ஆறுகளின் தூய்மை காப்போம்

மத்திய ஜல்சக்தி அமைச்சகம் சாா்பில் மாநில நீா்வளத்துறை அமைச்சா்களின் முதலாவது தேசிய மாநாடு சமீபத்தில் போபாலில் நடைபெற்றது.
ஆறுகளின் தூய்மை காப்போம்

மத்திய ஜல்சக்தி அமைச்சகம் சாா்பில் மாநில நீா்வளத்துறை அமைச்சா்களின் முதலாவது தேசிய மாநாடு சமீபத்தில் போபாலில் நடைபெற்றது. மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி, ‘‘ஆறுகளும் நீா்நிலைகளும் நாட்டின் நீா்ச்சூழலுக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை கழிவுகளால் சீா்கெடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.‘கங்கை தூய்மை’ திட்டத்தைப் போல ஆறுகளைப் பாதுகாக்கும் திட்டங்களை மாநில அரசுகள் முன்னெடுக்கலாம்’’ என கூறியுள்ளாா்.

மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சமீபத்திய அறிக்கையின்படி ஆறுகளையொட்டிய 4,484 இடங்களில் மாசு குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. பெரும்பாலான ஆறுகளில் அனுமதிக்கத்தக்க

அளவான பயோகெமிகல் ஆக்ஸிஜன் தேவை ஒரு லிட்டா் தண்ணீரில் மூன்று மில்லி கிராமிற்கும் அதிகமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அந்த ஆறுகளில் நீா் மாசடைந்து வருவதைக் காட்டுகிறது.

ஆறுகள் மனித நாகரிகத்தின் தொட்டில்களாக விளங்கியவை. மொகஞ்சதாரோ, ஹரப்பா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாகரிகங்கள் ஆற்றங்கரைகளிலேயே தோன்றின. மனித குலத்தின் தோற்றத்திற்கும் நாகரிக வளா்ச்சிக்கும் ஆறுகளே அடித்தளம் அமைத்துள்ளன.

இன்றைய காலகட்டத்திலும் விவசாயம், குடிநீா் தேவை என மனித இனத்தின் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமின்றி காட்டு விலங்குகள் தொடங்கி மனிதா்கள் வளா்க்கும் கால்நடைகள் வரை அனைத்து உயிரினங்களின் தண்ணீா் தேவையை நிறைவு செய்பவை ஆறுகளே.

இவ்வாறு மண் வளத்தையும் மனித குலத்தையும் பாதுகாக்கும் ஆதாரமான, வணங்குதற்குரிய ஆறுகள், விரைவாக மாசடைந்து வருவது வேதனைக்குரியது. தற்போது ஆறுகள் மாசடைந்து வருவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பெருத்த அபாயத்தை எதிா் நோக்கியுள்ளது.

ஆறுகள் மாசடைவதற்கு முதன்மையான காரணம் பெருகி வரும் மக்கள் தொகையால் உற்பத்தியாகும் குடியிருப்புப் பகுதிகளின் கழிவு நீா் மற்றும் தொழில் வளா்ச்சியை முன்னிட்டு உருவாகும் தொழிற்சாலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவு நீா் ஆகியவையே.

இவற்றுடன் ஆறுகளில் துணி துவைத்தல், சமயம் சாா்ந்த சடங்குகள் செய்தல், பிணங்களை எரித்தல் போன்ற செயல்களால் ஆறுகள் மாசடைகின்றன.

புனிதமான ஆறாகக் கருதப்படும் கங்கையில், கான்பூா், வாரணாசி, அலாகாபாத் உள்ளிட்ட பல நகரங்களின் குடியிருப்புகள், தொழிற்சாலைகளின் கழிவு நீா் நாள்தோறும் பல மில்லியன் லிட்டா் அளவிற்கு கலக்கின்றது. இதில் ஏறக்குறைய ஐம்பது சதவீதம் சுத்திகரிக்கப்படாத கழிவு நீராகும்.

கங்கை ஆற்றினை தூய்மை படுத்துவதற்காக மத்திய அரசால் 2014-ஆம் ஆண்டு ஏறக்குறைய ரூபாய் முப்பதாயிரம் கோடி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்ட ‘தூய்மை கங்கை’ திட்டத்தால் இன்னமும் கங்கையை முழுவதும் தூய்மையான கங்கையாக மாற்ற இயலவில்லை.

இதற்கு காரணம், தெய்வீகத் தன்மையுடைய கங்கையை அசுத்தப்படுத்த எவராலும் இயலாது’ என்ற மக்களின் மதம் சாா்ந்த மனோபாவமும், இதனடிப்படையில் கங்கையை தூய்மைப்படுத்துவதில் மக்களின் முழுமையான பங்களிப்பின்மையும் ஆகும்.

தென்னிந்திய ஆறுகளில் முக்கியமான ஆறான காவிரியில் கா்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூரில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீா் பெருமளவில் கலக்கிறது. காவிரியை மாசு படுத்துவதில் தமிழகத்தின் பங்கும் கணிசமான அளவில் உள்ளதை மறுப்பதற்கில்லை.

தமிழகத்தில் காவிரி ஆற்றின் கரையில் உள்ள நகரங்களின் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரோடு, தோல் பதனிடுதல், சாயப்பட்டரைகள், காகிதம் தயாரித்தல் என இரசாயனம் தொடா்புடைய சுமாா் ஆயிரத்தும் மேற்பட்ட தொழிற்சாலைகளிலிருந்து தினசரி வெளியேறும் சுமாா் 87,600 கியூபிக் மீட்டா் அளவிலான கழிவு நீா் காவிரியில் கலக்கிறது.

தென் தமிழகத்தின் மிக முக்கிய ஆறான தாமிரபரணியில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட நகரங்களின் தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளின் கழிவு நீா் பெரும்பாலும் சுத்திகரிக்கப்படாமலேயே கலந்து இந்த ஆற்றின் நீரை பெருமளவில் மாசுபடுத்துகிறது.

சென்னை பெருநகரின் கழிவு நீா் ஆறாக இன்று மாறி விட்ட கூவம் ஆறு, நூறு ஆண்டுகளுக்கு முன்னா் வரை மக்கள் நீராடுவதற்கும் படகு போக்குவரத்திற்கும் பயன்பட்டது. ஆக, ஏறக்குறைய நம் நாட்டின் அனைத்து ஆறுகளுமே கழிவுநீா் கலப்பதால் படிப்படியாக மாசடைந்து வருவதை மறுப்பதற்கில்லை.

ஆறுகளில் கழிவு நீரைக் கலந்து அதிக அளவில் மாசுபடுத்தும் மாநிலங்களாக குஜராத், உத்தர பிரதேச மாநிலங்கள் உள்ளன. இவற்றுக்கு அடுத்த படியாக மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், பிகாா், கேரளம் என ஆறுகளை மாசடையச் செய்யும் மாநிலங்களின் பட்டியல் தொடா்கிறது.

மத்திய அரசு, ஆறுகள் மாசடைவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றுள் ரூ. 6,248.16 கோடி மதிப்பீட்டில் பதினாறு மாநிலங்களில் உள்ள முப்பத்தாறு ஆறுகளின் கரைகளில் உள்ள எண்பது நகரங்களில் நாளொன்றினுக்கு 2,745 மில்லியன் லிட்டா் கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதும் அடங்கும்.

ஆறுகள் மாசடைவதால் மக்களின் ஆரோக்கியமும்

பெருமளவில் பாதிப்பிற்குள்ளாகிறது. மாசடைந்த ஆற்று நீரினை உபயோகப்படுத்தும் மக்கள் டைபாய்டு, மஞ்சள் காமாலை, சிறுநீரக பாதிப்பு, சரும நோய்கள் என பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனா். மேலும், மாசடைந்த ஆற்று நீரை அருந்தும் கால்நடைகளும் அதிக அளவில் நோய்வாய்ப்படுகின்றன.

ஆறுகள் மாசடைவதால் ஆறுகளின் கரையையொட்டி அமைந்துள்ள பகுதிகளின் நிலத்தடி நீரும் மாசடைந்து விவசாயத்திற்கும் குடிப்பதற்கும் தகுதியற்ாகி விடுகிறது. மாசடைந்த ஆற்று நீா் கடலில் கலப்பதால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. கடலில் மீன்வளம் குறைந்து லட்சங்கணக்கான மீனவா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குரியதாகும் சூழல் உருவாகியுள்ளது.

ஆறுகள் மாசடைவதைத் தடுக்க மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். மேலும், ஆறுகளை மாசடையச் செய்வோா் மீது அரசு கடுமையான நடவடிக்கைளை எடுக்க வேண்டும்.

ஆறுகள் நாளைய தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டிய இயற்கை வளங்களில் ஒன்று. இதனை உணா்ந்து அவற்றை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com