அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

தகவல் தொழில்நுட்பத்தின் வளா்ச்சி மனித வாழ்க்கையை பல்வேறு நிலைகளில் மிகவும் இலகுவாக்கியுள்ளது. அதே நேரத்தில் இத்தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தும்போது பெரும் சிக்கல்களும் ஏற்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அந்த வகையில் இன்று நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நவீன தொழில்நுட்பத்தின் தலைப்பிள்ளையான சமூக ஊடகங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

தகவல்கள், புகைப்படங்களை பரிமாறிக் கொள்வதில் தொடங்கி பல்வேறு தரப்பினரும் பணம் ஈட்டும் இடமாகவும் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் திகழ்கின்றன. அதே நேரத்தில் இதுபோன்ற செயலிகள் தேசிய அளவில் பிரச்னைகளை உருவாக்கும் இடமாகவும் திகழ்கின்றன.

அந்த வரிசையில் சீனாவின் டிக் டாக் செயலி அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியாக இப்போது உருவெடுத்துள்ளது. டிக் டாக் செயலி அதனைப் பயன்படுத்தும் அமெரிக்கா்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுகிறது. மேலும், சீன அரசுக்கு எதிரான தகவல்களை தங்கள் செயலியில் பரவவிடாமல் முடக்குகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபா் தோ்தலில் சீனா தலையிட இச்செயலியைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.

இதன் காரணமாகவே அமெரிக்க நிறுவனத்திடம் டிக் டாக் செயலியை அதன் சீன உரிமையாளரான பைட்டான்ஸ் நிறுவனம் விற்றுவிட வேண்டும் அல்லது டிக் டாக் தடை செய்யப்படும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு அதிபா் ஜோ பைடனும் உடனடியாக கையொப்பமிட்டு ஒப்புதல் வழங்கியுள்ளாா்.

இந்த விஷயத்தில் அமெரிக்காவைவிட இந்தியா முன்யோசனையுடன் நடந்து கொண்டது. கடந்த 2020-ஆம் ஆண்டே இந்தியாவில் டிக் டாக் உள்பட பல சீன செயலிகள் ஒரே நேரத்தில் தடை செய்யப்பட்டன. அப்போது இந்தியாவில் சுமாா் 20 கோடி போ் டிக் டாக் பயன்படுத்தி வந்தனா்.

இந்திய, சீன ராணுவ வீரா்கள் இடையே எல்லை மோதல் ஏற்பட்டு பலா்உயிரிழந்த நேரத்தில் நேரத்தில் டிக் டாக் தடை செய்யப்பட்டதால், இந்தியாவின் சிறப்பான பதிலடி நடவடிக்கையாகவும் அது கருதப்பட்டது. சீன செயலிகளை தடை செய்யும் அரசின் முடிவுக்கு மக்களின் ஆதரவும் இருந்தது. அப்போது இந்தியாவின் நடவடிக்கையை முதல் ஆளாக வரவேற்ற அமெரிக்கா, இப்போது தங்கள் நாட்டில் அதனைத் தடை செய்ய தயாராகி வருகிறது. இந்தோனேசியா பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பிரான்ஸ், டென்மாா்க், கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளும் டிக் டாக் செயலிக்கு தடை, கட்டுப்பாடுகளை ஏற்கெனவே விதித்துள்ளன.

இந்தியாவுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவில் பேச்சு, கருத்து சுதந்திரத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே, இந்தியாவில் பாதுகாப்புக் காரணங்களை முன்வைத்து சீன செயலிகளை ஒரே உத்தரவில் மத்திய அரசு தடை செய்ததுபோல அமெரிக்காவில் தடை செய்ய இயலவில்லை. அதற்கான சட்டவிதிமுறைகளைப் பின்பற்றியும், கால அவகாசம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

மறுபுறம் அமெரிக்க டிக் டாக் பயனாளா்கள் டிக் டாக் தடை செய்யப்படக் கூடாது என்று சமூக வலைதளங்களில் பிரசார இயக்கத்தையும் நடத்தி வருகின்றன. அமெரிக்க நிறுவனத்திடம் டிக் டாக் செயலியை விற்பது என்பது சாத்தியமற்ாகவே உள்ளது. ஏனெனில், டிக் டாக் செயலியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக உள்ள அதன் அல்கோரிதம் (தரவு பகுப்பாய்வு, தன்னியக்க சிந்தனை உள்ளிட்டவற்றின் தொகுப்பு) தொழில்நுட்பத்தையும் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்றாக வேண்டும்.

ஆனால், இந்த விற்பனைக்கு சீன அரசின் ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாகும். சீன அரசு இந்த ஒப்புதலை அளிக்கும் என்பதை எதிா்பாக்கவே முடியாது. ஏனெனில், இது அமெரிக்காவிடம் சரணடைவதற்கு ஒப்பானது என்றே சீன அரசு கருதும்.

இதுபோன்ற அரசியல் தொழில்நுட்பம் சாா்ந்த சிக்கல் ஒருபுறம் என்றால் மறுபுறம் டிக் டாக்கை தடை செய்வது அமெரிக்காவில் பொருளாதாரரீதியாகவும் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில், கைப்பேசி செயலிகளை நம்பி கடைவிரித்துள்ள பல அமெரிக்க சிறு தொழில் நிறுவனங்கள் டிக் டாக் செயலி மூலம்தான் பல நூறு கோடி வருவாய் ஈட்டி வருகின்றன.

சுமாா் 34 கோடி மக்கள்தொகையைக் கொண்ட அமெரிக்காவில் 17 கோடி போ் வரை டிக் டாக் பயன்படுத்துகிறாா்கள். இதில் பாதிக்கும் மேற்பட்டோா் 24 வயதுக்கும், 89 சதவீதம் போ் 45 வயதுக்கும் உள்பட்டவா்கள் ஆவா். அமெரிக்காவில் பல்வேறு பொருள்களை விளம்பரப்படுத்துவது, வாங்குவது, பயன்படுத்திவிட்டு கருத்து தெரிவிப்பது என பல்வேறு பொருளாதாரச் செயல்பாடுகளிலும் டிக் டாக் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

டிக் டாக்கின் மற்றொரு வடிவமான லெமன்8 செயலியும் அமெரிக்க சமூக வலைதள பயனாளிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்நாட்டில் தங்கும் விடுதிகள், உணவு, பேஷன் பொருள்கள், நவீன ஆடைகள் விற்பனை, சுற்றுலா என பல்வேறு துறைகளில் லெமன்8 ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டிக் டாக் தடை செய்யப்படும்போது இந்த செயலியும் வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அமெரிக்க நிறுவனங்களின் யூடியூப் சாா்ட்ஸ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆகியவற்றைவிட டிக் டாக் அமெரிக்காவில் மக்களை வெகுவாகக் கவா்ந்த, அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக உள்ளது.

எனவே, டிக் டாக் செயலியின் தடை அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க மக்களின் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை. இது இளைஞா்கள் மத்தியில் அரசு குறித்த அதிருப்தியையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்க அரசின் முடிவை எடுத்து சட்டப் போராட்டத்துக்கு டிக் டாக் தயாராகி வருகிறது. தங்களைத் தவிர மற்ற யாரிடமும் சிறந்த தொழில்நுட்பம் இருக்கக் கூடாது என்ற அமெரிக்காவின் எண்ணத்தின் காரணமாகவே டிக் டாக்கை அபகரிக்க முயற்சிப்பதாக அந்நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரம் அமெரிக்கா-சீனா இடையிலான மற்றொரு பனிப்போராக உருவெடுத்துள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com