வெறுப்பை விதைக்காதீர்

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உணவு விடுதிகள், கட்டடத் தொழில் நடக்குமிடங்கள் போன்றவற்றில் வடமாநிலத் தொழிலாளர்களை அதிக எண்ணிக்கையில் நம்மால் பார்க்க முடிகிறது.
வெறுப்பை விதைக்காதீர்

உள்நாட்டிலோ, உள்ளூரிலோ தங்கள் தகுதி அல்லது தேவைக்கு ஏற்ற வேலை கிடைக்காதவர்கள் வேற்றிடங்களில் கிடைக்கின்ற வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்திப் பொருள் ஈட்டுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. சரித்திரக் காலங்களிலேயே தமிழ் மக்கள் கடல் கடந்து சென்று வணிகம் செய்து பொருள் ஈட்டியிருக்கின்றனர்.

பர்மா, இலங்கை, மலேசியா, இந்தோனேஷியா, மோரீஷஸ், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் கடந்த சில நூற்றாண்டுகளாகத் தமிழகத்தைச் சேர்ந்த பலரும் குடும்பம் குடும்பமாகச் சென்று குடியேறியதுடன் தங்களின் கடும் உழைப்பால் அந்நாடுகளின் பொருளாதாரச் செழிப்புக்கும் பங்காற்றி வருவது கண்கூடு.

கடந்த நூற்றாண்டில் அமெரிக்கா உள்ளிட்ட பிற கண்டங்களுக்கும், ஆசியாவிலுள்ள வளைகுடா நாடுகளுக்கும், சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளுக்கும் தொழில் நிமித்தமாக பல லட்சம் இந்தியர்கள் செல்லத் தொடங்கியது இன்று வரை தொடர்கின்றது.

இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் பிற மாநிலங்களூக்குச் சென்று பணிபுரிந்து பொருள் ஈட்டுவது காலம் காலமாக நடக்கின்ற ஒன்றுதான்.

ஆனால், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளிகளின் வருகை பெருமளவில் இருப்பதாகவும், அவர்களின் வரவினால், தமிழகத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறையத் தொடங்கி இருப்பதாகவும் ஊடகங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. அச்சு ஊடகம், காட்சி ஊடகம் மட்டுமின்றி சமூக ஊடகங்களிலும் இத்தகைய செய்திகள் பெரிய அளவில் பேசப்படும் பொழுது சமூகத்தில் கொந்தளிப்பும், வெறுப்புணர்வும் கிளர்ந்தெழுவது இயல்பானது.

குறிப்பாக சென்னைக்கு ரயில் மூலம் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வட இந்தியர்கள் வந்து இறங்குவதாகவும், அவர்களால் தமிழகத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைவது மட்டுமின்றி, சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்பட்டதாக உலாவரும் காணொலிகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. 

சமீபத்தில் திருப்பூரில் சில வடமாநிலத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு தமிழர் ஒருவரைத் தாக்கியதாக வெளிவந்த செய்தி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதுடன் வட இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிரான சிந்தனையைத் தமிழகத் தொழிலாளர்களிடையே விதைக்கவும் முற்பட்டது.

அக்காணொலிச் செய்திகள் பொய்யானவை என்று மறுத்த மாவட்ட நிர்வாகம், தொழிலாளர்களிடையே அமைதியை நிலைநாட்ட முற்பட்டது வரவேற்கத்தக்கது.

மேலும், ரயிலில் பயணம் செய்யும் வடமாநிலத் தொழிலாளர்களைப் பார்த்துத் தமிழர் ஒருவர் கடுமையாக ஏசுவது போன்ற காணொலியும் சமூக ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய வெறுப்புக் காணொலியை வெளியிட்டவருக்கு எதிராக ரயில்வே பாதுகாப்புப் படை நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உணவு விடுதிகள், கட்டடத் தொழில் நடக்குமிடங்கள் போன்றவற்றில் வடமாநிலத் தொழிலாளர்களை அதிக எண்ணிக்கையில் நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் செங்கல் சூளைகள், நெல் கொள்முதல் நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள் போன்றவற்றிலும் ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது. 

வடமாநிலங்களிலிருந்து வரும் கூலித்தொழிலாளர்கள் தாங்கள் தங்குவதற்கான குறைந்தபட்ச வசதிகளுடன், குறைவான கூலியைப் பெற்றுக்கொண்டு அதிக நேரம் உழைக்கின்றார்களாம். இந்தக் காரணத்தினால் பெரும்பாலான முதலாளிகள் தமிழர்களை விட வடமாநிலத் தொழிலாளர்களையே பணியில் அமர்த்த விரும்புவதாகக் கூறப்படுகிறது. 

இந்தச் செய்தி உண்மை என்றால், குறைந்த கூலிக்கு அதிக வேலை வாங்கி உழைப்புச் சுரண்டலை மேற்கொள்ளும் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப் படவேண்டுமே அல்லாமல், அத்தகைய சுரண்டலுக்கு உள்ளாகும் வடமாநிலத் தொழிலாளர்களின் மீது வெறுப்புணர்வை வளர்த்துக் கொள்வது சரியாக இருக்காது. எதிர்காலத்தில் அதே முதலாளிகள் வடமாநிலத் தொழிலாளிகளைச் சுட்டிக்காட்டித் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளிகளைச் சுரண்டவும் அனுமதிக்கக்கூடாது.

இது மட்டுமின்றி, தமிழகத்தில் செயல்படும் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பிற மாநிலங்களைச் சேர்ந்த தமிழ் பேசத் தெரியாத பணியாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் பணிபுரிவதும் அதிகரித்து வந்துள்ளது. அன்றாடம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இத்தகைய அலுவலகங்களில் உள்ளூர் மொழியாகிய தமிழில் பேசத் தெரியாதவர்கள் பணிபுரிவது பொதுமக்கள் தொடர்பில் தேவையற்ற சிக்கல்களை உண்டாக்கக் கூடும்.

இந்நிலையில், இந்தியா முழுவதிலும் பணியாற்றும் தேவை உள்ள அதிகாரிகள் நிலையில் உள்ளவர்கள் தவிர, பிற பணியாளர்களாக அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களையே  தகுதியின் அடைப்படையில் தேர்ந்தெடுத்துப் பணியமர்த்தும் வகையில் தேர்வு விதிகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும். இதனால் பல்வேறு மொழிகளைப் பேசும் இந்தியக் குடிமக்களிடையே வெறுப்புணர்வு உருவாகாமல் இருக்கும். 

உலகமே ஒரு குடும்பம் என்ற கருத்தியல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில், நமது தமிழ்மண்ணில் வடமாநிலத் தொழிலாளர்களின் வரவால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை உணர்ச்சி வசப்படாமல் ஆராய்ந்து, குறைகளைக் களைய முற்படுவதே நல்லது. 

அதனை விடுத்து, தங்களின் வாழ்வாதாரங்களைத் துறந்து, தங்கள் குடும்பங்களுடன் தமிழகத்திற்கு வந்து தங்கிப் பணிபுரிவதுடன் உழைப்புச் சுரண்டலுக்கும் ஆளாகும் வடமாநிலத் தொழிலாளர்களிடம் வெறுப்புணர்வை வளர்ப்பது, தேவையற்ற எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com