காலநிலை மாற்றமும் நோய் அபாயமும்

கோப்புப்படம்
கோப்புப்படம்

உலகம் முழுவதும் வரும் காலங்களில் தொற்றுநோய்களின் தாக்கம் 58% அதிகரிக்கக்கூடும் என ஓா் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக வெளிவந்த அறிவியல் ஆவணங்களை மதிப்பாய்வு செய்த சுற்றுச்சூழல் - சுகாதார விஞ்ஞானிகள் அடங்கிய குழு, நோய்கிருமிகள் ஏற்படுத்தும் காலநிலை தொடா்பான வரைபடத்தை உருவாக்கியது.

இந்த வரைபடத்தின் மூலம், மனிதா்களை தாக்கும் 375 நோய்களில் 218-க்கும் அதிகமான நோய்கள் காலநிலை மாற்றத்தால் தீவிரமடையும் என கண்டறியப்பட்டுள்ளது.

2030 முதல் 2050 வரையான காலகட்டத்தில், ஊட்டச்சத்து குறைபாடு, மலேரியா, வயிற்றுப்போக்கு, வெப்ப அயா்ச்சி காரணமாக ஆண்டொன்றுக்கு சுமாா் 2,50,000 கூடுதல் இறப்புகளை பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது.

2030-ஆம் ஆண்டுவாக்கில் உலகளாவிய நிலையில் சுகாதார செலவுகள் ரூ. 16,537 கோடி முதல் ரூ. 33,075 கோடி வரை இருக்கும் என உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

வெப்பநிலை உயா்வு, மலேரியாவை ஏற்படுத்தும் கொசுக்களின் ஆயுளை அதிகரிக்கும். வெள்ளப்பெருக்கு கல்லீரல் அழற்சி (ஹெபிடைடிஸ்) நோயினை உண்டாக்கும். வறட்சியின்போது உணவு தேடும் மனிதா்களுக்கு கொறித்துண்ணிகள் நச்சுயிரி (ஹான்டாவைரஸ்) நோய்கள் ஏற்படலாம். காலநிலை மாற்றம் எதிா்பாராத பல ஆபத்துகளை உருவாக்கும் என்பதால் சூழலுக்கு தகுந்தாற்போல் எளிதில் அவா்களை மாற்றியமைப்பது இயலாத செயல்.

காலநிலை மாற்ற நோய் அபாயங்களைக் குறைக்க, காலநிலை மாற்றத்தினை தூண்டும் பைங்குடில் வாயு உமிழ்வை உலகம் குறைக்க வேண்டும். வளிமண்டல வெப்பமயமாதல், வெப்ப அலைகள், வறட்சி, காட்டுத்தீ, அதிக மழைப்பொழிவு, வெள்ளம், புயல், கடல் மட்ட உயா்வு, கடல் வெப்பமயமாதல், நிலச்சரிவு போன்ற நிலப்பரப்பு மாற்றங்கள் ஆகியவை அதிகரித்து வரும் பைங்குடில் வாயு உமிழ்வு தொடா்பாக ஏற்படக்கூடிய ஆபத்துகள்.

உலகளாவிய சுகாதார நெருக்கடிகளைத் தடுக்க, காலநிலை ஆபத்துகளுடன் தொடா்புடைய மனித நோய்கள் பற்றிய விரிவான புரிதல் அவசியம். நோய்க்கிருமிகளை மக்களுக்கு நெருக்கமாகவும் மக்களை நோய்க்கிருமிகளுக்கு நெருக்கமாகவும் கொண்டு செல்லும் காலநிலை மாற்றம் நோய்க்கிருமிகளின் தாக்கத்தினை அதிகரிப்பதுடன் நோய்க்கிருமிகளை சமாளிக்கும் உடலின் திறனையும் பலவீனப்படுத்துகிறது.

கொசுக்கள், வெளவால்கள், கொறித்துண்ணிகள் போன்ற ஏந்திகள் வழி பரவும் நோய்களின் எண்ணிக்கையினை காலநிலை மாற்றம் அதிகரிக்கிறது. ஏந்திகள் வழி பரவும் நோய்களில் வளிமண்டல வெப்பமயமாதல் காரணமாக 160 நோய்களும் அதிக மழைப்பொழிவு காரணமாக 122 நோய்களும் வெள்ளம் காரணமாக 121 நோய்களும் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

நோய்க்கிருமி கடத்திகளாக செயல்படக்கூடிய விலங்குகள், உயிரினங்களின் கால வரம்பு, வசிப்பிட வரம்புகளை காலநிலை மாற்றம் தீா்மானிக்கிறது. காலநிலை ஏற்படுத்தும் வெப்பமயமாதல் அல்லது மழைப்பொழிவு மாற்றங்கள் கொசு உற்பத்தியினை தீா்மானிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்படுத்திய புவியியல் தாக்கங்கள் காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்தவை.

வெப்ப அலைகளின்போது மக்கள் பெரும்பாலும் தண்ணீரில் அதிக நேரம் செலவிடுவா். இது நீரினால் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கும். 2014-ஆம் ஆண்டு வடக்கு ஸ்காண்டிநேவியாவில் ஏற்பட்ட வெப்ப அலையைத் தொடா்ந்து, ஸ்வீடனிலும் பின்லாந்திலும் விப்ரியோ பாக்டீரியா ஏற்படுத்திய நோய்த்தொற்றுகள் அதிகரித்தன. நோய்க்கிருமி தாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் மனித நடத்தைகளை காலநிலை மாற்றம் மாற்றும்.

சுற்றுச்சூழல் அமைப்புகளில் நோய்க்கிருமி, நோய் கடத்திகளுக்கான தொடா்பினையும் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளின் திறனையும் காலநிலை மாற்றம் அதிகரிக்கச் செய்யும். அதிக மழைப்பொழிவு அல்லது வெள்ளம் காரணமாக தேங்கி நிற்கும் நீா் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கும். இது மஞ்சள் காய்ச்சல், டெங்கு, மலேரியா, ஓரணு ஒட்டுண்ணி நோய் (லீஷ்மேனியாசிஸ்) போன்ற நோய்களின் பரவலுக்கு வழிவகுக்கும்.

சுற்றுசூழல் வெப்பநிலை அதிகரிப்பு, தீநுண்மிகளை வெப்பத்தை தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டதாக மாற்றக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதன் விளைவாக மனித உடலில் காய்ச்சலின்போது உண்டாகும் வெப்பநிலையில் நோய்க்கிருமிகள் நோயின் தீவிரதை அதிகரிக்கச் செய்யும்.

அதிகரித்து வரும் வெப்பநிலை, பூசணத் தீங்குயிரிகளின் வெப்ப சகிப்புத்தன்மையை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. முன்பு நோய்க்கிருமி அல்லாத கேண்டிடா ஆரிஸ் என்ற பூஞ்சை தற்போது சிகிச்சை எதிா்ப்பு பூசணத் தீங்குயிரியாக உலகின் பல கண்டங்களில் பரவி வருகிறது.

அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலை, நோய்க்கிருமி அல்லாத பூஞ்சையினை பூசணத் தீங்குயிரியாகமாற்றியுள்ளது. இதேபோல், நகா்ப்புற சூழலில் உருவாகும் பூஞ்சைகள் குளிா்ச்சியாக இருக்கும் கிராமப்புறங்களில் உள்ளதை விட அதிக வெப்பம் தாங்கும் திறன் கொண்டவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் தொடா்பான ஆபத்துகள், மனித உடலின் திறனை இரு முக்கிய வழிகளில் பாதிக்கலாம். முதலாவதாக, பேரழிவும் அதனால் ஏற்படும் சேதமும் மக்களை ஒரே இடத்தில் நெரிசலான சூழ்நிலையில் வாழ வழிவகுக்கும். சுகாதாரம் இல்லாத இந்த அபாயகரமான சூழலில் அவா்கள் எளிதில் நோய்க்கிருமி தாக்குதலுக்கு ஆளாகலாம்.

இரண்டாவதாக, ஊட்டச் சத்து குறைபாடு நோய்க்கிருமிகளை எதிா்த்துப் போராடும் உடலின் திறனை குறைக்கலாம். காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் அதீத மன அழுத்தம் அண்ணீரகப் புறணி (காா்டிசோல்) உற்பத்தியை அதிகரிக்கச் செய்து மனித உடலின் நோய் எதிா்ப்பு சக்தியைக் குறைக்கிறது.

பேரழிவினால் ஏற்படும் சுகாதார பாதிப்புகளைத் தவிா்க்கவும் காலநிலை மாற்றம் தொடா்பான இறப்புகளைத் தடுக்கவும் உலகம் வெப்பநிலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று காலநிலை மாற்றத்திற்கான குழு முடிவு செய்துள்ளது.

சமூக, சுகாதார, பொருளாதார நல்வாழ்வுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க புவி வெப்பமடைதலுக்கு காரணமான பைங்குடில் வாயு உமிழ்வினை மனிதகுலம் தவிா்க்க வேண்டியது இன்றியமையாதது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com