எண்ணித் துணிக...

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. பிளஸ் 2 மதிப்பெண் வெளியிடப்பட்ட பின்னர் பொறியியல் கல்லூரிகள் முதல் கலை அறிவியல் கல்லூரிகள் வரை அனைத்திற்கும் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை மாணவர்கள் நாள்தோறும் அனுப்பி வருகின்றனர். சமூக ஊடகங்களில் கல்வி நிறுவனங்கள் குறித்த விளம்பரங்கள் வெளியாகின்றன.
சில பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகத்தினரும், சில பாலிடெக்னிக் கல்லூரிகளின் நிர்வாகத்தினரும் பிளஸ் 2 முடித்த மாணவர்களின் வீடு தேடி வந்து சந்தித்து தங்கள் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு அழைப்பு விடுக்கும் பணியும் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. தங்களுடைய கல்வி நிறுவனத்தில் சேர்ந்தால் என்னென்ன சலுகைகள் வழங்கப்படும் என்பன போன்ற விவரங்களையும் அவர்கள்கூறி வருகின்றனர்.
இது போன்று பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் இருந்து மாணவர்களை சேர்ப்பதற்காக வருகை தருபவர்கள் சொல்லும் விஷயங்களையும், கல்லூரி குறித்த தரவுகளையும் மாணவர்களும், பெற்றோர்களும் கேட்டு உள்வாங்கி கொள்ள வேண்டும். அத்துடன் இணையதளங்களின் மூலம் சம்பந்தப்பட்ட கல்லூரிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் வாட்ஸ்ஆப், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களிலும் அலசி ஆராய வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் பொறியியல் கல்லூரிகள் ஏராளமாக உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான பொறியியல் கல்லூரிகளில், பல்லாயிரக்கணக்கான இடங்கள் காலியாகவே இருந்து வருவதை நாம் காண்கிறோம். எனவே, பொறியியல் கல்லூரிகளில் சேர வேண்டும் என்பது மட்டுமே நமது நோக்கமாக இருக்க கூடாது. மாறாக நல்ல கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட வேண்டும்.
மதிப்பெண்களை வைத்து கட் ஆப் மதிப்பெண்ணை கணக்கிட்டு கடந்த ஆண்டின் கட்-ஆப்பை வைத்து உத்தேசமாக பட்டியலை நாம் தயார் செய்து கொள்ள முடியும். அதே சமயம் கடந்த ஆண்டை விட தற்போது கட்ஆஃப் மதிப்பெண்கள் நிலை நிச்சயம் மாறுபடக்கூடும். கடந்த ஆண்டைவிட ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவிற்கு கூடுதல் மதிப்பெண்கள் தேவைப்படலாம். அதை விட சற்று குறையலாம். எனவே கடந்த ஆண்டுகளில் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் தேவைப்பட்ட மதிப்பெண்களின் விவரங்களைத் தொகுத்து எடுத்து வைத்து கொள்வது நலம் பயக்கும்.
முன்பு வெறும் நான்கு பிரிவுகள் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் இருந்த நிலை மாறி இப்போது அறிவியல் தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் என பாடப்பிரிவுகள் பெருகிவருவதால் கல்லூரிகளில் பொறியியல் பிரிவுகளின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
இப்படி பொறியியல் பாடப்பிரிவுகள் பல இருந்தாலும், எந்தப் பாடப் பிரிவிற்கு தற்போது வேலை வாய்ப்பு உள்ளது? அந்தப் பாடப் பிரிவை எந்தக் கல்லூரியில் சிறப்பாகக் கற்பித்து வருகிறார்கள் என்பதையெல்லாம் ஆய்வு செய்து குறிப்பிட்ட பாடப்பிரிவை, அதைக் கற்றுத் தரும் சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும்.
கலை அறிவியல் கல்லூரிகளும் இப்போது அதிகமாகிவிட்டன. எந்த கல்வி நிறுவனத்தில் சேர வேண்டும் என்றாலும், முதலில் அந்த கல்லூரியில் ஏற்கெனவே படித்து வரும் மாணவர்களிடம், அந்த கல்லூரியின் உள்கட்டமைப்பு, ஆய்வக வசதி, பேருந்து வசதி, அங்கு பணியாற்றும் பேராசிரியர்களின் தகுதிகள், அனைத்து வகுப்பிற்கும் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் போதுமான பேராசிரியர்கள் இருக்கிறார்களா என்பன போன்ற விவரங்களைத் தெரிந்து கொண்டு அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
கலந்தாய்விற்கு முன்னர் கல்லூரிகளின் தரவரிசை வெளியாகிவிடும். நல்ல கட்ஆஃப் மதிப்பெண் வைத்துள்ளவர்கள் அந்த தரவரிசையில் தரமான கல்வி நிறுவனத்தில் விருப்பமான பாடப்பிரிவை தேர்வு செய்து கொண்டு விடுவர். சிலர் தர வரிசையில் சிறப்பான நிலையிலுள்ள கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவை தேர்வு செய்ய நினைத்திருப்பர். ஆனால, அது கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விடலாம். அப்போது, அதே கல்லூரியில் வேறு ஒரு பாடப்பிரிவை எடுத்து படித்தால் நிச்சயம் பலன் தரும். அதைவிட்டு வேறு எங்கோ ஒரு கல்லூரியில் தான் நினைத்த பாடப்பிரிவு இருக்கிறது என அதை தேர்வு செய்தால் பிற்காலத்தில் வேலை வாய்ப்பில் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டி வரும். எனவே, தரவரிசையில் நல்லதொரு கல்வி நிறுவனத்தில் கிடைக்கும் பாடப்பிரிவை தேர்வு செய்து படிப்பது பலன் தரும்.
அது போல் கல்லூரியில் நூலக வசதி எவ்வாறு இருக்கிறது? அங்கு தேவையான புத்தகங்கள் உள்ளனவா? என்பதை ஆராய்ந்து சேர்வது நன்மை பயக்கும். ஏனென்றால் கல்லூரிகளில் படிக்கும் போது அனைத்து புத்தகங்களையும் பணம் கொடுத்து வாங்குவது என்பது சிரமமானது. ஆன்லைன் கல்வி என்பது மிக அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. எனவே ஆன்லைன் மூலம் கற்பித்தலை நடத்துவதற்கு தேவையான நவீன கட்டமைப்பு வசதிகள் உள்ள கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பது சிறப்பானதாக அமையும்.
உலக அளவில் புகழ்பெற்ற கல்லூரிகள் தங்கள் மாணவர்களுக்கு வெறும் கல்வியை மட்டும் வழங்குவதில்லை. எதிர்காலத்தில் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திறன்களை வளர்க்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும், தனித்திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் நடத்தி வருகின்றன.
இதன் மூலம் மாணவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அத்தகைய பல் திறன்களை வளர்ப்பதற்கான பயிற்சி பட்டறைகளை வைத்துள்ள கல்லூரிகளில் சேர்வது நல்லது. அதையும் தாண்டி கருத்தியலுடன்,செயல்முறையையும் முறையாக கற்றுத்தரும் கல்வி நிறுவனங்கள்தான் இன்றைய காலத்தின் கட்டாயம்.









 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com