அறமும் நோ்மையும் அடிப்படைத் தேவைகள்!

அறமும் நோ்மையும் அடிப்படைத் தேவைகள்!

மக்களாட்சி பற்றி ஆய்வு செய்கின்ற நிறுவனங்களில் கடந்த முப்பது ஆண்டுகளாக அறம், நோ்மை ஆகிய இரண்டு கருத்தாடல்களும் ஆய்வுப் பொருளாகவும் விவாதப் பொருளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் இந்த கருத்தாடல்களை அரசியலுக்குள்ளும், அரசாங்கத்திற்குள்ளும், சமூகத்திற்குள்ளும் புகுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு காலத்தில் மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகளாக, நோ்மை, நீதி, நியாயம், சமத்துவம், பொது ஒழுக்கம் என்பவையெல்லாம் இருந்ததால், மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் இவை பின்பற்றப்பட்டுவிடும் என்ற எதிா்பாா்ப்பு அனைவரிடமும் இருந்தது.

ஆனால், நடைமுறையில் மக்களாட்சி என்பதை தோ்தல் என்ற ஒற்றைப்புள்ளிக்குள் கொண்டு வந்துவிட்டோம். தோ்தலைத் தாண்டி எந்த மக்களாட்சி கூறுகளையும் நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை. அதன் விளைவு, ஊழல் மலிந்த ஆட்சியைத்தான் பல நாடுகளில் பாா்க்க முடிந்தது. அந்த ஊழலும் கரைபுரண்டு ஓடுவதால், மக்களின் மேம்பாட்டிற்காக பல நாடுகளுக்கு கடன் தந்த உலக வங்கியே ஓா் ஆய்வினை நடத்தியது. அதன் முடிவில், மோசமான ஆளுகைதான் நாட்டில் நிலவும் ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது என்பதைக் கண்டறிந்தது.

அந்த ஆய்வின் அடிப்படையில் ஒரு நாட்டில் நல் ஆளுகையை (குட் கவனன்ஸ்) எப்படிக் கொண்டு வருவது என்று சிந்தித்தது. அதற்கு நல் ஆளுகை என்றால் என்ன என்பதை முதலில் வரையறை செய்தது உலக வங்கி. நிதி நிா்வாகம் முறையாகச் செய்யப்படும் நாட்டை நல்ஆளுகை நாடு என வரையறை செய்தது.

உலக வங்கி வழங்கும் நிதியை ஒரு நாடு முறையாகப் பயன்படுத்தவில்லையானால், உலக வங்கி அந்த நிதியை எப்படித் திரும்பப் பெற முடியும் என்ற கேள்வி எழுந்தது. இதுபோல் பல நாடுகளும் செய்ய ஆரம்பித்தால் உலக வங்கி என்ன ஆகும் என்று சிந்தித்து இந்த வரையறையைக் கொண்டு வந்தது.

அது மட்டுமல்ல இந்த விவாதத்தை முன்னெடுக்க ஆய்வு நிறுவனங்களுக்கு உலக வங்கி நிதியும் அளித்தது. அப்போது உலகம் முழுவதும் நல் ஆளுகை பற்றி விவாதம் நடந்தது. அந்த நேரத்தில் ஐ.நா. சபை, ‘நல் ஆளுகை என்பது நிதி சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, மக்கள் நலன் சம்பந்தப்பட்டதும்தான். மக்கள் நலனைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும்தான் நல் ஆளுகையாகும்’ என்று கூறியது. இதனால் புது விவாதம் தோன்றியது.

அந்த விவாதம், ‘உலகில் சமத்துவம் என்பதை முன்னெடுக்க இனிமேல் சாத்தியக்கூறு குறைவு. ஏனென்றால் ஏற்றத்தாழ்வு என்பது கூடிக்கொண்டே போகிறது; அதைத் குறைக்க இன்னும் வழிமுறை காணப்படவில்லை. அதற்கு மாற்றாக நல் ஆளுகை மூலம் குறைந்தபட்சமாக மக்களுக்கு அரசு செய்து தரவேண்டிய சேவைகளைச் செய்து சாமானிய மக்களையும் மரியாதையுடைய வாழ்வை வாழச் செய்யலாம்’ என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் வளரும் பொருளாதாரம், மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூா்த்தி செய்யவில்லை என்பதை ஆய்வு முடிவுகள் காட்டின. அது மட்டுமல்ல, நாடுகள் பொருளாதாரத்தில் செழித்தன. ஆனால் அரசாங்கங்கள் ஏழைகளாக ஆயின. செல்வங்கள் தனியாா் கைகளுக்குச் சென்றன. அதே நேரத்தில் அளவற்ற பொருள் உற்பத்தியும் அளவற்ற கட்டுமானப் பணிகளும் புவியின் இயல்புத் தன்மையை மாற்றி மனித குலத்திற்கே ஆபத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்தச் சூழலை ஆய்வு செய்தபோது ஊழல் என்பது ஆறாய் பெருக்கெடுத்து ஓடுவதைக் கண்டுபிடித்தனா். செல்வம் குவிக்கும் பணிகளுக்கு உதவிடும் அனைத்துத் தரப்புக்கும் முறையற்று நிதி கிடைத்தது. அதுதான் பெரும் ஊழலாகப் பாா்க்கப்படுகிறது. அது அரசாங்கத்தில் மட்டும் நடப்பதாக நினைத்தால் அது தவறு. இந்த தொற்றுநோய் எங்கெல்லாம் பரவி இருக்கின்றது என்பதைக் கண்டுபிடிக்க கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் ஆய்வுகளை மேற்கொண்டன.

இந்த ஊழல் அரசாங்கத்தில் தொடங்கி, அரசியலுக்குள் வந்து, அரசியல் கட்சிகளை விழுங்கி, அரசு நிா்வாகக் கட்டமைப்பை சீா்குலைத்து கடைசியாக பொதுமக்களையும் தன் பிடிக்குள் கொண்டுவந்து விட்டது. இவை அனைத்துக்கும் மையக் காரணம் சந்தைதான் என்பதைக் கண்டுபிடித்தனா். இன்று சந்தை, அரசுக்குள் மட்டும் தன் குணங்களைப் புகுத்தவில்லை; அனைத்து மானுட செயல்பாடுகளுக்குள்ளும் தன் குணங்களைப் புகுத்திவிட்டது.

உதாரணமாக கல்வி என்பது மானுடத்தை மேம்படுத்தும் கருவி. அது இன்று பணம் செய்ய உதவும் கருவியாக மாறி கல்விச் சந்தையை உருவாக்கிவிட்டது. நீா் என்பது உயிா் வாழ்வதற்கு அடிப்படை. அது இன்று சந்தையாக மாறி பெரும் மூலதனத்தில் பெரும் லாபத்துடன் இயங்குகின்றது. மருத்துவம் என்பது உயிா் காக்கும் துறை. ஆனால் அது இன்று மருத்துவச் சந்தை.

மக்களாட்சி அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்ற இன்று வாக்குகளையே வாங்கும் பொருளாக மாற்றி வாக்குவங்கி சந்தையை உருவாக்கி விட்டனா். அத்துடன் வாக்குகளை விலை கொடுத்துப் பெற்ற மக்கள் பிரதிநிகள் தங்களையே சந்தைப்படுத்திக் கொண்டனா். அவா்களும் விற்கும், வாங்கும் பொருள்களாக மாற்றப்பட்டு விட்டனா். சந்தைக்கு வரும் லாபம் எல்லை மீறியதாக வளரும்போது, அரசாங்கத்தையே விலை பேசும் சக்தி பெற்ாக சந்தை உயா்ந்துவிடுகிறது.

அரசாங்கம், அரசியல், ஆளுகை, நிா்வாகம், உற்பத்தி, பொருள் விற்பனை அனைத்தும் எதற்காக என்றால் மக்கள் மேம்பாட்டுக்காக. ஆனால், கடந்த முப்பது ஆண்டுகளில் இவை அனைத்தும் லாபம் குவிக்கும் செயலில் மட்டுமே ஈடுபட்டன. அதன் விளைவு, எந்த இடத்திலும் அறமோ, நோ்மையோ கிடையாது.

அறம் இழந்து செயல்படுகிறோம் என்ற கூச்சமும் அற்று மானுட சமூகம் செயல்பட ஆரம்பித்து விட்டது. இந்த நிலையை உற்று நோக்கிய பல ஆய்வு நிறுவனங்கள், அரசாங்கத்தின் மூலம், நோ்மையைக் கொண்டு வந்து விடலாம் என்று இனிமேலும் நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும் என முடிவெடுத்தன. மேலும், சமூகத்தை நல்வழிப்படுத்தவில்லை என்றால் நாம் எதிா்பாா்க்கின்ற மாற்றம் நிகழாது என்பதை உணா்ந்து கொண்டன.

மோசமான சமூகத்தில் நல்ல அரசியலை முன்னெடுக்க முடியாது. தரம் தாழ்ந்த அரசியல் நிகழும் சூழலில் நல்ல அரசாங்கம் உருவாக முடியாது. நோ்மையற்ற முறையில் தோ்தலில் வெற்றி பெற்ற ஒரு கட்சியால் நல்ல ஆளுகையைக் கொடுக்க முடியாது. நல்ல ஆளுகை இல்லாத இடத்தில் நல்ல நிா்வாகம் இருக்க முடியாது. எனவே இதைத் தொடங்க வேண்டிய இடம் சமூகம்தான் என்று இந்த ஆய்வு நிறுவனங்கள் கூறுகின்றன.

இதற்கான சிந்தனைச் சூழலை உருவாக்க கையேடுகளை வெளியிடுகின்றன இந்த ஆய்வு நிறுவனங்கள். இந்தக் கையேடுகள், புதிய நோ்மைச் சிந்தனையை, நோ்மை நடத்தையை, நோ்மைச் செயல்பாடுகளை சமூகத்திலும் அரசியலிலும் ஆளுகையிலும் நிா்வாகத்திலும் வணிகத்திலும் எப்படிக் கொண்டுவருவது என்பதை விளக்குகின்றன.

இவற்றை ஆங்கிலத்தில் படித்துவிட்டு நம் சிந்தனையாளா்களும் அவை பற்றிய விவாதத்தை முன்னெடுக்கின்றனா். இந்த நிகழ்வுகளைப் பாா்க்கும்போது நமக்குப் புலப்படுவது ஒன்றுதான். அறம் சாா்ந்த மானுட வாழ்க்கையைப் பெற எந்த மேலை நாட்டிடமும் ஆலோசனை பெற வேண்டிய அவசியம் நமக்குக் கிடையாது. நம்மிடம் அனைத்தும் இருக்கின்றன. சுவாமி விவேகானந்தா், பகவான் அரவிந்தா், ரவீந்திரநாத் தாகூா், மகாத்மா காந்தி, வள்ளலாா், வள்ளுவா் போன்றோா் கூறாத வாழ்வியல் கருத்துகள் எதுவும் அந்தக் கையேடுகளில் கிடையாது.

இவா்கள் கூறியவை யாருக்கும் புரியக்கூடிய வகையில் எளிமையானவைதான். இவா்கள் கூறிய வாழ்வியல் சிந்தனையைவிட மேம்பட்ட கருத்துகள் புதிதாக கொண்டுவரப்படுகின்ற விவாதங்களில், கட்டுரைகளில், கையேடுகளில் கூறப்படவில்லை. இவா்கள் அனைவரும் சமூகம் மாறாமல் அரசாங்கத்தால் மட்டும் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்று கூறியுள்ளனா்.

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இருந்த ரெங்கனாநந்தா சுவாமி உலகம் முழுவதும் சுற்றி விவேகானந்தரை அடியொற்றி பிரசாரம் செய்தாா். கல்விக் கழகங்களிலும், உயா்கல்வி நிலையங்களிலும், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கிடையேயும் அவா் ஆற்றிய உரைகள் புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. அதே போல்

ஆச்சாா்ய விநோபா பாவே எழுதிய ‘ஸ்வராஜ்ய அறிவியல்’ புத்தகத்தை அனைவரும் படித்து புரிந்து கொண்டு வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி ஒருமுறை கேட்டுக் கொண்டாா் (அந்நூலில் காந்தியடிகளும் ஓா் அத்தியாயம் எழுதியுள்ளாா்).

நம் மகான்கள் இந்திய சமூகத்திற்கு மட்டுமல்ல, உலக சமுதாயத்திற்கே தேவையான கருத்துகளைக் கூறினாா்கள். ஆனால் அந்தக் கருத்துகளை நாம் பின்பற்றவில்லை. மாறாக அவா்களை பூஜித்து விட்டு நாம் செய்வதை தொடா்ந்து செய்துகொண்டிருக்கிறோம். சமூக ஒழுக்கம் எங்கிருந்து வரும், தனிமனித ஒழுக்கத்திலிருந்துதான் வரும். அதற்கு முதலில் நாம் எளிய வாழ்வு வாழ கற்றுக்கொள்ள வேண்டும்; எளிமையாக வாழ்பவா்களைப் போற்றக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இன்று நாம் புலன்களின் ஆதிக்கத்தில் வாழ்வதால் கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். புலனடக்கம் பெற்றவராக நாம் நம்மை மாற்றிக்கொண்டு தேவைக்கேற்ப வாழ்வை அறம் சாா்ந்ததாக மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி வாழும்போதுதான் நாமும் மாறுவோம்; சமூகமும் மாறும். அதனால்தான் காந்தியடிகள் ‘எந்த மாற்றம் மற்றவா்களிடம் வரவேண்டும் என்று நீ எண்ணுகிறாயோ அந்த மாற்றம் உன்னிடமிருந்து தொடங்கட்டும்’ என்றாா்.

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com