4 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி ரத்து: மத்திய அரசு நடவடிக்கை

தமிழகத்தில் 4 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

தமிழகத்தில் 4 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
நாடு முழுவதும் நீட் தேர்வின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்குக் கோரிய மசோதாவுக்கு இதுவரை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறவில்லை. இருப்பினும் சுமார் 88 ஆயிரம் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுதி முடித்துள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வு முடிவை வெளியிடுவதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஜூலை 2-ஆம் வாரத்தில் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழப்பமான நிலையில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தைப் பொருத்தவரை இந்த ஆண்டு 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. 22-ஆவது கல்லூரியான புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியை ஜூன் 9-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். இந்தக் கல்லூரிக்கு நிகழ் கல்வியாண்டில் 150 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனுமதி ரத்து: தமிழகத்தில் 4 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய சுகாதாரத் துறை நிகழ் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியை ரத்து செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு மத்திய சுகாதாரத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் பென்னலூர் அன்னை மருத்துவக் கல்லூரி, சென்னை மாதா மருத்துவக் கல்லூரி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளுக்கு 2017 - 2018 மற்றும் 2018 - 2019 ஆகிய இரண்டு கல்வியாண்டுகளுக்கு தலா 150 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை தனியார் கல்லூரிக்கும்...மேலும் கோவை கற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரிக்கு ஓராண்டுக்கு 150 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கல்லூரியில் கட்டடம், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட கல்லூரிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாததால் மாணவர் சேர்க்கைக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கல்லூரிகள் ரூ.2 கோடி வங்கி உத்தரவாதத் தொகையாக செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தக் கல்லூரிகளுக்கு 2016-2017 கல்வியாண்டில் நிபந்தனையின் பேரில் ஓராண்டுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கல்லூரிகளில் சுமார் 50 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்த நடவடிக்கையால் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கையும் குறையும்.
மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளதற்கான உத்தரவுக் கடிதம் அந்தந்த மருத்துவக் கல்லூரி முதல்வர், மருத்துவக் கல்வி இயக்குநர், செயலாளர் உள்ளிட்டோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com