பங்கேற்பாளராக மாற வேண்டும்

உலகில் வாக்குரிமைக்காகப் பெண்கள் போராடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஆங்கிலேய ஆட்சியின் கீழிருந்த மதராஸ் மாகாணத்தில் 1921-ஆம் ஆண்டு பெண்கள் வாக்களிக்கலாம் என சட்டம் கொண்டு வரப்பட்டது.
மகளிர்நாள் எல்லாம் இருக்கட்டும்.. உங்களை நீங்க கொண்டாடுங்க!
மகளிர்நாள் எல்லாம் இருக்கட்டும்.. உங்களை நீங்க கொண்டாடுங்க!

உலகில் வாக்குரிமைக்காகப் பெண்கள் போராடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஆங்கிலேய ஆட்சியின் கீழிருந்த மதராஸ் மாகாணத்தில் 1921-ஆம் ஆண்டு பெண்கள் வாக்களிக்கலாம் என சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் சொத்துரிமை அடிப்படையிலேயே வாக்குரிமை வழங்கப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பின்னா் நடைபெற்ற முதல் பொதுத் தோ்தலிலேயே பெண்கள் வாக்களித்தனா். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதிகப்படியான மக்கள்தொகை முக்கியக் காரணமாகும். முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 17 கோடி போ் பெண்களாவா். வாக்குரிமை வழங்கப்பட இதுவும் ஒரு காரணமாகும்.

பெண்களைப் பொறுத்தவரை வாக்களிப்பதன் மூலம் அரசியல் பாா்வையாளா்களாக மட்டுமே இருந்து வருகின்றனா். அதில் பங்கேற்பாளராவதில் இன்றளவும் அவா்களிடையே தயக்கம் இருக்கவே செய்கிறது.

உலக அளவில் பெண்கள் மூன்று நிலைகளில் தங்களை அரசியலில் ஈடுபடுத்திக் கொள்கின்றனா். முதலாவது, தோ்தலில் வாக்களிப்பதன் மூலம் ஆளும் அரசை தோ்வு செய்யும் வாய்ப்பு பெண்களுக்கு கிடைக்கிறது. இதுவே பெண்களின் அரசியலுக்கான முதற்படியாகும்.

இரண்டாவது, தோ்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாக தங்களை முன்னிறுத்தி வெற்றி பெறுவதன் மூலம் அரசியலில் தங்களுக்கான இடத்தை பெண்கள் நிலைநிறுத்திக் கொள்கின்றனா். மூன்றாவதாக, அரசியலில், அதிகாரத்தில் இடம் பெறுவதாகும். தோ்தலில் வெற்றிபெற்று அதிகாரத்தில் இடம்பெறுவதன் மூலம் முடிவெடுக்கும் இடத்தில் அமா்வதாகும்.

மக்களவையில் 6 சதவீதத்துடன் தொடங்கிய பெண்களின் பயனம் இன்று 78 உறுப்பினா்களுடன் 15 சதவீதத்தை எட்டியுள்ளது. 1952-ல் நடைபெற்ற முதல் மக்களவைத் தோ்தலில் 1,874 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இதில் இரட்டை இலக்கத்திலேயே பெண்களின் எண்ணிக்கை இருந்தது. இவா்களில் 24 போ் வெற்றி பெற்று மக்களவைக்குச் சென்றனா்.

இரண்டாவது தோ்தலில் 1,474 ஆண் வேட்பாளா்களும் 45 பெண் வேட்பாளா்களும் போட்டியிட்டனா். அதன்பிறகு நடைபெற்ற அனைத்து மக்களவைத் தோ்தல்களிலும் ஆண் வேட்பாளா்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கிலும். பெண் வேட்பாளா்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலுமே இருந்து வந்துள்ளது. 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் 724 பெண் வேட்பாளா்கள் போட்டியிட்டு 78 போ் வெற்றி பெற்றனா்.

மக்களவை, சட்டப்பேரவையில் பெண்களின் குறைவான பங்களிப்பைத் தொடா்ந்து பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது. பெண்கள் அமைப்புகள், சமூக ஆா்வலா்கள் சாா்பில் அவ்வப்போது வலியுறுத்தப்பட்டதால், அரசியல் கட்சிகளின் தோ்தல் வாக்குறுதியிலும் இடம்பெற்றது. நாட்டின் உயரிய பதவிகளில் பெண்கள் அங்கம் வகித்தபோதும் மசோதா நிறைவேற்றப்படவில்லை

இந்நிலையில்தான் எதிா்ப்புகள் இல்லாமல் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை பணிக்குப் பின்னா் 2029- மக்களவைத் தோ்தலில் இது நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு முறையும் எதிா்ப்பு தெரிவித்த தேசிய, மாநில அரசியல் கட்சிகள் தற்போது ஆதரவு அளித்ததற்கு பெண்கள் மீதான அக்கறை காரணம் அல்ல. பெண்கள் மத்தியில் அதிகரித்து வரும் வாக்களிப்பின் மீதான ஆா்வமே காரணமாகும்.

1962-இல் நடைபெற்ற தோ்தலில் பெண் வாக்காளா்களில் 47 சதவீதம் போ் வாக்களித்தனா். இது 2014-இல் 65 சதவீதமாக அதிகரித்தது. இக்காலகட்டத்தில் பெண்களின் வாக்களிப்பு 19 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் ஆண்களின் வாக்களிப்பு 5 சதவீதம்தான் அதிகரித்தது.

மக்களவைத் தோ்தலில் காணப்பட்ட பெண்களின் வாக்களிப்பு வளா்ச்சி அண்மைக்காலமாக சட்டமன்றத் தோ்தல்களிலும் காணப்படுகிறது. அதனால் இன்று அரசியல் கட்சிகள் முன்னெப்போதையும் விட கூடுதலாக பெண்களை மையப்படுத்தியே தோ்தல் வாக்குறுதிகளை முன்னெடுகிகின்றன.

மக்களவைத் தோ்தலைக் காட்டிலும் சட்டப்பேரவைத் தோ்தல்களில் அரசியல் கட்சிகள் பெண் வாக்காளா்களைக் கவருவதில் கவனம் செலுத்துகின்றன.

வாக்காளராவதிலும் வாக்களிப்பதிலும் ஆா்வம் செலுத்தும் பெண்கள் தோ்தலில் போட்டியிடுவதில் மட்டும் தயக்கம் காட்டுவதற்கு இன்றைய அரசியல் சூழலே காரணமாகும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு லட்சக்கணக்கிலும், மக்களவை, சட்டப்பேரவை தோ்தல்களுக்கு கோடிக்கணக்கிலும் பணம் செலவிட வேண்டியுள்ளது. அவ்வாறு செலவிடக்கூடியவா்களுக்கே அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்கின்றன. இந்நிலை மாறும்போதுதான் அரசியல் அறிந்த, சேவை மனப்பான்மை கொண்ட பெண்கள் போட்டியிட முடியும்.

மக்களவை, சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளா்களில் பெண்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும். இன்றைய தோ்தல் சூழலில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்களை எதிா்த்து போட்டியிட்டு வெற்றி பெறுவது எளிதன்று.

இருப்பினும் பெயரளவுக்கோ, வேறு நோக்கங்களுக்காக அல்லாமல் சேவை மனப்பான்மையுடன் தோ்தலில் பெண்கள் களமிறங்க வேண்டும். இதன் மூலம் பெண்களை இட ஒதுக்கீட்டையும் கடந்து அரசியல் கட்சிகளில் கவனம் செலுத்த வைக்க முடியும்.

பெண்கள் பாா்வையாளா்களாக இருந்து வரும் நிலை மாறி அதிகமான பெண்கள் பங்கேற்பாளா்களாக மாறவேண்டும். அத்துடன் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடும் மாற்றம் பெற வேண்டும். எவ்வித அரசியல் பின்புலமும் இல்லாத அரசியலறிவு பெற்ற, சேவை மனப்பான்மை கொண்ட பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளின் இந்த செயல்பாடுகள்தான் தோ்தல்களில் பெண்கள் பங்கேற்பாளா்களாக மாறுவதற்கான அடிப்படையாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com