக உறங்கட்டும் அது விழித்தால் உலகமே அதிரும்' என்று, யாராலும் வெல்ல முடியாது என்று போற்றப்பட்டு, வாட்டர் லூ என்ற இடத்தில் தோற்கடிக்கப்பட்ட மாவீரன் நெப்போலியன் ஒருமுறை கூறினான்.
 ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது ராணுவ பலம் குறைவாக இருந்த 1962-இல் மாவோ திடீரென்று இந்திய தேசத்தின் மீது போரை ஏவிவிட்டு சில ஆயிரம் உயிர்களை பலிவாங்கி, இந்தியாவின் சுமார் 30,000 சதுர கி.மீ. நிலத்தினை அபகரித்து கொண்டார்.
 அப்போது சுதந்திரம் அடைந்து சில காலமே ஆனதால், இந்தியா முழுமையாக தன்னை தயார் படுத்திக் கொள்ளாத நிலை. இந்திய கம்யூனிஸ்டுகளால் இன்றைக்கும் போற்றப்படும் மாசேதுங் மனசாட்சி இன்றி இந்திய மண்ணைஅபகரித்தார்.
 தற்போது சீன அதிபராக இருக்கும் ஷி ஜின்பிங், சரியான பதவிப் பித்தர். முடிந்து போன தனது ஆட்சிக் காலத்தை தனது ஆதரவாளர்களை வைத்து சர்வாதிகாரத்தனத்தோடு நீட்டித்துக் கொண்டவர். எங்காவது அவருக்கு எதிரான குரல் கேட்டால், குரல் கொடுத்தவரின் குரல் நிரந்தரமாக நிறுத்தப்படும்.
 உதாரணமாக, சீனாவில் ஜனநாயகம் கேட்டு 1989-இல் மாணவச் செல்வங்கள் தியானென்மென் சதுக்கத்தில் ஒன்று திரண்டு குரல் கொடுத்தனர். அப்போது, பீரங்கி வண்டிகளை ஏற்றி போராடிய ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
 மாணவத் தலைவர்கள் என்று அறியப்பட்டவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்டு ஆண்டுக் கணக்காக சிறையிலேயே வாடிக் கொண்டிருக்கிறார்கள். பலர் காணாமலே போய் விட்டனர்.
 1997-இல் ஹாங்காங், பிரிட்டிஷாரிடமிருந்து சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. இருந்தாலும் ஹாங்காங் மக்கள், சீனாவுடன் சேர்வதை விரும்பவில்லை. ஆனால் சீனா தனக்கு வேண்டிய அதிகாரியை வைத்து சில அடக்குமுறை சட்டங்கள் மூலம் சீனாவுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் குரல்வளையை நசுக்குகிறது.
 சீனாவின் வெறித்தனத்தின் உச்சம், தியானென்மென் சதுக்கத்தில் மாணவர்கள் கொல்லப்பட்ட நினைவு நாளன்று, அதற்காக ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட சிலையை அதிரடியாக அகற்றி எறிந்தது. அதேபோல் லிங்னான் பல்கலைக்கழகத்தில் தியானன்மென் படுகொலையை நினைவுகூரும் வகையில் இருந்த சுவர் ஓவியத்தையும் அகற்றியுள்ளது.
 இந்தியாவிடம் அவ்வப்போது சீனா வம்பிழுத்து வருகிறது. சமீப காலத்தில் 5,000 ச.கி.மீ. இந்தியப் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன. சீனாவிற்கு வேலையே அண்டைநாடுகளை விழுங்கி தன்வசமாக்கிக் கொள்வதுதான். ரஷியா, கனடாவிற்கு அடுத்து மிகப்பெரிய நிலப்பரப்பு கொண்ட நாடாக சீனா உள்ளது. சீனாவின் தற்போதைய மொத்த நிலப்பரப்பில் 43 % பிற நாடுகளை ஆக்கிரமித்து கைப்பற்றியதுதான்.
 1947-ஆம் ஆண்டு மங்கோலியாவை சீனா ராணுவ பலத்தால் கைப்பற்றியது. 1949-ஆம் ஆண்டு உய்குர் முஸ்லிம்கள் அதிகம் வசித்த கிழக்கு துர்கிஸ்தான் பகுதியை ஆக்கிரமித்தது. தற்போது சீனர்களை அங்கே குடியமர்த்தி சீனப் பகுதியாகவே அதனை மாற்றிவிட்டது. உய்குர் இஸ்லாமிய மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இதனை அமெரிக்க உட்பட 47 நாடுகள் கண்டித்து ஐ.நாவிடம் முறையிட்டுள்ளன.
 1950-ஆம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமித்தது. பின் போரில் இங்கிலாந்திடம் இழந்த ஹாங்காங்கையும் மீட்டு தன்வசம் ஆக்கிக் கொண்டது. தற்போது அருணாசல பிரதேசத்தையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த அமைச்சர்கள் அருணாசல பிரதேசம் சென்று வந்தால், எப்படி இந்திய அமைச்சர் சீனாவின் அங்கமான அருணாசல பிரதேசம் வரலாம் என்று கண்டனம் தெரிவிப்பதை சீனா வழக்கமாக கொண்டுள்ளது.
 2020 ஜூன் மாதம் 15-ஆம் தேதி இரவில் லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் திடீரென்று சீன வீரர்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி இந்திய ராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் நடத்தி எல்லையை அபகரிக்க முயன்றனர்.
 இந்திய வீரர்கள், சீன வீரர்களைவிட எண்ணிக்கையில் குறைவாக இருந்தபோதும் சீனாவின் கொடூரத் தாக்குதலை துணிவோடு எதிர்கொண்டு சீன ராணுவத்தினரோடு கடுமையாக எதிர்தாக்குதல் புரிந்ததால் சீனா பின்வாங்கியது.
 எதிரிகளின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும் எண்ணத்தில் உறுதியும், நாட்டுப்பற்றும் இருந்தால் எதிரி எத்தனை பலசாலியாக இருந்தாலும் அவனை விரட்டி அடித்து விடலாம் என்பதை இந்திய ராணுவத்தினர் காட்டினர்.
 இருந்தாலும் இந்தியா பக்கத்திலும் 20 பேர் உயிரிழந்தனர். தன்பக்கம் இழப்பு ஏதுமில்லை என சீனா முதலில் மறுத்தது. பின்பு சில நாட்களில் நான்கு பேர் உயிரிழந்தனர் என்றது. ஆனால் அமெரிக்கா புலனாய்வு செய்ததில் சீனா பக்கம் 42 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற உண்மை தெரியவந்தது.
 அன்று வாங்கிய அடி சீனாவிற்கு பெருத்த அவமானம் ஆகிவிட்டது. இலங்கை அம்பந்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்து இந்தியப் பெருங்கடலில் தனது உளவு கப்பலை நிறுத்தி வைத்தது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இலங்கை அதனை அனுமதித்தது.
 அந்தக் கப்பலில் இருந்த சீன வீரர்கள், இலங்கை வீரர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளனர். யுத்த காலத்தில் எப்போதும் இந்தியாவிற்கு ஆதரவாக இலங்கை இருந்ததில்லை. 1962 சீன - இந்திய யுத்தத்தில் இலங்கை சீனாவுக்குத்தான் வெளிப்படையாக ஆதரவு தந்தது.
 இந்திய - பாகிஸ்தான் யுத்தம், வங்கதேச பிரிவினையின்போது நடந்த யுத்தம் இவற்றில் இலங்கை பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தது. மேலும், பாகிஸ்தான் விமானங்களுக்கு எரிபொருள் வழங்கி உதவி செய்தது இலங்கை.
 2017-ஆம் ஆண்டு டோக்லாம் பகுதியில் சீன ராணுவத்தினர் அத்துமீறி சாலை அமைக்க முயன்றதையும் இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. யாங்வாங் -5 என்ற போர்க் கப்பலை இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு தொடர்ந்து அனுப்பி இந்திய செயல்பாட்டை கண்காணித்து வருகிறது. அருணாசல பிரதேச பகுதியில் சீனா தொடர்ந்து போர் ஒத்திகை நடத்தி இந்தியாவை மிரட்டி வருகிறது.
 இந்த நிலையில் அருணாசல பிரதேசத்தின் தவாங் பகுதியில் யாங்ட்சி என்ற இடத்தின் சில முக்கியப் பகுதிகளில் டிசம்பர் 9, 2022 அன்று சீன வீரர்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பயங்கர ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர்.
 அப்போது குறைவாக இருந்த இந்திய வீரர்கள் சீன வீரர்களை சமாளித்துக்கொண்டிருக்க, சற்று நேரத்தில் 600-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் குவிந்து சீன ராணுவத்தினரை ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர். நாடு பிடிக்க வருபவனை விட நாட்டைக் காப்பாற்ற நினைப்பவன் வீரம் மிகுதியானது.
 எல்லைக் கோட்டு பகுதி முழுவதும் சீனா தனது படைகளைக் குவித்து வருகிறது. இதற்கு சவால் விடும் வகையில் அமெரிக்க - இந்திய ராணுவம் இணைந்து உத்தரகண்ட் பகுதியில் சீன எல்லைக்கு அருகே போர்ப் பயிற்சியில் ஈடுபட்டன. சீனா இதற்கு பொய்யான கண்டனம் தெரிவித்துள்ளது.
 அது மட்டுமல்ல, லடாக்கில் உள்ள பாங்காங் திசோ ஏரியில் இந்தியா - சீனா இருநாடுகளுக்கும் சம பங்கு இருக்கிறது என்பது தெரிந்தும் அடாவடியாக சீனா மூன்று கிலோ மீட்டருக்கு சாலை அமைத்து வருவது இந்தியாவிற்கு விடுக்கப்படும் மறைமுக மிரட்டலாகும்.
 சீன அதிபரும் இந்திய பிரதமரும் ஐந்து முறை சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். தமிழகத்தின் மாமல்லபுரத்தில் சீன அதிபருக்கு இந்திய பிரதமர் விருந்தளித்தார். ஆயினும் சீனாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை.
 1962-இல் நம்மிடம் இருந்த வீரர்கள் 20,000 பேர்; சீனாவிடம் இருந்த வீரர்கள் 80,000 பேர். மேலும், அது எதிர்பாராத தாக்குதல், அதனால் தோற்றோம். ஆனால் தற்போது, ரபேல் போன்ற அதி நவீன போர் விமானங்கள், பலமிக்க போர்க் கப்பல்கள் இந்தியாவிடமும் உள்ளன. இந்திய மக்கள் ஒன்றிணைந்து இந்திய ராணுவத்திற்குத் துணை நிற்கும்போது சீனாவால் நம் மண்ணில் ஒரு அங்குலத்தைக் கூட பிடிக்க முடியாது என்பது உறுதி.
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com