கட்டுப்பாடுகள் தேவை

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

 பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 40-க்கும் மேற்பட்டோர் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனர். இன்றைய சூழலில் தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது தனிமனிதர்களுக்கு சாத்தியமானதல்ல. 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். ஆனால் ஒருவர் கூட வெற்றிபெறவில்லை.
 உள்ளாட்சி அமைப்புகள் தொடங்கி மக்களவைத் தேர்தல் வரையில் ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒவ்வொரு பதவிக்கும் செலவினத் தொகை தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் அத்தொகையைக் கொண்டு தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்பதே நிதர்சனம்.
 இன்றைய தேர்தல் கோடிகளை விழுங்கும் தேர்தலாகிவிட்டது. இருப்பினும் கோடிகளைப் பற்றியோ, அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் பணபலம், படைபலம் பற்றியோ கவலைப்படாமல் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
 கடந்த கால தேர்தலுக்கும் இன்றைய தேர்தலுக்கும் எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளன. அன்றைய தேர்தலில் வேட்பாளரின் செல்வாக்கு மட்டுமே அவரது வெற்றியை நிர்ணயிப்பதாக இருந்தது. அதனால்தான் 1952-இல் நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 533 சுயேச்சை வேட்பாளர்களில் 37 பேர் வெற்றி பெற்றனர். 1957-இல் நடைபெற்ற இரண்டாவது தேர்தலில் 481 பேர் போட்டியிட்டு 42 பேர் வெற்றி பெற்றனர். அதிகப்படியான சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றது இத்தேர்தலில்தான்.
 ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திற்கு 1952-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 62 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். சில சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன்தான் அப்போது ஆட்சி அமையப் பெற்றது.
 1957-க்குப் பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றிபெறும் சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கையும் மொத்த வாக்குகளில் அவர்கள் பெறும் விழுக்காட்டு எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகின்றன. கிராமங்களில் கூட அரசியல் கட்சிகள் வேரூன்றிவிட்ட இன்றைய சூழலில் உள்ளாட்சித் தேர்தலில் கூட ஒருவர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற இயலாது.
 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெறாத நிலையிலும் அவர்கள் பெறும் வாக்குகள் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கவோ, வெற்றி பெறும் வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தைக் குறைக்கவோ செய்கின்றன. இதுவே சுயேச்சைகளை எண்ணி அரசியல் கட்சிகள் அச்சம் கொள்ள காரணமாகிறது.
 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுடன் போட்டியிட்டு சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெறுவது எளிதானதல்ல. அப்படியிருக்க, சுயேச்சையாக போட்டியிடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
 தேர்தலில் போட்டியிடும் ஆர்வத்திலும், மக்களின் கவன ஈர்ப்புக்காகவும் சிலர் சுயேச்சையாகப் போட்டியிடுவதுண்டு. அத்தகையோரின் தேர்தல் பிரசார செயல்பாடுகள், வாக்குறுதிகள் கவனம் பெறுவதாகவே இருக்கும். அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெறாத, சாத்தியமில்லாத பல்வேறு அம்சங்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.
 சுயேச்சை வேட்பாளர்கள் அதிகரிக்க மற்றொரு காரணமும் உண்டு. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத அதிருப்தியில் சிலர் போட்டியிடுவதாலும் சுயேச்சை வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
 அதிருப்தி வேட்பாளர்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெறுவது சாத்தியமன்று. இருப்பினும் வடமாநிலங்களில் மக்களவைத் தேர்தலில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் சுயேச்சைகள் வெற்றி பெறுகின்றனர்.
 இதுபோன்ற நிகழ்வு மக்களைவைத் தேர்தலைக் காட்டிலும் சட்டப்பேரவைத் தேர்தலில் சற்று தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது.
 இவ்வேட்பாளர்களால் வாக்குகள் வித்தியாசம் மட்டுமே மாற்றம் காண்கிறது; வெற்றிவாய்ப்பில் எத்தகைய மாற்றமும் ஏற்படுவதில்லை.
 சுயேச்சை வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அரசு நிர்வாகம் பல்வேறு சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு தொகுதியில் அதிகப்படியான வேட்பாளர்கள் போட்டியிடும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட வேண்டியுள்ளது. ஒவ்வொருவருக்கும் சின்னம் ஒதுக்குவதிலும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
 வாக்காளர்களிடம், வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. தேர்தலில் போட்டியிடுவதன் மூலமே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பது ஏற்புடையதன்று. நிர்வாக சிக்கல்களைக் கருத்தில் கொண்டு சுயேச்சை வேட்பாளர்களைக் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வது பற்றி சிந்திக்க வேண்டும்.
 வேட்பு மனு தாக்கலுக்கான வைப்புத் தொகையை அதிகப்படுத்த வேண்டும். சுயேச்சையாக போட்டியிடும்போது வெற்றி பெறும் வேட்பாளரின் வாக்குகளில் குறிப்பிட்ட சதவீத வாக்குகளைப் பெறாவிட்டால் அவர்கள் மீண்டும் போட்டியிடக் கூடாது. வைப்புத் தொகையை மீண்டும் பெறும் அளவிற்காவது வாக்குகள் பெறவேண்டும். குறிப்பிட்ட முறை தேர்தலில் வைப்புத் தொகையை இழப்பவர்கள் மீண்டும் போட்டியிடக்கூடாது என்பவை போன்ற சீர்திருத்தங்களைக் கொண்டு வரலாம்.
 வெற்றி பெறும் சுயேச்சை வேட்பாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதன் மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்கினுடைய சக்தியைப் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டனர் எனலாம். அதனால்தான் சுயேச்சை வேட்பாளர்களின் பங்களிப்பு அண்மைக்கால தேர்தல்களில் அருகி வருகிறது. சுயேச்சை வேட்பாளர்களுக்குக் கிடைக்கும் வாக்கு வீதம் குறைந்து கொண்டே வருகிறது.
 தேர்தல் என்பது சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பங்கெடுக்கும் ஜனநாயகத் திருவிழா என்பதில் ஐயமில்லை. வாக்களிக்க உரிமையுள்ளபோது போட்டியிடவும் உரிமை உண்டு. அதே நேரத்தில் அதிருப்தி, பிரபலமாக காட்டிக் கொள்ளும் ஆர்வம், கவன ஈர்ப்பு இவற்றுக்காக மட்டுமே தேர்தலில் போட்டியிடுவது ஆரோக்கியமானதல்ல.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com