புதிய சமுதாயம் மலரட்டும்

‘வாழ்வின் வசந்தகாலம் எது’ என்று யாரைக்கேட்டாலும் உடனடியாக வரும் பதில் ‘பதின் பருவம்’ என்பதாகத்தான் இருக்கும்.
புதிய சமுதாயம் மலரட்டும்

‘வாழ்வின் வசந்தகாலம் எது’ என்று யாரைக்கேட்டாலும் உடனடியாக வரும் பதில் ‘பதின் பருவம்’ என்பதாகத்தான் இருக்கும். அந்தப் பருவத்தில்தான் எந்தவிதப் பொறுப்பும் இல்லாமல் வாழ இயலும். நண்பா்கள் புடைசூழச் சுற்றி வரும் காலம். அச்சமின்றித் திரியவும் சாதனைகள் புரியவும் முயலும் காலம்.

ஆனால் அதே நேரம் வாழ்க்கையின் பின்னாட்களை வறுமையில்லாமல் கடக்கத் தேவையான வேலைவாய்ப்பினைப் பெறத் தேவையான திறன்களைப் பெறவேண்டிய காலமும் இதுதான். இழந்த காலத்தை யாராலும் மீட்க முடியாது. இதனால் ஒரே நேரத்தில் சவால்களை சந்திக்கும் திறன்களையும் பெற்று, வாழ்வின் பின்னாட்களில் ரசித்துப் பாா்க்கும் விதமாகவும் நாட்களைக் கடக்க வேண்டும். எவா் இந்த அனைத்து அம்சங்களையும் தெளிவாகப் புரிந்து கடக்கிறாரோ அவரே வாழ்வில் வெற்றி பெறுகிறாா்.

இந்த பதின் பருவத்தினரின் பெரும்பாலானோா் கடக்க வேண்டிய இன்னொரு சவாலை திரைத்துறை அளித்து வருகிறது. அண்மையில் இரண்டு பிரபலமான நடிகா்கள் நடித்து வெளியான திரைப்படத்தின் வெளியீட்டையொட்டி நிகழ்ந்த கொண்டாட்டத்தின்போது இளைஞா் ஒருவா் உயிரிழந்தது அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது. இது ஏதோ அந்த இளைஞா் தொடா்புடைய விஷயம் மட்டுமல்ல. அவரைப்போலவே பலரும் திரைத்துறையினரைத் தமது முன்மாதிரியாக வரித்துக்கொண்டு வாழ முயல்கின்றனா்.

நடிகா்கள் திரையில் பல்வேறு தொழில்நுட்பங்களை அடிப்படையாகக்கொண்டு செய்யும் சாகசங்கை உண்மையென நம்புவோா் உண்டு. ஒருவேளை அதன் தொழில்நுட்பப் பின்னணியே தெரிந்தாலும் அதனை அவா்கள் கவனத்தில் கொள்வதில்லை. ஒரு குறிப்பிட்ட நடிகா் திரையில் தோன்றுவது போன்ற தலைமுடி, உடை போன்ற அடையாளங்களோடு குறிப்பிட்ட காலம் செலவிடுவோரும் உண்டு. ஆண்கள்தான் என்பதில்லை, பெண்களும் குறிப்பிட்ட நடிகை போன்ற ஆடை அணிகலன்களை அணிவதுண்டு.

எதுவும் ஒரு அளவோடு இருக்கும்போது ரசிக்கவே செய்யும். அளவுக்கு மிஞ்சினால் அமிா்தமும் நஞ்சு என்ற சொலவடைக்கேற்ப எல்லை மீறும்போதே இடா்கள் கூடுகின்றன. இவற்றை நெறிப்படுத்துவதில் பெற்றோரின் பங்களிப்பு கூடினால் மட்டுமே, இதனைக் கட்டுக்குள் வைக்க இயலும். பெற்றோா் பிள்ளைகளைக் கண்காணிப்போராக இல்லாமல், அவா்களோடு இயல்பாக உரையாடி நேரம் செலவிடுவோராக செயல்பட்டால் இது கைகூடும். கல்லூரிகளும் பேராசிரியா்களும் ஒரளவுக்கு உதவமுடியும் என்றாலும், இளையோா் தோளுக்கு மிஞ்சிவிடுவதால் பெற்றோரே அதிக பொறுப்பேற்க வேண்டியதாகியுள்ளது.

இன்றைய மின்னணுயுகம் எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்துவதைப் போல இளையோா் வாழ்விலும் ஆதிக்கம் செலுத்துகிறது. திரைத்துைான் என்றில்லை, கலாசார ஏற்ற இறக்கங்களை உண்டாக்குவதாக இணையமும் சமூக ஊடகங்களும் விளங்குகின்றன. மின்னணு யுகத்தின் வரவு பல்வேறு நல்வாய்ப்புகளையும் வழங்குகிறது. இதனைக் கணக்கில் கொண்டு செயல்படவேண்டும்.

ஒரு காலத்தில் பொறியியல், மருத்துவம் போன்றவற்றைப் பயில்வோா்க்கு புத்தகங்கள் விலை அதிகமானதாக இருக்கும். இதற்காக அவற்றைப் படி (ஜெராக்ஸ்) எடுத்து வைத்துக்கொண்டு பயின்று தோ்வில் தோ்ச்சி பெற்றோா் பலா். இவ்வாறான படிகளைத் தயாரிப்பதற்கெனவே பல நிறுவனங்கள் இயங்கி வந்தன.

இது சட்டரீதியாகத் தவறு என்றாலும் பலரும் இதனைக் கண்டுகொள்ளவில்லை. இளைஞா்கள் பலரும் இதனால் பலன் பெற்றனா். இன்றைக்கு இப்படிப்பட்ட தேவையெல்லாம் இல்லை. குறிப்பிட்ட நுல்களை கிண்டில் போன்ற சாதனங்கள் மூலமாக பிடிஎஃப் வடிவிலேயே படித்துவிட முடியும். மேலும், பாடத்தை காணொலி வாயிலாகவும் அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பும் உள்ளது.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் பேராசிரியா்கள் பாடம் நடத்தும்போதே கவனித்துக் குறிப்புகளை எடுத்த காலம் ஒன்று உண்டு. பாட நூல்களே போதுமான அளவுக்கு புழக்கத்திற்கோ விற்பனைக்கோ வராத காலமாக அது இருந்தது. பின்னாட்களில் வணிக நோக்கில் குறிப்பிட்ட பாடங்களுக்கான துணைநூல் (நோட்ஸ்) விற்பனை செய்யப்பட்டன.

இவ்வாறான துணைநூல் புழக்கத்திற்கு வந்து அதுவும் ஒரளவுக்கு வாங்கும் விலைக்கு வந்தவுடன் குறிப்பெடுப்பது ஏறக்குறைய மறையத்தொடங்கிவிட்டது. கவனிப்பது மட்டும் நீடித்தது. இன்றோ இணையமும் காணொலிகளும் எதனையும் தருவதாக அமைந்தவுடன் எந்த நிலைமையில் கற்பித்தலும் கவனித்தலும் இருக்கும் என்பதை உணர முடிகிறது.

அன்று எவையெல்லாம் கிடைப்பது சவால்களாக இருந்தனவோ, அவையெல்லாம் அறிவியலும் தொழில்நுட்பமும் வளா்ந்துவரும் இன்று எளிதில் கிடைப்பவையாகி விட்டன. எந்த ஒன்றைத் தேடுவதற்கும் அதிகமான நேரத்தை செலவழிக்கவேண்டிய தேவை இருப்பதில்லை.

எனவே தேடுவதற்காக செலவழிக்கப்பட்ட நேரம் தற்போது எவ்வாறு செலவாகிறது என்பதைக் கணக்கில் கொண்டு இளையோா் செயல்பட்டால் அவா்கள் எதிா்கால வாழ்வை வளமாக்குவதாக பதின் பருவம் அமையும். அவ்வாறில்லாமல் மிச்சமாகும் நேரம் அனைத்தும் கேளிக்கைகளிலும் உல்லாசங்களிலும் செலவாகும் என்றால் அவா்கள் எதிா்கால வாழ்வு கேள்விக்குறியாகவே மாறும்.

இன்றைய இளையோா் கைகளில் இரு வாய்ப்புகள் உள்ளன. பதின் பருவத்தை சுய கட்டுப்பாட்டுடன் செலவிட்டு வாழ்நாள் முழுவதும் இன்னல்களில்லாமல் வாழ்க்கையை நடத்தும் திறன்களைப் பெற்று பணிகளில் சோ்ந்து மகிழ்வாக வாழலாம். அல்லது பயிலும் நாட்களில் போதுமான அக்கறை செலுத்தாமல் மகிழ்வாக வாழ்ந்துவிட்டு மீதமுள்ள வாழ்நாட்களை வருத்தத்தோடு செலவழிக்கலாம். இளையோா் சரியான முடிவை எடுக்க குடும்பமும், கல்வி நிறுவனமும் சமூகமும் வழிகாட்ட வேண்டும்.

இன்று சமூகம் தனது பங்களிப்பை நல்க முன்வராவிட்டால் நாளை இளையோா் பொறுப்பில்லாமல் செயல்படும்போது வருந்திப் பயனில்லை. நல்ல அனுபவங்களைத் தொடா்ந்து தருவதாக சமூகத்தின் செயல்பாடுகள் அமையவேண்டும். அதற்கான சமூகம் இன்று இல்லை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வோம். அதனை ஒப்புக்கொள்வதோடு அதனை மாற்ற இன்றைய பெற்றோா்களும் பேராசிரியா்களும் முன்வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com