செல்வத்துள் செல்வம்!

செல்வத்துள் செல்வம்!

 அண்மையில் ஒரு திருமண நிகழ்வுக்குச் சென்றிருந்தபோது, அப்பாவின் நண்பர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. இளம் வயதில் என்னை, ஒரு பலகையின் மீதேற்றி, ஒலிவாங்கி முன் நின்று பேச வைத்துக் கேட்ட பெரியவர் அவர். பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பின்னர், பேச்சு, பேச்சைப் பற்றி அமைந்துவிட்டது.
 "அந்த காலத்திலே கூட்டம் என்றால், பேச்சாளர்கள் வருவதற்கு முன்னரே கேட்பவர்கள் வந்து காத்துக் கொண்டிருப்பார்கள். இப்போது அப்படியா இருக்கிறது? பேச்சாளர்கள் வந்து வெகுநேரம், கூட்டம் வருவதற்குக் காத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இத்தனைக்கும் இன்றைக்கு இருக்கிற இவ்வளவு வசதிகள் அன்றைக்கு இல்லை. ஏன், ஒலிபெருக்கி, அலங்கார மேடைகள்கூட இல்லாமல் பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் உயர்ந்த இடத்தில் நின்று கொண்டு பேச்சாளர்கள் பேச, மக்கள் கேட்கிற காலம் எல்லாம் இருந்தது' என்று கூறி பழைய நினைவுகளில் மூழ்கினார் அவர்.
 உண்மைதான். நமது பகுதிக்கு சிறந்த பேச்சாளர் ஒருவர் வருகிறார் என்றால், அவர் பேசும் ஊர்களுக்கெல்லாம் அவருக்கு முன்னரே போய்த் தொடர்ந்து கேட்பதும், கேட்டு வந்த பிறகு, கேட்க வாய்ப்புக் கிடைக்காத மற்றவர்களுக்கு அதை முடிந்த வரையில் அப்படியே எடுத்துச் சொல்வதும் வழக்கம். முடிந்த வரையில் அவர் போலக் குரலையும் ஆக்கிக் கொண்டு பேசிக்காட்டினால், பேச்சாளருக்குக் கிட்டிய மகிழ்ச்சியில் பாதி, கேட்பவருக்கும் கிடைத்துவிடும். அந்த அளவிற்குப் பேச்சாளர்களுக்கு அப்போது மவுசு இருந்தது."
 கேட்டுக் கேட்டுப் பழகிய அந்த மனிதருக்குள் ஊற்றுப்போல் அந்தப் பழைய நினைவுகள் வெளிப்படத் தொடங்கின. என் ஒருவனையே பெருங்கூட்டம் என்று நினைத்துக் கொண்டதுபோல, அந்த காலப் பேச்சாளர்கள் பெயர்களைச் சொல்லி, அவர்களின் சிறந்த கருத்துகளைச் சொல்லி, அதனால் ஏற்பட்ட அரசியல், கலை, இலக்கிய, ஆன்மிகத் தாக்கங்களை விளக்கும்போது, அவர் ஒருவரே நடமாடும் மேடைத்தமிழ்க் களஞ்சியமாகத் தெரிந்தார்.
 அவர் மட்டுமா? அந்த காலத்தில் அவ்வாறு கேட்ட செவிச்செல்வர்கள் பலரும் அப்படித்தான் இருந்தார்கள். என் பள்ளிப் பருவத்தில், எங்கள் வீட்டுத் திண்ணையில் இருந்து கொண்டு இப்படி, கூட்டத்துக்குப் போனவர்கள் வந்து சொல்லச் சொல்லிக் கேட்பவர்களை நானும் பார்த்திருக்கிறேன்; கேட்டிருக்கிறேன். ஈ.வே.ரா. பெரியாரின் பகுத்தறிவு முழக்கமும், அதற்குப் பதில் சொல்லுமாப்போலே, தவத்திரு குன்றக்குடி அடிகளார் தந்த விளக்கங்களும், தோழர் ஜீவா, அண்ணா தொடங்கி பலரும் முழங்கிய அரசியல் பேச்சுகளை எடுத்துக் காட்டியும், வாரியார் சுவாமிகள் தரும் ஆன்மிக அறிவுரைகளைத் திரும்பச் சொல்லியும் அவை குறித்து விவாதிக்கிற பாங்கு இருக்கிறதே அற்புதம்.
 அவர்கள் சொல்லியவற்றுள் உண்மை எது, புனைவு எது என்று கண்டுகொள்வதும் அதில் இருக்கும் அழகிய தமிழ்ச் சுவையை அனுபவிப்பதும், கற்றறிய இயலாத இலக்கிய வரிகளைச் சுவைபடச் சொல்லிய வண்ணம் செவிமடுத்துச் சிந்தை கொள்வதுமாக இருந்த காலம் அது.
 திருக்குறளும், சிலப்பதிகாரமும், புறநானூறும் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுவதுடன் அயலகச் சிந்தனையாளர்களின் பெயர்களை நினைவுபடுத்துவதும் அப்போது நிகழ்ந்தது. கம்பன் கழகங்கள், காப்பிய மாந்தர்களைக் கம்பனின் துணையோடு, கண்முன்னே உலவவிட்டன. பெரியபுராணத்து நாயன்மார்கள் மீளவும் திருத்தொண்டு புரியத் தொடங்கிய காலகட்டமும் அதுவாக இருந்தது. புராண, இதிகாசக் கருத்துகள் மீள்பார்வைக்கு உட்படுத்தப்பட்டன.
 பகுத்தறிவுப் பாசறைகள் தொடங்கப்பட்ட அளவிற்கு, உழவாரத் திருக்கூட்டங்களும் அடியார் பேரவைகளும் முகிழ்க்கத் தொடங்கின. வாசகசாலைகள், படிப்பகங்கள் தெருவெங்கும் தோன்றின. இருதரத்தாரும் சின்னஞ்சிறு பிரசுரங்கள் அச்சிட்டு வழங்கியதன் மூலமாக வாசிப்பு அனுபவங்களையும் வளர்த்தனர். பொது ஊடகமாக, வானொலியும், பத்திரிகைகளுமே திகழ்ந்த காலத்தில் அவை வாரி வழங்கிய தரவுகளும் கலை, இலக்கியச் செல்வங்களும் கணக்கில்லாதவை.
 செவிவழியாக வந்து சிந்தை நிறைத்த வானொலிச் செல்வங்களும், எழுத்து வழியாக வந்து இதயத்தை விசாலப்படுத்திய இதழியல் ஆக்கங்களும் மகத்துவமான கற்பனை வளத்தை மனிதர்க்கு வழங்கின; கனவுகளை வளர்த்தன; காவிய வாழ்வை ஆக்கிக் கொடுத்தன; கேளாரும் வேட்ப மொழிகிற நுட்பம் வளர்ந்தது. வாரந்தோறும் இதழ்களின் வழியே வெளிவந்து வளர்ந்த "பொன்னியின் செல்வன்' புதினம், இன்றைக்கும் எழுத்தாளர் கல்கியையும், ஓவியர் மணியத்தையும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறதே.
 வானொலி உரைகள் எழுத்துரைகளாகி நூல்களாக ஆக்கம் பெற்றன. அவை எழுதப் படிக்கத் தெரிந்த எளிய மக்களின் இதயங்களைச் செழுமைப்படுத்தின. குறைந்த விலையில் நிறைய நூல்கள் அச்சாக்கம் பெற்றன; அவை முறைபட வாசிப்புக்கும் நேசிப்புக்கும் உள்ளாக்கப்பட்டன.
 அரங்கத் தமிழ் உரைகள் மாலைநேரப் பாடசாலை வகுப்பறைகளாகவே மலர்ந்தன. அவரவர் பக்க நியாயங்களை, வாத, தருக்க முறைப்படி எடுத்துரைத்துப் பேசுகிற பேச்சாளர்கள் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் இருந்தார்கள். மேற்கோளிடும் ஒரு கருத்துக்கு ஆதரவாக இலக்கியத் தொடரை முன் வைக்கும் கருத்தாளரை மறுக்கும் மற்றொரு கருத்தாளர் அதேபோல இன்னொரு மேற்கோளினை அதே இலக்கியத்தில் இருந்து எடுத்துக் காட்டவும் செய்தார்.
 தேவை கருதி அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சுட்டப்பட்ட இலக்கிய வரிகள் இதய வரிகளாகி, காவிய உணர்வை, செவிமடுப்போர் சிந்தைகளில் நிறைத்தன. தம் சொந்த வாழ்வின் சிக்கல்களுக்கான தீர்வுகளை, இந்த உரைகளில் இருந்து தேர்ந்து கொள்ளவும் தெளிந்திருந்தனர். இராமனையும், சீதையையும், பரதனையும், குகனையும் மட்டுமின்றி, கூனியையும், கும்பகருணனையும் இன்னபிற பாத்திரங்களையும் தத்தம் நிகழ்கால வாழ்வில் அடையாளம் காணத் தெரிந்திருந்தனர்.
 இராமனுக்குக்கு நிகராகவும் மேலாகவும் இராவணனை ஏற்றுப்போற்றுகிற மரபில் கம்பர் கலைவல்லாராக மிளிர்ந்தார். அசுரர்கள் புதிய கோணத்தில் இனங்காணப்பட்டனர். மரபியல் சார்ந்த கருத்தாக்கங்கள் மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்டன.
 இதிகாசக் காப்பியங்களுக்கு மாற்றாக சங்க இலக்கியச் சிந்தனைகளும் முன்வைக்கப்பட்டன. குறித்த நேரத்தில் தொடங்கி, குறித்த பொழுதுக்குள் வகுத்துக் கொண்ட உரையினைச் செறிவுற நிகழ்த்தியவர்கள் அப்பேச்சுரைகளை, எழுத்துரைகளாகவும் தயாரித்தனர். அவை நூல்களாகவும் வெளிப்பட்டன. அவை அக்காலத்து உயரிய இலக்கிய விருதுகளையும் அவர்களுக்குப் பெற்றுத் தந்தன.
 இசை, நாட்டிய அரங்குகளுக்கு நிகராகவும், அவற்றுக்கு மேலாகவும் இயற்றமிழாகிய உரைநடைத் தமிழுக்குக் களம் அமைத்தது அக்காலம். அரசியல் மேடைகளில் இலக்கிய நயமும், இலக்கிய மேடைகளில் அரசியல் நளினமும் அழகாக வெளிப்பட்டன. பகுத்தறிவைப் பறைசாற்றியவர்களின் உரைகளில் மனிதநேயமும், பக்தியைப் புலப்படுத்தியவர்களிடையே அறிவியல் மனப்பான்மையும் சிறப்பாக வெளிப்பட்டன.
 அவரவர்களின் நிலைப்பாட்டில், உண்மைகள் உலாவரத் தொடங்கின. அவை முழு உண்மை இல்லை என்பதைச் செவிமடுத்தோர் நன்கறிந்திருந்தனர். பகுதி உண்மைகளைத் தொடர்ந்து செவிமடுத்து, முழு உண்மையை உள்வாங்கிக் கொள்ளும் நுட்பம் கேட்பாளர்களுக்கு இருந்தது. மெய்யாகவே அவர்கள் பொதுமக்களாக விளங்கினர்.
 ஆங்கில ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெற்ற வேகத்தில், மளமளவென்று தன்னரசை நிலைநிறுவ மேற்கொண்ட நேரத்தில், சுயம் கெடாமல், சமய, சமூகச் சீர்திருத்தங்களையும் செய்தாக வேண்டிய நெருக்கடியைச் சரியாகப் புரிந்துகொள்ளவும் செயல்படவும் மேடைகளே பெரிதும் துணைநின்றன. எழுத்துத் தமிழை விடவும் பேச்சுத் தமிழுக்கு இன்றியமையாத இடம் கிடைத்தது.
 பண்டிதர்களின் முற்றங்களில் மெல்ல நடந்துகொண்டிருந்த தமிழணங்கு, தெருவெல்லாம் பவனி வரத் தொடங்கினாள். "சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்' என்ற மகாகவி பாரதியாரின் கட்டளை நடைமுறைக்கு வந்தது. பண்டைய இலக்கியங்களுக்கு நிகராக, பாரதி, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் கவிதைகள் உரத்துப் பேசப்பட்டன.
 ஏற்றுக்கொள்ள முடியாத இயக்கங்களின் முழக்கங்களையும் தமிழ்ச்சுவை கருதிக் கேட்டு மகிழ்ந்த இதயங்கள் அன்றைக்கு இருந்தன. எத்துணை விதமான எதிர்க்கருத்துகள் இருந்தாலும் கருத்தாளர்கள் எதிர்ப்படச் சந்தித்துக் கொள்ளும்போது நனிநாகரிகர்களாகவே அவர்கள் நடந்துகொண்டார்கள்.
 பேச்சாளர்களைப் போலவே, கவிஞர்களுக்கான கவியரங்குகளும், எழுத்தாளர்களுக்கான உரையாடல் அரங்குகளும் மேடைத் தமிழுலகு நிர்மாணித்துத் தந்தது. சுவைஞர்கள் அவர்களினும் மேம்பட்டவர்களாகத் திகழ்ந்தார்கள்.
 எல்லார்க்கும் எல்லாச் செல்வமும் கிட்ட இயலாத காலத்தில் தலைச்செல்வமாக, இச்செவிச்செல்வம் கிட்டியதும், அதன் சுவையுணர்ந்து தன்னைச் செழுமைப்படுத்திக் கொண்டவர்களும் அவர்கள். தற்காலமாக மலர்ந்த அக்காலத்தை இப்போது நினைக்க அதுவொரு பொற்காலமாக அவருக்குத் தெரிந்ததுபோலும். "அந்தக் காலம் இனிமேல் வருமா? தெரியவில்லை. வந்தால் நல்லது' என்று பழைய நினைவுகளைக் கலைத்துக் கொண்டு அவர் எழுந்தார். கூடவே நானும் எழுந்தேன்.
 செவிச் செல்வம் வளர்க்கும் சீலம் மீளவும் வரவேண்டும் என்பதற்காக, அரங்க அமைப்பாளர்களும், பொழிவாளர்களும் காலத் தேவைக்கேற்ப சிந்தித்துச் சிறப்பாகச் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com