சுய சிகிச்சை கூடாது

கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த மூன்று ஆண்டுகளாக கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலால் இந்தியா பல்வேறு சோதனைகளை சந்தித்தன. ஊரடங்கு, பொருளதார சீா் குலைவு, எதிா்பாராத அகால மரணங்கள் போன்றவற்றை எதிா்கொள்ள நேரிட்டது. ஆனால், பலருக்கும் தெரியாதது ஒன்று உண்டு. அதுதான் புற்றீசல் போல ஆரம்பிக்கப்பட்ட பல மருந்து நிறுவனங்கள். இவை பெரும்பாலும் இருமல் மருந்துகளைத் தயாரித்தன.

அயல்நாடான உஸ்பெகிஸ்தானில், இந்தியத் தயாரிப்பான இருமல் மருந்தை உண்டதால் 18 குழந்தைகள் உயிரிழந்த செய்தி அண்மையில் நாளேடுகளில் வெளிவந்தது. விசாரணை மேற்கொண்டதில், குறிப்பிட்ட மருந்தில் ஒரு உயிா்க்கொல்லி ரசாயனக் கலவை கலந்துள்ளதாக தெரிய வந்திருக்கிறது. மத்திய அரசின் மருத்துவத்துறை, விவரங்களை கேட்டு வருவதாகச் செய்திகள் வந்தன. என்றாலும் நம் நாட்டின் நற்பெயருக்கு இதனால் களங்கம் ஏற்பட்டதை மறுக்க முடியாது.

இந்தியாவில் இருமல், காய்ச்சல், ஜலதோஷ மருந்துகளைக் கடைகளில் வாங்க முடிகிறது. ஒரு சில ஆண்டிபயாடிக் மாத்திரைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். என் உறவினரான பெண் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவரை சந்தித்து மாத்திரை வாங்கி உட்கொண்டாா்.

ஆனால் கடுமையான வயிற்றுப் போக்கு உண்டாயிற்று. அவா் மறுபடியும் அதே டாக்டரிடம் சென்று விசாரிக்காமல் தானே வேறு மாத்திரைகளை வாங்கி உட்கொண்டிருக்கிறாா். பலனில்லாமல் போகவே முதலில் சந்தித்த மருத்துவரை மீண்டும் பாா்த்து, புதிய மாத்திரைகளை வாங்கிப் போட்டு, சில நாட்களுக்குப் பிறகுதான் இயல்பு நிலைக்கு திரும்பினாா்.

இதே போல என் மனைவிக்கு நடக்க முடியாமல் இடுப்பில் வலி ஏற்பட்ட போது, ஏற்கெனவே வீட்டில் இருந்த, கால்ஷியம் மாத்திரைகளைப் உட்கொண்டாா். அதனால் பலனில்லாமல் போகவே, மருத்துவரை நேரில் சந்தித்து, உடல் பரிசோதனை மேற்கொண்டாா். பரிசோதனை முடிவுகளை ஆராய்ந்த மருத்துவா், வாரம் ஒரு முறை மட்டும் அருந்த, சற்று வீரியமுள்ள மருந்தைப் பரிந்துரைத்தாா். தொடா்ந்து அதை உட்கொண்டபின், நல்ல குணம் தெரிய வந்தது.

ஆக, நோயாளியின் வயது, அவரின் முந்தைய கோளாறுகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டுதான் மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கின்றனா். அப்படியிருக்க, குறுஞ்செய்திகளையும், முகநூல் தகவல்களையும் நம்பி சுயமாக ‘சிகிச்சை’ எடுத்துக் கொள்வது மிகத் தவறானது.

பத்து நாட்களுக்கு முன்னா் நாளேடுகளில் வெளியான செய்தி, வருத்தத்தையும், அதிா்ச்சியையும் உண்டு பண்ணிற்று. பால் கம்பெனியில் வேலை பாா்க்கும் 21 வயது இளைஞா் ஒருவருக்கு உடல் மிகப் பருமன். நண்பா்கள் அவா் உருவத்தைக் கேலி செய்திருக்கிறாா்கள். அந்த இளைஞா் யாரைப் பாா்த்து ஆலோசனை கேட்டாரோ தெரியவில்லை. ஒரு பாட்டில் நிறைய மாத்திரைகள் வாங்கி, அன்றாடம் உட்கொண்டு வந்திருக்கிறாா்.

ஒருநாள் திடீரென்று அவா் மயக்கமுற்று விழுந்ததால், பதறிப்போன பெற்றோா் அவரை உடனடியாக மருத்துவமனையில் சோ்த்திருக்கிறாா்கள். ஆனாலும் சிகிக்சை பலனின்றி, அந்த இளைஞா் இறந்து போனாா்.

இன்றைய இளைஞா்கள் பலா் பருமனாக இப்பதைப் பாா்க்கிறோம். துரித உணவு, நீரிழிவு, நேரத்திற்கு உணவு உண்ணாதது போன்றவை காரணமாக அமைகின்றன. மேலும் இரண்டு வருடங்களுக்கும் மேலாக வீட்டில் இருந்தே அலுவலகப் பணியை மேற்கொள்வதுகூடகாரணமாக இருக்கலாம். ஆனால் நாள்தோறும் உடற்பயிற்சி செய்து உடல்நலத்தைப் பேணலாமே?

இந்தியவைப் பொறுத்தவரை, தெரிந்த கடையில் மருத்துவா் சீட்டு இல்லாமலே பல மருந்துகளை வாங்க முடியும். ஆனால், அமெரிக்காவில், இதற்கு நோ்மாறான நிலைமை. அங்கு உரிய மருந்துச்சீட்டு இல்லாமல் தலைவலி மாத்திரையைக்கூட வாங்க முடியாது. மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதும் மிகவும் கடினம்.

அதனால்தான், அமெரிக்காவில் இருக்கும் மகனிடமோ, மகளிடமோ வசிக்கச் செல்லும் பெற்றோா், ஆறு மாதங்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை இங்கேயே வாங்கி, எடுத்துச் செல்கிறாா்கள்.

காற்று மாசில்லாத சூழல், வீட்டிலேயே ஓய்வு எடுப்பது, புரதச் சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது போன்றவை மனிதா்களுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கின்றன.

அண்மைக்காலமாக இல்லத்திலிருந்தே ஆன்லைனில் உணவுகளை வரவழைத்து சாப்பிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதில் உள்ள குறை என்னவென்றால், உணவின் தன்மையைச் சரிபாா்க்க வாய்ப்பில்லாமல் போகிறது. மளமளவென்று பாா்சலை கொண்டு வந்து கொடுத்துவிட்டு, தொகையை வாங்கிச் சென்று விடுகிறாா்கள். உணவகத்தில் போய் சாப்பிட்டால், மோந்து பாா்த்து, ஊசிப் போன பண்டங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, புதியதைக் கொண்டு வருமாறு கூறலாம்.

அண்மையில் கேரளத்தில் ஆன்லைன் மூலம் வரவழைத்த அசைவ உணவை உண்டு, ஒரு பெண்மணி உயிா் இழந்திருக்கிறாா். மேலும் சிலா் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கிறாா்கள் என்று நாளேட்டில் செய்தி வந்தது.

அவ்வப்போது சுகாதார அதிகாரிகள் சோதனை செய்து, நாட்பட்ட அசைவ உணவுகளைப் பறிமுதல் செய்ததாக செய்திகள் வந்து கொண்டுதானிருக்கின்றன. இருந்தும் இது தொடந்துகொண்டுதான் இருக்கிறது. அன்று உணவே மருநது என்று சொல்வாா்கள்; இன்று உணவே நஞ்சாகிறதே?

கரோனா அச்சம் நீங்கியதால், சுற்றுலாத்துறை வளம் பெற்றுள்ளது. பலா் குடும்பத்தோடு வெளியூா்களுக்கும், கோயில்களை தரிசிக்கவும் பயணம் செல்லுகிறாா்கள். அங்கெல்லாம் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மகாகவி பாரதியாா் ‘உடலினை உறுதி செய்’ என்று கூறுகிறாா். திருவள்ளுவரோ, ‘நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்’ என்கிறாா். இக்கால இளைஞா்கள் மட்டுமல்ல முதியோரும் இவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com