எச்சரிக்கை அவசியம்!

இன்றைக்கு சமூக ஊடகங்கள் தகவல் களஞ்சியங்களாக இருக்கின்றன. அன்றாடம் லட்சக்கணக்கான காணொலிகள் வெளியாகின்றன.
எச்சரிக்கை அவசியம்!

இன்றைக்கு சமூக ஊடகங்கள் தகவல் களஞ்சியங்களாக இருக்கின்றன. அன்றாடம் லட்சக்கணக்கான காணொலிகள் வெளியாகின்றன. நிமிடத்திற்கு நிமிடம் புதிய தகவல்கள், செய்திகள் நமக்கு வந்து சேருகின்றன. உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்வது சாத்தியமாகி இருக்கிறது. 

ஆனால் இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் எல்லாம் நம்பத்தகுந்தனவா என்றால் இல்லை என்பதே உண்மை நிலை. கொட்டிக்கிடக்கும் தகவல்களில் எது உண்மை, எது பொய் என்பதை ஆராயப் புகுந்தால் மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதையாகவே முடியும். 

சமீபத்தில் ஒரு காணொலியைப் பார்க்க நேர்ந்தது. அதிலே ஒருவர், "இராமாயணம், மஹாபாரதம் எல்லாம் கட்டுக்கதைகள். இராமாயணத்தைத் தமிழர்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டில்தான் அறிந்து கொண்டார்கள். கம்பர் எழுதும் வரை தமிழர்களுக்கு இராமாயணம் தெரியாது. இராமாயணம் கிரேக்க இலக்கியத்தைத் தழுவி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது' என்று அடுக்கிக் கொண்டே போகிறார். இது எத்தகைய பொய் அல்லது அறியாமை?

இந்தியாவைப் பொறுத்தவரை இராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரண்டு இலக்கியங்கள் மட்டுமே இதிகாசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. "இதிகாசம்' என்றால் "இப்படி நடந்தது' என்று சொல்லும் நூல். அதாவது, நடந்த வரலாற்றைப் பதிவு செய்வது. இராமாயணம் இராமரின் சரிதத்தைச் சொல்வது. அவரது சமகாலத்தில் வாழ்ந்த வால்மீகி முனிவரால் பதிவு செய்யப்பட்டது.

வால்மீகி இராமாயணத்தில் அடுக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள், மன்னர் பரம்பரை, பாரத தேசத்தின் வரைபடம், பாரதத்தின் தென்பகுதி மன்னர்கள், நகரங்கள், இடங்கள் வரை அனைத்துத் தரவுகளும் தரப்பட்டுள்ளன. கதையாக இருப்பின் இராமரின் மூதாதையர்களின் வரிசை தேவையற்றது. ஆனால், வால்மீகி மகரிஷியே இராமரின் அறுபது தலைமுறையினரையும் பட்டியலிட்டுச் சொல்கிறார்.

கபாடபுரம், சேதுக்கரை என்று தமிழகத்தின் நிலவியல் பேசப்பட்டிருக்கிறது. அயோத்தி மற்றும் உத்தர பிரதேசம், ஒடிஸô போன்ற பிரதேசங்களின் நிலவியல் அமைப்பு நதிகள், வனங்கள் என மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. காலம் பற்றிய செய்தி மிகத் துல்லியமாகத் தரப்பட்டுள்ளது. சமூக ஊடகத்தில் இராமாயணம் பற்றிய தன்னுடைய தவறான கருத்தைப் பதிவு செய்தவர் உண்மையில் இராமாயணத்தைப் படித்திருந்தால் இந்தத் தகவல்களையெல்லாம் அறிந்திருப்பார். 

அதே போல, தமிழில் இராமாயணம் பற்றி சங்க இலக்கியங்களில் எந்தக் குறிப்பும் இல்லை என்பதையும் அவர் சொல்லி வைக்கிறார். சங்க இலக்கியமோ, வரலாறோ எதையுமே தெரிந்து கொள்ளாமல் தான் நம்பும் சித்தாந்தத்திற்கு ஏற்ப கருத்துகளைத் திரித்துச் சொல்வது, உண்மைக்குப் புறம்பான செய்திகளை உண்மை என்று நம்பச் செய்வது என சமூக வலைதளங்கள் அவரவர் வசதிக்கு வளைந்து கொடுக்கின்றன. எதையும் உண்மை போலப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு, சமூக வலைதளங்களில் முழுமையாக இருக்கிறது.

அந்த உரையைக் கேட்கும்போதே நமக்குத் திருவாலங்காட்டு கல்வெட்டு நினைவுக்கு வருகின்றது. முதலாம் ராஜேந்திர சோழன் தன்னுடைய தந்தையான ராஜராஜசோழனின் பெருமையைப் பற்றிச் சொல்லுமிடத்து அவரை இராமரோடு ஒப்பிட்டுச் சொல்கிறார். பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை தமிழர்களுக்கு இராமாயணம் வந்து சேரவில்லை என்பது உண்மையாயின் அதற்கு முன் வாழ்ந்த ராஜேந்திர சோழன் இராமர் பற்றி எப்படிக் குறிப்பிட்டார்? 

ராகவர்களின் நாயகன் குரங்குகளின் உதவியோடு கடலில் அணையைக் கட்டி, மிகுந்த சிரமத்துடன் இலங்கை அரசனை கூரிய அம்புகளால் கொன்றான். ஆனால், இந்த வீரத்தளபதி கப்பல்கள் மூலம் கடலைக் கடந்து இலங்கையை எரித்தானே, இராமனைக் காட்டிலும் இவனே சிறந்தவன் என்று திருவாலங்காட்டுச் செப்பேட்டில் எழுதி வைத்துள்ளார் ராஜேந்திர சோழன்.

கம்பர் இராமாயணத்தை எழுதியதற்கு ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தச் செப்பேடு எழுதப்பட்டுவிட்டது. 

அதோடு, ராஜேந்திர சோழனது காலத்தில் இராமர் ஆலயங்கள் இருந்ததற்கும் கல்வெட்டுச் சான்றுகள் ஏராளம் இருக்கின்றன. ராஜேந்திர சோழருக்கும் முன் அவரது தந்தையார் இராமாயணம் படிக்க நிவந்தங்கள் கொடுத்ததற்கான சான்றும் இருக்கிறது. பத்தாம் நூற்றாண்டில் இராமர் ஆலயங்களுக்கு நிவந்தங்கள் தந்த சான்றுகளும் உள்ளன. இராமாயணம் என்றால் என்னவென்றே தெரியாத காலத்திற்கு முன் வாழ்ந்த தமிழர்கள் இராமருக்கு ஆலயம் கட்டி வழிபட்டது எப்படி?

ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர், சோழ அரசன் இளஞ்சேட் சென்னி வஞ்சிப் போரில் வென்ற செய்தியைப் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்த அரசன் ஏராளமான ஆபரணங்களை அவருக்குப் பரிசாக வழங்கினான். அதனை வறுமையில் வாடிய புலவரின் குடும்பத்தார் எப்படி அணிந்து கொள்வது என்று தெரியாமல் மாற்றி மாற்றி அணிந்து கொண்ட காட்சியைப் புலவர் இராமாயணக் காட்சியோடு ஒப்பிட்டுப் பாடுகிறார்.

கடுந்தெறல் இராமன் உடன் புணர்                 சீதையை
வலித்த கை அரக்கன் வெளவிய                     ஞான்றை
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து              ஆங்கு  (புறம்: 378)  

இராமனுடன் காட்டுக்கு வந்திருந்த சீதையை இராவணன் கவர்ந்து  சென்றான். அவள் இராமனுக்கு, தான் செல்லும் வழியை உணர்த்துவதற்காக, தான் அணிந்திருந்த அணிகலன்களை ஒவ்வொன்றாக ஆங்காங்கே நிலத்தில் போட்டுக் கொண்டே சென்றாள். அவள் அணிந்திருந்ததைப் பார்த்த செங்குரங்குகள் அவற்றை எடுத்து எதனை எங்கு அணிவது என்று தெரியாமல் தாறுமாறாக அணிந்துகொண்டது போல் இருந்ததாம்.

அகநானூற்றின் எழுபதாவது பாடல், 

வென்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்கு இரும் பெளவம் இரங்கும் 
            முன் துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே 

என்று இராமரைக் கொண்டாடுகிறது.

"தலைவன் திருமணம் செய்துகொள்ள வந்துவிட்டான். அவனையும் உன்னையும் இணைத்து அலர் தூற்றிய ஊரார் வாய் அடங்கிவிட்டது' என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள். இது செய்தி. ஊர் வாய் அடங்கியதற்குக் காட்டப்படும் உவமைதான் இராமனைப் பற்றிய செய்தி. இராமன் தன் வெற்றிக்குப் பின் பாண்டியரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தனுஷ்கோடி வந்தடைந்தான். முழங்கிக்கொண்டிருக்கும் கடல் இரக்கத்தோடு காணப்பட்டது. 

அங்கு ஆறு கடலோடு கலக்கும் முன்றுறை (முன் துறை) ஓரத்தில் ஓர் ஆலமரம் இருந்தது. அந்த மரத்தடியில் அமர்ந்துகொண்டு இராமன் மறைகளை ஓதிக்கொண்டிருந்தார். அப்போது பல விழுதுகளை உடைய அந்த ஆலமரம் ஓயாத ஒலியை நிறுத்திக் கொண்டது. 

அதாவது ஆலமரத்துப் பறவைகள் ஒலிப்பதை மறந்து கேட்டுக்கொண்டிருந்தன. இப்படி இராமாயணக் காட்சிகளை நுட்பமான உவமையாகக் காட்டும் அளவுக்கு மக்கள் மனங்களில் இராமாயணமும் அதன் மாந்தர்களும் இடம்பெற்றிருந்துள்ளனர்.

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இன்னும் தெளிவாக இராமரை திருமாலின் அவதாரம் என்றே குறிப்பிடுகிறார்.

"தாவிய சேவடி சேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த' என இலங்கையை தம்பியுடன் அழித்தவனே என்று இராமரைக் கூறுவதோடு, "நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ' என்ற வரிகளால் இராமாயணம் அனைவரும் அறிந்ததே என்றும் வெளிப்படுத்துகிறார். இந்த உண்மைகள் மறைக்கப்பட்டு சங்க இலக்கியங்களில் இதிகாசச் செய்திகளே இல்லை என்பது போலப் பேசுவது அறியாமை. அதனை உண்மை என்று பாமர மக்கள் நம்புவதற்கு இடம் இருக்கிறது.

இப்படி ஓர் உண்மையற்ற கருத்து பல லட்சம் பேரை எளிதாகச் சென்று சேர்ந்துவிடுகிறது. முன்வைக்கப்படும் கருத்துகளுக்கு ஆதாரங்களைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்ற கட்டற்ற சுதந்திரம். தணிக்கை இல்லை. 

தர்க்க சாஸ்திரம் என்றே நேருக்கு நேர் உண்மைகளை சித்தாந்தங்களைப் பேசி விவாதித்து உண்மை தெளிந்த நம் தேசத்தில் தற்பொழுது இத்தகைய பொய் பரப்புரைகள் மலிந்து காணப்படுவது வருத்தத்திற்குரியது. இத்தகைய இடர்ப்பாடுகளைக் களைய நாம் மேற்கொள்ள வேண்டியது யாது? எங்ஙனம் நம் கைகளுக்கு வந்திருக்கும் செய்தி உண்மை என்பதைத் தெரிந்து கொள்வது? யாருடைய செய்திகளை நம்புவது? எழுதப்படும் அல்லது பேசப்படும் செய்தியின் நம்பகத் தன்மைக்கு வழி என்ன? இடர் தோன்றும் பொழுதே அதற்கான தீர்வுகளும் தோன்றிவிடுகின்றன என்பதே பாரத தேசத்தில் நம்பிக்கை. 

ஆதாரங்களோடு தகவல்கள் தரப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். நாமே அதற்கான ஆதாரங்களைத் தேடி சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதை மனத்தில் இருத்தி தேவையான விஷயங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தர வேண்டும். எச்சரிக்கை அவசியம். 

இதற்கும் நம் பழந்தமிழ் இலக்கியமான நாலடியார் தெளிவாக வழி காட்டியிருக்கிறது.

கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கிற் பிணி பல தெள்ளிதின்
ஆராய்ந்த் தமைவுடைய கற்பவே 
            நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து 

அன்னப்பறவை நீரை நீக்கிப் பாலை மட்டும் அருந்துவதைப் போல தரமுடையவற்றை மட்டும் ஆராய்ந்து ஏற்று கற்றுக் கொள்ள வேண்டும். இலக்கியமும் வரலாறும் கற்பது வருமானத்திற்கல்ல, உண்மை தெளிவதற்கு என்ற புரிதலோடு அணுகினால் உண்மை கண்டு தெளிவது எளிதாகும்.

கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com