குற்றால முனிவர் ரசிகமணி!

டி.கே. சிதம்பரநாத முதலியார்(படம்: வலைதளம்-ரசிகமணி டிகேசி)
டி.கே. சிதம்பரநாத முதலியார்(படம்: வலைதளம்-ரசிகமணி டிகேசி)

 ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த டி.கே. சிதம்பரநாத முதலியாரின் (டி.கே.சி.) உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஊர் குற்றாலம். அங்கு இயற்கையாக எழும் ஒலிகளையும் தமிழ் பாடல்களின் ராக, தாளங்களையும் இணைத்துக் காண்கிற அவருடைய ரசனை உணர்வே அவரை ரசிகமணியாக்கி இருக்கிறது.
 இதை, டி.கே.சி. எழுதிய கட்டுரையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். "கவியில், அதாவது உண்மை ததும்பும் உருவத்தோடு கூடிய கவியில் ஈடுபட்டுவிட்டால், வார்த்தை, தாளம், தமிழ்ப் பண்பு இவற்றில் அப்படியே கரைந்துவிடுகிறோம் நாம். பாஷைக்கு ஒரு மந்திர சக்தி இருக்கிறதாகவே தெரிகிறது. கவியிலுள்ள உணர்ச்சி வசமாய்ப் போய், வார்த்தை, தாளம், செய்யுள்கோப்பு இவற்றால் ஆகிய உருவமாகவே மாறி விடுகிறோம். கவிக்கு விஷயம் அல்ல, உருவமே பிரதானம்' எனச் சொல்கிறார் டி.கே.சி.
 வழக்குரைஞரான டி.கே.சி. நெல்லை வண்ணார்பேட்டையில் வசித்தபோது, "வட்டத் தொட்டி' என்ற பெயரில் இலக்கிய அமைப்பை நடத்தியிருக்கிறார். ஜஸ்டிஸ் மகராஜன், எஸ். வையாபுரிப் பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, சோமசுந்தர பாரதியார், மீ.ப. சோமு, ல. சண்முகசுந்தரம், தொ.மு. பாஸ்கர தொண்டைமான், அ. சீனிவாச ராகவன், பெ.நா. அப்புஸ்வாமி, கே.பி. கணபதி, டி.டி. திருமலை, நீலாவதி சுப்பிரமணியம், மு. அருணாசலம், ஜி.சி. பட்டாபிராம் போன்ற பல இலக்கியவாதிகள் கலந்து கொண்ட அமைப்பு அது. தமிழ்க் கவிதைகளில் புதைந்து கிடந்த ஆழமான கருத்துகளை எல்லாம் வெளிக்கொணர்ந்து அவற்றின் சுவையை மற்றவர்கள் அனுபவிக்கச் செய்திருக்கிறார் டி.கே.சி.
 ரசிகமணி நெல்லையில் இருந்தபோதும் சரி, திருக்குற்றாலத்தில் இருந்தபோதும் சரி அவர் வீட்டில் கூடும் தமிழ் அன்பர்களிடம் கம்பனின் கவியாற்றலையும் கம்பரின் பெருமைகளையும் டி.கே.சி விவரிக்கும்போது எல்லாரும் மெய்ம்மறந்து கேட்பார்கள்.
 டி.கே.சி.யால் வாரம் ஒருமுறை நடத்தப்பட்ட வட்டத் தொட்டி அமைப்பு "டி.கே.சி. வட்டத்தொட்டி' என்ற பெயரில் பிரபலமடைந்தது. அப்போது எழுத்தாளர் லா.ச.ரா. தென்காசியில் வங்கி மேலாளராக பணிபுரிந்ததால் வட்டத் தொட்டி நிகழ்ச்சிக்கு அடிக்கடி வருவதுண்டு. டி.கே.சி 1926- இல் சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து இந்து அறநிலையத்துறை ஆணையராகவும் பொறுப்பேற்றார்.
 டி.கே.சி. நெல்லையில் இருந்தபோதே ராஜாஜி, கல்கி குடும்பத்தினர் அவருக்கு நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். டி.கே.சி. வீட்டுக்கு குடும்பத்தோடு வந்து தங்கியிருக்கின்றனர். கல்கி, சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் அடிக்கடி இங்கே வருவதுண்டு.
 ராஜாஜியும், கல்கியும் டி.கே.சி.யின் நெருக்கமான நண்பர்களாகவே இருந்திருக்கிறார்கள். ராஜாஜி, கல்கி, டி.கே.சி. மூவரும் பழகத் தொடங்கிய காலத்தில், ராஜாஜியும் கல்கியும் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். டி.கே.சி.யோ நீதிக்கட்சியில் தொடர்பு வைத்திருந்தார். ஆனாலும் அவர்களுடைய நட்பை அவர்கள் சார்ந்திருந்த கட்சிகள் எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அவர்களுடைய நட்பு இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது. டி.கே.சி. நெல்லையில் இருக்கும்போதே குற்றாலத்துக்கு அடிக்கடி வந்துவிடுவார். தான் வருவதற்கு முன்பு ராஜாஜியையும், கல்கியையும் குற்றாலத்துக்கு வரச்சொல்லி கடிதம் எழுதிவிடுவார். குற்றாலத்தில் டி.கே.சி. தங்குவது குற்றாலீஸ்வரர் கோயிலுக்கு அருகே உள்ள 1-ஆம் எண் பங்களாவில்தான்.
 அதற்குப் பிறகு நிரந்தரமாக குற்றாலத்துக்கே குடிவந்துவிட்டார். 1942 -ஆம் ஆண்டு குற்றாலம் ஐந்தருவி சாலையில் அருகருகே உள்ள எட்டறை என்ற வரிசை வீடுகளில் இரண்டு வீடுகளை, குற்றாலம் கோயில் தேவஸ்தானத்திடமிருந்து வாடகைக்கு எடுத்துக் கொண்டார்.
 ஒரு வீட்டில் டி.கே.சி.யின் குடும்பத்தினர் தங்கினார்கள். அந்த வீட்டில் சமையல், சாப்பாடு, விருந்தினர்களை உபசரிப்பது எல்லாம் நடக்கும். இன்னொரு வீட்டில் டி.கே.சி. தங்கியிருந்தார். படிப்பது, எழுதுவது, நண்பர்களுடன் உரையாடுவது எல்லாம் அங்கேதான்.
 டி.கே.சி. வீட்டில் தினமும் 20, 25 பேர் பந்தியில் அமர்ந்து சாப்பிடுவார்கள். டி.கே.சி.யின் ஒரே மகன் செல்லையா என்கிற தீத்தாரப்பன் 32 வயதில் மறைந்தார். அந்த அதிர்ச்சியை டி.கே.சி.யாலும் அவருடைய துணைவியாராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பல விருந்தினர்கள் வீட்டுக்கு வருவதும், அவர்களை உபசரிப்பதும் அந்த கவலையில் இருந்து அவர்கள் மீள உதவியிருக்கிறது.
 திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் டிகேசி இருந்த வீடு மாளிகை போன்றிருக்கும். ஆனால் குற்றாலத்தில் இருந்த வீடு அந்த அளவுக்குப் பெரிதில்லை. டி.கே.சி. குற்றாலத்துக்கு குடியிருக்க வரும்போது மின் இணைப்பு இல்லை. அரிக்கேன் விளக்குதான்.
 இன்று போல அன்று தொலைபேசி வசதி கிடையாது. ராஜாஜி, கல்கி ஆகியோரிடம் இருந்து தகவல்கள், கடிதம், தந்தி மூலமாகத்தான் வரும். குற்றாலத்தில் சாரல் தொடங்கி, அருவிகளில் நீர் பெருகி வழியத் தொடங்கும்போதுதான் குற்றாலத்தில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும். அதுவரை ஒரு கிராமத்தைப் போல, குறைவாகத்தான் மக்கள் நடமாட்டம் இருக்கும்.
 குற்றாலநாதர் கோயிலின் வடக்கு வாசலில் இருந்து அருவிக்குப் போகும் வழியில் வலது பக்கம் மலையின் அடியில் கசிந்து வரும் நீரைத் தொட்டியில் நிரப்பி, கோயிலின் மடப்பள்ளிக்கு செல்லுமாறு ஒரு குழாயும், கோயிலுக்கு வெளியே மக்களுக்குப் பயன்படுமாறு மற்றொரு குழாயும் அமைக்கப்பட்டிருக்கும். இந்த நீர் விழும் பகுதிக்கு அருகில் இருந்த சிறுவீடு ஒன்றில் ஸ்ரீமத் மெளன ஸ்வாமிகள் தங்கியிருந்தார். அங்கு பக்தர்கள் வருகை அதிகரித்ததால், செங்கோட்டை சாலையில் ஸ்ரீமத்மெளன ஸ்வாமிகள் மடம் அமைக்கப்பட்டது.
 முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ், இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு என்னகாரணத்தாலோ ராஜீவ் காந்தியால் புறக்கணிக்கப்பட்டார். இதனால் நரசிம்ம ராவ், அரசியலை விட்டுத் தன்னுடைய சொந்த ஊரான ஹைதராபாதுக்குச் செல்ல முடிவெடுத்தார். அதன் பின் குற்றாலத்தில் உள்ள ஸ்ரீமத் மெளன ஸ்வாமிகள் மடத்திலேயே இறுதிக் காலம் வரை தங்கிவிடலாம் என்று தீர்மானித்தார். ஆனால் எதிர்பாராதவிதமாகஅவருக்கு பிரதமராகும் வாய்ப்பு 1991- இல் கிட்டியது.
 டி.கே.சி. குற்றாலத்தில் குடியேறிய பிறகும், ராஜாஜி, கல்கி ஆகியோர் குடும்பத்துடன் குற்றாலத்துக்கு வருவார்கள். "அண்ணி' என்று எல்லோராலும்அழைக்கப்பட்ட டி.கே.சி.யின் மனைவி பிச்சம்மாளுக்கு விருந்தினர்களை உபசரிப்பதுதான் வேலை. ராஜாஜி, கல்கி, எம்.எஸ். சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி எல்லாரும் "அண்ணி' என்றே பிச்சம்மாளை அழைப்பார்கள்.
 ராஜாஜி கேட்டுக் கொண்டதற்கிணங்க 1953-இல் சென்னை ஆளுநர் ஸ்ரீபிரகாசா குற்றாலத்துக்கு வந்திருக்கிறார். ஆங்கிலத்தில் விளக்கமளித்து பின்னர் தமிழ் கவிதைகளை பிரகாசாவுக்கு டி.கே.சி. பாடிக் காட்டினார். இதுபோன்று இதற்கு முன்பு காந்தி, வினோபா பாவே ஆகியோருக்கும் டி.கே.சி. பாடிக் காட்டியிருக்கிறார். அடுத்த முறை ஆளுநர் பிரகாசா குற்றாலம் வந்தபோது, டி.கே.சி. காலமாகிவிட்டார். ஆளுநர் பிரகாசா டி.கே.சி. இல்லம் சென்று டி.கே.சி. குடும்பத்தாரிடம் துக்கம் விசாரித்தார். அன்றைய தமிழக சட்டப்பேரவைத் தலைவர் சிவசண்முகம் பிள்ளையும் குற்றாலம் வீட்டுக்கு வந்திருக்கிறார்.
 கம்பனின் கவியுள்ளத்தை வெளிப்படுத்தும் பணியில் டி.கே.சி. ஈடுபட்டிருந்தார். "கம்பர் தரும் காட்சி' என்னும் தலைப்பில் கல்கி ஆரம்ப இதழில் (1941ஆகஸ்ட்) தொடங்கி சுமார் பத்து ஆண்டுகள் கம்பராமாயணத்தை விளக்கமாக எழுதி வந்தார். அதன் மூலம் சாதாரண வாசகரையும் கம்பர் கவியை அனுபவிக்கச் செய்ய முடிந்ததே என்று மகிழ்ச்சி கொண்டார் டி.கே.சி.
 கம்பராமாயணத்தில் ஆழமாக மூழ்கிய டி.கே.சி., அதில் இடம்பெற்ற 627 பாடல்கள் இடைச்செருகல் என அடையாளம் கண்டு அவற்றை நீக்கினார். கம்பர் கவிதைகளில் சிலவற்றை திருத்தம் செய்து அவற்றை அர்த்தம் பொதிந்த கவிதைகளாகப் பதிப்பித்தார். இதற்கு நிறைய எதிர்ப்புக் கிளம்பியது. அது 1953-ஆம் ஆண்டு "கம்பர் தரும் ராமாயணம்' என்ற நூலாக வெளிவந்தது. அந்த நூலின் முதல் தொகுதி வெளியீட்டு விழா குற்றாலத்தில் நடந்தது. அதில் ராஜாஜி பங்கேற்றார்.
 ரசிகமணி டி.கே.சி. என்று எண்ணும்போதே கவிதை நினைவுக்கு வரும். அடுத்து நினைவுக்கு வருவது இசையாகும். கவிதையை எப்படி அனுபவித்தாரோ அதுபோன்றே இசையையும் அவர்அனுபவித்தார்.
 சென்னையில் டி.கே.சி. இருந்தபோது வீணை தனம்மாளை அடிக்கடி சந்தித்து தனது இசையறிவை வளர்த்துக் கொண்டார். டி.கே.சி. வீட்டில் வீணை தனம்மாளின் படம் இருந்தது.
 கல்கி குடும்பத்தினர் குற்றாலம் வந்தால் டி.கே.சி. வீட்டில்தான் தங்குவார்கள். சென்னைக்கு டி.கே.சி. குடும்பத்தினர் சென்றால் கல்கி வீட்டில்தான் தங்குவார்கள். 1937 முதல் குற்றாலம் செல்வதை கல்கி வழக்கமாக வைத்திருந்தார். ஆஸ்துமா நோயாளியான கல்கிக்கு குற்றாலம் குளியலால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை. சிவகாமியின் சபதத்தில் குற்றாலம் தொடர்பான காட்சிகள் பல இடம் பெற்றுள்ளன.
 கல்கி இதழ் மூலம் நன்கொடை வசூலித்து எட்டயபுரத்தில் பாரதியாருக்கு மணிமண்டபம் கட்டியது கல்கிதான். "பாரதி ஸ்பெஷல்' என்ற ரயில் கோவில்பட்டிக்கு விடப்பட்டது. இந்த பாரதி மண்டபம் கட்டும் பணிகளுக்கான அலுவலகமாக டி.கே.சி.யின் குற்றால வீடு இருந்தது.
 ரசிகமணி டி.கே.சி. 1954-ஆம் ஆண்டு தனது 73-ஆம் வயதில் மறைந்தார். "கம்பனைப் போன்று ஒரு ரசிகன் கிடைப்பதற்கு வள்ளுவர் 700 ஆண்டுகள் காத்திருந்தார். டி.கே.சி.யைப் போன்ற ஒரு ரசிகன் கிடைப்பதற்கு கம்பன் 1,000 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது' என டி.கே.சி.க்குப் புகழ்மாலை சூட்டினார் ஜஸ்டிஸ் மகராஜன்.
 தன் உற்ற நண்பர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்த சமயத்தில் கூட தனக்கென எதையும் பெற்றுக் கொள்ள முனையாது குற்றால முனிவராகவே வாழ்ந்தார் டி.கே.சி. அவர், தனது இறுதிக் காலத்தில் வசித்த இரண்டு வீடுகளும் இன்று சுற்றுலாப் பயணிகள் வாடகைக்குத் தங்கும் விடுதிகளாக இருப்பதைப் பார்க்க சங்கடமாயிருக்கிறது. அவரது நினைவாக உள்ள நூலகத்தின் பெயர் பலகைகூட நிறம் மங்கி நிற்பது டி.கே.சிக்கு பெருமை தருவதாயில்லை.
 இதற்கு மாறாக, பழைய குற்றாலத்துக்கு செல்லும் பாதையில் அமைந்திருக்கும் அவரது நினைவிடம் நம் மனச்சோர்வை அகற்றுவதாய் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் திரிகூட மலையின் நீலச் சிகரங்களின் நிழலில் பசுமை கொஞ்சும் வயல்வெளிகளின் புறத்தில் எளிமையாக அமைந்துள்ளது அவரது நினைவிடம்.
 பொருநை ஆற்று ஞானியாகவும், திருநெல்வேலி கன்னல் தமிழின் காவலராகவும் வாழ்ந்தவர் டி.கே.சி. கம்பனின் கவியுள்ளத்துக்கும், தமிழுக்கும், கடித இலக்கியத்துக்கும், தமிழிசைக்கும் உழைத்த.டி.கே.சி.க்கு உரிய மரியாதையை செலுத்த வேண்டியது நமது கடமையாகும்.
 
 கட்டுரையாளர்:
 அரசியலாளர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com