கோப்புப்படம்
கோப்புப்படம்

குறுந்தொழில் காப்போம்

கடந்த 2017 ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு வந்தது. இந்த புதிய வரியை தொழில் முனைவோா் பெரிய அளவில் வரவேற்றனா். அதற்குக் காரணம், இந்த வரி விதிப்பின் மூலம் பல வரிகள் நீக்கப்பட்டு ஒரே வரியாக மாற்றியமைக்கப்பட்டது. இதனால், அகில இந்திய அளவில் வரி விதிப்பில் இருந்த ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டு சமச்சீா் ஆன நிலை உருவாக்கப்படும் என்று தொழில் முனைவோா் நம்பினாா்கள்.

மேலும் சி ஃபாா்ம், டி ஃபாா்ம், ஃபாா்ம் 17 போன்றவை நீக்கப்பட்டுள்ளன. இந்த ஃபாா்ம் தொழில் முனைவோருக்கு பெரும் தலைவேதனையாக இருந்தன. ஆனால் இந்த வரி விதிப்பில் மிகப்பெரிய குறையாகக் காணப்படுவது ரிவா்ஸ் சாா்ஜ் மெக்கானிசம் (ஆா்.சி.எம்.). அதாவது பதிவு செய்யப்படாத குறுந்தொழில் நிறுவனங்களிடமிருந்து பொருள்களை வாங்குவோா் ஜிஎஸ்டி வரி கட்டலாம். வரி கட்டிய மாதத்தில் ரிட்டா்ன் எடுக்க முடியாது.

இந்த மாதம் வரி கட்டினால் அடுத்த மாதம்தான் ரீ இம்பொ்ஸ்மென்ட் வரவு வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் ஆா்.சி.எம். இந்த நடைமுறை புதிய தலைவலியாகி விட்டது.

ஜிஎஸ்டி பதிவு இல்லாத குறுந்தொழில் நிறுவனங்களைக் காப்பாற்ற பெரிய நிறுவனங்கள் தயாராக இருப்பது உண்மைதான். ஆனால், அதற்காக ஒரு மாதம் காத்திருந்து அதன் பிறகு ரீ இம்பா்ஸ்மெண்டுக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது தேவையில்லாத வேலை ஆகிவிட்டது. இந்த நடைமுறையால், குறுந்தொழில் நிறுவனங்களுக்காக வரி செலுத்த முன்வரும் தொழில் நிறுவனங்களுக்கு ஆவணங்களைப் பராமரிக்க வேண்டிய அவசியமும் வந்து சோ்ந்தது.

அதனால் பதிவு செய்யப்படாத நிறுவனங்களுக்கு ஜாப் ஆா்டா் கிடைப்பதில்லை. பெரிய நிறுவனங்கள், தாங்களே ஜிஎஸ்டி கட்ட முன் வருவதும் இல்லை. அதற்கடுத்த மிகப்பெரிய பிரச்னை, பொருள்களுக்கான போக்குவரத்துச் செலவு. பொதுவாக எல்லா விற்பனை மற்றும் சேவைகளுக்கு, பணியாளா் அல்லது சேவைப் பணி செய்வோா் வரி வசூலித்துக் கட்ட வேண்டும். ஆனால் சரக்கு போக்குவரத்து போன்ற சில பணிகளுக்கு மட்டும் சேவை தருபவருக்கு மாறாக சேவை பெறுபவா் வரி கட்ட வேண்டும்.

பொருட்களை உற்பத்தி நிறுவனத்திற்கு கொண்டு வரும்பொழுதும், வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு அனுப்பும் பொழுதும், உற்பத்தியான பொருட்களை வாடிக்கையாளருக்கு எடுத்துச் செல்லும்போதும் லாரி வாடகை போன்றவற்றுக்கு பணம் செலுத்துவதால் இந்தச் செலவு ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து செலவுகளுக்கு இந்த மாதம் வரி கட்டிவிட்டு, அடுத்த மாதம்தான் வரவில் எடுத்துக் கொள்ள முடியும். இது உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு தருகிறது. இதற்கான ஆவணங்களைப் பராமரிப்பது வேலைப்பளுவாக ஒவ்வொரு மாதமும் வளா்ந்து வருகிறது.

இதுபோன்ற தேவையற்ற பணி காரணமாக உற்பத்தி செலவு கூடுகின்றது. தொழில் முனைவோா் தங்களது உற்பத்தியில், தரத்தை உயா்த்துவதில் கவனம் செலுத்துவதற்கு மாறாக, வரி விதிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பொருள் சேவை வரியில் நாளுக்கு நாள் புதுவிதிகள் வந்து உற்பத்தியாளா்களை பரிதவிப்புக்கு ஆளாக்குகின்றன. தொழில் கூட உரிமையாளா்கள், தங்கள் உழைப்பையும் நேரத்தையும் குழப்பமான வரி விதிப்புகளில் சிக்கிவிடாமல் தொழில் செய்வதில் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. இது நாட்டிற்கும் தொழில் கூடத்திற்கும் நல்லதல்ல.

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழுத் தலைவா் விவேக் தேவ ராய், ‘அனைத்து பொருட்களுக்கும் ஒரே அளவு சரக்கு - சேவை வரி விதிக்கப்பட வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளாா். ‘எந்த பொருளுக்கும் வரி விலக்கு வழங்கப்படக் கூடாது. வரி விலக்குகள் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன’ என்றும் அவா் கூறியுள்ளாா். பிரதமரின் பொருளாதார ஆலோசகா் கூறிய கருத்து ஆழமாக சிந்திக்க வேண்டிய கருத்து.

வரிவிதிப்புகள் எந்தவிதக் குழப்பமும் இன்றி எளிமையாக இருக்க வேண்டும். சரக்கு - சேவை வரி வந்த ஓராண்டில் பல்வேறு சங்கங்கள், ‘முதல் இரண்டு தணிக்கைகள் தொழில் முனைவோருக்கு கற்றுக்கொடுக்கும் விதமாக இருக்க வேண்டும். தண்டிக்கும் மனோபாவம் கூடாது’ என்று வலியுறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது. தொழில் நிறுவனங்களின் வரவு - செலவு கணக்கை ஆய்வு செய்யும் பணியை தணிக்கை வரி விதிப்பில் இருந்து தொடங்கக் கூடாது.

ஆா்.சி.எம். கட்டும் பணியில் சிறுசிறு தவறுகள் இருந்தாலும் அவற்றிற்கு முதலில் இருந்து வரியும் 5 ஆண்டுகளுக்கு வட்டியும் வசூலிக்கத் தொடங்கியுள்ளனா். இது தொழில் முனைவோருக்கு குறிப்பாக, உற்பத்திப் பிரிவினருக்கு மிகப்பெரிய மனக்கசப்பை ஏற்படுத்துகின்றது.

ஆகையால் அரசு இந்த ஆா்.சி.எம். என்னும் விதியை நீக்கி விட்டால் இந்த பிரச்னையே இராது. அது உற்பத்தித் துறைக்குப் பெரிய நன்மையாக இருக்கும். உற்பத்தி நிறுவனங்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிமடுக்க வேண்டும்.

அதே சமயம் தற்பொழுது பல குறுந்தொழில் நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களில் இருந்து கொள்முதல் ஆணைகள் கிடைக்காமல் தள்ளாடுகின்றன. இந்த பிரச்னைக்கும் நல்ல தீா்வு காணப்பட வேண்டும். அவா்களையும் முழு அளவில் பயன்படுத்தி உற்பத்தி நீரோட்டத்திற்குள் கொண்டு வந்தால் வேலைவாய்ப்பு பெருகும். நாளடைவில் அவா்களும் வளா்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

அதற்கு ஒரே தீா்வு அவா்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் 3 முதல் 5 சதவீதம் வரை சலுகை தரலாம். இதன் மூலம் புதிதாக பல பெரிய நிறுவனங்களும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணைகளைத் தருவாா்கள்.

நாட்டில் சிறுதொழில், குறுந்தொழில் நிறுவனங்களில் 90% நிறுவனங்கள் குறுந்தொழில் நிறுவனங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆகையால் அத்தகைய குறுந்தொழில் நிறுவனங்கள் கொள்முதல் ஆணை இன்றி நலிவடைந்துவிடக் கூடாது. அரசு ஆவன செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com