விலகியிருக்கப் பழகுவோம்!

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

 ஏகாதசி விரதம், அமாவாசை விரதம் போலவே மற்றொரு புதிய விரதமும் இருக்கிறது. அதுதான் எண்ம விரதம். அதாவது டிஜிட்டல் விரதம். டிஜிட்டல் இணைப்பில் இருந்து சில மணித்துளிகள் எனத் தொடங்கி சில நிமிடங்கள், சில மணி நேரங்கள் முற்றிலுமாக விலகி இருப்பது. இந்த டிஜிட்டல் விரதம் குறித்துப் பலரும் யோசிக்கிறார்கள், சிலர்தான் செயல்படுத்துகிறார்கள்.
 பலருக்கும் இதன் மீது ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. சில நிறுவனங்கள் எண்ம விரதம் குறித்து விளம்பரப்படுத்துகின்றன. ஆம், பேஸ்புக், கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் சிலிக்கான் வேலி ஊழியர்களிடையே இது மிகவும்பிரபலமானது. தொழில்நுட்பம் இன்று நமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கிறது. அப்படி இருக்க ஏன் இந்த எண்ம விரதம் தேவைப்படுகிறது?
 சமீபத்தில் ஒரு உணவகத்திற்குச் சென்றிருந்தேன். கணவன், மனைவி, பிள்ளைகள் இருவர் என குடும்பமாக உணவருந்த வந்திருந்தனர். இருக்கையில் வந்து அமர்ந்தது முதல் சாப்பிட்டு எழுந்து செல்லும் வரை அவர்களில் எவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசிக்கொள்ளவே இல்லை. நால்வர் கையிலும் கைப்பேசி இருந்தது. அவர்கள் உணவு பரிமாறுபவரை பார்த்தார்களே ஒழிய தங்களுக்குள் பார்த்துக்கொள்ளவே இல்லை.
 ஒவ்வொருவரின் பார்வையும் அவருடைய கைப்பேசியில்தான் இருந்தது. காணொலி பார்ப்பதும் செய்தி அனுப்புவதுமாக அவர்கள் அனைவரும் வேறு தளத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். ஆனாலும், அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை.
 குடும்பத்துக்குள் மட்டுமல்ல, பொது இடங்களிலும் இந்த கைப்பேசியினால் ஏகப்பட்ட குளறுபடிகள். ஆசையாக ஒரு பட்டிமன்றத்திற்குச் சென்று பேச்சு அரங்கை ரசிக்கலாம் என உட்கார்ந்தால் அந்த அரங்கில் பேச்சாளர்களை விட அதிகம் பேசுவது பார்வையாளர்கள்தான். அவ்வளவு அழைப்புகள் வந்துகொண்டேயிருக்கின்றன அனைவருக்கும். இது அந்த பேச்சாளர்களுக்கு மட்டுமின்றி சுற்றி இருக்கும் சகலருக்கும் பெருத்த இடையூறு.
 சிலர் கோயிலுக்கு வந்தால் கூட இரண்டு கைகளையும் இணைத்து மனதார கடவுளை வணங்குவதில்லை. ஒரு பார்வையில் கைப்பேசியை பார்த்துக் கொண்டு மறுபார்வையில் இறைவனை நோக்கி வணங்குகின்றனர். அவர்களால் தங்கள் மனத்தை ஒருமுகப்படுத்த முடியவில்லை.
 "பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க' என்று பேசுவதற்காக மட்டுமே இருந்த தொலைபேசி கைப்பேசியாக அவதாரம் எடுத்துப் பின் திறன்பேசியாகி அது போதாதென்று அறிதிறன்பேசியாகி இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்தக் கருவியை, பேசுவதற்கு பதில் பிற விஷயங்களுக்கு தான் நாம் தற்போது அதிகம் பயன்படுத்துகிறோம். ஒரு கைப்பேசி எத்தனை பொருள்களை ஓரங்கட்டியிருக்கிறது என்று கவனித்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.
 பெருவாரியான இளைஞர்கள் இன்று கைகடிகாரம் கட்டுவதையே மறந்து விட்டார்கள். அவ்வப்போது நேரம் பார்த்துக் கொள்ளத்தான் கையிலேயே கைப்பேசி இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் வீடுகளில் அலாரம் கடிகாரம் என்று ஒன்று இருக்கும். அதிகாலையில் அலாரம் அடித்து எழுவோம். இன்று அப்படி ஒன்று இருந்ததையே மறந்து விட்டோம். காரணம், நம் கைக்கெட்டும் தொலைவில் கைப்பேசி இருக்கிறது. இருளில் செல்ல பயந்து டார்ச் லைட் எடுத்துப் போகும் நடைமுறையும் கிட்டதட்ட இல்லாமலாகி விட்டது. கையில் உள்ள அலைபேசியே அவர்களுக்கு வழிகாட்டி விடுகிறது.
 கணக்குப் போட பயன்படுத்தப்பட்ட கால்குலேட்டரின் விற்பனை மட்டுமல்ல, அதன் உற்பத்தியே தற்போது அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. நம் மகிழ்ச்சியான தருணங்களை பின்னர் நினைத்துப் பார்த்து மகிழ எத்தனை ஆயிரம் கொடுத்து முன்பு புகைப்படக் கருவி வாங்கினோம். இன்று திருமணங்களுக்கு புகைப்படம் எடுப்பவர் மட்டுமே அதைக் கையில் வைத்திருக்கிறார். நாம் கைப்பேசியின் புண்ணியத்தில் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் புகைப்படம் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறோம். வானொலியும் ஒலிநாடா கருவியும் இல்லாத வீடு இருக்க முடியாது என்ற நிலைமை இப்போது அடியோடு மாறிவிட்டது. ஏன் திரைப்படங்களைக் கூட நம் கையடக்கக் கருவி காட்டிவிடுகிறது.
 இவை மட்டுமா? பெருவாரியான பணப்பரிவர்த்தனை கைப்பேசி மூலமே நடைபெறுகிறது. பயணத்தின்போது புத்தகங்களை எடுத்துச் செல்ல மறந்துவிட்டோமா? பரவாயில்லை, கைப்பேசியைத் திறந்தால் ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் நமக்கு படிக்கக் கிடைக்கும். மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய இடத்தில் நேரம் ஓடவில்லையா? இருந்த இடத்திலிருந்தபடியே உலக நிகழ்வுகளைப் பார்த்து பொழுது போவது தெரியாமல் கண்டு களிக்கலாம்.
 அவசரத்துக்கு பேனாவும் காகிதமும் கிடைக்கவில்லையா? கைப்பேசியிலேயே நோட்பேட் இருக்கிறது. கையால் முக்கிய குறிப்புகளை எழுதிக் கொண்டு பக்கம் ஒதுக்கிக் கொள்ளலாம். இப்படி கைப்பேசி நம் நினைவாற்றல் திறனை மழுங்கடித்தாலும், பல சிறப்பான சேவைகளை நமக்கு வழங்கி வருகிறது என்பதை மறுக்க முடியாது. இதனாலேயே நாம் அதற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். இன்றைய தேதியில் கையில் பணம் எடுத்துச்செல்லாமல் கூட வெளியே போகலாம். ஆனால், கைப்பேசி இல்லாமல் வெளியே போக முடியாது எனும் நிலை உருவாகியுள்ளது.
 முதலில் பழக்கம் என்று ஆனது, இப்போது வழக்கமாகி நம் வாழ்வும் ஆகிவிட்டது. கைப்பேசி இல்லாவிட்டால் ஏதோ கையை இழந்தது போல் தவிக்கிறோம் நாம். கல்லூரியில் படித்து முடித்து ஒரு வேலையில் காலூன்றிய பிறகு வேலை நிமித்தம் இப்படி பழகிப் போனால் கூட பரவாயில்லை. கரோனா பரவலுக்குப் பிறகு பள்ளிக் குழந்தைகள் கையில் சென்று பழக்கமாகிப் போனது. அதுதான் பல அவலங்களுக்கு காரணமாகி இருக்கிறது.
 பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் சிறுவர்கள் கைப்பேசிக்கு அடிமையாகிப் போக கொள்ளை நோய்த்தொற்று முக்கிய காரணமாக அமைந்து விட்டது. போதைப் பொருளுக்கு அடிமையாகி விட்டது போல் கைப்பேசி இல்லாமல் தம்மால் இருக்க முடியாது என தவிக்கிறார்கள். இதனால் அவர்களின் மனவலிமை குறைகிறது. பிறருக்கு அவர்களின் மீதான நம்பிக்கை குன்றி போகவும் வாய்ப்பு இருக்கிறது.
 செயற்கை நுண்ணறிவு பெரும் பாய்ச்சல் எடுத்து ஊடுருவிக் கொண்டிருக்கும் வேளையில், நம்மை நாம் மீட்டெடுத்துக் கொள்ள சில வழிமுறைகளை நிச்சயம் கையாள வேண்டும் என்று அண்மையில் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூட தனது "மன் கி பாத்' நிகழ்ச்சியில் எண்ம விரதம் இருக்க வேண்டிய அவசியம் பற்றி முன்மொழிந்திருக்கிறார். நமக்கு சுயகட்டுப்பாடு மிக மிக அவசியம். அதற்காக தினசரி எண்ம விரதம் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. நம்மால் அவ்வாறு இருக்கவும் முடியாது. முயன்றால் வாரத்தில் ஒரு நாள் நம்மை கட்டுப்படுத்தும் இவ்வகை சாதனங்களில் இருந்து விலகி நம்முடைய சுய கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முடியும். இப்போது இந்த எண்ணம் அனைவருக்கும் வலுப்பெற்று வருகிறது.
 இப்போதெல்லாம் பள்ளியில் நடைபெறும் பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்திலும் இந்த பிரச்னை பெரிதாக பேசப்படுகிறது. பள்ளி விட்டு வந்ததும் பிள்ளைகள் நேராக போய் கைப்பேசியை எடுத்து பார்க்கிறார்கள் என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் புலம்பலாக இருக்கிறது.
 இந்த பள்ளியில் மட்டும் ஏன் இணைய வகுப்புகள் தொடங்கவில்லை? உடனே தொடங்குங்கள் என இரண்டு வருடங்களுக்கு முன் பள்ளி நிர்வாகத்தை நச்சரித்தவர்கள் எல்லாம் இப்போது தயவு செய்து பாடம் சார்பாக எந்த தகவலையும் வாட்ஸ்ஆப் குழுவில் அனுப்பாதீர்கள். தினசரி பள்ளிக்கு வருவதால் அனைத்தையும் அவர்கள் அங்கேயே தெரிந்து கொள்ளட்டும். பெற்றோர்களுக்கான குழு மட்டும் இருக்கட்டும். பிள்ளைகளுக்கு எந்த தகவலையும் அலைபேசியில் அனுப்பாதீர்கள் என்று பள்ளி நிர்வாகத்திடம் மன்றாடுகிறார்கள்.
 பிள்ளைகளின் கைகளில் இருந்து கைப்பேசியை பிடுங்குவதற்குள் பெற்றோர்கள் படாதபாடு பட வேண்டி இருக்கிறது. அப்படி வலுக்கட்டாயமாகப் பிடுங்கினாலும் பிள்ளைகள் எதையோ பறி கொடுத்தது போல ஆகிவிடுகிறார்கள். எல்லோரும் வீட்டில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் சரிவர பேசிக் கொள்வதில்லை. இதனால் வீட்டுக்குள்ளேயே அந்நியமாகிப் போனது போன்ற ஒரு உணர்வில் வாடுகிறார்கள் பெற்றோர்கள்.
 இதுபோன்ற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தத் தொடங்கும்போது ஒரு பித்து நிலை ஏற்படத்தான் செய்யும். பின்னர் மனம் சமநிலைக்கு வந்தாக வேண்டும். ஆனால் அந்த பித்து நிலை தொடர்கதை ஆகிப்போகும் போது தான் குடும்ப உறவுகளில் சிக்கல் எழுகிறது. இயந்திரம் சூழ் உலகாக இருப்பினும் மனிதர்களுடன்தான் நாம் வாழ்ந்தாக வேண்டும். இயந்திரங்களை நாம் ஆட்சி செய்ய வேண்டுமே தவிர நாம் அதற்கு அடிமையாகி விடக்கூடாது. நம் கட்டுப்பாட்டுக்குள் அதை வைத்திருக்கும்போது நமக்கு சிறந்த சேவகனாக அது இருக்கும். ஆறறிவு கொண்டவர்களின் சாமர்த்தியம் அதுதான்.
 அதிக நேரம் கைப்பேசியை பயன்படுத்துவதால் "டெஸ்க் நெக் சிண்ட்ரோம்' எனப்படும் கழுத்து வலி பிரச்னை ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் கழுத்து வலியோடு, தலைவலி, தோள்பட்டை வலி, தூக்கமின்மை, மன உளைச்சல் உள்ளிட்ட பாதிப்புகளும் வரும் என்கிறார்கள். கண் இமைக்காமல் கைப்பேசியைப் பார்ப்பதால் கண்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படக்கூடும்.
 இணையப் பயன்பாடு இல்லாமல் இன்று எவரும் வாழ முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. பழம்பெருமையைப் பேசிக்கொண்டு காலம் கடத்த முடியாது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான குப்பைச் செய்திகள் நம் கைப்பேசியில் வந்து விழுகின்றன. வாரத்திற்கு ஒரு முறை வீட்டை சுத்தம் செய்வதைப் போல நாம் நம் கைப்பேசியையும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.
 அவரவர் வசதிப்படி ஒரு நாளில் சில மணி நேரமோ, ஒரு வாரத்தில் அரை நாளோ, ஒரு நாளோ என மின்னணு சாதனங்களிலிருந்து தள்ளி இருக்கலாம். நாம் அனைவரும் யோசிக்க வேண்டிய நேரமிது!
 
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com