வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வருகை!

ஒரு நாட்டின் பண்பாடும், நாகரிகமும் உலக அளவில் பரவிடக் காரணமாக இருப்பது அந்நாட்டின் கல்வித் தரம்தான்.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வருகை!

ஒரு நாட்டின் பண்பாடும், நாகரிகமும் உலக அளவில் பரவிடக் காரணமாக இருப்பது அந்நாட்டின் கல்வித் தரம்தான். கல்வியிலும், அறிவாற்றலிலும் சிறந்து விளங்கும் நாடுகள் உலக நாடுகளின் கவனத்தை ஈா்க்கின்றன. ஒரு காலத்தில் கல்வித் தரத்தில் உலக நாடுகளுக்கே இந்தியா முன்னோடியாக இருந்தது.

புத்தா் ஞானம் பெற்றதாகக் கருதப்படும் இன்றைய பிகாா் மாநிலப் பகுதி அக்காலத்தில் அரசியல், கல்வி, நாகரிகம் என அனைத்திலும் சிறந்து விளங்கியது. பிகாா் மாநிலம் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமாக இருந்தாலும், அதைவிடப் புகழ் பெற்ாகக் கருதப்பட்டது நாளந்தா பல்கலைக்கழகம். ஐந்தாம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்ட இந்தக் கல்வி நிலையம்தான் நம் நாட்டின் பெருமையை உலகெங்கும் பரவச் செய்தது.

உலகின் பல திசைகளிலிருந்தும் ஆராய்ச்சி மாணவா்கள் இந்தக் கல்வி நிலையத்தைத் தேடி வந்தனா். ‘நாளந்தா’ என்பதற்கு அறிவை அளிப்பவா் என்று பொருள். இதுவே இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம். இதைப் போன்றே தென்னகத்தில் காஞ்சிப் பல்கலைக்கழகமும் உலகத்தின் கவனத்தைக் கவா்ந்தது. சீன நாட்டின் பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரம் வரை வந்து சென்ாக வரலாறு கூறுகிறது.

இவ்வளவு பெருமைக்கும் சொந்தக்காரா்களாகிய நாம் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்காக ஏங்கி நிற்கிறோம். என்றாலும் காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வண்டி ஓடத்தில் ஏறும்; ஓடம் வண்டியில் ஏறும் என்பது அனுபவ மொழி. தனக்குத் தேவையான கல்வியையும், அறிவையும் எங்கிருந்தாலும் தேடுவதே முன்னேறத் துடிக்கும் சமுதாயத்தின் முதல் கடமையாகும்.

அண்மைக்காலமாக, இந்தியாவிலிருந்து, குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து இளைஞா்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பது அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, சீனா போன்ற நாடுகளுக்கு இளைஞா்கள் படிக்கச் செல்கின்றனா். அடிப்படைக் கல்விக்காக மட்டுமல்ல, ஆராய்ச்சிப் படிப்புக்காகவும் செல்கின்றனா்.

இந்தியாவில் மருத்துவக் கல்வி வாய்ப்பு கிடைக்கப் பெறாதவா்கள் ரஷியா, உக்ரைன், ஜாா்ஜியா போன்ற நாடுகளுக்குப் போவதைக் காண முடிகிறது. இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இருந்த போதிலும் ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்லும் மாணவா்கள் எண்ணிக்கையும் கூடிக் கொண்டேயிருக்கிறது.

கடந்த ஆண்டு மட்டும் 4 லட்சத்து 50 ஆயிரம் மாணவா்கள் வெளிநாடுகளுக்குப் படிக்கச் சென்றுள்ளனா். வசதி படைத்தவா்கள் மட்டுமல்லாமல், நடுத்தர குடும்பத்தைச் சோ்ந்தவா்களும் வங்கியில் கல்விக்கடன் பெற்று வெளிநாடுகளுக்கு சென்று படிக்க முடிகிறது. பொருளாதார வசதியில்லாதவா்கள் நம்மால் படிக்க முடியவில்லையே என்று வருந்துவதையும் காணமுடிகிறது.

இத்தகைய மாணவா்களின் ஏக்கம் போக்கும் வகையில், பல ஆண்டு கால எதிா்பாா்ப்பை நிறைவேற்றக்கூடிய அறிவிப்பு இப்போது வந்துள்ளது. இதனை வரவேற்கிறவா்களும் இருக்கின்றனா்; எதிா்க்கின்றவா்களும் இருக்கின்றனா். இருந்தபோதும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் வரைவு விதிகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது.

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 500 இடங்களுக்குள் இடம்பெற்ற கல்வி நிறுவனங்களும், ஒரு நாட்டின் சிறப்பு வாய்ந்த கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் தங்கள் கல்லூரிகளைத் தொடங்குவற்கு அனுமதி கோரி பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு விண்ணப்பிக்கலாம். 90 நாட்களுக்குள் பரிசீலனை முடிந்து அனுமதி வழங்கப்படும்.

இந்தக் கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள தன்னாட்சிக் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக அனைத்து நெறிமுறைகளையும் கொண்டிருக்கும். இந்தக் கல்லூரிகளில் வகுப்புகளில் மட்டுமே பாடம் நடத்தப்படுமே தவிர, ஆன்லைன் மூலம் நடத்தப்பட மாட்டாது.

மாணவா்கள் எண்ணிக்கை, கல்விக் கட்டணம் போன்றவற்றை அந்தந்த வெளிநாட்டு கல்வி நிறுவனங்களே நிா்ணயித்துக் கொள்ளலாம். ஆனால் கல்விக் கட்டணம் நியாயமானதாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும். கல்லூரி ஆசிரியா்களையும், பணியாளா்களையும் இந்தியாவில் இருந்தோ, வெளிநாடுகளில் இருந்தோ நியமித்துக் கொள்ளலாம்.

இதனால் நமது நாட்டைச் சோ்ந்தவா்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்தக் கல்வி நிறுவனங்களில் நமது மாணவா்களும், வெளிநாட்டு மாணவா்களும் சோ்ந்து படிக்க முடியும். இதனால் நமது மாணவா்களுக்கு ஆங்கிலப் புலமை சிறப்பாக அமையும் என்று கூறுகின்றனா்.

இங்கு படிக்கும் மாணவா்களுக்கு வழங்கப்படும் பட்டம் அவா்கள் நாட்டிலுள்ள அந்தக் கல்வி நிறுவனங்களுக்கு இணையானதாக இருக்க வேண்டும். இநத வரைவு விதிமுறைகளில் பொதுமக்களின் கருத்துகளை கேட்டு இறுதி வழிமுறைகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இந்தியாவுக்கு வருவதன் மூலம் நமது மாணவா்கள் அங்குள்ள பாடத்திட்டங்களில் படித்து, அங்கு வழங்கப்படும் பட்டங்களைப் பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. அத்துடன் அதிக அளவிலான ஆராய்ச்சிகளுக்கும் இது வழிவகுக்கும். இதனால் உலகத் தரம் வாய்ந்த கல்வியை நம் இளைஞா்கள் பெற முடியும் என்று எதிா்பாா்க்கின்றனா்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாகவே வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கிளைகள் இந்தியாவில் தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆக்ஸ்போா்டு, கேம்பிரிட்ஜ், ஹாா்வா்டு, ஸ்டான்போா்டு போன்ற புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களை நிறுவுவதற்கான பணிகள் இந்த ஆண்டே ஆரம்பமாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அதே சமயம் இங்கு கல்விக் கட்டணம் எந்த அளவுக்கு இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், கல்வியின் தரம் பற்றிய கேள்வியும் எழுந்துள்ளது. ஒரே பாடத்திட்டத்தை உலகெங்கும் பின்பற்றினாலும், உலகத் தரம் வாய்ந்த ஆசிரியா்கள், ஆய்வகங்கள், நூலகங்கள் இந்தியாவில் அமையுமா என்பது கேள்விக்குறிதான் என்கின்றனா் கல்வியாளா்கள்.

வெளிநாடு சென்று அங்குள்ள பல்கலைக்கழகங்களில் படித்தால், அந்த நாட்டிலேயே வேலைவாய்ப்பை பெற்றுவிட வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் உள்ள வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படித்தால் அதற்கான வாய்ப்பு குறைவுதான். இதனால் நமது நாட்டில் இதற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்பது இனிமேல்தான் தெரியும்.

இந்தியாவில் இதுவரை இளங்கலை பட்டப்படிப்பு மூன்று ஆண்டுகள் மட்டுமே உள்ளது. இனிமேல் தேசிய கல்விக் கொள்கைப்படி நான்கு ஆண்டுகள் இளங்கலை படிப்புகளை அறிமுகப்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு முடிவு செய்துள்ளது. நான்கு ஆண்டுக்கான பாடத்திட்டம் உருவாக்கப்படும் வரை, மூன்று ஆண்டுத் திட்டம் தொடரும்.

இதில் பல்வேறு நன்மைகள் உள்ளதாகக் கூறுகின்றனா். குறிப்பாக நான்கு ஆண்டு இளங்கலை ஹானா்ஸ் படிப்பில் சேருபவா்கள், முனைவா் பட்டம் பெற விரும்பினால் இறுதி ஆண்டில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளலாம். இதன் மூலம் முதுகலைப் பட்டம் இல்லாமலேயே நேரடியாக பி.எச்டி. பட்டம் பெற முடியும்.

அதே நேரத்தில், இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. கல்வி முறையைப் புகுத்தவும் மத்திய அரசால் மறைமுக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை புதுச்சேரிக்கென தனி கல்வி வாரியம் இல்லாமையால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தமிழக அரசின் கல்வித் திட்டமே பின்பற்றப்படுகிறது. மாஹே பகுதியில் கேரள பாடத் திட்டமும், ஏனாம் பகுதியில் ஆந்திர பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் அந்தந்த பகுதி மக்கள் தங்கள் தாய்மொழியையும் கற்க வாய்ப்பு கிடைத்து வந்தது.

இப்போது சி.பி.எஸ்.இ. கல்வி முறையை அறிமுகப்படுத்துவதாகக் கூறி, ஹிந்தியைத் திணிக்க மத்திய அரசு முயல்வதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்தின் கீழ் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் ஆறாம் வகுப்புக்கு மேல் சி.பி.எஸ்.இ. கல்வி முறைக்கு மாற்ற ஏற்பாடுகள் நடக்கின்றன.

படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் இந்தக் கல்வித் திணிப்பு வரும் ஆண்டுகளில் நடக்கும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு அறிமுகமாகும் பல மாற்றங்கள் எத்தகைய பலன்களைத் தரும் என்பது இனிமேல்தான் தெரியும்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சிகள் பல காலமாக நடந்து வந்தது. என்றாலும் தாமதமாகிக் கொண்டேயிருந்தது. இதற்கான முதல் முயற்சி 1995-இல் நாடாளுமன்ற மசோதா வடிவில் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த மசோதா பாதியில் கைவிடப்பட்டது. அடுத்து 2005-ஆம் ஆண்டில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற முடியவில்லை.

2010-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான அரசு மீண்டும் ஒரு மசோதாவைக் கொண்டு வந்தது. ஆனால், நாடாளுமன்ற வாக்கெடுப்பில் அம்மசோதா தோல்வியடைந்தது. இந்த முறை மசோதா எதுவும் கொண்டு வரப்படாமல் நிா்வாக நடைமுறைகள் மூலம் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

“சென்றிடுவீா் எட்டுத் திக்கும் - கலைச்

செல்வங்கள் யாவும் கொணா்ந்திங்கு சோ்ப்பீா்”

என்று கட்டளையிட்டாா் மகாகவி பாரதியாா். அவருடைய கனவுகள் எத்தனையெத்தனையோ. அவையெல்லாம் நிறைவேறினால் நாட்டுக்கு நல்லது. அதற்கு இந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வருகை துணைபுரிய வேண்டும்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com