நீந்துதல் அறியாக் குழந்தைகள்!

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

 'ஓடி விளையாடு பாப்பா' என்று குழந்தைகளை விளையாடச் சொன்னார் மகாகவி பாரதியார். ஆனால், அவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பெற்றோர்கள் கவனத்துடன் மேற்பார்வை செய்திட வேண்டும் எனச் சொல்லாமல் விட்டுவிட்டார் போலும்!
 கைப்பேசியைப் பார்த்துக் கொண்டே நடந்து சென்ற மூன்று வயதுக் குழந்தை ஒன்று அருகிலிருந்த தரைமட்டக் கிணற்றில் தவறி விழுந்து, பின்பு தீயணைப்பு வீரர்களால் சடலமாக மீட்கப்பட்ட அண்மைச்செய்தி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
 பத்தாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிக்கு சுற்றுலாச் சென்ற தம்பதி, தமது ஐந்து வயதுச் சிறுமியையும் உடன் அழைத்துச் சென்றிருந்தனர். எதிர்பாராதவிதமாக அங்கு வந்த சிறுத்தை ஒன்று அவர்களைத் துரத்த, அவர்களிருவரும் குழந்தையுடன் ஓட முயல, குழந்தை மட்டும் எவ்வாறோ அச்சிறுத்தையிடம் அகப்பட்டுக் கொள்ள, பெற்றோரின் கண் முன்னேயே அக்குழந்தை பறிபோனது.
 முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் ஏழெட்டுக்குக் குறையாமல் பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் தம்முள் சண்டையிட்டுக் கொண்டாலும், இப்போது போல் அதிக எண்ணிக்கையிலான விபரீதமான குழந்தை மரணங்கள் இருந்ததாகச் சொல்ல முடியவில்லை. பள்ளிக்கு செல்லாமல் வெளியில் சுட்டித்தனம் செய்தததைக் கண்டுபிடித்துவிட்ட தாய், தன்னை தண்டிக்கக்கூடும் என்ற அச்சத்தில் 13 வயதுச் சிறுவன் ஒருவன் திருச்சி, மேட்டுப்பட்டியில் தற்கொலை செய்து கொண்டான் என்ற செய்தி அண்மையில் வெளியானது.
 இக்காலத்தில், வீட்டுக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் இருந்தாலும், அவற்றின் மீதான பெற்றோரின் கவனம் குறைந்துவிட்டதோ என ஐயுறத் தோன்றுகிறது. வேலைக்கு செல்லும் பெற்றோர்களால், வீட்டில் தனியே விட்டுச் செல்லப்படும் குழந்தைகளில் பலர், எதிர்பாராத விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். இத்தகைய உயிரிழப்புகள் நகர்ப்புறங்களை விட, கிராமப்புறங்களில் அதிகம்.
 வேளாண்மைப் பணிக்குச் செல்லும் பெற்றோர்களில் பலர், போதிய அறிவுரைகளைச் சிறார்களுக்குத் தராமல் சென்றுவிடுவதுதான் இதற்குக் காரணம். அருகிலுள்ள வயற்காடுகளுக்குச் செல்லும் பொழுது உணவுப் பண்டங்களையும், விளையாட்டுச் சாமான்களையும் அருகில் வைத்துவிட்டுக் குழந்தையின் இடுப்பிலுள்ள அரைஞாண் கயிற்றை வேறொரு கயிற்றால் வீட்டுச் சன்னல் கம்பியுடன் "கால்நடைக் கன்றுகளைப் பிணைப்பது' போல் கட்டிவைத்துவிட்டுச் செல்லும் அவலம் சில இடங்களில் இன்றும் உண்டு. இது ஓர் அசட்டுச் செயலே.
 அண்மையில், சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சுவரில் சார்த்தி வைக்கப்பட்டிருந்த இரும்பு கேட் ஒன்று சரிந்து சிறுவன் ஒருவன் மீது விழ, அச்சிறுவன் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து இறந்து போனான். விடுதிப் பொறுப்பாளர்களின் அக்கறையின்மை ஒரு குழந்தையின் உயிரைப் பலிகொண்டுவிட்டது.
 வீட்டு மாடியிலிருந்து கீழே விழுந்து இறத்தல், ரூபாய் நாணயத்தை விழுங்கியதால் மூச்சுத் திணறி இறத்தல், பட்டாசுகள் வெடிக்கும்போது ஆடையில் தீப்பற்றி இறத்தல், மண்ணெண்ணை விளக்கினை வைத்துப் படித்துக் கொண்டிருக்கும் போது தீப்பற்றி இறத்தல், கொதிக்கும் சாம்பாரில் விழுந்து இறத்தல், இருசக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லும்போது விபத்தில் சிக்கி இறத்தல் எனப் பலவகையான குழந்தை இறப்புகளுக்கு, பெரியவர்களின் போதிய அக்கறையின்மையே காரணமாகிறது.
 இத்தகையை இறப்புகளைவிட, நீர்நிலைகளில் விழுந்து இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நீர்நிலைகளுக்கு அருகில் வசிப்போர், நீர்நிலைகளால் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ள விபத்துகளை எண்ணிப் பார்த்து, அதற்கேற்ப முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
 வீட்டின் அருகிலிருந்த சிறு குட்டையில், ஓரத்தில் வளர்ந்திருந்த செடியிலிருந்து பூவினைப் பறிக்கச் சென்று, தண்ணீரில் தவறி விழுந்த தங்கையைக் காப்பாற்ற முயன்ற, மூத்த சகோதரச் சிறுமிகள் இருவரும் ஒருவர்பின் ஒருவராக நீரில் இறங்க, ஆக மொத்தம் மூன்று சகோதரிகளுமே சடலமாக மீட்கப்பட்ட நிகழ்வு, ஒரு கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.
 மழைக் காலங்களில் குழந்தைளைக் காப்பதில் பெற்றோர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆறு, வாய்க்கால், குளம், குட்டை, ஏரி, அருவி, கடல் என ஒவ்வொரு நீர்நிலையாலும் ஏற்படக்கூடிய விபரீதங்களைக் குழந்தைகளுக்கு அறிவுறுத்திட வேண்டும். நீர்நிலைகளைக் குழந்தைகள் எளிதில் அணுகாதவாறு அவற்றைச் சுற்றிப் பாதுகாப்பு வேலிகளை அமைத்திட வேண்டும்.
 கடற்கரையில் நின்று, கடலின் அழகை ரசித்து மகிழும் பெற்றோர், குழந்தைகளையும் மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். கடலின் மீது அவர்களுக்கு அச்சம் பாதி, ஆசை பாதி இருக்கும் மனநிலையை உருவாக்கிட வேண்டும்.
 கழிவுநீர்க் கால்வாய்களை உரியவாறு மூடியிட்டு மூடிட வேண்டும். வீட்டிலுள்ள நீர்த் தொட்டிகளையும் அவ்வாறே மூடி வைக்க வேண்டும். குளியலறையில் அகண்ட பாத்திரத்தில் நீர் இருக்குமானால், அதுவும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
 தரைமட்டக் கிணறுகளுக்கு சுற்றுச்சுவர் எழுப்பப்பட வேண்டும். குட்டையான சுற்றுச்சுவர் இருப்பின், அதன்மீது இரும்புக் கம்பித் தட்டிகளால் மூடி போட வேண்டும்.
 குழந்தைகள் மட்டுமல்ல, இளைஞர்களும் கூட ஆறு, குளம், கடல், ஏரி இவற்றில் மூழ்கி இறந்துவிடுவதையும் ஊடகச் செய்திகளால் அறிய முடிகிறது. பெற்றோர்களின் அக்கறையின்மை ஒரு காரணம் என்றாலும், இக்கால இளைஞர்களுக்கு நீரில் நீந்தத் தெரியாததும் இத்தகைய அகால மரணங்களுக்குக் காரணமாகிறது.
 அண்மையில், திருப்போரூரில் குளமொன்றில் மூழ்கி மூன்று இளைஞர்கள் இறந்து போனது நெஞ்சை உருக்கும் செய்தியாக இருந்தது. காரைக்கால் கடலில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவனும் அண்மையில் இவ்வாறே இறந்து போனார்.
 முற்காலத்தில் குளம், வாய்க்கால், ஆறு, ஏரி, கிணறு இங்கெல்லாம் சிறுவர்களும் இளைஞர்களும் அச்சமின்றிக் குளித்து மகிழ்ந்தனர். நீரில் நீந்துதல் என்பது, அவகளுக்கு சாதாரணமாக இருந்தது. நெடுநேரம் மூச்சையடக்கி, நீரில் மூழ்கியிருத்தல், மூச்சையடக்கியே நீந்தி வெகுதூரம் செல்லுதல், உயரத்திலிருந்து நீரினுள் குதித்தல் என்பன அன்று சாதாரண நீர் விளையாட்டுகளே. கண்கள் சிவக்கும் வரை நீரில் குளிப்பதை இளைஞர்கள் வழக்கப்படுத்திக் கொண்டிருப்பர் முற்காலத்தில்.
 ஆனால், இக்காலத்திலோ, பெரும்பாலான நகர்வாழ் பிள்ளைகளுக்கு நீச்சல் தெரிவதில்லை. பிள்ளைகளுக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்துவதில்லை என்பது வருத்தத்திற்குரியது.
 முற்காலங்களில் நடுத்தர வர்க்கத்தினர் தத்தம் வீடுகளின் கொல்லைப்புறத்தில் கேணிகளை அமைத்து, அவற்றில் பெண்களும், சிறார்களும் நீராடி மகிழ்வர். மரக்கட்டைகள், வாழைத் தண்டுகள், காற்று நிரப்பப்பட்ட பெரிய "டியூப்'கள் போன்ற மிதவைகளைப் பயன்படுத்தி நீச்சல் கற்றுக் கொள்வர். இத்தகைய இயற்கையான நிகழ்வுகள் தற்காலத்தில் குறைந்துவிட்டன.
 நீர்நிலைகள் இருந்தும் அவற்றில் குளிப்பதைவிட, வீட்டுக் குளியலறைக் குளியலே நாகரிகமானது என எண்ணுவோரும் உண்டு. நீர்நிலைகள் மாசடைந்து காணப்படுவது, பொதுவெளியில் குளிப்பதில் சில அசெளகரியங்கள் இருப்பது உண்மைதான் என்றாலும், வாய்ப்புக் கிட்டும்போது நீர்நிலைகளில் குளிப்பதையும், நீந்துவதையும் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நீர்நிலைகள் அனைவரின் கண்காணிப்புக்கும் உள்ளாகும்.
 சங்க காலத்தில் நீர்நிலைகளுக்குக் குறைவில்லை. ஆடவர், பெண்டிரின் நீர் விளையாட்டுகள் முன்னிலைப்படுத்தப்பட்டன. சங்கப் பாடல்களில் "நீர் விளையாட்டு' என்ற துறையே உண்டு.
 பெருநகரங்களில் குழந்தைகளும் சிறார்களும் கட்டணம் செலுத்தி நீச்சல் பயிற்சி பெற வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு கட்டணம் செலுத்தி நீச்சல் பயிற்சிக்குச் செல்ல வசதியில்லாத பல சிறார்களுக்கு நீரில் நீந்தும் வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
 விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பெற்று வரும் நீச்சல்குள வசதி, எல்லா நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். பயன்பாட்டில் உள்ள நீச்சல் குளங்கள் வசதியில்லாதோரும் அணுகுமாறும், தூய்மையான நீரின் உத்தரவாதத்துடனும் பராமரிக்கப்பட வேண்டும்.
 பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுடன், நீச்சல் போட்டிகளும் நடத்தப் பெற வேண்டும். ஆண்கள் மட்டுமல்லாது, பெண்களுக்கும் நீச்சல் போட்டிகளில் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களின் தன்னம்பிக்கையும் துணிவும் மிகும்.
 கடலினை, அருவியை, ஏரியைக் கண்டிராத சிறார்களும் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை அங்கெல்லாம் அழைத்துச் சென்று, அவற்றை ரசிக்கவும், அங்கெல்லாம் நீந்தவும் பழக்கி, நீரின் மீதான அச்சத்தைப் பெற்றோர் போக்க வேண்டும்.
 திருமால் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பதாகவும், அகத்தியர் கடலினைக் கையால் அள்ளிக் குடித்ததாகவும், சிவபெருமான் கங்கையைத் தலையில் சூடியுள்ளதாகவும் கூறப்படும் புராணச் செய்திகள், நீர்நிலைகளுக்கும் மனிதனுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை எடுத்துக் காட்டுவனவாகும்.
 கோயில்களில் கிணறுகளும், குளங்களும் இன்றுவரை போற்றப்பட்டு வருகின்றன. அவ்வப்போது நடைபெற்று வரும் தீர்த்தவாரிகளும், தெப்போற்சவங்களும் நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை மனிதனுக்கு உணர்த்துகின்றன.
 நீர்நிலைகளோடு இணைந்து வாழ வேண்டும். நீந்தத் தெரியாத சிறார்களோ, இளைஞர்களோ இல்லை என்ற நிலை உருவாக வேண்டும். மனிதனின் சுவாச மண்டலத்தை வலுப்படுத்துவது நீச்சல் பயிற்சி.
 குழந்தைகள் அகால மரணம் அடையாமல் அவர்களைப் பாதுகாப்பது பெற்றோர்களின் கடமையாகும். நீரின்றி அமையாது உலகு; நீச்சலின்றி அமையாது வாழ்வு!
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com