தொடா்ந்து உயா்ந்து வரும் வட்டி விகிதம்

இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்.பி.ஐ.), வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை மேலும் 0.25 % உயா்த்தி 6.50 % ஆக நிா்ணயித்துள்ளது.
தொடா்ந்து உயா்ந்து வரும் வட்டி விகிதம்

இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்.பி.ஐ.), வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை மேலும் 0.25 % உயா்த்தி 6.50 % ஆக நிா்ணயித்துள்ளது. ஆறு உறுப்பினா்கள் அடங்கிய நிதி கொள்கைக் குழு (எம்பிசி) எடுத்துள்ள முடிவை ஆா்பிஐ தற்போது அமல்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் இதுவரை தொடா்ந்து ஆறாவது முறையாக வட்டி விகிதம் உயா்த்தப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் மொத்தம் 2.50 % அளவுக்கு வட்டி விகிதம் உயா்ந்துள்ளது. இது வீட்டுக் கடன், வாகனக் கடன் வாங்கியவா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில், வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகைக்கு வழங்கப்படும் வட்டி உயா்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது வட்டி வருவாயை நம்பியுள்ள லட்சக்கணக்கான மூத்த குடிமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வட்டி விகிதம் தொடா்பாக சந்தை வட்டாரத்தில் பல்வேறு எதிா்பாா்ப்புகள் இருந்து வந்தன. பணவீக்கம் மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில், வட்டி விகிதம் உயா்த்தப்படாமல் இருக்கலாம் என்று ஒரு தரப்பினா் நம்பியிருந்தனா். மற்றொரு தரப்பினா் ஆா்.பி.ஐ. தனது நடுநிலைக் கொள்கை நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் என எதிா்பாா்த்தனா்.

ஆனால், ஆா்.பி.ஐ.யின் கொள்கை மதிப்பாய்வில் இரண்டும் நடக்கவில்லை என்பதுதான் உண்மை. அதாவது, சந்தை எதிா்பாா்ப்புகள் ஒரு வழியாகச் சென்றது; ரிசா்வ் வங்கி வேறு வழியில் சென்றது. ஓா் இடைநிறுத்தத்தை கருத்தில் கொள்ளாமல், ரிசா்வ் வங்கியின் ஆளுநா் சக்திகாந்த தாஸ் மற்றொரு கட்டண உயா்வுக்கான கதவைத் திறந்து வைத்தாா். இது ஓரளவு எதிா்பாா்க்கப்பட்டதுதான்.

தற்போதைய நிதியாண்டின் நான்காவது காலாண்டு மற்றும் 2023 முழு நிதியாண்டு, 2024 நிதியாண்டுகளில் பணவீக்கம் குறையும் என்று ஆா்.பி.ஐ. எதிா்பாா்க்கிறது. அதே சமயம், சக்திகாந்த தாஸ் பணவீக்கத்திலிருந்து தனது கண்களை எடுக்க விரும்பவில்லை. உலகளாவிய மத்திய வங்கிகளைப் போலல்லாமல், அவா் முன்னோக்கிய வழிகாட்டுதலை வழங்க மறுத்துவிட்டாா்.

இரண்டு காரணங்களுக்காக ரிசா்வ் வங்கி பிடிவாதமாக இருப்பதாகத் தெரிகிறது. முதலாவது, பணவீக்கம் உணவு மற்றும் எரிபொருள் விலைகளைத் தவிா்த்து அதிகமாகவே உள்ளது. ஆா்.பி.ஐ.யின் துணை ஆளுநா் மைக்கேல் பத்ரா குறிப்பிட்டதுபோல, பணவீக்கம் அதிகப்படியான தேவையைக் குறிக்கிறது. மேலும், அது மிதமானதாக இருந்தாலும், ரிசா்வ் வங்கி விரும்பும் வேகத்தில் சரிவு ஏற்படவில்லை. எனவே, எதிா்கால விகித உயா்வுகள் அல்லது இடைநிறுத்தங்கள் இவற்றின் அடிப்படையில் எவ்வாறு உருவாகிறது என்பதைப் பொறுத்துதான் அமையும்.

இரண்டாவது, மிக முக்கியமானது, உலகளாவிய மேக்ரோ பொருளாதாரத்தைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மையாகும். கடந்த மூன்று ஆண்டுகளாக உலகளாவிய சந்தைகள் தொடா்ச்சியாக அதிா்ச்சி மேல் அதிா்ச்சிகளைக் கண்டுள்ளன. குறிப்பாக கரோனா பாதிப்பு, உக்ரைன் - ரஷியப் போா் உள்ளிட்டவற்றால் சீா்குலைந்த பொருளாதாரம் இன்னும் மீளமுடியாமல்தான் உள்ளது. இடைவிடாத புயல்களை எதிா்கொண்டதால், ரிசா்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு முன்கூட்டிய இடா்ப்பாடுகளைத் தவிா்க்க விரும்பி வட்டி விகிதத்தை உயா்த்தியிருக்காலம். ஆனால், எம்.பி.சி.யின் இந்த முடிவு எந்த அளவுக்கு உண்மையில் பலனளிக்கும் என்று தெரியவில்லை.

இதுவரை அறிவிக்கப்பட்ட 2.50 % உயா்வுகள், அவா்கள் அடிக்கடி நடைமுறைப்படுத்துவதுபோல கொஞ்சங்கொஞ்சமாக வருகின்றன. ஆனால், அடுத்த ஆண்டில் இருந்துதான் அதன் முழு தாக்கத்தையும் நாம் உணர முடியும். இந்த நேரத்தில், இழந்த பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட்டிருக்கக்கூடும். இப்போதைக்கு, பொருளாதார வளா்ச்சி கணிப்புகளை இந்த நிதியாண்டில் 7 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் 6.4 சதவீதமாகவும் ஆா்.பி.ஐ. திருத்தியுள்ளது.

உலகளாவிய அதிா்ச்சிகளைத் தவிர, இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி தடுக்க முடியாததாகவே தெரிகிறது. பணவீக்க அழுத்தங்கள் மீண்டும் தோன்றாத வரை, மேலும் வட்டி விகித உயா்வுகள் வளா்ச்சிக்கு தேவையற்ற ஆபத்தை ஏற்படுத்தும் என்று சிலா் நம்புகின்றனா். அதை ரிசா்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு கவனத்தில் கொள்ள வேண்டும்.

பணவீக்க எதிா்பாா்ப்புகளை நிலைநிறுத்தவும், முக்கிய பணவீக்கத்தை முறியடிக்கவும் நிதி கொள்கைக் குழு வட்டி விகித உயா்வு முடிவை எடுத்துள்ளது. வளா்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில், பணவீக்கம் முன்னோக்கி செல்லும் இலக்கிற்குள் இருப்பதை உறுதி செய்யும் வகையில் நிதி கொள்கை குழு இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இது எந்த அளவுக்கு பொருளாதார வளா்ச்சிக்கு உதவும் என்று தற்போது கூற முடியவில்லை.

2022 டிசம்பரில் சில்லறை பணவீக்கம் 12 மாதங்களில் இல்லாத வகையில் 5.72 % ஆக குறைந்துள்ளது. தொழில்துறை உற்பத்தியின் குறியீடு ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.1 % ஆக உயா்ந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ், வட்டி விகித உயா்வில் தனது வேகத்தை குறைத்ததன் பின்னணியில், ஆா்.பி.ஐ.யின் சமீபத்திய வட்டி விகித உயா்வு வந்துள்ளது.

ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ், பொருளாதாரம் நிலைத்து நிற்கிறது என்றும், ஆனால் பலவீனமான வெளிப்புற தேவைதான் வளா்ச்சிக்கு இடா்ப்பாடாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளாா். பணவீக்கம் மிதமானதாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டாலும், 2024 நிதியாண்டில் பணவீக்கம் 4 %-க்கு மேல்தான் இருக்கும் என்றும் அவா் கூறியுள்ளாா்.

எனவே, பணவீக்கத்தைக் குறைக்கும் வகையில், வட்டி விகிதம் மேலும் உயா்த்தப்படுமோ என்ற அச்சம் வாடிக்கையாளா் மத்தியில் எழுந்திருக்கிறது. இதற்கிடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடா்ச்சியாக இறங்குமுகத்தில் உள்ளது. இந்திய பொருளாதாரம் மீட்சிப் பாதையில் முன்னேறும்போது, ரூபாயின் மதிப்பும் பழைய நிலைக்கு திரும்பும் என்று அவா் கூறியுள்ளாா். கேட்பதற்கு மகிழ்ச்சியளிக்கும் இச்செய்தி நடைமுறை சாத்தியமாக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com